நம் குரல்

அம்மன் படங்களும் அம்பேத்கரும்


சத்யஜித் ரே, இந்திய சினிமாவின் தந்தை என்று உணரப்பட்டவர். கலாப்பூர்வமான வெளிப்பாட்டைக் கொண்டவர் என்று கொண்டாடப்பட்டவர். இன்றும் அவரது பெண் கதாபாத்திரங்களின் ஆளுமையும் நேர்த்தியும் ஒரு முழுக்கதையையும் கற்பனையையும் விரித்துக்கொடுக்கப் போதுமானவையாக இருக்கின்றன.

பெண்களைப் பற்றிய இந்திய படங்கள் பெரும்பாலும் அபத்தமான முதிர்ச்சியை அடையாளமாக்கி வசூல் செய்துவிடும். தமிழ்நாட்டின் அம்மன் படங்களுக்கு விசித்திரமான குணநலன்களும், தாலியை இறுக்கமாகக் காப்பாற்றிக்கொள்ளும் வித்தைகளைக் கற்றுக்கொடுக்கும் பாடங்களும் உடையவை.

சத்யஜித் ரேயின் "தேவி"யில், இந்தப்பெண்ணுக்குத் தெய்வத்தின் அருள் உள்ளது போல கனவு கண்ட அவளுடைய மாமனார் அவளைத் தெய்வமாக்கி, ஊரில் எல்லோரையும் அவளை வணங்க வைக்கிறார். வெளியூர் சென்ற கணவன் அறிந்து அவளை இந்தச்சிக்கலிலிருந்து மீட்க நினைக்கிறான். ஆனால், அதற்குள், தேவி தான் தெய்வமில்லை; சாதாரணபெண் தான் என்ற நம்பிக்கைக்கும், இல்லை இல்லை தான் தெய்வசக்தி படைத்தவள் என்ற நம்பிக்கைக்கும் இடையில் சிக்கி இரட்டை மனநிலைகளை அடைகிறாள். ஊரில் உள்ள நோயுற்ற குழந்தையை அவள் காப்பாற்றுவதாக ஊர்மக்கள் நம்பிக்கொண்டிருக்கையில், அவளுடைய உறவினர் குழந்தையையே காப்பாற்ற முடியாமல் போகிறது. இதனால், அவள் புத்தி பேதலிக்கிறது. இந்த இரட்டைத்தன்மை, அவள் சிந்தனையின் தெளிவைக் கிழிக்கிறது.

ஒரு சமூக அக்கறையுள்ள படம் தான். உயர்சாதி ஆண்கள் எந்த அளவிற்கு மூடநம்பிக்கையும், அதன் பெயரால், பெண்களைத் தெய்வநிலைக்கு உயர்த்துவதாக எண்ணி, தெய்வநிலையை உயர்ந்தநிலை என்றெண்ணி வாழ்ந்தார்கள் என்பதையும் வெளிப்படையாகச் சொல்கிறது. இதனால், உரிமையான வாழ்வும் இயல்பான ஆசைகளும் எண்ணங்களும் மறுக்கப்பட்ட பெண்கள் எத்தகைய மனச்சித்ரவதைக்கு ஆளானார்கள் என்பதையும் உணரமுடிகிறது.

தமிழின் அம்மன் படங்கள் இந்த நிலையைப்பேசுவதில்லை. கண்மூடித்தனமான தாலி நம்பிக்கைகள் அதிலும், கணவனின் உயிர்க்கயிறு தன் கழுத்தில் தொங்குவதான அபத்தங்கள் கற்பிக்கப்படும் கலைப்படைப்புகளாகத்தான் தமிழ் அம்மன் படங்கள் இருக்கின்றன. இதில் பெண்கள் கையாளும் கொடுமையான விரதமும், தன்னைத் தானே வருத்திக்கொள்ளுதலும் எந்த அளவுக்கு பெண்களுக்கு உடல் நல ஆரோக்கியத்தைக் கெடுத்துள்ளது, வாழ்க்கையைச் சீர்குலைத்துள்ளது என்பது நாம் விவாதிக்கவேண்டியது. ஆனால், இவ்விடத்தில் நாட்டுப்புறப்பெண் கதையாடல்கள் விடுபட்ட ஒன்றாகவும் மதிப்பிழந்த ஒன்றாகவும் இருக்கின்றன.

ஆனால், சத்யஜித் ரே போன்றோர் எடுத்துள்ள இப்படங்களுக்குப் பின்னாலும் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது. கைம்பெண் மறுமணம், பால்யத் திருமணம் போன்றவை சமூகச்சீர்த்திருத்தமாகக் கருதப்பட்ட இந்தியாவின் காலம் உண்டு. இத்தகைய சமூகச்சீர்திருத்தம் உண்மையில், உயர்சாதிக்குடும்பங்களைத்திருத்தவே அன்றி, சமூகத்தின் சாதிக்கொடுமையின் விளைவாகக் கருதப்பட்டு சீர்திருத்தம் செய்யப்படவில்லை என்கிறார், அம்பேத்கர். ஆகவே, தான் சமூகம் முழுமைக்கும் இது பயன்படாமல் உயர்சாதியினரின் வெளிப்பாடெல்லாம் கலைவெளிப்பாடு என்று கொண்டாடப்பட்டுள்ளது என்பதை உணரமுடிகிறது. 

"உயர்சாதி இந்துக்கள் சாதியை ஒழிக்கப்போராடுவதற்கான அவசியத்தை உணர்ந்திருக்கவில்லை; அல்லது அதற்காகப் போராடுவதற்கான துணிச்சல் பெற்றவர்களாகவும் இல்லை. ஒவ்வொரு மேல்சாதி இந்துக்குடும்பத்திலும் கட்டாய விதவைக்கோலமும், குழந்தையிலேயே திருமணம் செய்யும் கொடுமையும் இருந்தது. தனிப்பட்ட முறையில் அவர்கள் உணர்ந்த இந்தத்தீமைகளை ஒழிப்பது, அவர்களின் போராட்டம் என்பது குடும்பச்சீர்திருத்தத்தையே முன்மொழிந்தது" - அம்பேத்கர்

கலைத்தன்மை படங்களின் முன்னோடி என்று சொல்லப்பட்ட சத்யஜித் ரே, தன் கலைவெளிப்பாட்டுச் செயல்பாட்டில், ஒரு சமூக அக்கறை சார்ந்த கருப்பொருளை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்? 
சமூக அங்கீகாரத்திற்காகவா இல்லை, கலையின் மூலம் அது தான் என்று உணர்ந்தா?
அப்படியே என்றாலும், அவர் செய்தது அரும்பெரும் கலைப்பணியாகக் கொண்டாடப்படும் போது, ஏன் மற்ற சாதியினர் தம் கலைச்செயல்பாட்டின் வழியாக சமூக மாற்றத்தைச் சொல்லும்போது, அது கலைஅங்கீகாரம் தரப்படாமல், வெறுமனே சமூகச்சீர்திருத்தப்படம் என்றும் கலைப்படம் என்பதைக் கீழாகவும் ஏன் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கலைத்தளத்தில் இயங்கும் சூழ்ச்சிகளும் இந்திய சினிமாவரலாறும் உணர்ந்தோர் ஒரே சமயத்தில் சத்யஜித்ரேயை ரசிக்கவும் முடியும், இத்தளத்தில் இயங்கமுடியாமல் கலை ஊடகங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்ட கலைச்சிந்தனையாளர்களுக்காகத் துக்கிக்கவும் முடியும்!



குட்டி ரேவதி
("யரல வழள" திரைக்கட்டுரைத் தொகுப்பிற்காக...2)

கருத்துகள் இல்லை: