நம் குரல்

பெண்ணுக்கு இத்தகைய கல்வி எதற்கு?பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில், மாநில அளவில் பெண்கள் தாம் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி அடைந்ததாகவும், அதிக அளவில் வெற்றிபெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் முழங்குகின்றன.


இந்தப் பெண்களில், எத்தனை பேர் மேல்நிலைப்படிப்புக்குப் போவதற்கான சூழ்நிலை இருக்கிறது? இத்தேர்வில் ஆண்களை வெல்லும் பெண்களால், இதற்குப் பின்பு ஏன் பாலியல் ஏற்றத்தாழ்வுகளை வெல்லமுடிவதில்லை? பொதுச்சமூகப்பணிகளில் எத்தனை பேர் பொறுப்புணர்வுடன் பங்கேற்கிறார்கள்? இந்தப்பெண்களில் எவ்வளவு பேர், குறைந்தது தன் வாழ்வையும் தன்னையும் பேணும் திறனாவது கொண்டிருக்கிறார்கள்? அதிக அளவில் தேர்ச்சிவிகிதமும், மதிப்பெண் விகிதமும் கொண்ட கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பெண்கள் மீதான குடும்பவன்முறையும் பெண்கள் மீதான சமூக வன்முறையும் ஏன் அதிகமாக இருக்கிறது? பள்ளிக்கல்விக்கும் தனிப்பட்ட பெண்கள் வாழ்விற்கும் ஏன் இவ்வளவு இடைவெளி? சாதியின் வாள்களையும் அலங்கார அணிகலன்களாய்க் கொண்டு அலையும் பெண்களாகத் தாம் உற்பத்திசெய்யப்படுவதை அறிவதற்கான வாய்ப்புகளையும் விழிப்புணர்வையும் ஏன் இவர்கள் பெறுவதில்லை? இத்தகைய கல்வியை வைத்துக்கொண்டு, ஒரு பெண் தன் மீது வீசப்படும் அமிலத்தையோ, எரியும் தீக்குச்சியையோ, தூக்குக்கயிற்றையோ ஏன் தடுத்துக்கொள்ள முடிவதில்லை? ஏன் இப்பொழுதைய வெற்றி நெடுந்தொலைவு வருவதில்லை? அடிமைகளாய் வாழ்வுகளைத் தொடர்வதற்கான ஒப்பந்தமா, இந்த மதிப்பெண்களும், கல்வியும்? எனில், இக்கல்வியினால் ஆகும் பயன் என்ன? ஆன பெருமை தான் என்ன?

இன்றைய நாளில், கல்வி என்பதே எல்லோருக்குமே கண்கள் இரண்டையும் புண்களாக்கும் வித்தைதான்! கற்றதையெல்லாம் மறக்கவும், தனக்குத்தானே அழித்துக்கொள்ளவும் வேண்டியிருக்கும் சமூகச்சூழலில், நாம் முன்பொரு காலம் பெற்ற மதிப்பெண் வெற்றிகளே அற்பமாயும் கேலிக்குரியதாகவும் இருக்கின்றன. கல்வியாம் கத்தரிக்காயாம்!குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: