குட்டி ரேவதியின், சிறுகதைத்தொகுப்பு "நிறைய அறைகள் உள்ள வீடு " பற்றி, சென்ற மாதம் மதுரை 'கூழாங்கற்கள்' நிகழ்வில் குமரகுருபரன் அவர்கள் வழங்கிய மதிப்புரை இது!
(1)
நீட்டிக்க முடியாது என்கிற புரிதலுடன் அல்லது நீட்டிக்கக் கூடாது என்கிற சுய கண்டிப்புடன் நிகழும் கதை சொல்லலையே நான் சிறுகதை எனப் புரிந்து கொள்கிறேன்.அதனாலேயே சிறுகதைகள் இக் காலத்தின் அதிகம் பயன்படுத்தப் படும் ஒரு இலக்கிய அல்லது படைப்பு வடிவமாக இருக்கின்றன.
அதிகம் என்பது நாம் வாழும் காலத்தின் யதார்த்தமாக ஆகிப் போயிருக்கிறது.அதீதம் என்றால் அது நம் கால கட்டம் தான்.எங்கும் எதிலும் அதீதம் என்பது வாழ்வின் குணமாகியிருக்கிறது.ஒலியில் அதை நான் சொல்ல முயற்சிக்கும் போது உரத்த என்கிற தமிழ் வார்த்தை சரியாகப் பொருந்துகிறது.
ஆனால்,நாம்,உரத்த வின் அதீதமான இரைச்சலின் காலத்தில் இருக்கிறோம்.
என் முதல் பிரச்னை இரைச்சலில் எனக்கான ஒரு மெல்லிய பாடலைக் கேட்க முனைவதில் ஆரம்பமாகிறது.
வாசிப்பில் ஈடுபாடு குறையா யாதொரு வாசகனுக்கும் தான்.
எங்கே என் பாடல்? எங்கே என் இசை? எங்கே என் சிறுகதை? எங்கே என்னை இழுக்கும் அந்த இலக்கிய,கலை அனுபவம்?
இவ்வளவு இரைச்சலில் எங்கே அதை உணர்வது?
என் முன் மிகப் பெரிய வியாபார சந்தை இருக்கிறது.
என் முன் மிகப் பெரிய சமூக ஊடகம் இருக்கிறது.
என் முன் மிகப் பெரிய படைப்பாளிகள் கூட்டம் இருக்கிறது.
என் முன் மாறிக் கொண்டே இருக்கிற ரசனையின் அளவுகோல்கள் பூதாகரமாக வளர்ந்து நிற்கின்றன.
என் வீட்டு அலமாரியில்,இச் சந்தையில் இருந்து நான் கொணர்ந்த இவை எல்லாவற்றிலும் ஆன என் ரசனை அடுக்கி வைக்கப் பட்டிருக்கிறது.
வெறும் பெயர்களால் ஆன தேர்வு.சில முன் மதிப்பீடுகள் மூலம் நான் கணிக்க முடிந்த தேர்வு.
இவற்றில் எது நான் முதலில் படிக்க வேண்டியது? எது நான் முதலில் கேட்க வேண்டியது?
எது சிறந்தது?
எது என்னை அதனுடன் மூழ்கடிக்க இருப்பது?
எதை நான் மற்றவர்களுக்கு இது உங்களின் ஆன்மாவை மூழ்கடிக்கும் அனுபவம் என்று பரிந்துரைக்க?
வருடத்துக்கு பத்து கோடிக்கும் மேல் வியாபாரமாகும் தமிழ்ப் புத்தக சந்தையில் எந்தப் புத்தகத்தை நான் காலத்தின் அவசியம் என உணர,உணர்த்த இருக்கிறேன்?
காலத்தின் அவசியம் என்கிற அந்த ஒற்றைச் சாவி மேற் சொன்ன எல்லா புதிர்களைத் தீர்க்க உதவும் என்று நம்புவதில் நிறைய அறைகள் உள்ள வீடு என்கிற குட்டி ரேவதியின் சிறுகதைத் தொகுப்புக்கான என் வாசிப்புணர்வு அனுபவம் ஆரம்பிக்கறது.
இரண்டு லட்சம் ரூபிள்களுக்காக,பதினைந்து வருடம் தனிமைச் சிறையில் இருக்க சம்மதிக்கும் ரஷ்ய இளைஞனின் கதையைச் சொல்லும்,அன்டன் செகொவின் பந்தயம் சிறுகதையில் ஒரு சுவாரஸ்யமான பகுதி,காலத்தின் அவசியம் என்கிற வார்த்தையை மேலும் விஸ்தரித்து விடக் கூடியது.
தேவையான புத்தகங்கள்,மது இன்னும் என்ன என்ன வேண்டுமோ,அத்தனையும் கிடைக்கும்,அவனுடைய வீட்டை விட்டு வெளிவராமல்,அவன் தன்னுடைய வாழ்க்கையை க் கழிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத் துடன் தன் தனிமை வாழ்வை ஆரம்பிக்கும் அந்த இளைஞன்,முதல் வருடத்தில் படித்த புத்தகங்கள் பெரும்பாலும் ஜனரஞ்சகமானவை.காதல் கதைகள் என்று வைத்துக் கொள்ளலாம்.இரண்டாவது வருடம் அவன் இலக்கிய நூல்களைப் படிக்கிறான்.நடுவில் மூன்று,நான்கு வருடங்கள் மது அருந்துவதிலும்,வயலின் வாசிப்பதிலும்,அவனாக சில நீண்ட கடிதங்கள் எழுதுவதுமாகப் போகிறது.ஆறாவது வருடம் அவன் மொழி குறித்த நூல்களைக் கற்க ஆரம்பிக்கிறான்.அடுத்த,நான்கு வருடங்கள் அவன் அறுநூறுக்கும் மேற்பட்ட அது சார்ந்த புத்தகங்களைப் படிக்கிறான்.பத்தாவது வருடம் அவன் வெறும் பைபிளை மட்டுமே மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டிருக்கிறான்.கடைசி,இரண்டு வருடங்கள்,அவன் பைரன்,ஆன்மிகம்,ரசாயனம்,மருத்துவம் என்று வகை தொகை இல்லாமல் வாசிக்கிறான்.
கடைசியில்,அவன் எல்லாவற்றையுமே வெறுக்கிறான்.அறிவையும் இந்த உலகத்தின் ஆசியையும் வெறுக்கிறேன் என்பதாக அதைக் குறித்துச் சொல்கிறான்.
காலத்தின் அவசியம் என்பது அவனைப் போலவே நம் ஒருவருக்கும் வேறு வேறாய் இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது.விழிப்பு மன நிலை,ஆழ் மன நிலை என்ற இரு விசயங்களின் அடிப்படையில் இதை அணுகலாம்.என்னுடைய வாசிப்பு என்பது,காலத்தின் அவசியம் என்கிற நிலைப் பாட்டில்,விழிப்பு மற்றும் ஆழ்மன நிலையில்,எனக்குத் தேவை இருக்கிற சில வாழ்வியல்,தத்துவ,மொழி,கற்பனாவாதம் சார்ந்து அமைகிறது.இவற்றை எதிர்பார்த்தே,நான் வாசிக்க விரும்பும் புத்தகங்களின் தேர்வும் அமைகிறது.இந்த அடிப்படையில்,சமீபத்தில் நான் வாசிக்க முற்பட்ட சிறுகதைத் தொகுப்பு, குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு.
(2)
1.காலத்தின் அவசியம்
2.வாழ்வியல்
3.தத்துவம்
4.மொழி
5.கற்பனாவாதம்
என்கிற வாசக மனோநிலையின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைந்த ஒரு படைப்பு எப்படி இருக்கக் கூடும் என்பதை,ஒரு புனைவின் துளியில் இருந்தே,நான் ஆரம்பிக்கிறேன்.
ஆல்பெர் காம்யுவின் எழுதி முடிக்கப் படாத,நாவல் ஆக்கமான "முதல் மனிதன்"தமிழ் மொழிபெயர்ப்பின்,முதல் பாரா இது.என்னைச் சந்திக்கும் நிறைய தோழர்களிடம் இதை நான் வாசித்துக் காண்பித்திருக்கிறேன்.அதற்கடுத்த வாசிப்பை மேற்கொள்ள வைக்காமல்,அங்கேயே என்னைச் சுழல வைக்கும் விவரணை இது...
" கருங்கல் ஜல்லி நிரம்பிய அந்தப் பாதையில் ஓடிக் கொண்டிருந்த குதிரை வண்டிக்கு மேலே வானத்தில் அடர்த்தியான பெரிய மேகங்கள் பொழுது சாயும் வேளையில்,கிழக்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தன.மூன்று நாட்களுக்கு முன்னால்,அட்லாண்டிக் கடலுக்கு மேல் அவை உருவாகத் தொடங்கி,மேற்கே இருந்து அடிக்கும் காற்றுக்கு காத்திருந்து,முதலில் மெதுவாக நகர்ந்து,பிறகு சிறிது சிறிதாக வேகம் பெற்று,இலையுதிர் கால ஒளியில் ஒளிரும் நீர்ப் பரப்பின் மேல்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் நிலப் பரப்பை நோக்கி நேராகச் சென்று,மொரோக்கோவின் மலை உச்சிகளில் இழைஇழையாகப் பிரிந்து,மீண்டும் அல்ஜீரியப் பீடபூமியின் மேல் மந்தையாகச் சேர்ந்து,இப்போது துனிசியாவின் எல்லை மீது மத்தியதரைக் கடலின் மேற்குப் பகுதியை அடைந்து,கரைந்து போக முயன்று கொண்டிருந்தன.வடக்கே,ஓயாது வீசும் கடலலைகளுக்கும்,தெற்கே உறைந்து பரந்திருக்கும் மணலலைகளுக்கும் இடைப்பட்ட பிரமாண்ட தீவு போன்ற நிலப் பரப்பின் மீது பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்த பிறகு,பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேரரசுகளும்,மக்கள் கூட்டமும்,இந்தப் பெயரற்ற பிரதேசத்தை க் கடந்து சென்ற அதே வேகத்தில்,இந்த மேகங்கள் கடந்து,பிறகு உத்வேகம் சற்றுக் குறைந்து,சில மேகங்கள்,ஏற்கனவே இங்குமங்கும் பெரும் மழைத் துளிகளாக,நான்கு பயணிகள் இருந்த அந்த வண்டியின் கான்வாஸ் கூடு மீது சடசடக்கத் தொடங்கியிருந்தன."
நான்கு பயணிகள் இருந்த அந்த குதிரை வண்டியையே நான் காலத்தின் அவசியம் எனக் கொள்கிறேன்.அவர்கள் என்ன செய்ய இருக்கிறார்கள்,அவர்களுக்குள் என்ன நிகழ இருக்கிறது என்பதையும்.
பொருளாதாரம்,சித்தாந்தம்,அரசியல்,ஆன்மிகம்,அறிவியல் குறித்தான அத்தனை பார்வைகளையும் தாண்டி,ஆண் பெண் உறவுச் சிக்கலில் தான் இன்னமும் உலகம் மையம் கொண்டிருக்கிறது. மற்றவை எல்லாம் மேகங்கள் போல,அதன் மேல் உலவிக் கொண்டிருக்கின்றன என்று உறுதியாக நம்புகிறேன்.பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்று எனது முன்னோர்கள் அறியக் காட்டிய சிரத்தையைக் காட்டிலும்,அதிக சிரத்தையை இக் காலத்தில் ஆணாக,நானும்,எனது சக சிந்தனையாளர்களும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.பெண்களின் மனமொழி இன்னமும் அதீத மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருந்து கொண்டிருக்கிறது எனினும்.குட்டி ரேவதியை பெண்களின் மனமொழியை வெளிக் கொணர விரும்பும் ஒரு படைப்பாளியாக அவரது கவிதைகள்,உடல் அரசியலைக் கட்டுடைத்த கவிதைகள் மூலம் வாசித்து அறிந்திருக்கிறோம்.அவரது சிறுகதைத்தொகுப்பு அதன் அடிப்படையில் மிக முக்கியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.அடுத்து இன்னொரு எதிர்பார்ப்பு அவரது மொழி.கவிஞர்களின் புனைவு நடை குறித்து ஆர்வமும்,அவநம்பிக்கையும் இலக்கிய உலகில் ஒரு சேர நிலவுகிறது.குட்டி ரேவதியின் கவிதை மொழியின் வீரியம் நாம் அறிவோம்.அவரது புனைவு? அதுவும் மற்றொரு எதிர்பார்ப்பு.
(3)
காதலைப் பெறுவதற்கும்,அதிகாரத்தை எதிர்ப்பதற்கும்,உரிமைகளை வெல்வதற்கும் தம் உடலை ஆயுதமாகப் பயன்படுத்திய நம் சமகாலப் பெண்டிருக்கும்,மூதாதைப் பெண்டிருக்கும் சமர்ப்பிக்கப் படுவதாக ஆரம்பிக்கும்,நிறைய அறைகள் உள்ள வீடு சிறுகதைத் தொகுப்பில் பதிமூன்று சிறுகதைகள் இருக்கின்றன.
முடிவு என்கிற ஒன்று இல்லாத அல்லது வலியுறுத்தப் படாத தன்மை எல்லாக் கதைகளிலிலும் இருக்கிறது.ஒரு பெண்ணின் மனதைப் போல,மறுபடி மறுபடி சுழலும் முடிவற்ற அவளின் மன மர்மங்களைப் போல.முடிந்த இடத்திலேயே ஆரம்பமும் இருப்பது சிறுகதை வடிவின் அற்புதமான சாத்தியம்.நிறைய விஷயங்கள் சொல்லாமல் விடப் படுகிற தன்மையும் குட்டி ரேவதியின் அநேக சிறுகதைகளில் காணப் படுகிறது.சொல்லாமல் விடப் படுகிற அந்த இடங்களில் வாசகனின் யூகம்,மற்றும் தன்னை இருத்திக் கொள்ளல் ஆகியன நிகழும் சாத்தியங்கள் ஆர்மபிக்கின்றன.மிகவும் அடர்ந்த காமத்தை,விரக்தியை,வன்மத்தை,எள்ளலை,கொண்டாட்ட மனோபாவத்தை வெளிப் படுத்துகிற விதமாய்,குட்டி ரேவதி சிறுகதைகளின் புனைவு மொழி அமைந்திருக்கிறது.காணும் விசயங்களும்,சிந்தனைகளும்,உரையாடல்களுக்குள் அடங்காத ஒரு தன்மையையும் கவனிக்க முடிகிறது.சிறுகதையைத் தாண்டிய விஷயங்கள் சிறுகதை வடிவத்திற்குள் பேசப் படுகிற அழுத்தமும் வாசிப்பின் போது வந்து போகிறது.ஒரு சிறுகதை வாசித்து முடிந்த உடனே ஒரு மொபைல் கேம் விளையாட வேண்டும் என்று தோன்றுகிற அளவுக்கு இந்த சிறுகதைத் தொகுப்பில் வருகிற பெண்களின் சிந்தனைகளும்,உரையாடல்களும் இருக்கின்றன.குளிர் என்கிற சிறுகதையை இதற்கு முழு உதாரணமாகச் சொல்ல முடியும்.
"கற்பனையும்,புனைவும்,பாலியல் ஆற்றலும் இணைந்த பெருவெளியும்,அதில் தீவிரமாக பயணிக்கும் உடலும் கொண்டவள் நான் என்பது தான் சிறுகதை எழுதுவதைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படை"என்பதாக,ஏன்,சிறுகதை வடிவைத் தேர்ந்தெடுத்தேன் என்று,குட்டி ரேவதி,அவரது முன்னுரையில்,சொல்லும் விசயத்தில் மேற்சொன்னவைகளுக்கான பதில் இருக்கிறது.
முத்தம் இடப் படாத வறண்ட காமத்திற்கு மனம் துவளும்,எதிர்ப்பைத் தெரிவிக்கும்,ஒத்துழைக்க மறுக்கும் உடல் கொண்ட பெண்களின் உலகம் நிறைந்ததாக இருக்கிறது நிறைய அறைகள் உள்ள வீடு சிறுகதைத் தொகுப்பு.இடுப்பிற்குக் கீழே மட்டும் இயங்கும் ஆண்களின் பாவனையான மன நிலையை நகைப்புக்கு உள்ளாக்குகிற பெண்களின் திட்டமிட்ட எதிர்கொள்ளலும் இருக்கிறது.பிங்க் வோட்கா இவ் விதத்தில்,இதுவரை எழுதப் படாத,இதுவரை நாம் கிசுகிசுத்துக் கொண்டு மட்டுமே இருக்கிற,பெண்களின் ஒரு பால் ஈர்ப்பு,பெண்களின் பாலியல் கற்பனைகள்,பெண்களுக்கு நடுவே நிகழும் ஆண் சார்ந்த பாலியல் விவாதங்கள்,ஆணின் பாவனையான காம அழைப்பை எதிர்கொள்ளும்மனநிலை குறித்து சொல்லும் கதையாய் விரிந்திருக்கிறது.காமத்தைக் குறித்த பெண் மனதை ஆணின் முகத்தின் மேல் விசிறடிக்கும் கதை என்றால் இன்னும் நேரடியாக இருக்கும்.இதைப் படித்த பிறகும் நிறைய ஆண்கள் வீடியோ கேம் விளையாட வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.அல்லது ஒரு சிகரெட்டாவது தேவைப் படும்.
உண்மையில்,காமத்தை உடைப்பதில்,ஆண்களுக்கும் பெண்களுக்குமான முக்கியமான சிந்தனை வேறுபாட்டை இச் சிறுகதைத் தொகுப்பு உணர்த்துகிறது.குட்டி ரேவதியின் நாயகிகள் அவரது சிறுகதைகளில் முன்வைக்கும் மிக முக்கியமான விவாதமும் அதுதான்.
வெறும் ஏக்கங்களாக ஆண்களின் பார்வையில் அணுகப் பட்டிருக்கும் காமத்தை,உடலரசியலை,பாலியல் மனோபாவங்களை முழுமையாகக் கட்டுடைக்கும்,அணுத் துகள் ஒன்றின் ஆற்றலைக் கொண்டிருக்கும் அவரது கதைப் பெண்களின் புனைவுகள் மூலம் ,ஆண்களின் பாவனைகளைத் தூளாக்கும் மிக முக்கியமான சம கால சிறுகதைத் தொகுப்பு குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு,என்று நான் பதிவு செய்கிறேன்.யோனியின் உதடுகள் என்கிற சிறுகதை முத்தம் முகிழ்த்தும் காமத்தை,பெண்ணின் உடலை,அவளின் மனதை ஆண்களுக்கு உணர்த்தும் மிக முக்கியமான புனைவு.பெண் என்ன எதிர்பார்க்கிறாள் ஆணிடம் இருந்து என்று குறிப்பாகச் சொல்லும் இக் கதையில் முடிவு என்கிற ஒன்று அரிதாக நிகழ்ந்திருக்கிறது.அந்த முடிவில்,ஆண்களின் பெண் பற்றிய புரிதல் ஆரம்பிக்கக் கூடும்.
(4)
காமம் என்கிற பொது இழையைத் தாண்டி, வாசகனை ஈர்க்கிற,புதிய வாசிப்பனுபவங்களைத் தரக் கூடிய சிறுகதைகள் நிறைய அறைகள் உள்ள வீடு தொகுப்பில் இருக்கின்றன.அலைதல் அல்லது பயணம் கதைகளின் நடுவே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.இயற்கை குறித்த,வாழ்வியல் குறித்த நுட்பமான விவரணைகள் சிறுகதைகளில் வியாபித்திருக்கின்றன.சமகால வாசகனுக்கு மிகவும் தேவையாய் இருக்கக் கூடிய விசயங்கள் இவை.தைலக்காரி என்கிற சிறுகதை,மலையை ஒரு பெண்ணின் கோணத்தில் நமக்கு விரிவிக்கிறது.மலையின்,மூலிகைகளின்,மர்மங்களை மென்மேலும் முடிச்சிடும் ஆண் ஸ்பரிசம் அறியா,ஒரு தைலக் காரியின் அனுபவம், கற்பனாவாதம் கலந்து மிகவும் புதிதான உணர்வுகளை வாசிப்பின் போது ஏற்படுத்துகிறது.பாம்புகளைத் தேடி அலையும் இருளர் குடும்பம் ஒன்றின் பயணத்தைச் சொல்லும் கட்டு வீரியன் என்கிற கதை நெளிந்து வளைந்து நீளும் பாம்பு ஒன்றின் நகர்வைத் தன் கதை சொல்லலில் கொண்டிருக்கிறது.எனினும்,பயணத்தின் உச்ச அனுபவத்தை,ஒரு மாய மனநிலையில்,சன்னத மொழியில் சொல்லும் மாஇசக்கி இச் சிறுகதைத் தொகுப்பின் மிக முக்கியமான சிறுகதை என்கிற அந்தஸ்தைப் பெறுகிறது.ஜெயமோகனின் மாடன் மோட்சம் தரும் அனுபவத்திற்கு நிகராக இருக்கிறது மாஇசக்கி.பெண் சிறு தெய்வம் ஒன்றின் பயணம் தான் மாஇசக்கி.அந்தப் பயணத்தின் முடிவு " இரத்தம் தா இரத்தம் தா சூடான இரத்தம் தா,
ஆண் இரத்தம் சுவைக்கும் பெண் இரத்தம் வேணாம்,
பெண்ணின் இரத்தம் குடித்த ஆண் இரத்தம் வேணும்,
நீ தா உன் இரத்தம் தா சூடாகத் தா " என்பதாக நிகழ்கிறது.
ஆனால்,அந்தப் பயணமும்,அப் பெண்சிறுதெய்வத்தின் பயண மன ஓட்டங்களும்,நேரடி அனுபவங்களும் சொல்லப் பட்டிருக்கும் புனைவு மொழி அபாரமான ஒன்று.சன்னத நிலையில் வெளிப் பட்டிருக்கும் மொழி.சாமி வந்தேறிய மனம் ஒன்றின் குறிசொல்லல்,மற்றும் அசைவை வார்த்தைகளில்,வரிகளில் உணர வைக்கும் புதிய அனுபவம் மா இசக்கி.கவிதை ஒன்றின் படைப்புத் தருணம் விழிப்பு மனநிலையில் கட்டமைக்கப் பட்டு,நிகழ்கிறதா,அல்லது ஆழ்மன நிலையில் ஒரு சன்னத அனுபவமாக நிகழ்கிறதா என்கிற விவாதம் இன்றைய இலக்கிய உலகின் மிக முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன்.இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கட்டமைக்கப் பட்ட,விழிப்பு மன நிலையில் உருவாகும் ஒரு படைப்பின் நுட்பங்களை விட சன்னத சாமியேறிய ஆழ்நிலை மன நிலையில் உருவாகும் படைப்பின் மொழி மற்றும் அனுபவ நுட்பங்கள் மிக மேலாக உன்னதமாக இருக்கின்றன என்கிற விவாவதத்தையும் முன் வைக்கிறேன்.மா இசக்கி குறித்து குட்டி ரேவதியிடம் இன்னமும் உரையாட வில்லை எனினும்,அக் கதை சன்னத மொழி கொண்ட புனைவாகவே படுகிறது.குட்டி ரேவதியின் கவிதைகள் மேல் அவருக்கு இருந்த ஆளுமையை விட பன்மடங்கு மேலான புதிய நுட்பமான அனுபவத்தை அவரது சிறுகதைத் தொகுப்பான நிறைய அறைகள் உள்ள வீடு தருவதாக உணர்கிறேன்.அவரது புனைவின் மொழி அதற்கு மிக முக்கியமானதொரு காரணமாக இருக்கக் கூடும்.அப் புனைவு மொழி மறுபடி மறுபடி அவரது சில சிறுகதைகளை வாசிக்கத் தூண்டுகிறது.
நீட்டிக்கும் வாய்ப்பை படைப்பு வடிவத்தில் கொண்டிராத சிறுகதை ஏற்படுத்தக் கூடிய அசாத்தியமான அனுபவம், சிந்தனை ரீதியான, தர்க்க ரீதியான நீட்டித்தல் தான்.குட்டி ரேவதியின் சிறுகதைகள் ஏற்படுத்தும் எண்ணங்களும் சிந்தனைகளும் அது குறித்தான தர்க்கங்களும் அவற்றை மறுபடி மறுபடி வாசிக்க வைக்கும் நீள் அனுபவமாக இருக்கின்றன.அந்த அனுபவத்தை இக் காலகட்டத்தின் அவசியம் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துகள் குட்டி ரேவதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக