நம் குரல்

உதிர்த்த வார்த்தைகளைத் திரும்பப் பெற இயலாது! சிவகாமி அவர்கள் கருத்தின் மீதான விவாதத்தை முன்வைத்து....







அன்புமிக்க நண்பர்களுக்கு, சிவகாமி அவர்கள் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் விடுதலைப்புலிகளில் பெண்புலிகள் பற்றிய தவறான தகவலை முன் வைத்துள்ளது பெரும் உரையாடலைக் கிளப்பி விட்டுள்ளது.

டெல்லி பாலியல் வழக்கில், 'மரண தண்டனை'யைத் தீர்ப்பாக பெற்றுள்ள இச்சூழலில், இந்தியாவையும் அதன் புவியியல் பரப்பில் நடைபெறும் எல்லாமும் சாதியமயமாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நுண்ணோக்கியை வைத்துப் பார்த்தால் தான் இது புரியும், தெரியும். தமிழகத்தில் தொடரும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்களிலும் விடுதலைப் புலிகளின் ஈழவிடுதலைப்போராட்டத்திலும், கணிசமான போராளிகள் ஒடுக்கப்பட்டவர்களாயும் தாழ்த்தப்பட்டவர்களாயும் இருந்துள்ளனர்.

இந்திய அரசு, தமிழக அரசு, சிங்கள அரசு மூன்று ஆதிக்க அரசுகளும் வெவ்வேறு திசையிலிருந்து ஒடுக்குமுறையின் ஆயுதங்களை நம்மீது எய்து வெற்றியை அடைந்து கொண்டிருக்கின்றனர். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் நிறைந்த வெவ்வேறு முகங்களுடையவை இவை மூன்றுமே.

இந்தச் சாதியச் சூழ்ச்சிகளை அறியாது, புரிந்து கொள்ளாது தனித்தமிழ் தேசிய வாதிகளும், பெண்ணியலாளர்களும், பிற உரிமை இயக்கங்களும் தொடர்வதன் விளைவுகளை நாம் இன்னும் இன்னும் தொடர்ந்து சந்திக்கப்போகிறோம் என்றே தோன்றுகிறது.


தனித்தமிழ் தேசிய இயக்கங்கள் இங்குள்ள தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பாமல் தொடர்ந்து அவர்களை தம் சாதியதிகார நிலையிலிருந்துப் புறக்கணித்தும் ஒடுக்கியும் வரும் நிலையில் தலித் மக்களின் கோபம் ஈழவிடுதலைப் போராட்டங்கள் மீது திரும்புகிறது. இரண்டுமே, மிகவும் உண்ணிப்பாய் ஆராய்ந்து நிவர்த்தி செய்யப்படவேண்டியவை.

இது வரை தோன்றிய எல்லா அரசியல் கட்சிகளும் இவ்விரு பிரிவினருக்கும் இடையே பெருத்த பகைமையை ஊட்டி, எரியச் செய்து அதில் அதிகாரக் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.

தீவிரப் பெண்ணிய இயக்கங்கள் எழும்பி இன்றைய அன்றாட பெண் பாலியல் பிரச்சனைகள் நோக்கி எந்தக்  கேள்வியும் எழுப்பப்படாமல் இருப்பதற்கும் காரணம், பெண்களுக்கு இடையே நிலவும் சாதி வேறுபாடுகள், கருத்தியல் அதிகாரத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளும் தான்.

மேற்கொண்ட விஷயங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு தான் சிவகாமி அவர்களின் கருத்துக்கும் எதிர்வினை ஆற்றுவது மதிநுட்பம் வாய்ந்த செயலாகும். ஏனெனில், இதுவே சுயவிமர்சனங்களும், அவர் மீதான விமர்சனங்களை எழுப்புவதற்கும் நம்மை அழைத்துச் செல்லும்.

இந்தப் புரிதலுக்கு உட்படாது, அவர் மீது அவதூறுகளையும் தவறான வார்த்தைகளையும் பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எவர் அவ்வாறு தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க அவருக்கு எல்லா உரிமைகளும் அதிகாரமும் இருக்கிறது. அவர் சார்பிலும் எவரும் தொடுக்கலாம். 

உரையாடலுக்கும் விவாதத்திற்குமான பண்பும் அறமும் தான் நமக்கான நியாயங்களை நோக்கியும் நகர்த்தும்.

அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகள் பற்றிக் கூறியுள்ள இந்த வாக்கியங்கள், ஒடுக்கப்பட்டோர் இடத்திலிருந்து பெண்ணியம் பேசுதலுக்கும், அதை நோக்கிய நம் முன்னகர்விலும் பெருத்தப் பின்னடைவே என்று நினைக்கிறேன். 

புவியியல் சார்ந்த அரசியல் கருத்தாக்கங்களுக்கு இடையே முரண்பாட்டையும் கவனச்சிதறலையும் ஏற்படுத்துதல் இந்திய நிலப்பரப்பில் நாம் தொடுத்துள்ள மண்ணுரிமைப் போராட்டங்களுக்கும், மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கும் எந்த வகையிலும் உதவப்போவதில்லை. (உ.ம்.) பெளத்தம் இந்திய நிலப்பரப்பில் ஒரு விடுதலைக் குறியீடு. ஈழத்தைப் பொறுத்தவரை அது ஓர் இனஒடுக்குமுறைக் குறையீடு

அந்த அளவிற்கு ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக சூழ்ச்சிகள் நிறைந்தன, இந்திய அரசும், தமிழக அரசும், பிற அரசியல் கட்சிகளும்.

பெண்கள் பாலியல் தொழிலாளர்களாகவே இருந்தாலும், அவர்களை ஆண்களுடன் இணைத்துப் புரிந்து அதிகாரமும் சுகமும் பெற்றவர்களாகச் சொல்வது கண்டனத்துக்குரியது. இந்த சமூக மாற்றத்தைக் கூட  நாம் பெருத்த முயற்சிகளுக்குப் பிறகு தான் அடையமுடிந்தது.

சிவகாமி அவர்கள் அளவிற்கு பொது வெளியில் நின்று, ஒடுக்கப்பட்டோருக்காகவும் பெண்களுக்காகவும் போராடிய பெண் ஆளுமை தமிழகத்தில் கிடையாது. அவர் அளவிற்கு "அதிகார இயங்கியல்" குறித்தப் புரிதலும் இலக்கிய வெளியில் வேறு எவர்க்கும் கிடையாது.

இந்நிலையில் பல வகையிலும் உடல் அறங்களையும் பெண்களுடனான உறவு அறங்களையும் பேணிய இயக்கத்தில் இருந்தப் பெண்கள் மீதான அவருடைய இந்த அவதூறு வேதனை செய்கிறது.

ஒரு மாதத்திற்கு மேல் இலங்கை முழுதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அக்கறைக்கு உட்பட்ட நிலப்பரப்பான "ஈழம்" முழுதும் பயணம் செய்து வந்தவள் என்ற முறையிலும், தொடர்ந்து அந்த நிலப்பரப்பில் தோன்றிய பெண்கள் கவிதை இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து ஆய்வு செய்து வருபவள் என்ற முறையிலும், தமிழ்ப்பெண் கவிதை என்பதே கூட, ஈழப்பெண் கவிதைகளின் அரசியல் தாக்கத்தில் உண்டான மலர்ச்சி என்பதைத் தொடர்ந்து விவாதத்திற்கு வைத்து வருபவள் என்ற முறையிலும், அவர் சொன்ன வார்த்தைகள் திரும்பப்பெற முடியாத அளவிற்கு எதிர்மறையான பொருள் அடர்ந்தவை.

நூல் பிடித்து வானுக்கு ஏறுவது போன்று சாகசங்கள் நிறைந்தது, தமிழகத்தில் இருந்து கொண்டு சாதி மறுப்புப் போராட்டங்களை நடத்துவது என்பது. என்றாலும், அவர் தன் கருத்துகளால் உருவாக்கியுள்ள இந்த நெருக்கடியான விவாதநிலை பெண்கள் மீதான பாலியல் திறமும் அறமும் குறித்த மதிப்பீடுகளை நிலைப் பெறச்செய்ய உதவும்.  

எந்த ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் பாலியல் ஆற்றலும், வரலாற்றில் மிகுந்த நேர்மையையும் அறங்களையுமே பேணப் போராடியுள்ளன என்பதுதான் ஆதிக்க சமூகத்திற்கு எதிராக இன்று நம்மிடம் இருக்கும் ஒரே அம்பும் தெம்பும்.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: