நம் குரல்

'இடிந்த கரை' நூல் குறித்த மதிப்புரை - நறுமுகை தேவி


ஒருமுறை கூட்டத்திற்காக வெளியூர் சென்றிருந்தேன்..கூட்டம் முடிந்தவுடன் என்னை வழியனுப்பி வைக்க ஒரு பிரபல எழுத்தாளர்,நண்பர் வந்திருந்தார்..மிகவும் சீரியஸ் ரைட்டர் என்று அறியப்பட்டவர் அவர்.நாங்கள் ரயிலடியில் பேசிக்கொண்டே காத்திருந்த போது வேறு இரயில்கள் எங்களைக் கடந்து சென்றன.ஒரு குழந்தையைப் போல வெகு குதூகலத்துடன் அவர் அதை ரசித்துப் பார்த்தார்..அவர் ரசிப்பதை,அவரின் குதூகலத்தை நான் வெகுவாக ரசித்தேன்.அவர் சொன்னார்..இந்த நிலம் அதிர்கிறது இல்லையா?அப்பாரயில் எத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பா இருக்குதில்ல?அப்போது அவரிடம் ஒரு சீரியஸையும் என்னால் பார்க்க முடியவில்லை..ஆனால் அவர் அவருக்கு உண்மையாகத்தான் இருந்தார்.பேசினார்..அது தான் மனித மனம்..அதே போலத்தான் கடல்..
கடல் அசையுமா?அசையும்../கடல் அசைக்குமா?அசைக்கும்../கடல் நனையுமா/நனையும்…../கடல் நனைக்குமா?நனைக்கும்…/கடல் நகருமா?நகரும்..

ஆம்..கடல் நகரும்..நகர்ந்து நகர்ந்து வந்து குட்டி ரேவதி மாதிரியான தனக்குப் பிடித்தவர்களின் எழுத்தில் ஒளிந்து கொள்ளும்..தன்னை வெளிக்காட்டிக் கொண்டால் மீண்டும் அழைத்துப் போய் விடுவார்கள் என்ற அச்சத்தில் அது கவிதைகளுக்குள் ஒளிந்து வாழும்

எத்தனை வர்ணனைகளுக்கோ,எத்தனையோ எழுத்தாளர்களின் பேனா மையினுள்ளோ அலையடித்த கடல் தான் இது..ஆனாலும்,தன் அத்துணை அந்தரங்கத்தையும் நேர்மையாகச் சொல்லும் பதிவுகளுக்குள் சென்று அடைக்கலமாகி விடுவதில் தான் அது தன் வாழ்வாதாரத்தைக் காண்கிறது..
தேவதையென்றோ.அரக்கியென்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள் அதற்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை..அது தான் குட்டிரேவதி..போகிற போக்கில் பூ உதிர்த்து விட்டுப் போகிற பூமரமல்ல அவளது எழுத்துகள்..அது தேவைக்கேற்பப் பூத்துக் காய்க்கிற கனிமரம்..
காதல்,காமம்.அரசு,மக்கள்,போராட்டங்கள்,திருநங்கைகளின் நிலை எனப் பரவலான விரிந்த மற்றும் செறிந்த பார்வையுடன் அகன்றகடலென விரிகிறது இத்தொகுப்பு.

இவருடைய இந்த இடிந்தகரை தொகுப்புக்குக்குள் சென்று திரும்பும்  யாவரும் முழுக்க முழுக்க கடலின் உவர்நீரில் மூழ்கி தொப்பல் தொப்பலாக நனைந்து விடுவார்கள் என்றால் அது மிகையில்லை.
 கடலில் நனைந்து,விளையாடி,கரையில் நண்டுகளோடு கூட ஓடி,சிப்பி பொறுக்கி,கட்டுமரமேறி,மீன்கள் பிடித்து,கலங்கரை விளக்கின் வெளிச்சப்புள்ளியில் நகர்ந்து, யாரையும் ஒரு நெய்தல் நிலத்து மனிதர்களாக்குகின்றன இக்கவிதைகள் .

.நெய்தலின் பூச்சூடி,நெய்தலின் அதிகாலையில் அவள் காதலனுக்காகக் காத்திருந்த வேளையிலே தான் அரசர்களின் ஆணைகளுக்கேற்ப அவளுக்கான நிலத்தைப் பறித்து அவளை,அவளின் காதலனை தேசத் துரோகியாக்கி  நாடகமாடுகிறது அதே அரசு எனும் இயந்திரம்
மார்க்கச்சைகளில் கடல் மணல் நிறைகிறது/யோனிகளில் பூக்கள் வளர்கின்றன/உடலிலோ உப்பு பூத்து நீறெனச் சேர்கிறது/ஒரு கடலையே குடித்து விட்டவளிடம்/ஒரு கை நிரள்ளி இது தான் கடல் எனாதே/உடலுக்குள் ஒரு கடலையே நிரப்பிச் சுமப்பவளிடம்/ஒரு சூரியன் ஒரு குளிர் நிலவு வந்து சேர்ந்த பெரு நதிகள்/எல்லாம் இருக்கின்றன

இங்கிருந்து துவங்குகிறது குட்டி ரேவதியின் இடிந்தகரைக்கான கவிதைப் போராட்டம்..
அணு உலை தொடர்பான கவிதைகளும்,அது குறித்த போராட்டங்களின் செய்திகளும் செறிவாய் அடர்ந்திருக்கின்றன.இந்தப்போராட்டத்தில் பெண்களின் உணர்வும்,தீவிரமும் வார்த்தைகளில் சொல்லி நிரப்ப முடியாத அளவுக்கான ஆழமானவை என்பதை இவரது கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன..தொகுப்பு முழுவதும் விதவிதமான உணர்வுகளின் கலவையாகவே மிளிர்கின்றது.பெண்ணுடலை ஒரு கடலாகவே விரித்துப் பார்க்கும் ரேவதியின் பல வரிகள் மிகவும் பளிச்!பளிச்!
கடலை இழந்த சங்கு போல-என்ற கவிதையில் ஒரு வரி/கடலை உடலுக்குள் சுமந்து திரியும் பெண்ணுக்கு/குரல் வளர்வதில்லை/சொற்களை அவள் வளர்ப்பதில்லை.” மிக மிக அழகான வரிகளாகத் தோன்றிற்று எனக்கு.
அரசாங்கத்தை மக்கள் மீதான அதன் அலட்சியத்தைக் கடுமையான வார்த்தைகளால் சுட்டுகிறார் அவர்.’தமிழகத்தைத் தேசம் என்கிறோம் நாங்கள் என்ற கவிதையில்கொலைகளை ஒத்திகை பார்க்கும் அரசுச் சமூகம்/எங்கள் பிள்ளைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்/லத்திகளால் வரைபடத்தைத் தெளிவாக வரைந்து விட முடியும் என்று நம்புகிற ஓர் அரசுஎன்கிறார்.
அரசியின் சாட்டை என்ற கவிதையில்,அரசியாகப்பட்டவள் சூன்யக்காரியைப் போல நடந்து கொள்பவள் என்று துவங்கிவன்மத்தை சாக்லேட்டுக் கட்டிகளாக்கித்/ தோழியுடன் தின்று ருசித்த வனவாசக் காலங்களிலும் கூட /தன் கண்களில் மண்டிய சூன்யத்திலிருந்து மீள/அவள் கற்றுக் கொண்டதேயில்லைஎன்கிற வரிகளை வாசிக்கிற போது சமகால அரசியலும் உடன்பிறவாத் தோழிகளும் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை..

ரேவதியின் கவிதைகள் முழுதும் கடுமையான அரசியல் விமர்சனத்தை உள்ளடக்கியே இருக்கின்றன.கூடங்குளம் விவகாரம் துவங்கிய நாள் முதலாய் இன்றுவரை நடை பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றிய விவரிப்பும்,அரசு இயந்திரம் அதை ஒடுக்க மேற் கொள்ளும் அத்தனை தகிடு தத்தங்களையும் இக்கவிதைகள் அறம் பிறளாமல் பேசுகின்றன.

அரசியல் சாராத கவிதைகள் அல்லது அரசியல் இல்லாத கவிதைகள் இருக்க முடியாது..ஒவ்வொரு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு அரசியல் சார்ந்தே இருக்கவேண்டும்.அவ்விதத்தில் பார்த்தால் ரேவதியின் அரசியல் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கான ஆதரவுக் குரலாக ஒலிக்கின்றது.மக்களுக்குத் துரோகம் செய்யும் மக்களாட்சி முறையில் ஏற்பட்டுள்ள அவலத்தினை,அரசுகளின் ஆதிக்க மனோபாவத்தை அது கடுமையாகச் சாடுகின்றது.
எங்களுக்காகப் போராடிய ஆண்களின் காயங்களை/முத்தமிட்டு அவர்களை எம் கண்ணீரின் சேலைகளுக்குள்ளே/அணைத்துக் கொள்ளவும் அறிந்து கொண்டோம்/………………………..குடிசைகளில் ஒளித்து வைத்திருந்த காதலை/இதயத்தில் புதைத்துக் கொள்ளவும்/கற்றுக் கொண்டோம்-என்று போராட்டக்களத்தில் மிளிர்கின்ற கிராமியக் காதல் சொல்கிறார்..


கடலுக்குள் இறங்கி நடந்தவனைப் போலவே தான் இவனும் என்றாலும் இவன் கிறிஸ்து அல்ல.கிறிஸ்து அல்லவே அல்ல/கடலில் மூழ்கிய நிலவின் வட்டத்தைக் கால்களால் கலைத்தனர்/அதன் புனிதப் பாதையைத் தம் நடையால் அழித்தனர்/ என்று சொல்லுவதன் மூலம் மக்கள் போராட்டங்களை/அப்போராட்டங்களை வழிநடத்துபவர்களை வெறும் புனிதர்களாக்கிக் கடந்து போகிறவர்களை உலுக்குகிறார்.அவர்களைப் புனிதர்களாக்கி நீங்கள் தப்பித்துப் போகாதீர்கள்.உங்கள் கடமையைச் செய்யத்தவறாதீர்கள் என்கிறார்.


நாம் வாழும் பூமியில்,சொந்த நாட்டில்,சொந்த ஊரில் அந்நியர்களாக்கப்படுவது எவ்வளவு கொடுமையான விசயம் தெரியுமா?நம் கண்ணெதிரே நாம் வாழ்ந்த மண் நம்மிடமிருந்து களவாடப்படுவதும்,அதைக் கை பிசைந்து வேடிக்கை பார்க்க நேர்வதும் ஆறாத ரணம்.அதிலும் கடலும்,அதைச் சார்ந்த தொழிலும் உள்ள மக்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது காலவரையறையற்ற முறையில் இப்போராட்டத்தை நீட்டித்திருப்பது இந்திய வரலாற்றில் முதல்முறை மட்டுமல்ல யாராலும் மாற்றவே முடியாத நிதர்சனமான உண்மை.நீரால் வேலியமைத்து,நீர்சூழ நின்று தொடரும் இப்போராட்டத்தின் மிக முக்கிய குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் எந்தவொரு அரசியல் கட்சியும் இப்போராத்திற்குத் தலைமை வகிக்கவில்லை என்பதே..சமீபமாக நாட்டில் அதிகரித்து வரும் மக்களின் தன்னெழுச்சியான பல போராட்டங்களில் இடிந்தகரைப் போராட்டம் எல்லாத்தரப்புகளையும் சற்றே மிரளச்செய்திருக்கிறது என்றால் அது  மிகையில்லை எனலாம்.இந்த முறை இப்போராட்டங்களில் பெண்கலின் எண்ணிக்கையும்,பங்கேற்பும்,தீவிர அர்ப்பணிப்பும் மிக முக்கியமான ஒன்றாகவே கருத்தப்படுகிறது.பெண்வழிச் சமூகமாக,தாய்வழிச் சமூகமாக இருந்த காலமும்,கொற்றவை என்னும் பெண் தய்வ வழிபாடும் நினைவில் வருகின்றன.போராடக்களத்தில் பல பெண்கள் எல்லோருமே கொற்றவையாகப் பரிணமிக்கின்றனர்..இதை அழகாகச் சொல்லுகின்றது 
இவரது கொற்றவை கவிதை 
அதேபோல்,
ரேவதியின் காதல் பேசும் சில கவிதைகள் நம்மை மலைப்புக்குள்ளாக்குகின்றது.மழை பெய்கிறது என்ற கவிதையில்கழிகளில் அசையாமல் நிற்கும் கொக்குகளின் வேதனை மீதும் பெய்கிறது/இரக்கமற்ற பிரிவைக்கொடுக்கும் இரவின் நிலவிலிருந்து/குளிரால் வதைக்கப் பெய்கிறது/எம் மர்ம உறுப்புகளை குளிர் தன் கைகளால் தொட முயலும் இவ்விரவினில் உறங்காத என் கனவுகள் மீது பெய்கிறது/ஆண் என்று எவரும் அற்ற கற்பனைகள் இல்லாத/என் கண்களிலிருந்து பெய்கிறது/ -இதில்  ஆண் என்று எவரும் அற்ற கற்பனைகள் இல்லாத/என் கண்களிலிருந்து பெய்கிறது என்ற வரியை நான் மிக உச்சமாகக் கொண்டாடுகிறேன்..

ஆண்மை பெண்மைக்கு ஏங்குகின்றது.பெண்மை ஆண்மைக்கு ஏங்குகின்றது.மென்மை என்பது திண்மைக்கும்,திண்மை என்பது மென்மைக்கும் தவிக்கின்றது.இதுவே உலகியலின் உயிரியலை இயக்குகின்றது.ஒரு அலட்சியப் போக்கில் காதலைச் சொல்லி விட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கச் செய்ய அதுவே போதுமானதாக இருக்கிறது.ரேவதியின் எழுத்துகளில் அதைப் பார்க்க முடிகிறது..

ஒரு கவிதையில் சொல்கிறார்-புவி ஈர்ப்புவிசையை இழந்து விட்ட இருவரும் பூவைப் போலச் சுழன்றோம் வெளியில்/நிர்வாணம் ஒன்றையொன்று பார்த்து/அகம் மலர்ந்து கொண்டது/விலகிச் சென்றதும்/வெட்கித்துத் துணியைத் தின்றதுஅழகான வரிகள்..தேன் கூடு,ஆடை போன்ற கவிதையில் உண்மையிலேயே காமரசம் சொட்டுகிறது.

திருநங்கைகள் பற்றிய கவிதைகள் மனதின் ஆழம் பார்ப்பவை.மாயக்குதிரை,உன்னிடம் உண்டா ஒர் அரண்மனை,அரைப் பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள் என்ற கவிதைகள் பாலினத்திரிபும்,அதன் அவஸ்தையும் பேசுவன.அடன் வலியை நம்மை உணர வைக்கின்றது.@(வாசிக்கஅரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்)

இப்படி,கலவையாக இருக்கிறது இத்தொகுப்பு.ஆனாலும்,அதில் அதிகமாக இடிந்தகரையும்,அதன்போராட்ட மக்களும்,கடலும் மட்டுமே அலையாடிக்கொண்டிருக்கிறார்கள் நம் மனமெங்கும்….நறுமுகை தேவி

கருத்துகள் இல்லை: