எப்படியோ இப்பொழுதும் கவிதை தான் காப்பாற்றி விட்டது.
அருகே அருகே நகர்ந்து வந்து என்னைச் சுவைத்துப் பார்க்கத் திட்டமிருந்த, ரத்தச்சுவை கேட்கும் பிடாரிகளிடம் இருந்து மொழியின் வேட்கை தான் விரட்டியது.
கைக்கு எட்டாத தூரம் செல்லும் வித்தையைக் கவிதை தான் கொடுக்கிறது.
கவிதையிடமிருந்து, மனிதனின் மூளைச்சுவரின் மடிப்புகளில் கூட எந்த நஞ்சையும் மறைத்து வைக்கமுடியாது. பூஞ்சையைப் போல்
அது தன்னையே கொல்லும், என்னையே கொல்லும் என்று சொல்லும் அன்பைக் கவிதை மட்டுமே தந்துவிடுகிறது.
தனிமை தான் எவ்வளவு பாதுகாப்பானது. கண் முன்னே பரத்தி அடுக்கப்பட்டிருந்த எந்தப்புதியப் புத்தகமும்
ஈர்க்காத படிக்கு தனிமையின் பெருங்காட்சி கண்களை நிரப்பிக் கொண்டே இருக்கிறது.
யார் என்னை தம் அன்பின் செம்புக்குள் நிறைத்து வைத்து 'இது தான் நீ, இது மட்டுமே நீ' என்று சொல்வதில்
நான் பூரித்துப் போக முடியும்.
அன்பின் உச்சம் என்று சொல்லிய மறு கணம் எப்படி அவமானத்தைத் தந்து போகிறார்கள்.
அய்யோ, தப்பித்தேன். கவிதை, பிச்சைக்கார உடையில் இருக்கும் என்னை, மனதில் மேகங்கள் போல எண்ணங்கள் பறந்து கொண்டிருக்கும் என்னை கடலுக்குள் இழுத்துச் செல்கிறது.
நான் அலையாகக் கொந்தளிக்கச் செய்கிறது. கரையையும் இடிக்கக் கற்பிக்கிறது.
அவமானம். எல்லாமும் கையில் தந்ததாய்க் காட்டிக் கொண்ட பின், கடைசியாய் பரிசளிக்கப்படுவது ஓர் அவமானம். கவிதை அப்படிச் செய்வதே இல்லை. உச்சம். உச்சத்தின் பரவசம். இது மட்டுமே கவிதைக்குத் தெரியும். கவிதைக்குத் தெரிந்தது எல்லாம் இதுவே.
இலைகளை உதிர்த்து உதிர்த்து துளிர்க்கும் சுரவேகம், கவிதை தந்தது. உங்கள் காலடி நிழல் உங்களுக்கே. அதில் என்னையும் தங்கச் சொல்லுதல் என்னை அவமானம் செய்யும்.
கவிதை பெரிய குடை. அதில் நீயும் அடங்குவாய். நானும் நிற்பேன். எல்லை என்று ஏதும் இல்லை. அடுத்தடுத்த கணத்திற்கு இழுத்துச் செல்லும் நாயின் விளையாட்டு, கவிதையிடம் உண்டு.
மனிதர்கள் போல், 'இவ்வளவு தான் உனக்கு, எனும் அவமானம் செய்தல் இல்லை அதனிடம்'. நான் நாயையும் சொல்கிறேன். கவிதையைத் தான் சொன்னேன்.
எப்படியோ, இப்பொழுதும் ஒரு முறை தப்பித்தேன். எவரிடமும் சிக்காமல் கவிதை கிணற்றிலிருந்து ஒரு வாளி வழியாக என்னை இறைத்து வெளியே கொட்டியது. நான் பாய்ந்தோடி பயிர்களைக் கண்டேன்.
இதோ ஓடுகிறேன், வரப்பின் வழியே, வாய்க்கால் வழியே, கண்டபடியெல்லாம் தாறுமாறாக.
குட்டி ரேவதி
1 கருத்து:
எங்கே ஓடினாலும்
கவிதையும் கூடே உங்களுடன் வரும் ...அவதானிப்பு
உங்கள் குரலை கேட்டதில்லை எனினும் இது நீங்கள் உரக்க படித்து ஒலிப்பதிவு செய்த மாதிரியே இருந்தது..
(மற்றோர் அவமானம் இல்லை என்றே நினைக்கிறன்)
கருத்துரையிடுக