நம் குரல்

"இரசாயன ரோஜாக்கள்" தமிழில், ஏ. ஆர். ரஹ்மானின் புதிய இசை ஆல்பம்!








K.M. இசை நிறுவனத்தின், 'பெண் எழுச்சியை' மையமாகக் கொண்ட "இரசாயன ரோஜாக்கள்" ஆல்பத்திலிருந்து இரண்டு பாடல்கள் சமீபத்தில் Coke Studio @ MTV - வில் வெளியாகியிருக்கின்றன. 

ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் பெருமுயற்சியிலும், நவீனக்கலை மற்றும் தொழில் நுட்ப வடிவிலும் உருவாகியிருக்கும் இசை முயற்சி இது.

பெண்களின் வல்லமையை, இது வரை  பதிவாகாத பெண்களின் உணர்வுகளை இசைக்கும் பணியில் இந்த ஆல்பத்தில் தன்னை ஈடுபடுத்தியிருக்கின்றார்.

இதன் பின்னணியில் வேலைசெய்யும் நபராக, நான் உணர்ந்த இரு முக்கியமான விஷயங்கள்: ஒன்று, திரைப்படங்களுக்கு  மட்டுமே இசை என அதை அடக்கிவைக்காது அதையும் தாண்டி விரித்துச் செல்லும்  தீவிர ஆர்வத்துடன் செயல்பட்டிருக்கிறார், ஏ. ஆர். ரஹ்மான். இரண்டு, பெண்களின் கருத்துகளையும், படைப்பாற்றலையும் மையமாக வைத்து இதை உருவாக்கியுள்ளார். ஒரு கலைஞனாக அவர் தன்னை மிகவும் விடுதலைப் பூர்வமாகவும் முற்போக்காகவும் வைத்திருக்கிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது.

தமிழ் படைப்புலகிற்கு இது ஒரு புதிய வெளிப்பாடு.

பிரபல இசை இயக்குநர் ஒருவர் இந்தப்பாடல்களைக் கேட்டுவிட்டு என்னிடம் கூறினார். "ஏ. ஆர். ரஹ்மான், இவ்வாறு இசை ஆல்பத்தைக் கொண்டு வருவதன் வழியாக, இசை உலகத்திற்கான வாயிலை எல்லோருக்கும் திறந்து கொடுக்கிறார். ஆல்பங்கள் உருவாக்குவதில் முன்னோடியாகவும் இருக்கிறார். இனி, எல்லோரும் அப்பாதையில் செல்ல முடியும், பயன்படுத்திக்கொள்ளமுடியும். இசை என்பது திரைப்படங்களுக்கு மட்டுமே என குறுகிப்போயிருந்ததை மாற்றி வைக்கிறார். தமிழில், இனி நிறைய இசைத் தொகுப்புகள் உருவாகும்"

"நான் ஏன் பிறந்தேன்!" -  கவிஞர் வாலி எழுதிய பாடல். ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் தன்னுடைய கறுப்பு நிறத்தால் வீட்டிலும், ஊரிலும் ஒதுக்கப்படுகிறாள். தனிமையும் பாகுபாடும் உருவாக்கும் வேதனை. வறுமையின் நிறமான கறுப்பின் உணர்ச்சிகள். அடக்குமுறைகளையும் தடைகளையும் உடைத்து வெளியேறி எப்படி அவள் ஒளிர்கிறாள் என்பதே பாடல். ஒரு குறும்படத்தில் இப்பாடல் ஒலிக்கப் போகிறது. .ஆர். ரஹ்மான், ரிஹானா, இஷ்ரத் ஆகியோர் பாடுகின்றனர்.

இரண்டாவது பாடல், "என்னிலே மகா ஒளியோ!" -  விட்டு விடுதலையான பெண்ணின் உலகம், எல்லையற்ற பரவசம், பெண்மையின் மலர்ச்சி. இஷ்ரத், ரிஹானாவின் குரல்களில் என்னுடைய கவிதை வரிகளில்இப்பாடலுக்குத் தொடர்ந்து நிறைய வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.  எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைப் பொதுவில் வைக்கிறேன். இந்த ஆல்பத்தின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட நபராக என் பார்வையில் சொல்லவே, இந்த எளிய பதிவு. 

'இரசாயன ரோஜாக்கள்' ஆல்பத்தில் "பெண் உரிமை" தொடர்பாக இன்னும் சில பாடல்களும் இருக்கின்றன.


"இரசாயன ரோஜாக்கள்" தமிழ் இசை ஆல்பத்தின் முன்னோட்டம்:


கவிஞர் வாலியின் "நான் ஏன் பிறந்தேன்?" பாடல்"


குட்டி ரேவதியின் "என்னிலே மகா ஒளியோ!" பாடல்:



குட்டி ரேவதி

'சோளகர் தொட்டி' நாவல் நாடகமாக வளர்ந்து வருகிறது!




கட்டியக்காரி நாடகக் குழு, 'சோளகர் தொட்டி'யை நாடகமாக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
அதன் முதல் கட்டப்பயிற்சிப் பட்டறை இரண்டு நாட்கள், (17, 18.08.13) குன்றத்தூரில் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டிய புல்வெளி அரங்கில் நடைபெற்றது.

ச. பாலமுருகனின் நாவலான 'சோளகர் தொட்டி'யை  நாடகமாக்கும் முகமாக ஶ்ரீஜித் சுந்தரம் கடந்த ஆறு மாதகாலமாக கட்டியக்காரி நாடகக்கலைஞர்கள் அனைவருக்கும் தேவையான உடற்பயிற்சிகளையும் இன்னும் இந்நாடகத்திற்குத் தேவைப்படும் நுட்பமான கலைப்பயிற்சிகளையும் அளித்து வருகிறார். இந்த முதல் பயிற்சிப் பட்டறையில் நானும் கலந்து கொண்டேன். 

நாளுக்கு நாள் அந்த நாடகம் பிரமாண்ட உருவமும் கற்பனையும் கொண்டு விரிந்து கொண்டே இருப்பதைக் கண்ணுறுகிறேன்.

இந்த முதல் பயிற்சிப் பட்டறை, இன்குலாப் அவர்களின் கவிதைக்கான நாடக அசைவுகளைக் கொண்டதாகவும் அதே சமயம் பழங்குடி மக்கள் மீதான அரச வன்முறைகளின் ஓலங்களையும் நினைவுகளையும் எழுப்புவதான படிமங்களைக் கட்டமைப்பதை அறிமுகம் செய்து வைப்பதாகவும் இருந்தது.

பொய்க்குற்றச்சாட்டுகளால் வன்முறை ஏவப்பட்டுக் காவல் நிலையங்களில் கொல்லப்படும் பழங்குடி மக்களின் உடல்கள் எந்த வித அறமும், அர்த்தமின்றி இரத்தக்கறைகளுடன் சாக்குமூட்டைகளாகக் கிடக்கும் அனுபவத்தை உணரச்செய்வதாக இருந்தது இந்தப் பயிற்சிப்பட்டறை.

தொடர்ந்து தம் உடல்களை, குறிப்பிட்ட அனுபவங்களுக்கு, பயிற்சிகளுக்கு ஒப்படைப்பதன் வழியாக நாடகக்கலைஞர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல பழங்குடி உலகுக்குள் நுழையத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

நாடகம் முழு வடிவத்தைப் பெற, இன்னும் குறைந்தது ஆறு மாதங்களாகலாம். அழிந்து போன நுட்பமான மானுட உணர்வுகளைக் கண்டறியவும்,  நம்மில் அந்த உணர்வுகளை மீட்டெடுப்பதும் தாம் இந்த நாடகத்தின் நோக்கம்.

மேலும், இந்திய அளவில், பழங்குடிமக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும், மறுக்கப்படும் சமூகநீதிகளையும், புறக்கணிக்கப்படும் அதன் மனித உடலரசியலையும் மேடையில் நிலை நிறுத்துவதை இந்நாடகம் தன் பயணப்பாதையாகக் கொண்டுள்ளது.

நண்பர்கள், தொடர்ந்து இந்நாடகத்தின் ஆக்கத்திற்கு ஊக்கம் சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

கட்டியக்காரி நாடகக்கலைக்குழு

குட்டி ரேவதி
புகைப்படங்கள்: சுரேந்தர்

தரவரிசை மட்டுமல்ல; கைத்தட்டல்களும் அவசியம்

இந்தியா டுடே சுதந்திர தின விழாசிறப்பிதழில் இடம் பெற்றுள்ள கட்டுரை. நடிகர் அமிதாப்பச்சனுடையது. 
தற்கால திரைப்படத்தயாரிப்பையும் அதன் வசூலையும் வெற்றியையும் இணைத்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கும், உதவும் கட்டுரை. இவ்வளவு நுணுக்கமாகத் தற்கால திரைப்படத்தயாரிப்பை அவர் அணுகியிருக்கும் விதம் ஆச்சரியத்தைத் தந்தாலும், அவர் மீது குடை விரித்திருக்கும் புகழ் வெளிச்சத்தையும் அதற்கான விலையையும் அவர் எப்படி முன்வைக்கிறார் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. என்றாலும், முக்கியமான, தவிர்க்கமுடியாத கட்டுரை.




//

"சில காலம் முன்புவரை ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் வசூல் என்பது கிடைக்காத ஒன்று. இப்போது இந்தத் தொகையை எட்டிவிடும் படங்கள் மற்ற படங்களை விட வெற்றி கண்டவை என்று அளவுகோல் வைக்கப்படுகிறது. முன்பு வெள்ளிவிழா, பொன்விழா, வைரவிழா கண்ட படங்கள் என்று வகைப்படுத்தப்பட்டதைப் போன்றதே இதுவும். 

கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் ஐம்பதோ நூறோ அடித்தால் அவருக்குக் கிடைக்கும் கைத்தட்டல் போன்றது இது. 49 அல்லது 99 ரன்கள் எடுப்பதெல்லாம் ஒரு சாதனையாக கருதப்படுவதில்லை. 100 என்கிற அந்த எண் தான் நம் மனதிற்குள் மைல்கல் என்று பதிவாகிவிட்டது.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வெளிவந்த பல பொன்விழா படங்களின் வசூலை இன்றைய ரூபாய் மதிப்பில் அவை 100 கோடியைத் தாண்டிவிடும். சில படங்கள் 200 கோடியையும் தாண்டக்கூடும். ஜெய் சந்தோஷி மா வெளியான அதே வாரம் ஷோலேயும் வெளியானது. ஜெய் சந்தோஷி மா ஒரு குறைந்த பட்ஜெட் படம். ஷோலேவைவிட பத்தில் ஒரு பங்கு தொகைக்கே அப்படம் விற்பனையானது. முதல் ரிலீஸில் ஷோலேவுக்கு சமமாக அந்தப் படமும் வசூல் செய்தது. நட்சத்திர மதிப்புடன் வெற்றிகண்டதால் எல்லோரும் ஷோலே குறித்துப் பேசினார்கள். அந்தப் படம் குறித்து யாரும் பேசவில்லை (நானும்). 

வெற்றியின் அளவை வெளிப்படுத்த நமக்கு துறை சார்ந்த ஏதோ ஒரு சொல் தேவைப்படுகிறது. பொன்விழா என்பது இப்போது 100 கோடி ஆகியிருக்கிறது. திரைப்படம் உருவாக்குபவர்கள் எல்லோருமே தங்களுடைய படம் நன்றாக வசூல் செய்யவேண்டும் என்று கவலைப்படுகிறார்கள். வளமான தயாரிப்பாளர்கள் தங்கள் படத்துக்கு 100 கோடி வசூலை உத்தரவாதம் தரக்கூடிய நட்சத்திரங்களையே ஒப்பந்தம் செய்கிறார்கள்.

25லிருந்து 50 வாரங்கள் வரை படங்கள் ஓடும் என்கிற காலம் போய்விட்டது. ஆகவே வெற்றி இன்றைக்கு பணத்தால் அளவிடப்படுகிறது.  100 கோடி என்பது கணிசமான வியாபாரம்தான். ஆனால் வருவாய், செலவு, விறபனை ஆகியவற்றின் கணிதம் சற்று சிக்கலானது. 50 கோடி செலவில் தயாரான படத்திற்கு விளம்பரத்திற்கு ஆகும் செலவு 15 - 20 கோடி. வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 70 கோடி ஆகிவிடும். ஆக இந்தப் படம் இதன் செலவுத்தொகையான 70 கோடியை விட இரு மடங்காக அதாவது 140 கோடிக்கு வசூல் செய்தாக வேண்டும். எத்தனை படங்கள் இப்படி வசூல் செய்கின்றன என்று பட்டியலிட்டால் சுவாரஸ்யமாக இருக்கும். மாறாக, 12 - 15 கோடி செலவில் தயாரான படங்கள் 60-70 கோடி வரை வசூலிக்கின்றன. அதாவது படத்தின் செலவைவிட நான்கு மடங்கு அதிகம். 100 கோடி பட்ஜெட் படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த குறைந்த பட்ஜெட் அதிசயங்களே சிறந்தவை.

100 கோடியில்தான் படம் உருவாக்கவேண்டும் என்கிற அழுத்தத்துக்கு இயக்குநர்கள் இன்றைக்கு அடிபணிவதில்லை.  படைப்பாற்றலை இத்தனை ரூபாய்க்குத்தான் தரவேண்டும் என்று வற்புறுத்துவது நகைப்பிற்குரியது. எல்லா மக்களும் கண்டு களிக்கக் கூடிய அளவில் அவர்களை மகிழ்விக்கவும் திருப்திப்படுத்தவுமே கதைத் தேர்வு, திரைக்கதை, பட உருவாக்கம் ஆகிய அனைத்தும். அவை எப்படி லாபமாகவும் வருவாயாகவும் மாறுகின்றன என்பது கூறுவது கடினமானது. வார இறுதியில் மட்டுமே பெரும்பான்மையானவர்கள் வாசிப்பார்கள் என்பதை மனதில் வைத்து ஒரு பத்திரிகையிலோ அல்லது நாளிதழிலோ முதல் பக்கத்தில் என்ன வரவேண்டும் என்று தீர்மானிப்பது போலத்தான் இதுவும். இன்றைய படங்களின் வெற்றியில் வார இறுதிநாட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைதான் ஒரு படத்தின் வெற்றிக்கும், தொடர்ந்து ஓடுவதற்குமான அளவுகோலாக விளங்குகின்றன.

ரேட்டிங் எனப்படும் வரிசைப்படுத்துதல் என்னைப் பொறுத்தவரை முரண்பாடான ஒன்று. ஏன் ஐந்து அல்லது ஏழு நட்சத்திரங்கள் பெற்றால் ஒரு படம் சிறந்த படமாகிறது?  ஏன் 20 அல்லது 30 அல்லது 10 நட்சத்திரங்கள் எல்லாம் கிடையாதா? அளவீடுகள் எல்லாம் குறியீடுகள்தான். அவற்றுக்கென தனியே தர்க்கங்கள் உள்ளன. படம் குறித்து சந்தையிலிருந்து வரும் எதிர்வினை இந்த அளவீடுகளில் செல்வாக்கு செலுத்தும். இன்றைக்கு மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களும் டிக்கெட் விலையும் அதிகமாகிவிட்ட சூழலில், நடுத்தர வர்க்கத்து மக்களின் வாங்கும் திறனையும் கருத்தில் கொண்டுதான் கொடுக்கும் பணத்திற்கேற்றவகையிலான படத்தைத் தருவதும் வசூல் வேட்டையும் நடக்கின்றன. முதல் மூன்று நாட்களில் வசூலாகும் கணிசமான தொகையுடன், தொலைக்காட்சி உரிமைக்கான தொகையையும் சேர்த்தால் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், உலகின் எல்லா மூலைகளுக்கும் ஒரு படம் குறித்த நம்பகத்தன்மை நொடியில் போய்ச் சேர்ந்துவிடும்; திருட்டுப் பிரதிகளும்தான். திரையரங்கத்தில் வெளியிட்டபின் மூன்று வாரங்கள் கழித்து தொலைக்காட்சியில் படம் வெளியாகிறது. 7- 10 ஆண்டுகளுக்கு ஒரு படத்தை விநியோகஸ்தர்களிடம் அளிக்கும்போது, என்ன மாதிரியான ரேட்டிங்கை அந்தப் படம் பெறும் என்பதை கற்பனை செய்துபாருங்கள். இதே காரணத்துக்காகத்தான் மாதமிரு முறை வெளிவந்த இந்தியா டுடேவும் வார இதழாக வெளிவருகிறது. விரைந்து அனைவருக்கும் விஷயங்களை தரவேண்டும் என்பதுதான் நோக்கம். 15 நாட்கள் கழித்துத்தான் ஒரு செய்தி சென்றடையும் என்றால் அது பழையதாகிவிடும்.

ஆனாலும், பார்வையாளர்களுக்கு இந்த 100 கோடி குறித்தான கவலையெல்லாம் இல்லை. நீங்கள் நன்றாக நடித்திருப்பதை மட்டுமே அவர்கள் ரசிக்கிறார்களே தவிர அது ஈட்டக்கூடிய 100 கோடிக்காக அல்ல. நல்ல புரிதல் உள்ள பார்வையாளர்கள் நல்ல கதை உள்ள படம் என்று கூறப்படும் படங்களைப் போற்றி வந்திருக்கின்றனர்; ஒரு வழக்கமான வணிகப் படத்தின் உள்ளடக்கத்துக்காக  அதை ஏளனம் செய்ய எந்தக் காரணமும் இல்லை என்றாலும் கூட.

இருவிதமான படங்களும் வெளிவரவேண்டும் என்பது முக்கியம். நம் சமூகத்திற்கு மட்டுமல்ல, எந்த சமூகத்திற்கும் தொடர்புடையுதாகவே இவ்விரு வகை படங்களும் இருக்கும். ப்ளேபாய், டைம் இரண்டுமே ஒரே சந்தையில்தான் பெயர் பெற்றன. 

என்னைப் பொருத்தவரை, என் படைப்பாற்றலை ஒரு குறிப்பிட்ட லாபத்தை ஈட்டும் நோக்கத்துக்காக செலவு செய்ய எண்ணுவது பேரழிவுக்கு இட்டுச் செல்லும். வெறும் பொருளாதார வெற்றி எனும் அளவுகோலை மட்டும் கொண்டு ஒரு படத்தை உருவாக்குவது என்பது மோசமானது."

//

நடிகர் அமிதாப்பச்சன்
நன்றி: இந்தியா டுடே

நன்றி: பத்திரிகையாளர் கவின்மலர்

அவள் ஒரு பெருங்கானகம்



மரங்கள் கிளைத்த பெருவெளியை வானமாகக் கொண்ட
அவள் ஒரு பெருங்கானகம்
தேனீக்கள் மொய்க்கும் இரைச்சலில் அடைந்தொழுகும்
மதுக்கலயத்தின் மலைமுகடுகள்

அடங்காக் காதலின் பேரருவி அலையென வந்து வீழ
மண்பரப்பில் படர்ந்து கிடக்கும் பசியகொடி
உடலின் படம் திமிர்ந்தெழும் சீரிய பாம்பின் பொலிவு
ஓயாமல் எழுதிக் கலையும் ஒளிக்கோலம்

அவள் தவிப்புகள் வேரேன பாய்ச்சல் எடுத்து
பூமியின் நீரோட்டம் அறியும்
பச்சிலைகள் பட்டாம்பூச்சிச்சிறகுகளுடன்
படபடக்கும்
ஒரு பேரருவியின் கருணையைச் சேலை இழுத்து வந்து
நிலம் சேர்க்கும் கடல் தேடிப் போகும்

நீவிர் பெண்ணென்று அழைக்கும் அவளுடைய
அத்தனை சொற்களும் பலிக்கும் மாமழையென
அணையாத நெருப்புடைய எந்த ஒற்றைச் சொல்லும்
உம்மைச் சபித்துச் சாம்பலாக்கும்

ஏனெனில் அவளிடம் மட்டுமே
கனியின் விதை பிளந்து
உள்ளே உறங்கும் மரத்தை விழித்தெழச்செய்யும்
பருவங்கள் அடர்ந்த யோனியென்று ஒன்று உண்டு

அணையாத நெருப்புடைய எந்த ஒற்றைச் சொல்லும்
உம்மைச் சபித்துச் சாம்பலாக்கும்
ஏனெனில் அவளிடமே யோனியென்று ஒன்று உண்டு



குட்டி ரேவதி

The Ship of Theseus - என் பார்வையில்!






மாற்று சினிமாவிற்கான தளம் விரிவது குறித்த நம்பிக்கை தொனிக்கும் ஒரு படம் என்றே சொல்லலாம்.

இந்திய மாநிலங்கள் தோறும் இது விரிவாக அறிமுகப்படுத்தப்பட்ட விதம், முற்றிலும் வணிக சினிமா விதிமுறைகளிலிருந்து மாறுபட்டது என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளவேண்டும்.

என்றாலும், 'மாற்று சினிமா' என்று கொண்டாடும் அளவிற்குப் புதுமை ஒன்றும் அந்தப்படத்தில் இல்லை.

பார்வையற்ற பெண் புகைப்படக்கலைஞர் தன் கலையுடன் கொள்ளும் உறவு, ஒரு பார்ப்பன துறவி முரண்படும் தத்துவார்த்த வாழ்வியல், நவநாகரீக உயர் தட்டு இளைஞன் ஒருவன் சமூக அக்கறை உடையவனாக மாறுவதற்கான பயணம் என்று மூன்று கதைகள் ஒன்றன் பின் ஒன்றாய் சொல்லப்பட்டுப் பின் எல்லா கதாப்பாத்திரங்களும் உறுப்பு தான முறைகளால் ஒரே கதைத்தளத்திற்குக் கொண்டு வரப்படுகின்றனர்.

படம் பார்த்து முடித்த பொழுது 'உறுப்பு தானத்திற்கான' ஒரு பிரச்சார படம் பார்த்த உணர்வைத் தான் அப்படம் என்னிடம் விட்டுச் சென்றது. ஒரு செயற்கையான முடிச்சு. இதை என்னால் மறைக்க முடியாது.

என்றாலும் அடிப்படையான சில அரசியல் விஷயங்களைக் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது. சமூகத்தில் நவீனம் என்ற கருதுகோள்களை முன்வைக்கும் கதை 2, கதை 3 இரண்டுமே அபத்தங்களாகவும், சமூகத்தில் முற்போக்கு என்று நம்பப்பட்டவைகளை உள்வாங்காதவைகளாகவும்  இருந்தன. இது போன்ற மேம்போக்கான கருத்துகள் இன்று 'வணிக சினிமா'விலேயே ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன.

அடுத்து, கதை 2 - ல் பார்ப்பனச் சிந்தனையாளர்கள் மனிதத்தின் மீது கொள்ளும் அக்கறையை விட மிகையான அக்கறையை 'விலங்குகள் கொல்லாமை'யின் மீது காட்டுவது, அவற்றின் மீதான பரிவைப் பெரிய அளவில் ஊதிப்புடைக்கச்செய்வது. சாதியாலும், மதங்களாலும் மிருகங்களைப் போல மனிதர்கள் மந்தை மந்தையாய்க் கொல்லப்படும் நாட்டில், 'விலங்குகள் கொல்லாமை'யை ஓர் உச்சக்கட்டப் பிரச்சனையாக முன்வைத்திருப்பது நல்ல வேடிக்கை. இது போல் அறிவுரைகள் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிற்று.

கதை - 1 ல் அந்தப் பெண் புகைப்படக்கலைஞர், தன் கலை குறித்து முரட்டுத்தனமான அபிப்ராயங்கள் கொண்டிருப்பதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. எழுப்பப்படும் கேள்விகள், பதில்களைத் தேடும் முயற்சிகளின்றி வெற்றிடங்களாக விடப்படுகின்றன. ஒரு பெண் கலைஞரைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எழுச்சியும் புரிதலுணர்வும் அற்ற சமூகம் என்பதைத் தான் இது வெளிப்படுத்துகிறது.

நிறைவாக மூன்று அடிப்படைக் கருத்துகள்: 

1. சினிமா போன்ற கலை இலக்கிய விடயங்கள் தாம், மனித சிந்தனை எந்தக் காலக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்கான கண்ணாடி. அதில் இப்படம் வெகுவாகப் பின் தங்கியுள்ளது.  'மாற்று சினிமா', என்றும் 'சுயாதீனமான சினிமா' என்ற அடையாளம் பெறுவதாலும் தான் இந்தப் பார்வைகளை முன்வைக்கிறேன். இல்லையென்றால், பத்தோடு ஒன்று பதினொன்று என்று விட்டுப் போயிருப்பேன்.

2. ஒரு சினிமாவின் மூலக்கதையே, தற்காலச் சூழலின் அரசியலை நுட்பமாகவும் மிகச்சரியாகவும், உள்வாங்கி முன் வைக்கக் கூடியது. அந்த அளவில் போதுமான 'அறிவு சீவிதம்' அற்றக் கதையே இது.

3. தற்பொழுது வரும் படங்களில் அல்லது இளைஞர்களின் படங்களில், நம் நாட்டின் வீர்யமான ஆவணப்பட இயக்கத்தின் தாக்கத்தை உணரமுடிகிறது. இதை, 'தி ஷிப் ஆஃப் திஸியஸ்' மற்றும் 'ஐ.டி' இரண்டு படங்களிலுமே முழுமையாக உணரமுடிந்தது. இதைக் 'கதை சொல்லலின்' ஒரு பலமாகவே உணர்ந்தேன்.  இந்தத் தன்மையினால் கூட, இப்படங்கள் 'மாற்று சினிமா' அடையாளங்களையும் புகழையும் பெறுகின்றன என்பது ஒருவகையில் சமாதானத்திற்குரியதே.






குட்டி ரேவதி





இயக்குநர் அமீர் அவர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்!


இந்த நிகழ்வை யாரும்தர்மபுரிசம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டாம்.என்று கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து முற்போக்குவாதிகள், இலக்கியவாதிகள், சமூக நலன் விரும்பிகள் யாரும் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
- என்று இயக்குநர் அமீர் சொல்லியிருக்கிறாராம்.



இயக்குநர் அமீர் அவர்களுக்கு,

வணக்கங்கள்.

ஏற்கெனவே இலக்கியவாதிகள், முற்போக்குவாதிகள் எல்லோரும் சமூகம் குறித்த எந்த சுதந்திரமான கருத்தையும் சொல்லமுடியாமல் வாயடைத்துப் போயிருக்கும் நிலையில், உங்களின் இந்தக் கருத்து உண்மையிலேயே சமீபத்திய 'கருப்பு நகைச்சுவை' என்றே சொல்லவேண்டும்.

'முற்போக்குவாதிகள், இலக்கியவாதிகள், சமூக நலன் விரும்பிகள் யாரும் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று தடையும் விதிக்கிறீர்கள். ஒரு படைப்பாளி, சமூகத்தை நோக்கி இப்படி ஒரு வேண்டுகோளை வைப்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் முற்போக்காகச் சிந்திக்காதே என்று சொல்வது போலவும், பிற்போக்காகச் சிந்தியுங்கள் என்று உந்துவது போலவும் உள்ளது.

அதிலும் ஒரு படைப்பாளியாக, கலைஞனாக மேடையிலும், பொது இடத்திலும் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு பெற்ற ஓர் இயக்குநர் இவ்வாறு பேசியிருப்பது வேதனையானது.

சமூகத்தின் சாதி, காதல், பெண், ஆண் என்ற எது குறித்தும் எந்தப் பரவலான முற்போக்குத் தன்மையும், சிந்தனையும் இல்லாமல் சில திரைத்துறையினர்  நடந்து கொள்வது நிகழும் சம்பவத்தையும் தொடர்புடையவர்களையும் கேலியாக நோக்கவைக்கிறது. ஏனெனில், பொதுச்சமூகம் எல்லாவகையிலும் முற்போக்காகச் சிந்திக்கக்கூடியதாகவும், இயன்ற அளவு விளைவுகளைத் தவிர்க்கும் வண்ணம் செயல்படக்கூடியதாகவும் உள்ளது.

எங்கெங்கும் சாதிய வன்கொடுமைகள் பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், தயை கூர்ந்து நீங்கள் இம்மாதிரியாக, சாதியம் சம்பந்தமான மேம்போக்கான கருத்துகளைப் பேச வேண்டாம் என்று  உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். உங்களையெல்லாம் முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு இது போன்ற பேச்சுகளால் தொடர்ந்து பலத்த ஏமாற்றங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். இது சமூகத்திற்கும் நம் கலைவெளிப்பாடுகளுக்கும் நல்லதன்று.

சொந்த விஷயங்களுக்கு இவ்வளவு பதற்றப்படும் உங்களிடம், சமூகப் பொது நிகழ்வுகளைப் பார்க்கும் விதத்திற்கும் நீங்கள் அவற்றை முன் வைக்கும் விதத்திற்கும் இடையே பெருத்த முரண்பாடுகள் இருக்கின்றன என்று நாம் கொள்ளலாமா? இல்லை, நீங்கள் இயக்கிய சினிமாவை வெறுமனே வியாபாரம் தான் என்று கொள்ளலாமா? அல்லது, இந்தக் காதல் பஞ்சாயத்தை ஒரு வியாபாரம் என்று கொள்ளலாமா?

நம்மால் சினிமா, சமூகம் இரண்டையும் தொடர்புப்படுத்த முடியாத பட்சத்தில், இம்மாதிரியான முரணான கருத்துகளையேனும் சொல்லாமல் இருந்துவிட்டுப் போகலாம். ஏனெனில், இம்மாதிரியான தருணங்கள் எல்லா படைப்பாளிகளுக்கும் நிகழ்வதுண்டு.

''இந்த நிகழ்வை யாரும்தர்மபுரிசம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டாம்'' - இது  அல்லாத ஒன்று இந்தச் சமூகத்தில்  இயங்கக்கூடும் என்ற உங்கள் நம்பிக்கையும், வேண்டுகோளும் கூட எங்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது. ஏற்கெனவே நம்மால் ஏதும் செய்ய இயலாத அளவிற்கு சாதிய வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 'தர்மபுரி' சம்பவம் நம் காலக்கட்டத்தின் அழிக்க முடியாத அவலம். இது குறித்த குற்றவுணர்வு, அல்லது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவது  தான் இந்நேரத்தில் ஒரு கலைஞனின் நேர்மையாக இருக்கும்.

ஓர் ஆணைக் காமுகன் என்று அடையாளம் காட்டி ஒடுக்குவற்கும், ஒரு பெண்ணை அவனைக்காதலிக்காதே என்று தடைபோடுவதற்கும் சாதியச் சமூகம் தான் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கு பா.ம.க ராமதாசைப் போலவே நாமும் வெளிப்படையாக சாதி அடையாளங்கள் கூறிப் பேசி, வன்முறையைச் செயல்படுத்திவிட்டுப் போகலாம் இல்லையா?

உண்மையில், காதலிக்கும் ஒரு பெண்ணாக 'தாமினி' இந்தச்சம்பவத்தால் அடையும் மன உளைச்சலையும், அவர் மீது நிகழ்த்தப்படும் மறைமுகமான வன்முறைகளையும் நாம் யாருமே பொருட்படுத்தவில்லை. கவனத்திலும் கருத்திலும் எடுத்துக் கொள்ளவில்லை. சரியான முற்போக்குப் பெண்ணிய இயக்கங்கள் இருக்கும் சமூகமாக இருப்பின் இந்தப் பிரச்சனை இவ்வளவு தூரம் நீண்டிருக்காது என்பது என் நம்பிக்கை. 'திவ்யா - இளவரசன்' சம்பவத்திலும் அப்படியே!

நீங்கள் வேண்டிக்கேட்டுக்கொள்ளும் அளவிற்கு எல்லாம், முற்போக்கு இலக்கியவாதிகள் யாரும் எப்பொழுதும் இம்மாதிரியான நிகழ்விற்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லவே மாட்டார்கள். அதற்கு நான் உத்திரவாதமளிக்கிறேன். இதற்கு முன்பும் எல்லா சாதிய வன்முறைகளின் போதும் எப்படி அமைதி காத்தார்களோ அது போலவே தான் இனியும் இருக்கப்போகிறார்கள்.  அல்லது, சாதிய நிலைப்பாட்டைத் தான் தம் கருத்துகளாக உதிர்ப்பார்கள். நீங்கள் அவர்கள் கருத்து குறித்தெல்லாம் பதற்றப்படவேண்டாம் என்று, ஒரு தோழராக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி,

குட்டி ரேவதி





இந்தக் காதல்







இந்தக் காதல்
இவ்வளவு வன்முறையான
இவ்வளவு மென்மையான
இவ்வளவு மிருதுவான
இவ்வளவு நம்பிக்கையிழந்த
இந்தக் காதல்
பகல் பொழுதைப் போல் அழகாக
வானிலை மோசமாக இருக்கும் போது
மோசமாக இருக்கும்
அந்த வானிலை போன்ற
இவ்வளவு நிஜமான இந்தக் காதல்
இவ்வளவு அழகான இந்தக் காதல்
இவ்வளவு மகிழ்ச்சியான
ஆனந்தமான
மேலும் இவ்வளவு பரிதாபமானதுமான
இந்தக் காதல்
இருட்டிலுள்ள குழந்தை போல் பயந்து நடுங்கியும்
ஆனாலும் இரவின் மத்தியிலும்
நிதானமிழக்காத மனிதனைப் போல்
தன்னைப் பற்றிய ஒரு நிச்சயத்துடன்
மற்றவர்களைப் பயமுறுத்திய
அவர்களைப் பேசவைத்த
வெளிறச் செய்த இந்தக் காதல்
நாம் கண்காணித்தோம் என்பதால்
கண்காணிக்கப்பட்ட இந்தக் காதல்
துரத்தப்பட்ட புண்படுத்தப்பட்ட தொடரப்பட்ட
முடிக்கப்பட்ட மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட
இந்தக் காதல்
நாம் அதைத்
துரத்திப் புண்படுத்தி தொடர்ந்து முடிந்து மறுத்து
மறந்தோம் என்பதால்
இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதுடன்
முழுமையாக ஒளிர்ந்து கொண்டிருக்கும்
இந்தக் காதல் முழுமையாக
உன்னுடையது
என்னுடையது
எப்போதும் புதுமையான ஒன்றாக
இருந்து கொண்டிருப்பதோடு அல்லாமல்
மாறாதது
ஒரு தாவரத்தைப் போல் அவ்வளவு நிஜம்
ஒரு பறவையைப் போல் அவ்வளவு துடிப்பு
கோடைக்காலத்தைப்போல் அவ்வளவு
சூடானது அவ்வளவு உயிர்த்திருப்பது
நாம் இருவரும்
போகலாம் திரும்பிவரலாம்
மறந்துவிடலாம்
மீண்டும் உறங்கிப் போகலாம்
விழித்துக் கொள்ளலாம் அல்லலுறலாம்
மூப்படையலாம் 
சாவைப் பற்றிக் கனவுகாணலாம்
விழிப்புடன் இருக்கலாம் புன்னகைக்கலாம்
சிரிக்கலாம்
பின்னர் இளமையும் அடையலாம்
அங்கேயே நின்றுவிடுகிறது நம் காதல்
கழுதையைப் போல் பிடிவாதமாக
ஆசையைப் போல் துடிப்பாக
ஞாபகத்தைப் போல் கொடியதாக
மனக்குறைகளைப் போல் முட்டாள்தனமானதாக
நினைவுகளைப் போல் மென்மையாக
பளிங்கைப் போல் குளிர்ச்சியாக
பகல் பொழுதைப் போல் அழகாக
குழந்தையைப் போல் மிருதுவாக
புன்னகையுடன் நம்மைப் பார்க்கிறது
ஒன்றும் சொல்லாமல் நம்முடன் பேசுகிறது
நான் அதைக் கேட்கிறேன் நடுங்கியபடியே
கத்துகிறேன்
உனக்காகக் கத்துகிறேன்
எனக்காகக் கத்துகிறேன்
தயவுசெய்து கேட்கிறேன்
எனக்காகவும் உனக்காகவும்
ஒருவரையொருவர் நேசிக்கும் 
நேசித்த அனைவருக்காகவும்
ஆம், நான் உன்னிடம் கத்துகிறேன்
உனக்காக எனக்காக எனக்குத் தெரிந்திராத
மற்ற அனைவருக்காகவும்
அங்கேயே இரு
எங்கு இருக்கிறாயோ
அங்கேயே 
முன்பு எங்கு இருந்தாயோ
அங்கேயே 
அசையாதே
போய்விடாதே
காதல் வயப்பட்டிருந்த நாங்கள்
உன்னை மறந்துவிட்டோம்
எங்களை நீ மறந்து விடாதே
உன்னை விட்டால் இப்பூமியில் எங்களுக்கு
யாருமில்லை
எங்களை உறைந்து போக விட்டுவிடாதே
மிகத் தொலைவிலும் எப்போதும்
எங்கிருந்தாலும்
இருக்கிறாய் என்று தெரிவி
காலந்தாழ்ந்து ஒரு வனத்தின் மூலையில்
நினைவில் கானகத்திலிருந்து 
திடீரென்று வெளிப்படு
எங்களுக்குக் கரம் நீட்டு
எங்களைக் காப்பாற்று.



ழாக் ப்ரெவர்
பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம்  வெ. ஶ்ரீராம்

'சொற்கள்' என்னும் கவிதை நூலிலிருந்து
க்ரியா வெளியீடு