நம் குரல்

இலக்கிய முஸ்தீபுகள்


விருதுகள் பெயரில் நடக்கும் அட்டகாசங்கள்,  எழுத்துப்பணியை முட்டுச்சந்தில் கொண்டு போய் நிறுத்தும் என்பது எழுதுபவர்களுக்கும் தெரியாமலா இருக்கும்? (எழுத்துப் பணி என்றால், தலையணை அளவுக்கு நூல்கள் எழுதுவது என்றும், ஃபேஸ் புக், டிவிட்டர், பிளாக் இன்னபிற சமூகத்தைப்பின்னும் வலைத்தளங்களில் தங்களின் விசிட்டர் எண்ணிக்கைகளையும் கமெண்ட்டுகளின் எண்ணிக்கைகளையும்  விருத்தி செய்துகொள்வதும் தினமும் எப்படியும் அப்டேட் செய்தே தீருவேன் என்ற அடம்பிடித்தலும் தான் என்ற மூட நம்பிக்கைகளைக் குறிப்பிடவில்லை, நான்!)
இப்படியான மன நெருக்கடியில் சிக்கிக் கொண்டவர்கள் மீள வழியும் இருக்கிறது. யாராவது விரும்பினால் முயன்று பார்க்கலாம். படிக்கவேண்டிய நூல்களை வரிசைப்படுத்திக் கொண்டு அவற்றை வாசித்து முடித்துவிடுவது என்று வாசிப்பதில் ஈடுபடுவது தான். நிறைய வாசிப்பது, அபத்தமாக எழுதுவதைக் குறைக்கும். எழுத்தின் தரத்தையும் ரசனையின் தரத்தையும் கூட்டும்.எழுத்தாளர்களைப் பட்டியலிடும் வேலையை எழுத்துலகப் பிதாமகர் ஒருவர் தான் தொடங்கி வைத்தார். (அவரது பெயரை என் வலைத்தளப் பக்கத்தில் உபயோகப்படுத்தி, இதை அழுக்காக்கிக் கொள்ள விரும்பவில்லை, மன்னியுங்கள்!)  அது அவருக்கு, இலக்கியத்தின் நிபுணத்துவ அந்தஸ்தைப் பெறுவதற்கும், பரமார்த்த குருவின் சீடர்களை உருவாக்குவதற்கும் தேவைப்பட்டது. இந்தப் ‘பட்டியல் கலாச்சாரம்’ இன்று வரை தொற்று நோயைப் போல பற்றிக் கொண்டு விட்டது. இப்பொழுது சர்வே எடுக்கிறார்கள், உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யாரென்று! இந்த ‘சர்வே கலாச்சாரத்’தால் உண்மையிலேயே ஆர்வம் இருப்பவர்களைத் தவிர புதிதாய் எவரும் இலக்கியத்தை வாசித்துவிடப்போகிறார்களா என்ன? தன்னைத் தானே கூவி விற்கும் வியாபாரத்தந்திரம் தான், ‘சர்வே’, ‘பட்டியல்’ இவை பின்னாடி கண்சிமிட்டுகிறது!
‘பெயரில்லா’ என்று பெயரிட்டு எனக்கு வரும் கருத்துரைகளையும் மின்னஞ்சல்களையும் நான் பொருட்படுத்தப் போவதும் இல்லை. அவற்றைப் பிரசுரிக்கவும் விரும்பவில்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  அந்த அளவிற்குக் கூட நெஞ்சுரம் இல்லாதவர்கள் பின் ஏன் என் வலைப்பக்கத்தை வாசிக்கிறார்களாம்? போகிற போக்கில் என் பக்கத்தைப் புரட்டியவர்களாக இருக்கும் போல!
பால் நியூமேனின் விவகாரம் சூடுபிடித்து, எழும்பிய வேகத்தில் அணைந்து விட்டது. அது தொடர்பான இலக்கியப்பத்திரிகை பற்றிய குறிப்போ இது என்று யாரும் ஆர்வமடைய வேண்டாம். பால் நியூமேனின் மறுப்புக் கடிதம் வலிமையானதொரு மொழியில் எழுதப்பட்டிருந்தது தான் குறிப்பிடத்தக்க சேதி! உண்மையிலேயே சிறந்ததொரு கடிதம்! மனிதனின் மனோபாவங்களும் நடத்தை முறையும் தான் அவன் ஆளுமைக்கு அழகு கூட்டுகின்றன.
‘அரசுக்கு எதிராகத்’ தாங்கள் கலை இலக்கியப் பணியை ஆற்றுபவர்கள் என்ற கற்பிதத்துடன், கற்பனையையும் கொண்டிருப்பவர்கள் சுவருடன் தன் முஷ்டியால் மோதும் காட்சியை எனக்குப் பரிசளிக்கிறார்கள். அரசியல் புரியாதவர்கள்! சமூகச்சீர்திருத்தமே அரசியலைத் திருத்தம் செய்யும் அடிப்படையான பணி என்று அம்பேத்கர் சொன்னதை ஒரு முறை அவர்களை நினைவுபடுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன்! அல்லது, அத்தகையதொரு அருமையான பணியைத் தாங்கள் ஆற்றும் போது நானும் ஏன் அப்பணியிலேயே என்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.  உங்கள் கூட்டமே ஒரு நூற்றாண்டுப் புரட்சிக்குப் போதுமானது! இதில் நான் வேறா? (என் மின்னஞ்சலுக்குத் தொடர்ந்து கடிதம் எழுதும் பெயரில்லா மனிதருக்கு இப்பதில்!)    சேகுவேரா, மார்க்ஸ் அச்சிட்ட பனியனை அணிந்தாலே புரட்சி நடந்துவிடும் என்ற உங்களின் மூடநம்பிக்கை பலித்தால் எனக்கும் மகிழ்ச்சியே!
குட்டி ரேவதி

1 கருத்து:

santhanakrishnan சொன்னது…

க.நா.சு மேலேயும்,ஜெயமோகன்
மேலேயும் என்ன கோபம் உங்களுக்கு?