நம் குரல்

361 டிகிரி இலக்கியச்சிற்றிதழ் வெளியீட்டு விழா

கணையாழி, கல்குதிரை போன்ற இதழ்களின் புத்துருவாக்கத்தைத் தொடர்ந்து, 361 டிகிரி இதழ் உருவாக்கம் பெற்றிருக்கிறது. இவ்விதழின்  வெளியீட்டு விழா டிஸ்கவரி பேலஸ் புத்தகக்கடையில், இன்று மாலை நடைபெற்றது. இதழை, நரனும் நிலா ரசிகனும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். உருவாக்கத்திற்கும், வடிவமைப்பிற்கும் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக, கவிதைகளை நெருக்கித்தள்ளிப்போட்டு பக்கங்களை நிரப்பாமல் கவிதைகளுக்கு இடையே சுவாசிப்பதற்கும் இடைவெளிவிட்டிருக்கிறார்கள். நிறைய கவிதை ஆக்கங்கள் இடம்பெற்றிருப்பது இதழின் சிறப்பு. நேர்த்தியும் அழகும் மிக்கதொரு இதழாக வெளிவந்திருக்கிறது. அட்டைப்படங்களை ரோஹிணி மணி வரைந்திருக்கிறார். பார்வையை இழுக்கும் திரட்சியான கரித்துண்டால் வரைந்த ஓவியங்களாய் இருக்கின்றன. அவருடன் சில நிமிடங்கள் உரையாடுவதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. அது அவர் ஓவியங்களின் பின்னிருக்கும் அவரது சிந்தனைகளைத் தெளிவுபடுத்துவதாகவும் இருந்தது.வெளியீட்டிற்குப் பின்பு கட்டுரைகளாகவும் உரைகளாகவும் கருத்துகள் வழங்கப்பட்டன. உரைகள் பெரும்பாலும் சிற்றிதழ்கள் பற்றியும் பெண் / ஆண் படைப்பாளிகளின் கருப்பொருள் பேதம் பற்றியும் இருந்தன. கவிதா முரளிதரன் தனது கருத்துகளை நிதானமானதொரு தொனியில் எழுதி வந்து வழங்கினார்.  அஜயன் பாலா, நிலவும் அரசியல் நெருக்கடிகளை இலக்கியவாதிகளின் படைப்புகளுடன் தொடர்புபடுத்திப் பேசினார். மற்றும் அய்யப்ப மாதவன்(இதழ் படைப்புகள் குறித்த விமர்சனம்), நேசமித்ரன்(இதழ் குறித்த திறனாய்வு), லக்ஷ்மி சரவணக்குமார் (சிற்றிதழ் பிடிவாதம் மீதான விமர்சனம்) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  விழாவில் வலைப்பதிவர்களே பெரும்பாலும் கலந்து கொண்டது, சமூக வலைத் தொடர்புவடிவத்தின் தீவிரத்தை உணரத்தியது. இன்றும், சிற்றிதழுக்கான தேவை இருப்பதும், சிற்றிதழ் இயக்கம் இல்லாமல் போகையில் எழுத வருபவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கு வெளி இன்றி தனித்து விடப்படுவதும் குறித்து விழாவின் தொடக்கத்தில் நரன் உரையாற்றியதையும், மேற்குறிப்பிட்ட விஷயத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ளமுடிந்தது.  நிறைய படைப்பாளிகளின் ஆக்கங்களுடன் வருவது தான் இதழின் நோக்கம் என்பதற்கு நரன் அழுத்தம் கொடுத்தார். ”பெண் கவிஞர்” என்ற அடையாள வரம்புகள் அழிந்திருப்பதை இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுகையில் உணர்ந்தேன்.முழுமையும் இச்சீரிய இதழ்கள், உருவாக்குபவர்களின் கருத்தாக்க வடிவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆக்கங்களுடனேயே உருவெடுக்கும். தொடர்ந்து வெளிவருகையில் அத்தகைய கருத்தாக்கத்தின் திசையை நோக்கியே பயணிக்கும். என்றாலும், 361 டிகிரி போன்ற இதழ்கள், தற்கால அரசியல் வெளியின் நுண்ணிய இடைவெளிகளையும் பேசும் இலக்கிய படைப்புகளுடன் வரவேண்டும் என்பது என் விருப்பம். இன்னும் தற்காலக்கவிதைகள், கவிதையியல் குறித்த தொடர் விவாதங்களுக்கான பக்கங்களையும் திறந்து வைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.  இவ்விதழுக்கு எவரும் படைப்புகளை அனுப்பிவைக்கலாம் என்று 361 டிகிரி இலக்கியச் சிற்றிதழ் குழு கூறுகிறது. தொடர்புக்கு: 361degreelittlemagazine@gmail.com

விழாவின் புகைப்படங்களுக்கு: https://picasaweb.google.com/onthemove31/361Release?authkey=Gv1sRgCOeGvbf6irPdaw#

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: