நம் குரல்

ஜி. நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’
ஓய்வாகக் கிடைத்த ஒரு மணி நேரத்தில், மீண்டும் ஒரு முறை ‘குறத்தி முடுக்கு’ வாசித்து முடித்தேன். அந்த அளவிற்கான சிறிய நாவலே அது!


பாலியல் தொழிலுக்கேயான நெல்லையின் வள்ளிக் குறத்தி முடுக்கு என்னும் பகுதியில், நடைபெறும் கதையை, குறைந்த பக்கவெளிக்குள்ளேயே  சித்திரமாகப் பதியவைக்கும் ஜி. நாகராஜனின் திறன் அளவிலாதது. எங்குமே வார்த்தைகளை இறைக்கும் கவனக்குறைவு இல்லை.


ஒரு நிருபருக்கும் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தங்கம் என்னும் பாலியல் தொழிலாளிக்கும் இடையிலான உறவைப் பற்றிய கதை. காதல், கல்யாணம் எனும் சமூக நிர்ப்பந்தங்களை ஆராய்ந்தவாறே நிருபர், அந்த உறவை அணுகுகிறார். தங்கமோ, தன் வாழ்க்கை திரும்பும் திசையெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இன்றி, அல்லது கட்டுப்படுத்தும் அதிகாரமின்றி அதன் போக்கிலேயே போகும் பெண்ணாக இருக்கிறார். பாலியல் தொழில் என்பதை மீறி, தங்கத்திற்கு நிருபரின் மீது சுரக்கும் உண்மையான அன்பு, அவரை அவளுடன் பிணைக்கிறது. வழக்கம்போல, தங்கத்தை அவள் கட்டுப்பாட்டில் இல்லாத வாழ்க்கை அவரிடமிருந்து பிரித்து இழுத்துச்செல்கிறது. அருமையான காதல் சுரக்கும் கதை! இணையாக ஒரு கிளைக்கதையையும் சொல்லியிருக்கிறார். கதை நெய்தலில் எங்குமே நூல் அறுந்து தொங்கவில்லை.


ஜி. நாகராஜனின் கதை விவரிப்பு, நூலை கீழே வைக்கமுடியாத விறுவிறுப்பைத் தருகிறது. தன் நெஞ்சத்தின் நேர்மையைத் தான் படைக்கும் கதாபாத்திரங்கள் வழியாகவெல்லாம் தொடர்ந்து கேள்வி எழுப்பும் முயற்சியையும், உழைப்பையும், ஈடுபாட்டையும் காட்டுவது சாதாரண விஷயமில்லை. சீரிய இலக்கியங்கள் என்ற வரையறையை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டுமோ என்று தோன்றுகிறது.


பாலியல் தொழிலின் பிரச்சனையை அவர் நேரடியாகப்பேசவில்லை. ஆனால், ஆழத்தில் அது தான் கதையாக்கப்பட்டிருக்கிறது. எங்குமே பிரச்சார வாடையும் இல்லை. பிரச்சனையை நேரடியாகச் சொல்லுகையில் அது மனித இதயங்களில் அழுத்தம் பெறாமல் போகிறது என்பது என் எண்ணம். அது மனித உறவுகள் வழியாக வெளிப்படும் போது தான், மனிதனின் இதயத்துள் இயங்கும் தர்க்க அறிதிறனுடைய புலன்கள் விழித்துக் கொள்கின்றன. அப்பொழுது, பிரச்சனையின் தட்டையான ஒற்றை முகம் மட்டுமே பதிவாகாமல் முழுப்பரிமாணமும் கூட புலனாகின்றது.


1963 – ல் இதன் முதல் பதிப்பு வெளியாகி அதன் பின்பு, பல வெளியீட்டாரால் தொடர்ந்து அச்சிடப்பட்டிருக்கிறது. நல்ல நாவலைத் தேடிப்படிப்பவர்கள், படிக்க வேண்டிய முக்கியமான நூல். படித்துவிட்டு படிக்க விரும்புவர்களுக்குப் பரிசாகவும் அளிக்கலாம்!
குட்டி ரேவதி

3 கருத்துகள்:

vijayan சொன்னது…

நம்மில் பெரும்பாலோர் பார்க்க விரும்பாத ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வாழ்வின் பக்கங்களை காட்டுபவர்,g .நாகராஜன்.அவரின் "நாளை மற்றுமொரு நாளே"மற்றும் குறத்திமுடுக்கு நாவல்கள் ஒவ்வொரு தமிழ் வாசகனுக்கும் must .

குட்டி ரேவதி சொன்னது…

ஆமாம், விஜயன்!
ஜி.நாகராஜனும் சதத் ஹஸன் மாண்ட்டோவும் முன்வைக்கும் படைப்புகள் எவருமே நுழைய விரும்பாத பக்கங்கள் தாம்! ஆனால், அப்பக்கங்கள் நமது அகத்தின் பக்கங்கள் தாம் என்பதை இவர்கள் இருவருமே ஒருசேர உணர்த்துகிறார்கள்!

இவர்களுக்கிடையிலான பொதுத் தன்மைகளை விரிவாக எழுத வேண்டும் என்று இருக்கிறேன்.

மிக்க நன்றி!

E.MATHAN சொன்னது…

நன்றி