நம் குரல்

விதைகளைப் பதுக்கும் சதைத்த கனி

தனக்குள் விதையின் வேர்கிளைக்கும் வரை
விதைகளைப் பதுக்கியிருக்கும் சதைத்த கனி
அதையே ஊருக்குள் கதையென்றாக்கும்

காட்டில் வீழ்ந்தாலும் 
கருப்பையில் தகைந்தாலும்
விதையை விழித்தோ 
அவசியமெனில் அழித்தோ மரமாக்கி 
பழுத்த கனியும் ஆக்கிக் களிக்கும்
எம் பெருயோனி மரபிலோ
விதைகளை அவிப்பதுமில்லை
பதுக்குவதுமில்லை
உயிர்க்குலையின் கிளைகளில்
பால்பிடித்து தொங்கும் எம் கனிகளுக்கு
விதை ஒரு சாக்கு மரமும் சாக்கு
மகிழ்ச்சியை உடலாக்கிக் கொண்டாட
மீண்டும் மீண்டும் முலை பூரித்தக் கனிகளாய்
முறை வைத்து உருவாக்கி 
மரமெங்கும் பழுத்துத் தொங்குவதும் 
விதையை வினையால் கடந்து போவதும் 
எம் உடலின் இயல்பு


தனக்குள் விதையின் வேர்கிளைக்கும் வரை
விதைகளைப் பதுக்கியிருக்கும் சதைத்த கனி
தன்னைத்தானே வியந்து வியந்து 
அதையே செய்யும்
விரைந்தும் விதையைச் செய்யும்

குட்டி ரேவதி
நன்றி: 361 டிகிரி இலக்கியச் சிற்றிதழ்

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

உங்களால் மட்டுமே சாத்தியம் இது மாதிரியான கவிதைகளை அளிப்பதற்கு... வாழ்த்துக்கள்