நம் குரல்

'Il Postino'

‘Il Postino’ என்ற இத்தாலியத் திரைப்படத்தை பல முறைகள் பார்த்தாயிற்று. சிலி கவிஞன் பாப்லோ நெரூதா ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும் புனைவுப்படம். நாடுகடத்தப்பட்ட பாப்லோ நெரூதா வசிக்கும் தீவில் அவருக்கும், ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்திலிருந்து அவருக்குக் கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் தபால்காரனுக்கும் இடையிலான கவித்துவமான உறவைப் பற்றிய படம். Massimo Troisi தான் இப்படத்தில் தபால்காரன். இப்படம் முடிந்த மறுநாளே இவர் கடுமையான மாரடைப்பால் தாக்குண்டு இறந்தார். அக்கவிஞனை மிகவும் நேசித்த ஒரு நபராகவே இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார் Troisi.இப்படம் ‘பாப்லோ நெரூதா’ கதாபாத்திரத்தின் வழியாகக் கவிதை என்றால் என்ன என்பதை மிக எளிதாகவும் அதன் உண்மையான அத்தனை பயன்பாட்டுடனும் கதையைப் பின்னணியாக வைத்தே சொல்லித் தருகிறது. ஒவ்வொரு மனித உறவிலும் சிறிய சிறிய அருமையான மனித உணர்வுகளைக் கையாளும் கவிஞனாய் பாப்லோ இருக்கிறார். அதிலும், தபால்காரன் காதல்செய்யும் பெண்ணுக்கு அவனது காதலை தெரிவிக்கும் காட்சியில் உறவின் மகத்துவம் முழுமை பெறுவதாய் இருக்கும்.


அதுமட்டுமன்றி, எவருக்கும் பாப்லோ நெரூதாவை அறிமுகப்படுத்த மிகவும் சரியான படம் என்னும் அளவிற்கு மிகையிலாதது. காதல் உணர்வை மற்ற மனித உணர்வுகளுக்கு இணையானதாகவே மதிக்கும் மனத்தேர்ச்சியுடன் தான் ஒரு கவிஞன் அடையாளம் பெறமுடியும் என்பதை இப்படம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.எக்கச்சக்கமான காதல் கவிதைகளையும் எழுதி, பெண்களின் கவிஞனாய் அடையாளம் பெறும் இக்கவிஞனை, ‘துயரம் நிறைந்த காற்று பட்டாம்பூச்சிகளைக் கொன்றுவிட்டுப் போகும் போதும் நான் உன்னைக் காதலிக்கிறேன். எனது ஆனந்தமோ உன் வாயின் பிளம்பழங்களை மெல்லுகிறது’ என்ற வரியால் நான் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.பெரும்பாலும், கவிஞனின் ஆளுமையைப் படம்பிடிப்பதில் தோற்றுப்போகும் இயக்குநர்கள் மத்தியில் இப்படத்தை இயக்கிய மைக்கேல் ராட்ஃபோர்டை பாராட்டத் தோன்றுகிறது. அகண்ட கடல் அலைமோதும் கரையில் பாப்லோ நெரூதாவுடன் நீங்களும் அறிமுகம் செய்துகொள்ள இப்படம் உதவும். பின்னர் இருக்கவே இருக்கின்றன, அவன் உயிர்மூச்சு இரையும் கவிதைகளும்!
குட்டி ரேவதி

1 கருத்து:

aaputhiran சொன்னது…

very good write up.Can you tell me where it is available- Coimbatore?