நம் குரல்

என் கிளிகளும் வார்த்தைகளும்

எனக்கன்றி வேறெவர்க்கும் என் வார்த்தைகளை விரயமாக்காத ஓர் அரசியல் எனது. என் மீது உங்கள் வார்த்தைகளை இறைத்துத் தீர்க்கும் வரை உங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் என் அரசியல்!நூல்கள் வானத்தில் சிறகடிக்கும் போது கிழிந்து உதிரும் பக்கங்களில் குருவிகளின் குஞ்சுகள் எட்டிப்பார்க்கக் கண்டேன்.


இன்றைய என் ஆனந்தத்தின் பெரும்பகுதியும் நான் கண்டறிந்த ஒற்றை வரியால் உருவாகி அதுவே பின், என் வானமுமானது. எழுதுவது எல்லாம் கவிதையாகாது என்பதால்!


எனது விடுதலையை நீங்களும் உணரவேண்டுமானால் நான் வளர்க்கும் கிளிகளைத் தான் திருடிப்போகவேண்டும்.


இந்நாளின் முழுக்களிப்பும் பாப்லோ நெரூதாவின் வசந்தம் கவிதைக்கு நிகரானது. இவ்வசந்தத்தை எனக்கு வழங்கிய தோழி கோகிலாவிற்கு இக்கவிதை. ‘பிறவிக்கு ஒளிகொணர / அந்தப்பறவை வந்து சேர்ந்தது./ அதன் ஒவ்வொரு கூவலிலும் / தண்ணீர் பிறக்கிறது. / வெளியைக் கட்டவிழ்த்து விட்ட / நீருக்கும் ஒளிக்கும் இடையில் /இப்போது வசந்தம் ஆரம்பமானது / இப்போது விதை தனது வளர்ச்சியை உணர்கிறது/ பூவிதழ்களில் வேர் வடிவங்கொள்கிறது / இறுதியாக மகரந்தத்தின் இமைகள் திறக்கின்றன. / இவையெல்லாம் முழுமை பெற்றது - / பசுங்கிளையின் கொம்பிலமர்ந்த / ஒரு சாதாரணப் பறவையைப் போல். (மொழியாக்கம்: கவிஞர் சுகுமாரன்)பெட்டிப் பெட்டியாக மகிழ்ச்சியைத் தூக்கிச் செல்கிறான் ஐஸ்வண்டிக்காரன், இல்லையா? என்றாள் தோழி. உருகும் மகிழ்ச்சியென்பதால் தான் பெட்டியில் அடைக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்கிறாள் அவளின் தோழி!


குட்டி ரேவதி

1 கருத்து:

santhanakrishnan சொன்னது…

உங்களின் கிளிகளும்,வார்த்தைகளும்
என்னுள் ஆழமாய் புதைந்தன.
உருகும் மகிழ்ச்சி மிக வசீகரம்.