நம் குரல்

ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 1

இரா. மீனாட்சி: ஒவ்வோர் இறகும் ஒவ்வோர் பறவை


சுவரையே முட்டிக்கொண்டிராமல் சுவர்களுக்கு வெளியேயான இயல்பான சூழலுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் குரலாகக் கவிதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள் சிலரே. இயற்கையின் கருப்பொருள் எதுவும் இவர்கள் கவிதையில் கவித்துவம் பெற்று, வரிகளுக்கு இடையே அர்த்தம் பெறும். அம்மாதிரியான மொழியுறவை இவர்கள் தக்கவைத்துக் கொள்வதுடன், ஏனைய உறவு போன்றே இவ்வுறவையும் பேணி சிறப்பு அம்சங்களுடையதாக வளர்க்கின்றனர். அவ்வகையில், கவிதையைத் தன் அகக்குரலாக மாற்றிக்கொண்ட பெண்ணின் மொழி இரா.மீனாட்சியினுடையது.



ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் தன் முதல் தொகுப்பைப் பதிவு செய்திருக்கும் இரா.மீனாட்சியின் எழுத்தைப் பற்றி விவாதிப்பதில் இரு முக்கியமான விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது சமகாலத்தில் உத்வேகமெடுத்திருந்த, ‘எழுத்து’ இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்ட முதல் பெண் கவிஞர், முதலாவது! எழுபதில் எழுதத்தொடங்கி தனியாக இயங்கி, இன்று நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் இயங்கும் காலத்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது என்பது, இரண்டாமவது! அவர் எழுத்தில் இன்றைய பேசுபொருளாக்கியிருக்கும் உடல், பாலியல், பாலிமை போன்றவற்றை ஆய்ந்தறிவதற்கான வாய்ப்பை நான் இங்கு எடுத்துக் கொள்கிறேன். எம்மாதிரியான பெண்ணுடலை அவர் வரித்திருந்தார் என்பதைக் கண்டறியும் போது அக்காலமொட்டிய சில தெறிப்புகளும் நமக்கு வாய்க்கக்கூடும்.



முதலில் பெண்ணெழுத்து இப்படித்தான் உருவாகிறது. பெண்மையை தனது ஒரு பலமாக மாற்றிக்கொள்வது, அதனை உடலுக்குள் திடமான ஒரு பண்பாகக் கட்டமைத்துக் கொள்வது, பெண்மை என்று தான் நம்பும் சில குணநலன்களின் அதாவது, நளினம், மென்மை, அடக்கம், அச்சம், மடமை, பயிர்ப்பு போன்ற சில குணத்தொகுதிகளையேனும் உடலுக்குள் தொகுத்து வைத்துக்கொள்வது! அரவாணிகள் தம் உடல்களை அப்படித்தானே திருத்தியெழுதிக்கொள்கிறார்கள்! இதன் வழியாக உடலுக்கு ஒரு புதிய பாலியல் வெளியைப் பயிற்றுவிக்க முயல்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவ்வெளிக்குள் பயணிக்க விரும்புகிறார்கள். இப்படித்தான், ஆரம்பக்கட்ட பெண்நிலை வாதம் நமது புவியியல் சூழலில் தொடங்கியது. இதை சட்டை உரிக்கும் நிகழ்வாக, புற வளர்ச்சிக்கான ஓர் அடையாள நிகழ்வாகப்பார்க்கலாம்.
ஆனால், இது வெளிப்படையான பாலிமையை எங்குமே பேசத்துணியவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலக்கியத்துறையில் காலூன்றும் தனது முயற்சியில் சக ஆண் படைப்பாளிகளுக்கு இணையாகத் தானும் வெல்லவேண்டும் என்பதாய் இருக்கலாம். குடும்பம் பின்புலமாக எழுத்தை முன்வைக்கும்போது பாலிமை என்பதை ஒரு பேசு பொருளாக்கினால், அது முதலில் குலைப்பது அவரவர் குடும்பத்தையும் மண உறவையும் தாம். இது ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆகவே, சுய தணிக்கை செய்து கொண்டே இருப்பதும், மொழி வழியாக ஊக்கம் பெறும் போதெல்லாம் முளை விடும் இறக்கைகளைக் கத்தரித்து விடும் அவலமாகவும் இருக்கலாம். ஆனால், இலை மறை காய் மறையாக உடலின் வேட்கையை வார்த்தைகளில் ஒளித்து வைத்துப் பேச அவர்கள் தயங்கவே இல்லை. மேலும், ஒரு பொருளில் பெண் பயன்படுத்தும் சொல்லை அதே பொருளில் உள்வாங்கிக்கொள்ளும் உணர்வுக்கொம்புகளை இன்னும் ஆண்கள் வளர்த்துக்கொள்ளவில்லை தானே?



இவ்வாறு தான் முதன்முதலாக எழுத வந்த பெண் கவிஞர்களும் பெண்மை என்ற வரையறைக்குள்ளிருந்து முதலில் மொழியை வெளிப்படுத்திக்கொண்டார்கள். பின்பு தான், மொழியின் உடைப்பும் உடலின் தகர்ப்பும் நிகழ்ந்தன என்று சொல்லவேண்டும். இவ்விடத்தில், இரா.மீனாட்சியின் கவிதை செய்ததை விவாதிப்பது பொருத்தமான கருவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயற்கையுடனான தன் கலப்பையும், மானுட உறவையும் ஓயாது பேசிவரும் மீனாட்சியின் கவிதைகள், பெண்மையின் வீறு கொண்ட கவிதைகளாக உருவாகியிருக்கின்றன.
‘எழுத்து’ இலக்கிய இயக்கத்தினுடனும், ‘சி.சு.செல்லப்பா’ போன்ற நவீன இலக்கிய முன்னணியினருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்ற இரா.மீனாட்சி, நவீன இலக்கியப் பெண்ணெழுத்தின் தொடக்கமாகிறார். அப்பொழுது உருவாகியிருந்த நவீன கவிதையின் உத்வேகத்தைத் தானும் பயன்படுத்திக் கொள்கிறார். இன்று வரை ஓயாது கவிதையை தன் அகக்குரலுக்கான வடிவமாகத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து எழுதியும் வருகிறார்.
2002 –ம் ஆண்டு கவிஞர்கள் க்ருஷாங்கினியுடனும் மாலதி மைத்ரியுடனும் சென்று கவிஞர் இரா.மீனாட்சியைச் சந்தித்தேன். அவரது கவிதைகளை ஒரு மருங்கிலிருந்து மறு மறுங்கு வரை வாசிக்கும் அனுபவம் அதற்குப் பிறகு இக்கட்டுரை எழுதுவதற்காகவும் கிடைத்திருக்கிறது. தனது மொழியின் உள்ளீடாக இவருக்கேயான அழகியலும் நடைலயமும் உக்கிரம் நோக்கி நகரும் வாக்கிய மடிப்புகளும் கொண்டு எழுத்தில் இயங்குகிறார். கடந்த நான்காயிரம் வருட உலகக்கவிதை இயங்குதலைத் தொகுக்கும் முகமாக, அமெரிக்காவிலிருந்து வெளி வந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற இருபதாம் நூற்றாண்டின் ஒரே தமிழ்க்கவிதை இவருடையது.


உலகச்சந்தையில் விற்பனைக்குப் போகும் பிற மலர்களுடன் அத்தகுதியைப் பெறாத நெருஞ்சி மலரைத் தன் முதல் தொகுப்பிற்குத் தலைப்பாக்கி இரா. மீனாட்சியின் கவிதைகள் பகிரங்கமாக வெளிவந்தன. நவீனப்பெண்ணிய இலக்கியத்தில் இரா.மீனாட்சிக்கு இருக்கும் பங்கு முதன்மையானதாக இருக்கிறது. அதாவது, அவர் வழியாகத் தான் தமிழ்ப்பெண் கவிதையின் தடம் உயிர்ப்பெறுகிறது. அதுவரை, தமிழ்ப் பேராசிரியர்களின் கைகளில் மண்டிக்கிடந்த மரபுக்கவிதைகளிலிருந்து நவீனத்தை நோக்கி ஒட்டுமொத்தமுமாக பெண்கவிதைக்குத் திசை திருப்பித்தந்த பங்கு இவருக்கு உண்டு. என்றாலும், மரபுக்கவிதையின் நடை, சந்தம், சொல்லாட்சிகளிலிருந்து விடுபடாத தொகுப்பாகவே நெருஞ்சி உருவாகியிருக்கிறது. என்றாலும், கருப்பொருள் அளவில் மரபார்ந்த சிந்தனை அடுக்குகளிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் இரா. மீனாட்சி எடுத்துக்கொண்டார்.
சுடுபூக்கள் கவிதைத்தொகுப்பில், இப்படியான வரிகளுடைய காற்றோ காற்று எனும் கவிதை
’ஒவ்வோர் இறகும்
ஒவ்வோர் பறவை’





சங்கொலிப் பாதையில்
நான் ஒரு அற்பப் புழு
ஆகாசக்கைகள் என்னைத் தொட்டன.
நீவிய கையின் மந்திரமோ?
எனக்கும் சிறகுகள் முளைத்தன.
அலகால் அரிசியைக் கொத்தி
பாலையும் குடித்தேன்.
பம் பம் பம்பம்…
சங்கொலிப்பாதையில்
சங்கிலி உடைத்துப் பறக்கிறேன்
நானும் பறக்கிறேன்

(நெருஞ்சி கவிதைத்தொகுப்பு -1970)



சங்கொலிப்பாதியில் கவிதை தன் உடலுக்குள்ளிருந்து சிறகு விரிக்கும் அனுபவத்தை, உட்பொருளாக்கியிருக்கிறது. உடலுக்குள்ளிருந்து தீவிரமாக வெளியேறும் முனைப்பும் விட்டு விடுதலையாதலும் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய தன் முனைப்பை கூர்மையான மொழியாக்கவும் அனுபவமாக்கவும் முடியாமல் தவிக்கும் குரலையும் அவரே பதிவு செய்கிறார்.



எழினி
அவள் தானே வெளியேற
அவளே தடையாகி,
அவலத்துடிப்பு.
மென்குரலில் வெளியழைப்பு.
அவளுக்கோ அவலத்துடிப்பு
கழுத்து முடிச்சு பற்றுக்கோடா?
தடையுத்தரவு.
முள்வேலி.
கம்பிக்கயிறு கட்டுமானம்.

பூச்சிலை நெளிகிறது.
திரையாகி அலைகிறது.
துருப்பிடித்த
சன்னலுக்குத் தெரியுமா
சீலையின் தவிப்பு?
(நெருஞ்சி கவிதைத்தொகுப்பு -1970)



‘அக விடுதலை’யைத் தீவிரமாக முன் வைக்கும் கவிதை இயக்கம் சந்தித்த பிரச்சனைகளில் முதன்மையானது பற்றுக்கோடின்றி அலையும் அதன் கவித்துவ வேகம். அதாவது, சிந்தனைச் செழுமையுறாது என்ன தான், தீவிரமான இயக்கத்திற்குள் நம்மை உட்படுத்திக்கொண்டாலும் அது அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி வடிவம் பெறாது துவண்டு விழுந்திருக்கின்றது. இதை ஆண் எழுத்துடன் தொடர்புப்படுத்திப் பார்த்தோமானால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளலாம். இத்தகைய அகவிடுதலைத் தத்துவத்தை இன்று வரை தம் எழுத்துகளில் சீரியதாக முன்வைத்துக்கொண்டிருக்கும் ஆண் படைப்பாளிகள், ‘இயற்கை’, ‘தத்துவம்’, ‘ஆன்மீகம்’, ‘அகவிடுதலை’ போன்றவை அடிப்படையான எந்தச் சிந்தனையையும் உட்வாங்கிக்கொண்டவையாக இல்லை. சித்தாந்தம் எதையும் தனக்குள் தக்க வைத்துக்கொள்ளாத இத்தகைய எழுச்சிகள் வெறுமனே உணர்வெழுச்சிகளாக ஓய்ந்துப் போகின்றன. உடலை வெறுங்கூடு என்று நோக்கும் அடிப்படையான மனோபாவம் தான் இயற்கையின் மூலமாகவும் தீரமான அடையாளமாகவும் உடலைப் பார்க்க இயலாத பலவீனமும் எந்த விடுதலையையும் சாத்தியப்படுத்தாமல் போகின்றன. குப்பையைக் கிளறுவதை அடிப்படைப் பணியாகக் கொண்டிருக்கும் கோழி, இறக்கைகள் தேவைப்படும் வானத்தை வேட்கையுடன் பார்ப்பது போலத்தான்!




ஆனால், மீனாட்சி இதற்கான சுவடுகளை, சங்கொலிப்பாதையில் கவிதையிலேயே, தனது முந்தைய கவிதையிலேயே வைத்திருப்பதையும் பாருங்கள்!. நீவிய கையின் மந்திரமோ? என்ற வரியே உள்ளீடற்ற அர்த்தத்துடன் ஏற்கெனவே பதிவாகி இருப்பதை இங்கு மீண்டும் இணைத்துப் புரிந்து கொள்வோம்.
எங்கும் வெளி
பெரிய வெளியில்
சிறிய வெளி என் வீடு
வீட்டிற்குள் என் உடம்பு
அங்கும் வெளிதான்.
வெளியில்
பரவச ஒளியின்
எல்லையில்லாத நாட்டியம்
(மறு பயணம் கவிதைத்தொகுப்பு, 1998)
இக்கவிதையிலும் விடுதலை என்பதை உடலுக்குள் வைத்துப் பேசும் சுயம் தொனிக்கிறது. வெட்டவெளி என்பதைத் தனக்கான ஆன்மீக வெளி என்று நோக்கினாலும், அதை அடைவதற்கான சிந்தனைத்தடமற்று கவிதைகள் தொடர்கின்றன. ஆனால், இவையெல்லாமே ஆண்களின் பேசுபொருளாக மட்டுமே இருந்திருக்கின்றன என்னும் கட்டத்தில் மீனாட்சிக்கும் இவ்வெளிக்குள் நுழைந்து பார்க்கும் தன் விழைவை முயன்றுபார்க்கும் மொழியாகத் தான் இக்கவிதையைப் பார்க்கிறேன்.




இராமர், கண்ணன், சீதை, இராவணன் போன்ற இதிகாசக் கதாபாத்திரங்களைத் தன் நிலையிலிருந்து தகர்த்துக்கொண்டே வருகிறார். புராணக்கதை மாந்தர்களை விமர்சிப்பதை ஆதிக்கப் பின்னணிப் பெண்கள், தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர். கவிதையில் மட்டுமன்றி, இந்தியாவின் எத்திசையில் படைப்பாற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் எந்த ஒரு பெண்ணும் இதைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணம், அவர்களின் உடலும் விடுதலையும் எழுச்சியும் இக்கதை மாந்தர்கள் தம் கதாபாத்திரங்களுக்கு உள்ளிருந்து பெண்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை தான்! இவர்கள் தாம் இப்பெண்களை, தந்தையராகவும், கணவராகவும், சகோதரர்களாகவும், மகன்களாகவும் தொடர்ந்து வதைக்கின்றனர். இவ்வதையிலிருந்து வெளியேற இக்கதைமாந்தர்களாக மெய்மையில் தங்களை உருமாற்றிக்கொண்ட ஆண்களின் சிறைகளிலிருந்து வெளியேற விரும்பினர். தங்கள் நினைவுகளுக்குப் புகட்டப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கத் தொடங்கினர். ஆகவே, தம் சிந்தனையைத் தெளிவுபடுத்திக்கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் இக்கதைகளால் கட்டிப்போடப்பட்டிருக்கும் உடலை விடுவிக்க வேண்டியிருக்கிறது. பின், இம்மாதிரியான ஆண் பிம்பங்களையும், அவர்களுக்கு உடன்பட்ட பெண் பிம்பங்களையும் இவர்கள் தகர்க்க வேண்டியிருந்தது, இந்த அளவிற்கேனும் விடுதலையைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.




பிற ஒடுக்கப்பட்ட பெண்களின் நினைவுகளில் இத்தகைய ஒடுக்குமுறைக்கான பிம்பங்கள் பதிவாவதில்லை. அவர்களின் பிம்பங்கள் ஆதிக்க மனிதர்களால் உருவானவை என்பதால், சீதை, இராமன், கண்ணன் போன்றவை எல்லாம் ஆதிக்க சாதி, இனப் பெண்களால் தாம் தகர்க்கப்படவேண்டும். நினைவை மொய்க்கும் இப்பிம்பங்களால் அவர்கள் உடல், கட்டுப்படுத்தப்படுவதை, சிதைக்கப்படுவதை அவர்களும் உணர்ந்திருக்கக்கூடும் இல்லையா?
மேற்கொண்ட பொருளில் உளைவுக்குள்ளாகும் மனநிலையைச் சொல்லும், மிகவும் புகழ்பெற்ற மீனாட்சியின் கவிதை,

மதுரை நாயகியே!

மதுரை நாயகியே!
மீனாட்சித்தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடிவரும்
உன்மகளை
உன்மகனே ஏ
வழிவம்பு செய்கின்றான்
கோயிலிலும் காப்பில்லை
உன் காலத்தில்-
அழகி நீ!
எப்படி உலாப்போனாய்?




(சுடு பூக்கள் கவிதைத்தொகுப்பு, 1978) இல் வெளியான இக்கவிதையும், அதே தொகுப்பில் இடம்பெற்ற ‘நாங்கள் நகரத்துக்குப்போகும் சின்னப்பெண்கள்’ எனும் சமூக யதார்த்தம் தொனிக்கும் கவிதையும் ஒரே மனநிலையில் இயங்குகின்றன. பெண்ணுடல் மீது இயங்கும் புற தாக்குதல்களை மையமிட்ட கவிதைகள் இவை.
……………………………………………………………………….
உள்ளே பார்த்தோம்.


எங்கள் மேலாடைகளைக் கிழித்து
தோல் பூச்சைத் துளைக்கின்ற
பூனைப் பார்வைகளை

பார்வைகளையே கைகளாக்கிக்
கைகளையே கொடுக்குகளாய்ச்
சக பிரயாணிகள் சுமந்திருப்பதைக்
காலங் கடந்தே
நாங்கள் பார்த்தோம்.




தொடக்கத்தில், பெண்கள் எழுத வந்த போது நேரடியான அவர்களின் வெளிப்பாடுகள் விமர்சனத்திற்குள்ளாயின. நாட்குறிப்புகள் தாம் பதிவு பெறுகின்றன என்றும் படைப்பூக்கம் இல்லா எழுத்துகள் என்றும் விமர்சனத்திற்குள்ளாயின. இவை ஆண், பெண் என இரு தரப்பினரிடமும் தாம் காணப்பட்டன என்றாலும், இதைச் சொல்லும் அதிகாரம் ஆண் படைப்பாளிகளிடம் தான் இருந்தன. இரா. மீனாட்சி, இந்த அரசியலையும் கையாளவேண்டியிருந்திருக்கும். இடது சாரி அரசியலுடன் வந்த படைப்பாளிகளையும், வானம்பாடி போன்ற இயக்கங்களையும் எதிர்கொள்வதற்கான அரசியல் பார்வையை அவர் முன்வைக்கவோ விவாதமாக்கவோ இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக அரசியல் வெளிப்பாட்டை தன் கவிதைகளில் அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாலும் கூர்மைப்படாத ஒன்றாகவே இருந்தது.


இவர்களுக்காக
……………………………………………………
………………………………………………………………

நீங்கள் தேன் வடிக்காமல்
செந்நீர் உகுத்தீர்கள்
அழவும் தெரியாமல்
அசுர விதைகளுக்கு மடி தந்தீர்கள்

புலிப் பொருளியலில்
போகப் பொருளானவர்களே!
உணர்ச்சி ஊர்களின்
மடைத் திறப்புகளே!
என்றைக்கு உடைத்தெறியப் போகிறீர்கள்
இந்த மானவேலிகளை?

பெண்களே
இவர்களுக்காக இன்னொரு முறை
அழாதீர்கள்

………………………………………………………………………………………..
(தீபாவளிப்பகல் கவிதைத் தொகுப்பு,1983)




இக்கவிதையில் அசுர விதைகளுக்கு மடிதந்தீர்கள் என்று மறைபொருளாகச்சாடுகிறார் மீனாட்சி. இம்மாதிரியான நேரடியான பிரச்சாரக்கவிதைகளில் இருக்கும் பிரச்சனைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பொழுதும் பிரச்சனை எனப்படுவதன் ஆழத்திற்குக் கூட்டிச்செல்வதில்லை. ஆற்றின் மீதான பாலத்தில் நடக்கும் வசதியுடனும் கவனத்துடனும் இம்மாதிரியான கவிதைகளை எழுதுவதில் ஒரு சுகம் இருக்கிறது. அரசியல் அடையாளம் பெறுவதை, ஓர் அங்கீகாரமாக எண்ணிக்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது.ஆனால், இம்மாதிரியான கவிதைகளால், எந்தப்பிரச்சனையும் மேலெழுந்த வாரியாகப் பேசப்படுகிறதே அன்றி அகஎழுச்சியை ஏற்படுத்துவதில்லை. சமூக அழுத்தம் பெற்ற விஷயங்களைப்புரட்டிப் போடுவதே இல்லை. இதற்கு ஓர் உதாரணமாய் ஒரு கவிதை:

நிழலாய் இருக்க விடு
உச்சி வெயில் போதில்
நிழல் பொருளுள் ஒடுக்கம்
நீ அந்த வெயில்
நிழல் நான்

வாழ்க்கைக் காலையில்
என்னை முன் நடத்து
சாயும் வேளையில்
பின் நிற்கிறேன்.

ஒளிக்காலத்தில்
நிழல் நிகழும்
இருட்டெனில் கருகும்.

உன் வழியில்
பகலைப் பார்க்க
எனக்கோர் ஆசை!




சுடுபூக்கள் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இக்கவிதையில், மேற்சொல்லியிருக்கும் அதே மாதிரியான ஆன்மீக, தத்துவத் தேய்மானங்களைக் காணலாம். அதாவது, இக்கவிதையில் முன்னிலை பெறும் நீ என்பது பேசப்பட்டிருக்கும் பொருள் சார்ந்து ஓர் ஆணாகவோ, கடவுளாகவோ இருக்கலாம். அதற்குள் தன்னை ஒடுக்கிக் கொள்ளும் தீவிர இச்சையைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது, இக்கவிதை. ஆனால், அத்தகைய ஆன்மீக, தத்துவச் சிந்தனையே எவ்வளவு போலியானதும் வெறுமையானதும் என்பது உண்மையான தத்துவப் பின்புலங்களிலிருந்தும் நெடிய ஆய்வுகளிலிருந்தும் வருபவர்களுக்குப் புரியும். இந்தப் பயணம் படைப்பவரையும் வாசகரையும் எங்குமே கொண்டு சேர்க்காத ஒரு வண்டியில் ஏற்றியது போன்றது இல்லையா? இது வைதீக சிந்தனையின் வேர்கள் நம் அடி மன ஆழங்களில் மண்டிக்கிடக்கும் விழிப்பு அற்று இருப்பதன் பிரதிபலிப்பு தான்!





ஆனால், எனக்குப் பிடித்த தொனியில் அணுகப்பட்ட சில கவிதைகளையும் மீனாட்சியின் கவிதைத்திசைகளில் கண்டெடுத்தேன். இவை பெண் மனவெளியில் சிக்கல் உள்ள பகுதிக்குத் துல்லியமாகச்சென்று, அதன் இழைகளை மொழிக்கு இழுத்து வருகிறது. பொதுவாக, நவீனப் பெண்மனம் இந்த அணுகுமுறைக்கு எளிதானது இல்லை. பல சமரசங்களையும் மீறித் தன் சுயத்தையும் கட்டுக்குலையாமல் வைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில், அவள் அதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது, அதில் ஏற்படும் சங்கடங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் கவிதைக்கான நுண்ணிய மொழியில் கொண்டுவருவது என்பது சாத்தியம் தான் என இக்கவிதைகளை வாசிக்கும் போது உற்சாகமானேன். மீனாட்சியின் சில கவிதைகளில் மட்டுமே வாய்க்கும் நவீன உணர்வுகளை, அவரே தக்கவைத்துக் கொள்ளாமல் போய்விட்டாரே என்று என்னும் அளவில் அதற்குப் பின்பான கவிதைகள் வசனங்களாகி இருக்கின்றன. அதனாலேயே ஆழமான கருக்களங்களுக்குள் நுழைய முடியாத மனப்பிரமையும் அப்பிக்கொள்கிறது




பார்பரா என் தோழியே!

நீலக் கண்களில் நீளக்குறும்பு
கூரிய மூக்கில் கேலிப்புன்னகை
செம்பொன் முடியோ காற்றில் அலையும்
விரல்களில் அவசரம்
நடைதனில் கம்பீரம்
உன் பேச்சில் லாஸர் கற்றை.

நீ எப்போது தவித்தாய் தெரியுமா
பெண்ணே!
ஒரே ஒரு முறை
உன் முதல் காதல் அனுபவத்தை
முற்றிய நாளில் சொல்ல முயன்று
அளக்க நினைத்துத்
தோற்றாயே முன்னுரையில்!
பார்பாரா என் தோழியே!
தவிப்புமா தொற்று வியாதி?

(தீபாவளிப்பகல் கவிதைத் தொகுப்பு, 1983)







இதோ இன்னுமொரு கவிதையின் குறும்பகுதி:


அந்தரங்கவெளி

...................................................
நீர் குடிக்கத் தவிக்கின்ற சிறுபடகும்
கறையான் அரித்த துடுப்புகளும்
உப்புக்கரைசலில் எரியுண்ணும்
காயங்களும் தான் இங்கே துணை.
இவற்றோடு பயணப்படுகின்றேன்.
துக்கச் சுமைகளைத் தூக்கிவர
கூலி யாருமில்லை.
......................................................

மாலை மலர் விரிவது போல்
மெல்ல நடந்தாலும்...
கனவுகளுக்குள் இறங்கும்போது
கதவிடுக்கில் எட்டிப்பார்த்தாலும்....

பல்லாயிரர் கூடும் தேர்த்திருநாள் நெரிசலில்
ஒரு கணமேனும் ஊடுருவும்
பார்வை பட்டாலும்...
என்னை அறிந்து கொள்ளும் அந்த நீயா...

வயிற்றுக்கிரை இல்லாத
வீதி நாளில்
கதை சொல்லி வீரமுட்டி
விழிவியர்வை மாற்றினாயே

.................................................................

எல்லாம் போனபின்
உள்ளீடற்ற பின்னம்
நிழல் சின்னம்
மீதி நான்.

சோப்புக் குமிழிகளை ஊதுகிறேன்
வால் சேர்ந்த வஜ்ரப் பட்டங்களைப்
பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன்.

கண்ணாடித் தொட்டியில்
ஓயாது அலைகின்ற
உறங்காத
இளஞ்சிவப்பு மீன்களைப்
பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

வாசல் வேப்பமரம் உதிர்க்கின்ற
பொன்பூக்களின்
சின்ன மழையில் நனைந்து கிடக்கின்றேன்.

கான்கிரீட் சுவர் குழைக்க
குவித்திருக்கும் மணல் முகட்டில்
வீடு கட்டக் கரண்டி பிடிக்கின்றேன்.

என்னைக் கடக்கின்ற நரைமேகங்களின்
விசித்திரச் தோற்றங்களி
மாற்றிச் சிவப்பாக்கித்
தூரிகையை கங்கையில் அலசுகின்றேன்.
மாடி மீது ஏறினாலும்
என்னைக் குனிந்து பார்த்துக் கெக்கலிக்கும்
தென்னங் கீற்றுகளைக் கிழிப்பதற்கு
கத்தியைச் சாணைப் பிடிக்கின்றேன்.

இப்போது
புதிதாக முன்னால் நட்டிருக்கும்
இரும்பு வேலிகளை வளைப்பதற்குப்
பழகிக்கொண்டிருக்கிறேன்.

இடது கண்ணில் வலது கண்ணை
அப்பி விட்டேன்.
இதயத்தைத் தனியே கயிற்றில்
கோர்த்துவிட்டேன்.

நம்பு
இன்னும் நான் சாகவில்லை
இருக்கின்றேன் உயிரோடு!

மற்றுமொரு கவிதையும்:

வித்யா
குளத்து நீரில் மீன்பிடிப்பவர்களே
ஆற்றங்கரைக் கொக்குகளே
நான் வித்தியாசமானவள்.

கணந்தொறும் கணந்தொறும்
கடலின் பாய்ச்சல்
மரத்தொட்டிலை
அலைக்கழிக்கும் வேகத்தில்
வலை போடவே விரும்புகிறேன்
நீங்கள் காத்திருத்தலையே
விரும்புகிறீர்கள்.

நான் புயலுக்குள் புயலாய்ப் போய்
மையத்தைத் தொட்டுப்பார்க்கிறேன்
நானொரு வித்யா.




இரா.மீனாட்சியின் உள்நோக்கமும் அவர் கொள்ள விரும்பும் நெடும்பயணத்தையும் சொல்லும், ‘உன்னை எதிர்கொள்ளும் முன்’ கவிதை அவரை வாசிக்கும் எவரையும் ஊக்கப்படுத்துவது. எதிரே வரும் அனுபவங்களுக்குத் தன்னைத் திறந்து கொடுப்பது. குறிப்பாக, ஒரு மனிதருக்கு தன் சமுத்திரத்தைத் திறந்து கொடுக்கும் அனுபவம் ஆணுக்கான ஒன்றாக மட்டுமே வகுக்கப்பட்டிருக்கும் சமூகச்சூழலில், ஒரு பெண் இதை முன்மொழிவதும், அம்மாதிரியான பயணத்திற்கும் அனுபவத்திற்கும் தன்னைத் தயார்செய்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது. உடல் வழியாக மட்டுமே அனுபவங்கள் சாத்தியம்!



உன்னை எதிர்கொள்ளும் முன்

வேற்றூரின் புன்னகைக்கு
மறுமொழி தந்து
சிப்பியும், மீன்முள்ளும்
காலிக்குப்பிகளும்
இடறிவிட்ட வீதிகளில்
‘மாப்சா’ சந்தைகளின்
அபூர்வ சேகரிப்பில்
திளைத்ததைப் போல்
உன்னை எதிர்கொள்ளுமுன்…
அன்பே!
பயணத்தில் இருக்கின்றேன்.
நீயே அனுபவமாய்
எதிர்கொள்ள வருகின்றேன்.



இரா.மீனாட்சி பற்றிய சிறுகுறிப்பு: 1970 –ல் எழுதத் தொடங்கிய இவர், நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு ஆகிய கவிதைத்தொகுப்புகளைப் படைத்துள்ளார். பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார். கிராம முன்னேற்றம், ஆசிரியப்பணி ஆகியவை இவரது பிற ஆளுமைகள்.





குட்டி ரேவதி


நன்றி:கூடு

கருத்துகள் இல்லை: