நம் குரல்

காவியம்



‘காவியம்’ என்ற தலைப்பில் மூன்று கவிஞர்கள் எழுதிய கவிதைகள்.
வேறுபட்ட அவற்றின் பொருள் நயத்திற்காகவும் உணர்வெழுச்சிக்காகவும்
அவற்றை ஒரே சமயத்தில் சுவைத்துப் பாருங்கள்.




காவியம்

முடிவின்றிச் சென்று கொண்டிருக்கிறது
அரசரின் கட்டைவண்டி
ஒரு கையால் நடக்கும் ஊனமுற்றவன்
ஓட்டிச்செல்கிறான் அதை
வெண் உறை அணிந்திருக்கிறது ஒரு கை
நுகத்தடியைப் பற்றியிருக்கிறது மறு கை
கால்களிரண்டை அவன் இழந்தது வரலாறு
என்றோ நிகழ்ந்துவிட்டது அது
கால்கள் அங்கேயே
உலவிக்கொண்டிருக்கின்றன
வரலாற்றில் தான்
ஒவ்வொரு காலும் அதனதன் போக்கில்
நேருக்கு நேர் அவை சந்திக்கும்போது
ஒன்றையொன்று உதைத்துக்கொள்கின்றன
போர் என்றால் அப்படித்தான்
வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள்.


-பிரெஞ்சுக் கவிஞன் ழாக் ப்ரெவர்
மொழிபெயர்ப்பு வெ.ஸ்ரீராம்






காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

-கவிஞன் பிரமிள்






காவியம்

எட்டுத்திக்குகளும் மதர்த்தெழுந்து கைகட்டி நிற்க
எந்த ஓர் அற்புத விளக்கை
நான் தீண்டி விட்டேன்?

கைகட்டி நிற்கும் இப்பூதத்தை ஏவிக்
காவியமொன்று பெற்றுக்கொள்வதெளிது.
ஆனால் திக்குகளதிரத் தாண்டவமாடும் மூர்த்தி
நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?

-கவிஞன் தேவதேவன்




கனவுச் சமூகத்திற்கான ஒரு நீலப்பிரதி




இம்முறை பெண்கள் மையக்கதாபாத்திரங்களாக வரும் அறிவியல் புனைவுகளைப் பற்றி உரையாடலாம் என நினைக்கிறேன். அவை அவர்களுக்கு என்ன மாதிரியான உடல் வழியான விடுதலையைத் தந்தன என்பதைக் கண்டறியும் முகமாகக் கூட நாம் இதைப் பார்க்கலாம். வேறு வேறு கற்பனை கிரகங்களுக்குச் சென்று வரும் புத்தாய்வு முயற்சியை எப்பொழுதும் ஆண்களே செய்வதான சித்திரிப்பு தொடர்ந்து இருந்து வந்தது. 1960-க்கு முன்பாக, பெண் பற்றிய அறிவியல் புனைவுகள் வெளிப்படையான பால்தன்மையுடன் வெளிவரவில்லை. எதிர்ப்பண்பாட்டு, புதிய அலை பெண்ணிய இயக்கங்களும், குடியுரிமை இயக்கங்களும் தாம் இதற்கான அவசியங்களைத் தூண்டி விட்டன. சமூகத்தில் பெண் தனக்குத் தானே உடனடியாக உருவாக்கிக் கொள்ள முடியாத உடலியல் ஊக்கங்களை எல்லாம் இத்தகைய அறிவியல் புனைவுகளில் செயல்படுத்திக் கொள்ள முடிந்ததுமே கூட, பெண்ணுக்கு புதிய உணர்வெழுச்சிகளைத் தந்தன.




சமூகச்சூழலில், குடும்பத்தில், வேலைபார்க்குமிடத்தில், கல்வி நிறுவனங்களில் பெண் என்பவள் ஒரே வகையான பால் தன்மையுடன் தான் இயங்கமுடிகிறது. அதுவும் சமூகம் என்ன வகையான கட்டுப்பாடுகளை, பெண்ணுடல் என்பதால் வழங்குகிறதோ அந்தக் கட்டுப்பாடுகளுடன் தான் செயல்படமுடிந்தது. அறிவியல் புனைவுகள் என்பவை வெறுமனே அறிவியல் விந்தைகளையும், அதன் சமன்பாடுகளையும் மட்டுமே கதையாக்காமல் ஆண்களை அதன் மையங்களாகவும் அறிவியல் என்பதன் பயன்பாடுகளை அவர்களே உடல் வழியாக நுகரக்கூடியவர்களாகவும் சித்திரித்தன. 1960-களின் முடிவில் தான் பெண் கதாபாத்திரங்கள் இந்தப் புனைவுகளில் உள்நுழைந்தனர். ஆனால், பெண்கள் வெறுமனே பாலினப் பூனைகளாக அதாவது, அந்தப் பெண்ணிடமிருந்து கிளுகிளுப்பையும் கவர்ச்சியையும் மட்டுமே கதையின் இதர கதாபாத்திரங்களும் வாசகர்களும் பெறும் பாலின ஊக்கங்களாக மட்டுமே இருந்தனர்.




ஆனால். புற உலகை எதிர்க்கும் மனித சாத்தியமற்ற, தம் மீதான ஒடுக்கப்பட்ட பிம்பங்களையெல்லாம் அழித்துவிட்டு புதிய வகை வரைபட, விளக்கப்பட புனைவுகளை உருவாக்க வேண்டியிருந்தது. பெண்ணின் உடலால் இதுவெல்லாம் முடியாது என்று வரையறுக்கப்பட்ட விதிகளையெல்லாம் இக்கதாபாத்திரங்கள் மீறின. குடும்பத்திற்குப் புறம்பான பணிகளை பெண்ணுடல் சாத்தியப்படுத்தும், விரிக்கும் கற்பனைகளையும் யூகங்களையும் தந்தன. பெண்களுக்கு கற்பனையிலும் புனைவிலும் உடல் பூர்வமான உரிமைகளைக் கொடுத்தன இத்தகைய அறிவியல் புனைவுகள்.




இதில் முதல் தரமானது ஃபிளெட்சர் ஹாங்ஸ் என்பவர் உருவாக்கிய ஃபாண்டோமா என்ற பெண் கதாபாத்திரம். இக்கதாபாத்திரம், சமூகம் காலந்தோறும் பெண்களுக்கு எதிராக உருவாக்கிக் கொண்டே இருக்கும் தீயவடிவங்களை எதிர்க்கும், ஒரு பழமையான எகிப்திய பெண். இவளுக்கு வயது எல்லையே கிடையாது. அவள் தன்னை கபால முகமுடைய பெண்ணாக மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்தவள். அதுமட்டுமின்றி, தீயச்சக்திகளை எதிர்த்துச் சண்டையிடும் மிகையான ஆற்றலையும் படைத்தவள். இக்கதாபாத்திரத்தின் வழியாக, ஃபிளெட்சர், எத்தகைய பெண்ணை உருவகிக்கிறார் பாருங்கள்! தொல்மரபின் கூறுகளிலிருந்தும் அதன் விடுதலை உணர்வைத் தனக்குள் பொதிந்த பெண்ணாகவும் இருக்கிறாள், பாண்டோமா. ஆண்களால் உருவாக்கப்பட்ட சமூகக்கட்டுபாடுகளுக்குள் உள்ளது போல், சிறுமி, பருவமெய்தியவள், மனைவி, தாய், பாட்டி போன்ற வயது வரம்புகளுக்கு ஏற்ற சமூகப்பொறுப்போ சுமையோ இல்லவே இல்லை. இத்தனை வயதிற்குள் இவள் மரித்துப் போவாள் என்ற உடல் சுமையும் வயோதிகமும் இல்லை. நிதர்சனத்தில், பெண் உடல் மீது, ஆணினுடையதை விட அதிக அழுத்தச் சுமை இருக்கிறது தானே! நவீன காலத்திற்கு ஏற்றபடி, இவள் தன்னை உருமாற்றிக் கொள்ளும் திறனும் உடையவள். ஏன் இவ்வாறான சக்திகளையெல்லாம் உடைய பெண்ணாக மாறியிருக்கிறாள் என்றால் சமூகத்தின் தீயச்சக்திகளை எதிர்த்து இத்தகைய பெண் தான் போராட முடியும் என்பதையும் அவள் உள்ளீடாகக் கொண்டு அதற்கே உருவம் கொடுத்திருக்கிறார்.




இத்தகைய பிற பெண் கதாபாத்திரங்களும், தம் பாலிமை நிலைப்பாடுகளை மீறின. சமூகத்தில் தாம் கடைப்பிடிக்கக்கூடா மரபுகள், பாலினப்பாத்திரங்களை மாற்றிக்கொள்ளுதல், ஒற்றைப் பாலின உலகம், உயிர்க்கதாபாத்திரங்கள் இயந்திரங்களுடன் பாலுறவு கொள்ளுதல், செயற்கைக் கருவுறுதல், பால் மாற்றப் போக்கு, பல உறவுகளை ஒரே சமயம் பேணுதல் போன்றவை இக்கதாபாத்திரங்களின் இயல்புகளாக இருக்கின்றன. சமூகத்தில் தன் உடலுக்குச் செய்யக்கூடாதவற்றை எல்லாம் இத்தகைய பால் நிலைப்பாடுகள் வழியாகப் பெண்கள் கடந்து கொண்டே இருக்கின்றனர். மெல்ல மெல்ல பெண்ணுரிமையை வலுப்படுத்தும் மிகையான பிம்பங்களைத் திரையிலும் இலக்கியத்திலும் உருவாக்கிவிட்டு அவற்றை வாழ்க்கைக்குள் புகுத்தும் சாத்தியங்களை இத்தகைய கதாபாத்திரங்கள் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், யதார்த்தத்திலும் பெண்களால் இவையெல்லாம் முடியும் தானே?





மார்கரெட் ஆட்வுட் எழுதிய, பணிப்பெண்ணின் கதை இவ்வகையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருபத்தியோராம் நூற்றாண்டின் கிறித்துவமதவாதிகளைப்பற்றியது. இன்னும் சொல்லப்போனால், இந்த நூல் அடிப்படையில் பெண்களின் பாலியல் அரசியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சமூக ஒழுக்கம் பாராட்டித் தொடர்ந்து பாலுணர்வை அடக்குவதும் கட்டுப்படுத்துவதும் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்ற சூழலை அலசும் நூல். விஞ்ஞானப்பூர்வமாக உணர்ச்சிகளையும் பாலியலையும் ஆராயும் கதை. சமூக மதிப்பைப் பொருத்தவரை ஒருவருக்கு ஒருவர் பொருத்தமென்று கருதப்பட்டாலும் அவர்களுக்கு இடையே குழந்தை உருவாக்கும் தகுதி இன்மையால், அவர்கள் தமக்கான பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தி, அந்தப் பெண் வழியாக குழந்தை ஈனும் வசதியையும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். இதன் வழியாக, ஓர் ஆண் என்ன மாதிரியான பாலியல் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் பெறுகிறான், அதன் வழியாக தன் அதிகாரத்தை எப்படி தக்கவைத்துக் கொள்கிறான் என்பதைக் கதையாக்கியுள்ளார். சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட வரப்போகும் நூற்றாண்டின் கதை இது.





வெறும் சக்கையாக இருந்த அறிவியல் புனைவுக்கதைகள், பெண்களால் எழுதப்பட்டதாலும், பெண் கதாப்பாத்திரங்கள் புனைவுகளானதாலும் அவை இலக்கியமாக உருவெடுத்தன. உடல் ரீதியான பரிசோதனைகளைப் பெண்களுக்குப் பெருமளவில் வழங்கின. யதார்த்தத்தில் கல்பனா சாவ்லா போன்றவர்கள் விஞ்ஞான ரீதியான பயணத்தை மேற்கொள்வதற்கான முன் தயாரிப்புகளையும் இத்தகைய நூல்களும் படைப்பாக்கங்களும் அளித்தன. தொடக்கத்தில் இவர்கள் யுடோபியன் சிந்தனையாளர்களாகக் கருதப்பட்டனர். அதாவது, கற்பனையில் மட்டுமே காணக்கூடிய முழு நிறைவானதொரு சமூகம் பற்றிய புனைவாளர்களாகப் பார்க்கப்பட்டனர். அது இவ்வுலகில் சாத்தியமே இல்லை என்பதாகவும் கருதப்பட்டது. ஆனால், ஒடுக்கப்பட்ட பெண் தன் உடலிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியங்களைத் தான் அறிவியல் புனைவு சொல்லிவந்திருக்கிறது என்பதை மனித சமூகம் புரிந்து கொண்டது. மேலும், இதன் வழியாகத் தனக்குத் தேவையான சமூகத்தைக் கற்பனையில் ஒரு நீலப்பிரதியாகவும் உருவாக்கி வைத்துக்கொண்டது.





இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஆணாதிக்க படைப்பிலக்கியங்களையே படைத்தளித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், விர்ஜினியா வுல்ஃப் போன்ற பெண்ணிலக்கிய படைப்பாளிகள் பெண் கதாபாத்திரங்களுக்கு விஞ்ஞானப் பூர்வமான ஆளுமைகளைத்தந்தனர். பெண்ணுரிமைகளைப் பெற்றுத்தருவதில் பெண்ணிய இலக்கியங்களுக்கு இருந்த அதே அளவு பங்களிப்பு பெண்களின் அறிவியல் புனைவுகளின் வழியாகவும் இருந்தது என்பது இன்னும் அதன் அளவில் முழுமையாக அறியப்படாமலேயே இருக்கிறது. பெண்கள் தங்கள் கற்பனையை ஓருலகமாகக் கட்டமைத்தது என்பதே பெண்ணுக்கான உரிமைகளில் ஒன்றாக அவர்களின் கற்பனை உலகமும் பார்க்கப்படவேண்டும் என்பது தான். நமது இயல்பான உலகத்தை மீறி, நமது அறிவியல் அறிவின் வழியாகவும் படைப்பாற்றல் வழியாகவும் வேறு உலகங்களுக்குப் பயணிக்க முடியும் என்பது எவ்வளவு ஓர் அரிய வாய்ப்பாகப் பெண்களுக்கு இருந்திருக்கும்! ஏனெனில், பெண்ணினால் படைக்கப்படும் அறிவியல் புனைவுகள் எல்லாம் ‘அறிவியல் புனைவுகளா’க மட்டுமே பார்க்கப்படுவதில்லை. அதையும் மீறி, அவை பெண்ணால் எழுதப்பட்டது என்றும் பார்க்கப்படுகிறது.



தொடக்கக்காலத்தில் ஆண்களுக்கான படைப்புலகமாகப் பார்க்கப்பட்ட இவ்வூடகங்களில் செயற்கைத்தனமான பெண்ணுடல்களும் பெண்மை என்று கருதப்பட்ட உணர்வுகளும் அற்ற உடல்களும் தான் கதாபாத்திரங்களாயின. மேலும், அவை சாத்தியங்கள் உள்ளன என்பது போல் சிலவற்றைச் சித்திரித்தாலும் உண்மையில் அவை சாத்தியமில்லை என்பது போலும் சில புனைவுகளைக் கட்டமைத்தன. பெண் என்பவள் இவள் இல்லை, என்பதாய் சமூகத்திடம் மறுக்கவும் அக்கதாபாத்திரங்கள் உறுதுணையாக இருந்தன. நாள்பட நாள்பட, இச்செயற்கைக் கட்டமைப்புகள் உடைந்து, அவை பெண்ணின் இயல்புகளை இன்னுமாய் விரித்தன. பெண்ணிய உரையாடல்களுக்கு முதுகெலும்பாய் மாறின. மாதிரிகளாய் அவற்றை வைத்து, மேன்மேலும் விவாதங்களைப் பேச உறுதுணையாக இருந்தன. உண்மையில் இவையெல்லாம் பெண்களால் முடியும்தானே?




குட்டி ரேவதி
நன்றி: அரும்பு

பெண்ணைப் பற்றிய பாடல்



1. சிலசமயங்களில் மாலை நேரங்களில் நதியோரம், புதர்கள் அடர்ந்த இருளில், அவள் முகத்தை, நான் நேசித்த அந்தப்பெண்ணின் முகத்தை மீண்டும் பார்க்கிறேன். இப்பொழுது இறந்துவிட்டாள், என்னுடைய அந்தப்பெண்!


2. பல வருடங்களுக்கு முன்னால், அவளைப் பற்றி நான் ஏதும் அறியாத சமயங்களில் அவள் தான் என் எல்லாமுமாக இருந்தாள். ஆனால், எல்லாமும் கடந்து போகிறது.


3. அவள் என்னுள், வெளிறிய மஞ்சள் வானமும் அருமையான சோகத்தையும் உடைய குழிந்த மங்கோலியப் புல்வெளிகளின் ஜூனிப்பர் மரங்களைப் போன்று இருந்தாள்.


4. நதியருகே ஒரு கருப்புக்குடிசையில் நாங்கள் வாழ்ந்தோம். அவள் வெண்சருமத்தை கொசுக்கள் அடிக்கடி கொட்டின. நான் செய்தித்தாளை ஏழு முறைகள் வாசித்தேன் அல்லது உன்னுடைய கூந்தல் அழுக்கின் நிறத்தைக் கொண்டிருப்பதாகச் சொன்னேன். அல்லது, உனக்கு இதயமே இல்லை என்பதாக.


5. ஆனால், ஒரு நாள் குடிசையில் நான் என்னுடைய சட்டையை துவைத்துக்கொண்டிருந்த பொழுது, கதவருகே சென்று, வெளியேற விரும்பியவளாய் என்னைத் திரும்பிப்பார்த்தாள்.


6. களைப்படையும் வரை அவளை அடித்திருந்தவன் தான் சொன்னான், அவனது தேவதையென்றும்.


7. ‘நான் உன்னைக்காதலிக்கிறேன்’ என்றும் சொல்லியிருந்தவன், அவளை வெளியே கூட்டிச்சென்று, புன்னகைத்தவாறே வானத்தைப் பார்த்தான். வானிலையைப் பாராட்டிவிட்டு, அவளிடம் கைகுலுக்கினான்.


8. இப்பொழுது, அவள் வெளியே திறந்தவெளியில் இருந்தாள். குடிசையோ வெற்றுவெளியாய் இருந்தது. அவன் கதவைச் சாத்திவிட்டு, செய்தித்தாளுக்குப் பின்பாக உட்கார்ந்தான்.


9. அப்பொழுதிருந்தே நான் அவளைப் பார்க்கவில்லை. காலையில் திரும்ப வந்த பொழுது மூடப்பட்டிருந்த கதவைக் கண்டதால் அவளிடமிருந்துவந்த சிறு அழுகை மட்டுமே அவளைப் பற்றியதாக எஞ்சியிருந்தது.


10. இப்பொழுது, என் குடிசை வெறுப்பூட்டுவதாகிவிட்டது. செய்தித்தாள்கள் திணிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருக்கிறது, என் நெஞ்சம். மாலை நேரங்களில் நதியருகே புதரின் இருண்ட பகுதியில் படுத்து நினைத்துப்பார்க்கிறேன்.


11. காற்று அதன் கூந்தலில் புல்லின் வாசனையைப் பெற்றிருக்கிறது. சமாதானத்திற்காக முடிவிலாது கடவுளிடம் அழுது இறைஞ்சுகிறது, தண்ணீர். எனது நாக்கில் ஒரு கசப்பான சுவை இருக்கிறது.


பெர்டோல்ட் பிரக்ட்

மொழியாக்கம்: குட்டி ரேவதி

உடலை வாசித்தலும் எழுதுதலும்


(பாலியல் அறம் மிக்க பிரதியாக)

உடலை எழுதுதலும் வாசித்தலும் என்ற பொருள், நான் விளங்கிக் கொண்ட வகையில் மிகப்பரந்த ஆய்வுக்கட்டுரையைக் கோரும் என்ற விஷயமென்றாலும், அதற்கான திறவுகோலாய் மட்டுமே இக்கட்டுரையை எடுத்துக் கொள்ளும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதை ஓர் ஒற்றை உரையாக எண்ணி விலகி நிற்காமல் உரையாடலாக ஆக்கினால், எடுத்துக்கொண்ட இப்பொருள் தன் பயன்பாட்டை அடைவதற்கான குறுகிய வழியாகவும் இது இருக்கும் என்று நம்புகிறேன்.


உடலை வாசித்தல்

எல்லோரும் அவரவர் உடலின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கிறோமா என்ற கேள்விக்குப் பதில் காணும் முகமாகத்தான் இத்தலைப்பை இட்டேன். அதற்காக, ஒரு மருத்துவரைப் போல ஒருவர் தன்னுடல் கூறுகளை முற்றுமுழுதுமாக அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசியல்லை. அதே சமயம், ஒரு மதவாதியைப் போலவும் அதைப் புதிராகப் பாதுகாக்கவேண்டியதுமில்லை. ஆனால், ஒருவருக்குத் தன் உடலைக் காட்டிலும் விலைமதிப்பிலாத அருஞ்சொத்து என்பது வேறு எதாக இருக்கமுடியும்? சித்தர் அறநெறி, அதற்கு முன்பான பெளத்த அறநெறி எல்லாமே மனித உடலை அதிலும், தனது உடலை ஆய்ந்தறியும் அறிவு, அதை அறிவதற்கான பயிற்சி, பாலியல் உறவைப் புரிந்து கொள்ளல், அதன் நெறிகள் குறித்ததே. உடலின் எல்லைக்கு வெளியே உள்ளது பற்றி இவ்விரண்டு நெறிகளுமே பொருட்படுத்தவில்லை. அல்லது இவ்விரண்டு நெறிகளுமே உடலை அவ்வெளியுடன் பொருட்படுத்திப் புரிந்து கொள்ளவே உதவின. அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம். இயற்பியல் விஞ்ஞானத்தை, பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவது போலவே உடலைப் . புரிந்து கொள்ளவும் அவற்றைப் பயன்படுத்துதலே மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானம் என்பது உடலைப் பற்றியது. உடலைக் கடந்து வரையறுக்கப்படும் ‘ஆன்மிகம்’ என்று சொல்லப்பட்ட பழங்கதைகளை, மரபின் வேர்களையல்லாமல் விழுதுகளையே தொங்கியபடி நாமிங்கே ஆடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமுமில்லை. மேலும்,அத்தகைய ஒரு விவாதத்தைப் புறக்கணித்தப் புரிதலுடன் தான் இதை ஈங்கு குறிப்பிடுகிறேன்.



ஒருவர் என்ன உண்ணுகிறார், என்ன அணிகிறார் ஆகிய பண்பாட்டு அலகுகள் வழியாகத் தான் ஓர் உடல் அணுகப்படுகிறது. அதே சமயம் இப்பண்பாட்டில் செயல்படுத்தப்படும் பாகுபாடுகள் வழியாகவே பாலியல் வேறுபாடு நிலைநிறுத்தவும்படுகிறது. ஆக, பண்பாடு தான் பெண் – ஆண் பாலிமையை வேறுபடுத்துவதற்கான ஊடகமாகிறது. மேரி டக்ளஸ் எனும் இனவரைவியலாளர் விளக்குவதைப் போல், இவ்வுடலென்னும் பரப்பின் மீது தான் பண்பாட்டின் நியதிகளும், அதிகாரமுறைகளும், மீபொருண்மை உடன்படிக்கைகளும் பொறிக்கப்பட்டு இன்னும் இன்னும் வற்புறுத்தப்பட்டு, குறிப்பிட்ட உடல் மொழியாலும் உடல் அசைவாலும் வலுவேற்றப்படுகிறது. ஆக, பெண் உடல் என்பது ஆதிக்க, அதிகாரப் பண்பாட்டை நிறுவி வளர்ப்பதற்கான வெறும் உருவகமே. எப்பொழுதும் வாசித்துப் புரிந்து கொள்வதற்கான பிரதியாகவும், அதை மறு உருவாக்கம் செய்வதற்கான வடிவத்திலும் இருப்பது பெண்ணுடல் தான். இத்தகைய பெண்பிரதிகள் தாம் வகைமாதிரிகளாக நமக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய பெண்மாதிரிகள், உதாரணத்திற்கு சீதை, கண்ணகி, ஆண்டாள், சாவித்திரி போன்றவர்கள் தம் இயல்பூக்கங்களைத் துறந்து தன் உடலை காலாகாலத்திற்குமான ஒரு பிரதியாக மாற்ற நேர்ந்ததால் அனுபவிக்க வாய்த்த அங்கீகாரங்களைக் காட்டி, நமக்கும் அந்த ஆசையையே ஊட்டுவர். அல்லது, அப்படி ஒரு பிரதியாகப் பேணத் தவறிய பெண்கள் சந்திக்க நேர்ந்த அவலங்களை நமக்குப் படிப்பினைகளாக்குவர்.



பெண்ணுடல் முற்றிலும் பண்பாட்டிற்கான ஒரு பிரதியாகவே இருக்கிறது, அந்தப் பிரதி பாலியல் வேறுபாட்டை கணந்தோறும் நமக்கு எச்சரித்துக் கொண்டே இருக்கும். பண்பாடு என்பது உடலுக்குக் கடத்தப்பட்டது போலவே, பண்பாட்டையே நெய்யப்பட்ட ஓர் ஆயத்த வடிவ உடலாக வாசித்தல் சார்ந்தும் நமது உடலை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். பெண்ணுடல் வெறுமனே பண்பாட்டு வாசிப்புத் தான் செய்யப்படுகிறது. அதற்கு, சமூக, பொருளாதார ஊக்கங்களோ பயன்களோ இனனும் வழங்கப்படவில்லை. அத்தகைய உடலாக மாற்றும் பணியில் தாம் நாம் எல்லோரும் இன்று இங்கே ஈடுபட்டிருக்கிறோம்.



பெண்ணின் உடலில் அவளின் பால்நிலையும் அதன் உயிர்த்துடிப்பும், மிகுந்த ஊக்கத்துடனும் அன்றாடம் அதன் புறத்துடிப்புகள் இயக்க நிலையில் இருப்பதாகவும் பண்பாட்டு ஊடகம் பார்த்துக் கொள்கிறது. அதாவது அவள் உடுக்கும் உடை, நடை, பாவனைகள், அசைவுகள், மொழிகள் எல்லாமே ஆணின் அல்லது ஆணாதிக்க சமூகத்தின் பண்பாட்டுப் பாலியல் கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இதையெல்லாம் மீறி, இயல்பானதொரு மனித உடலை அறிய இவ்வகையான பண்பாட்டு இயக்கங்களை உடனடியாகவேனும் அல்லது சில தயக்கங்களுடனேனும் நாம் முறியடிக்க முன்வரவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். பாலியல் பண்பாட்டுக் கூறுகள் அதிகார நிலையில் இயங்குவதைப் பேசும்போதெல்லாம் பேசுபவர், வெறுமனே கருத்துரை வழங்கவந்தவராகவோ அல்லது வெறுமனே கிளுகிளுப்பூட்டும் பாலியல் பொருண்மைத் தருபவராக மட்டுமே பார்க்கப்படுவது தமிழினத்தின் ஓர் அவலம் தான்!



மேலும், பெண்ணின் உடல் பெண்மை என்று ’வரையறுக்கப்பட்ட வினையூக்கிகளால்’ (அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு / தன் இனவிருத்தி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் தன் வாழ்க்கைப் பணியை நிறுத்திக் கொள்ளல் / யோனியை ஒரு பிளாஸ்டிக் பையைப் போன்று பயன்படுத்தித் தூக்கி எறியும் ஒரு பொருளாகப் பயன்படுத்து! போதும்!! என்று கட்டளையிடும் நவீனப் பெண்ணியம் உட்பட) ஆன பிரதியாக மாற்றும்படிப் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.



இதற்கு மறுப்பு காட்டும் இன்னொரு வகைப்பெண்களோ ஆண்களின் வினையூக்கங்களையே தங்கள் உடல்களுக்கும் செயற்கையாக ஊசிகள் வழியாக ஏற்றி, உடலை ஆதிக்கம் நிறைந்த உடலாக மாற்றுகின்றனர். இரண்டு செயல்பாடுகளிலுமே பெண் உடலின் இயல்பான படைப்பூக்கமும் பண்பூக்கமும் உணராமல், குறிப்பாக இனவிருத்தி வலிமையின் தொடர்ச்சியானதோர் ஆற்றலை (ஒரு தாயிலிருந்து மற்றொரு தாய், அவரிலிருந்து இன்னொரு தாய் / இதில் கிளைப்பதும் வேர்கொள்வதும் தான் மானுட இனம் என்ற உணர்வின்மை) உணராத வெள்ளெழுத்துப் பிரதியாக இருக்கிறது. இத்தகைய ஆண்மைய உடல் தான் இருபதாம் நூற்றாண்டின் வற்புறுத்தப்பட்ட ‘பெண்ணுடல்’ பிரதியாக இருந்தது. அதாவது, ஆண் செய்த பாலியல் குற்றங்களையும், அதிகாரப் பிழைகளையுமே தமக்கான உரிமையாகவும் கோரும் ’ஆதிக்க சாதிப் பெண்ணியம்’!



அதே சமயம், ஆதிக்கசாதியினர் அல்லது ஆதிக்க வர்க்கத்தினர், வலிந்துச் சித்திரிக்கும் பிரதி என்பது, பாலியல் ஒழுக்கத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குத் தொடர்ந்துக் கற்பித்தல் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் தம் பாலியல் இயல்பூக்கத்தை ஒருங்கிணைத்துப் புத்துயிர்ப்பு ஊறும் சுனையாய் பயன்படுத்த முன்வரும்போதெல்லாம் அந்தப் ‘பாலிமையைச் சிதறடித்தல்’ என்பதை ஓர் இயக்கமாகச் செய்கின்றனர். ரசமிழந்த கண்ணாடியில் தொனிக்கும் ஓர் உருவச் சித்திரம் தான், இது! இதன் வழியாக பாலியல் ஊக்கம் பெற்ற அவர்கள் உடல் மீண்டும் மீண்டும் அவர்கள் சார்ந்த சாதியை அதிகாரப்படுத்துகிறது. இதையே ‘வன்முறை’யாகவும், வன்மமாகவும், பாலியல் வல்லுறவாகவும் ஒடுக்கப்பட்டவர் மீது திருப்பிச் செலுத்த முடியும். ஆகவே, நமது உடல்களின் பாலியல் இயல்பூக்கத்தை எப்பொழுதும் அதன் அகஉயிர்ப்போடு வைத்திருப்பதற்கான பயிற்சியினை நாம்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.



உடலை எழுதுதல்

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்

பொற்புடை நெறிமை இன்மையான்

என்று தொல்காப்பியர் கூறியதிலிருந்தே பெண்ணுக்கும் மொழிதல் என்னும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. காதலோ, காமமோ, தன் கருத்தோ தம் இயல்பான மொழிதலைக் கட்டுப்படுத்திக்கொள்வது தான் பெண்பாலிய அறமாகக் கருதப்பட்டது. எழுத்து என்னும் மொழிதல் கூட பாலியல் நியதி எனும் பண்பாட்டுத் தணிக்கை செய்யப்பட்ட பிரதி தான். பெண்ணுடலுக்கு இயல்பூக்கங்களை உரிமையாக வழங்காத ஒரு சமூகத்தில் நாம் இன்று அன்றாடம் சந்தித்துக்கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார, இராணுவ தளவாட.. என எல்லா வகையான பிரச்சனைகளையும் தாம் சந்திக்கவேண்டியது இருக்கும்.



இக்கட்டத்தில் உடலை எழுதுவது ஏன் அவசியம்? நம் தமிழகம் தனித்த நாடு இல்லை. இந்தியாவின் அனைத்து சமூக, பொருளாதார, பண்பாட்டு விஷயங்களுக்கும் அடிபணிந்த சமூகக் கூட்டம் தான், நாம். இந்நிலையில் சாதிமயப்படுத்தப்பட்ட உடலாகத்தான் நாம் அடையாளப்படுகிறோம். நாம் அணிந்திருக்கும் சட்டைகளுக்கும் கீழே, சட்டைகளின் வர்க்கங்களுக்குப் பின்னால், அப்பட்டமான பால் அடையாளப் பண்புகளின் வெளிப்பாட்டிற்கும் அப்பால், ஒவ்வோர் உடலையும் தீர்மானிப்பது அவ்வுடல் ஏற்றிருக்கும் சாதியப் பண்புகள் தாம்.



இது எந்த ஒரு பெண்ணுக்குமோ ஆணுக்குமோ விதிவிலக்கன்று. ஆதிக்க சாதிப் பெண்ணுக்கும் கூட அவள் உடல் சார்ந்த பாலியல் ஒடுக்குமுறைகள் எல்லாமே அவளாகத் தேர்ந்தெடுக்காமல் திணிக்கப்பட்ட சாதியால் உருவானது தான். ஆனால், இன்னும் இத்தகைய ஓர் ஒடுக்குமுறைக்கான அரசியல் பின்னணி, விவாதத்திற்கு எங்குமே உட்படுத்தப்படாமல் இருக்கிறது. இதற்கான காரணம், ஆதிக்க சாதிப் பெண்களே தம் குறைந்தபட்ச அதிகாரத்தையும் இழக்கத் தயாராக இல்லாமல், ஒடுக்கப்பட்ட பெண்களைத் தம் அதிகாரத்திற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளுதல் தொடர்வதால் தான். அல்லது இவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் மீது தம் சுயம் முன்னிறுத்தி எழும் வெறுப்புணர்வையேனும் மட்டுப்படுத்துவதில் ஈடுபடலாம். தலித்தியத்தின் மையநோக்கு என்பது சாதி மறுப்பாக இருக்க, அது ஆதிக்க சாதிப் பெண், தாழ்த்தப்பட்ட பெண் ஆண் இருபாலார் என அனைவருக்கும் பொதுவான பாலியல் உரிமைக்காகப் போராடுவதாக இருக்க, ஏன் அது பிற ஆதிக்க சாதியினரால் விவாதிக்கப்படாததாகவே இருக்கிறது. இது ஏன் மனித உரிமையாகவோ, மனித நெறியாகவோ பார்க்கப்படுவதில்லை. இவ்விடத்தில் மட்டும் ’பெண்ணியம்’ என்று பேசுபவர்கள் ‘மனித இயம்’ என்று தடம்புரள்வது ஏன்?



காரணம் மிக எளிமையானது. இதுவரை, தாங்கள் அனுபவித்து வந்த சாதிய அதிகாரத்தால் ஆண்கள் தாங்கள் சுகித்து வந்த சமூக, பொருளாதார ஆனந்தங்களையும் பெண்கள் தாங்கள் அனுபவித்து வந்த பண்பாட்டு அல்லது பாலியல் சுகங்களையும் இழக்கத்தயாராக இல்லை. மேலும், இது வரை இலங்கும் சாதி அடுக்குகளைக் குலைத்தால் தன்நிலை குறித்து எழும் நிலையின்மையால் தொடரும் பதட்டமும் இவர்களைப் பீடித்திருக்கிறது. அப்படியான ஓர் ஆயத்த நிலைக்குக் கூட அவர்கள் தங்கள் நிலையைக் கற்பனை செய்தது இல்லை. இவ்வடுக்கைக் குலைக்கும் போது அவர்கள் செய்ய வேண்டிய தியாகத்தால், இது வரை அவர்கள் தண்ணீர் மறுத்த, வாயில் மறுத்த வீடுகளில் விருந்து உண்ண வேண்டியிருக்கும். திருமண உறவு கொள்ள வேண்டியிருக்கும். இதுவரையிலும் தான் அதிகாரம் செய்து வந்தவருக்குச் சமமாக எப்படி விருந்துண்ணுவது? சமமான பாலியல் உறவில் எப்படி ஈடுபடுவது?



இது தான் ஆதிக்க சாதிப் பெண்களிடம் பாலியல் அத்துமீறலாகவும், பரத்தமையாகவும் வெளிப்படுகிறது. இவ்வாறாக விளக்கும்போதே, இதற்கு எதிரான நிலை என்பது உறுதியாக, ‘பாலியல் ஒழுக்கம்’ என்பதில்லை. தன் சுய உடலுக்கு மரியாதையையும், பாலியல் சமத்துவம் பாராட்டாத சமூகத்தில் தனக்கு ஏற்ற பாலியல் உறவைத் தானே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும், ஏற்கெனவே சமூக உறவுகளில் பிணைக்கப்பட்டுச் சின்னப்பின்னமாக்கப்பட்டிருக்கும் பிற பெண்கள் போராடிப் பெற்ற பாலியல் உரிமைகளைக் குலைக்காமலும், அதுவழியாக அவர்கள் தங்களிடம் வளர்த்து வைத்திருக்கும் பாலியல் திறத்தை தம் அதிகார மமதையால் சிதைக்காமல் இருப்பதும் தான் முழுமையான ’பாலியல் அறம்’ நோக்கியது.



பாலியல் ஒழுக்கம் என்பது எப்படி இந்துமதத்தினுடன் அடையாளம் பெறுகிறதோ அதுபோலவே பாலியல் சுதந்திரம் என்பது ஆதிக்கசாதிப் பெண்களுடன் அடையாளம் பெறுவது. சாதி என்பதன் பெயரால் பெறமுடியாத பாலியல் உரிமைகளை, ஆதிக்கசாதிப் பெண்கள் முன்மொழியும் ‘பாலியல் சுதந்திரம்’ எவ்வகையில் வழங்கிவிடப்போகிறது? அதுபோலவே, இப்பெண்கள் நிகழ்த்தும் ‘பாலியல் அற’ மீறல்களைக் கண்டிக்கும் போதெல்லாம் பழமைவாதச்சித்திரங்களை அதாவது இவர்கள் அதிகாரத்தை மட்டுமே ஒடுக்கும் புராண மரபுகளை பொய்க்காரணமாகத் துணைக்கு அழைத்து நம் நெறிகளைச் சாடுவதே இவர்களின் பாலியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஓர் உத்தி தான்! ஆக, என்றோ கட்டுடைத்த பெண்ணியம் என்று சொல்லப்பட்டதை, இன்று வரை பெண்ணியம், பெண் விடுதலை, நவீனப் பெண்ணியம் என்று கூவித் திரிவதிலிருந்து நாம் விடுபட்டே ஆகவேண்டும்.



சமூகத்தில் ஒரு பெண் – ஓர் ஆண் பாலுறவுக்கென செய்யவேண்டிய அடிப்படையான பேரங்கள் எல்லாமே, ஒரு வீட்டில் வசிப்பதற்குச் செய்யவேண்டிய பேரங்களைப் போன்றே நிலைத்த சமூக விதிகளைக் கொண்டிருக்கின்றன. ஆக, பிறப்புறுப்பு என்பது குறியீட்டு வடிவில் வாடகைக்கான வீடும் என்றே ஆகிறது. களவு கற்பு இரண்டும் தான் சமூகத்தில் பேசப்பட்ட இரு பாலியல் பிரதிகள். இவ்விரண்டிலுமே ஆதிக்க சமூகத்தின் சாதி விதிகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டன. களவு என்பது திருமணத்திற்கு முன்பாக கொண்டிருக்கும் பெண்- ஆண் உறவு. கற்பு என்பது, களவு என்பதை யாரிடம் கொண்டிருந்தாலும் கவலையற்று யோனியை ஒருவருக்கே குத்தகை விட்டுப் பேணும் பாலியல் மரபு. பரத்தமை என்பது அதிகாரம் மிக்கோர், நலிவுடையோர் மீது செயல்படுத்தும் பாலியல் ஆதிக்கம். இந்த மூன்றிலுமே எங்குமே ’பாலியல் அறம்’ என்பது சமத்துவ நோக்குடன் சொல்லப்படவே இல்லை. ஆதிக்க சாதி ஆண் ஒருவன் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணுடன் பாலுறவு கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட சாதி ஆண் ஒருவன் ஆதிக்க சாதிப் பெண்ணொருத்தியுடன் களவோ கற்போ கொள்ளக் கூடாது. இதை தாழ்த்தப்பட்ட சாதி ஆணுக்கு மறுக்கப்பட்ட சலுகையாகப் பார்ப்பதை விட ஆதிக்க சாதிப்பெண்ணுக்கு அதிகமாக வழங்கப்பட்ட அதிகாரமாகத்தான் பார்க்கமுடிகிறது. ஆதிக்கசாதிப்பெண் தாழ்த்தப்பட்ட சாதி ஆணின் மீது தன் பாலியல் அதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான சகல வாய்ப்புகளையும் இது தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்கிறது. இதுவே பரத்தமை எனப்படுவது.



பரத்தமை என்ற உறவும் கூட ஒரு பாலுறவாகப் பேசப்படவில்லை. ஆதிக்க சாதியினரின் பாலியல் நிறுவுதலுக்கான ஒரு சமன்பாடு. ஆக, ஆதிக்க சாதிப்பெண்கள் அல்லது ஆண்கள் தமது பாலியல் அதிகாரத்தைச் சுகிப்பதற்கான வாய்ப்பாகவும் அதிகாரமாகவும் தாழ்த்தப்பட்ட சாதி ஆணை அல்லது பெண்ணை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது சாதியச் சுரண்டலின் ஒரு வடிவம். ஆதிக்க சாதிப் பெண்ணின் சாதி அதிகாரம்: தன் சாதி ஆணிடம் போராடிப் பெற முடியாத உரிமையையும் அதிகாரத்தையும் இப்படித்தான் பாலியல் துய்ப்பாக மாற்றிச் சேமித்து வைத்துக்கொள்கிறது. தன் உடல் அனுபவித்த ஒடுக்குமுறைக் கோபத்தைத் தாழ்த்தப்பட்ட சாதி ஆண் உடல் மீது வன்மமாகச் செலுத்தி தன் பரத்தமையையும் அதன் வழியாக சாதிய அடுக்குமுறையையும் நிலைநிறுத்தும் பணியும் அவளுக்கு வழங்கப்படுகிறது.



மேலும், நம் மன ஆழத்தைத் தோண்டித் துருவிப் பார்த்தோமானல், எல்லா வகையான பாலுறவு சேர்க்கைகளும் நமக்குப் பொருந்தாத ஒன்றாகப் பார்த்துப் பழகிப்போயிருக்கிறோம். அப்பழக்கத்திலேயே தனிப்பட்ட அளவில் ஒருவர் சுகிக்காத பாலியல் உறவை எந்த ஓர் ஆய்வுமின்றிக் கண்டிக்கிறோம். இப்படியான பொதுப்புத்தி, செவ்வியல் இலக்கியங்கள் வழியாகவும் பண்பாட்டு ஊடகங்கள் வழியாகவும் தொடர்ந்து ஊட்டப்பட்டு வருகின்றன. இது முற்றும் முழுதுமாக, மனு இயற்றிய ஏடுகளால், காலந்தோறும், தலைமுறை தோறும், நம் மரபணு தோறும் பயிற்றுவிக்கப்படுபவையே. ஏன், மரபணு என்று சொல்கிறேன் என்றால், நான் ஆணாய்ப் பிறந்திருந்தாலும் பெண்ணாய்ப் பிறந்திருந்தாலும் என் மீது சுமத்தப்படும் சாதி அடையாளம் மாறப்போவதில்லை. வேண்டுமானால், ஆண் என்பதால் கொஞ்சம் உபரியான சலுகைகள் வழங்கப்படலாம்.



முறைகேடான பாலியல் உறவுகள் என்று சொல்லப்படுபவையும், அவை காலந்தோறும் மீறப்படுபவையும் ஆதிக்க சாதிமனநிலையின் ’சர்க்கஸ்’ வேலைகள் தாம். சாதிக்கட்டுமானத்துக்கும் அதன் அதிகாரக்கட்டுக்கோப்புக்கும் உடன்பட்டவர்களுக்குத் தாம் இவை தேவையாயிருக்கின்றன. இதனால், நான் முற்போக்கான சிந்தனையைப் பின்னிறுத்துவதாக அவசரப்படு எண்ணிவிட வேண்டாம். மாறாக, எப்பொழுதுமே நம்மிடையே எல்லா வகையான பாலியல் உறவுகளும், அதன் சுகிப்புகளும் அதன் திண்மையுடனும் அழகுகளுடனும் இலைமறை காய்மறையாகவேனும் பயிலப்பட்டுத் தாம் வந்திருக்கின்றன. ஓரினச்சேர்க்கையோ, ஈரினச்சேர்க்கையோ, தன் பால் அடையாளத்தைத் தன் உணர்வெழுச்சிக்குத் தக்க மாற்றிக்கொள்ளுதலோ எப்பொழுதுமே நம் சமூகத்தில் இரண்டறக் கலந்த ஒன்றாக, தனித்த பொருளில் விவாதிக்கும் பிரச்சனையாக இல்லாமல் பயிலப்பட்டுத்தாம் வந்திருக்கின்றன. ஒடுக்கப்பட்ட, உழைக்கும் சமூகத்தினரிடம் அது ஒரு பேசுபொருளாக இல்லாமல், வாழ் நெறியாகவே இருந்திருக்கிறது. எப்பொழுது அதிகாரப் படிநிலை என்பது சாதி, மதம், வர்க்கம், பால் இன்ன பிறவற்றால் நியமங்களாக ஆக்கப்பட்டனவோ அன்றுதான் இந்தப் பாலியல் குழப்பங்கள் உருவாயின. இதை இன்று அவர்கள் ஒரு புரட்சியாகவும், வாழ்வோடு கலந்த ஒன்றை வாழ்வுக்கு வெளியே துருத்திய ஒன்றாகக் கட்டமைப்பதும் வேடிக்கையாகவும் நகைப்பளிப்பதாகவும் இருக்கிறது.



எப்பொழுதும் செழுமையாவும் உயிர்ப்புடனும் இருந்த நமது பாலியல் இயல்பூக்கம், ஆதிக்க சாதியினருக்குத் தேவையான சமூகப், பொருளாதாரப் பயன்பாடுகளுக்காக உடல் உழைப்பாக மடைமாற்றம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நமது பாலிமையை நாம் அடையாளம் காணவும், அதை நமக்கேயான விளைச்சலாக மாற்றிக்கொள்ளவும் அவகாசமும் இன்றி, நம் யோனிகள் அடிமைகளையும், ஆதிக்க சாதியினருக்குத் தேவையான கூலிகளையும், நவீன யுகத்தில் பகுத்தறிவு மூளைகளை உடைய கருத்தியலாளர்களையும் உற்பத்திச் செய்யப்பணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, கருத்தியல் சுரண்டல்களை நிகழ்த்தத் தேவையான விதைமுளைகளைத் தயாரிப்பவர்களாக! இதை வாசிப்பவர் எவராயினும், அவர் தன் மனநிலையின் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதிநிலையிலிருந்து தன்னைத்தானே வலிந்து வெளியே இழுத்து வந்து வாசித்தால் தான், தன் பாலியல் செழுமையினை முழுதுமாய் உணரமுடியும். ‘பாலியல் அறம்’ பற்றிய புரிதலை அதன் பெருங்களிப்பை அவரும் அடையமுடியும்.!



அற்பமான ஆளுமை வடிவங்களைப் பெண்ணியத்தின் கூறுகள் என்று முன்வைத்து, இது தான் பெண்ணியம் என்று வரையறுக்கும் நிலையிலிருந்து முதலில் நாம் விடுபடவேண்டும். அவ்விதம் விடுபடவில்லையென்றால் இருவிதமான அபாயங்களை நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் ஒன்று: எல்லாவிதமான பாலியல் உறவுகளுக்கும் வாய்ப்பைத் தேடிப்போகவும், அவற்றைப் பரிசோதித்துப் பார்க்கவுமே நமக்கு காலம் போதுமானதாக இருக்கும். இதனால், நமது இயல்பான பாலிமைச் செழுமையை ஒருபோதும் உணராமல் போகக்கூடும். இரண்டாவது; ஆதிக்கச் சமூகம் வரையறுக்கும் பாலியல் சுதந்திரம் என்பது காலந்தோறும், சந்தர்ப்பங்கள் தோறும் தன் விளக்கத்தை மாற்றிக்கொள்ளும் பிழைப்புவாதம் நிறைந்தது. மாயைகள் கூடியது. இந்நிலைகளிலிருந்து விடுபட்டு ஒருவர் தன் உடல் பாலியல் இயல்பூக்கத்திற்கும் பகுத்தறிவுக்கும் ஏற்ற முழுமையான பாலியல் தேர்வை நிகழ்த்துவதற்கான சமத்துவ உணர்வை முன்மொழிவது தான் பாலியல் அறம் என்பது.



உடலை எழுதுதல் என்பது தீண்டாமைக்கு தனிமனித உடல் என்பது உட்படுத்தப்படும்போது தான் உருவாகிறது. மனிதர்கள் உற்பத்தி செய்யும் பொருளைப் பயன்படுத்தும்போதோ, விளைவித்த நெல்லை உண்ணும் போதோ, அவர்கள் இறைத்த நீரைப் பருகும்போதோ, அல்லது அவர்கள் செய்த செருப்பைப் பயன்படுத்தும் போதோ, அவர்கள் உடலை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும்போதோ ’தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட உடல்’ தீட்டுக்குரியதாகத் தோன்றுவதில்லை. எப்பொழுதெல்லாம் தன்னுள் சேமித்த சாதியதிகாரத்தை செயல்படுத்துவதற்கான உத்வேகமும் வெறியும் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு பெண்ணின் உடல் சூறையாடப்படுகிறது. அதுவரை செயலுறாத தீண்டாமை என்பது, நமது பாலியல் உரிமைகளை நாமே எடுத்துக்கொள்ளும் போதும் நிலைநாட்டிக்கொள்ளும் போதும் தான் உயிர்பெறுகிறது, விவாதமாகின்றது என்பதை நாம் அறியாதவர்களா என்ன?



குட்டி ரேவதி

குறிப்பு: இக்கட்டுரை, 13.02.2011 அன்று காஞ்சிபுரம் இலக்கியக்களம் நடத்திய இலக்கியக் கூட்டத்தில் உரையாக வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது. இக்கட்டுரையை எழுதுவதற்கு, உதவிய கட்டுரைகள்: ராஜ் கெளதமனின் ‘பாலியல் அறங்கள்’ (தமிழினி, டிசம்பர் 2010) மற்றும் Writing on the body நூலில் உள்ள Susan Bordo-வின் ‘The Body and the Reproduction of Femininity என்ற அத்தியாயம்.

'Il Postino'

‘Il Postino’ என்ற இத்தாலியத் திரைப்படத்தை பல முறைகள் பார்த்தாயிற்று. சிலி கவிஞன் பாப்லோ நெரூதா ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும் புனைவுப்படம். நாடுகடத்தப்பட்ட பாப்லோ நெரூதா வசிக்கும் தீவில் அவருக்கும், ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்திலிருந்து அவருக்குக் கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் தபால்காரனுக்கும் இடையிலான கவித்துவமான உறவைப் பற்றிய படம். Massimo Troisi தான் இப்படத்தில் தபால்காரன். இப்படம் முடிந்த மறுநாளே இவர் கடுமையான மாரடைப்பால் தாக்குண்டு இறந்தார். அக்கவிஞனை மிகவும் நேசித்த ஒரு நபராகவே இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார் Troisi.



இப்படம் ‘பாப்லோ நெரூதா’ கதாபாத்திரத்தின் வழியாகக் கவிதை என்றால் என்ன என்பதை மிக எளிதாகவும் அதன் உண்மையான அத்தனை பயன்பாட்டுடனும் கதையைப் பின்னணியாக வைத்தே சொல்லித் தருகிறது. ஒவ்வொரு மனித உறவிலும் சிறிய சிறிய அருமையான மனித உணர்வுகளைக் கையாளும் கவிஞனாய் பாப்லோ இருக்கிறார். அதிலும், தபால்காரன் காதல்செய்யும் பெண்ணுக்கு அவனது காதலை தெரிவிக்கும் காட்சியில் உறவின் மகத்துவம் முழுமை பெறுவதாய் இருக்கும்.


அதுமட்டுமன்றி, எவருக்கும் பாப்லோ நெரூதாவை அறிமுகப்படுத்த மிகவும் சரியான படம் என்னும் அளவிற்கு மிகையிலாதது. காதல் உணர்வை மற்ற மனித உணர்வுகளுக்கு இணையானதாகவே மதிக்கும் மனத்தேர்ச்சியுடன் தான் ஒரு கவிஞன் அடையாளம் பெறமுடியும் என்பதை இப்படம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.



எக்கச்சக்கமான காதல் கவிதைகளையும் எழுதி, பெண்களின் கவிஞனாய் அடையாளம் பெறும் இக்கவிஞனை, ‘துயரம் நிறைந்த காற்று பட்டாம்பூச்சிகளைக் கொன்றுவிட்டுப் போகும் போதும் நான் உன்னைக் காதலிக்கிறேன். எனது ஆனந்தமோ உன் வாயின் பிளம்பழங்களை மெல்லுகிறது’ என்ற வரியால் நான் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.



பெரும்பாலும், கவிஞனின் ஆளுமையைப் படம்பிடிப்பதில் தோற்றுப்போகும் இயக்குநர்கள் மத்தியில் இப்படத்தை இயக்கிய மைக்கேல் ராட்ஃபோர்டை பாராட்டத் தோன்றுகிறது. அகண்ட கடல் அலைமோதும் கரையில் பாப்லோ நெரூதாவுடன் நீங்களும் அறிமுகம் செய்துகொள்ள இப்படம் உதவும். பின்னர் இருக்கவே இருக்கின்றன, அவன் உயிர்மூச்சு இரையும் கவிதைகளும்!




குட்டி ரேவதி

என் காதல்



நீருக்குள் மேகத்திரள் போல்
மிதக்கட்டும்
நீரைக்கிழிக்க முடியாது
நீரோட்டங்களூடே கிளைக்கும்
மரங்கள் போல் தழைக்கட்டும்
நில்லாது ஓடிக்கொண்டேயிருக்கட்டும்
அதன் ஓட்டம்
மதர்த்த குதிரைகளையும்
தனக்குள் அடக்கிக் கொள்ளட்டும்
சிலுவைகளைப் போல்
விண்செருகட்டும்
அதன் கண்



குட்டி ரேவதி

















எனக்குப் பிடித்த கவிதை





பாலை





பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.



-கவிஞர் பிரமிள்

என் கிளிகளும் வார்த்தைகளும்

எனக்கன்றி வேறெவர்க்கும் என் வார்த்தைகளை விரயமாக்காத ஓர் அரசியல் எனது. என் மீது உங்கள் வார்த்தைகளை இறைத்துத் தீர்க்கும் வரை உங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் என் அரசியல்!



நூல்கள் வானத்தில் சிறகடிக்கும் போது கிழிந்து உதிரும் பக்கங்களில் குருவிகளின் குஞ்சுகள் எட்டிப்பார்க்கக் கண்டேன்.


இன்றைய என் ஆனந்தத்தின் பெரும்பகுதியும் நான் கண்டறிந்த ஒற்றை வரியால் உருவாகி அதுவே பின், என் வானமுமானது. எழுதுவது எல்லாம் கவிதையாகாது என்பதால்!


எனது விடுதலையை நீங்களும் உணரவேண்டுமானால் நான் வளர்க்கும் கிளிகளைத் தான் திருடிப்போகவேண்டும்.


இந்நாளின் முழுக்களிப்பும் பாப்லோ நெரூதாவின் வசந்தம் கவிதைக்கு நிகரானது. இவ்வசந்தத்தை எனக்கு வழங்கிய தோழி கோகிலாவிற்கு இக்கவிதை. ‘பிறவிக்கு ஒளிகொணர / அந்தப்பறவை வந்து சேர்ந்தது./ அதன் ஒவ்வொரு கூவலிலும் / தண்ணீர் பிறக்கிறது. / வெளியைக் கட்டவிழ்த்து விட்ட / நீருக்கும் ஒளிக்கும் இடையில் /இப்போது வசந்தம் ஆரம்பமானது / இப்போது விதை தனது வளர்ச்சியை உணர்கிறது/ பூவிதழ்களில் வேர் வடிவங்கொள்கிறது / இறுதியாக மகரந்தத்தின் இமைகள் திறக்கின்றன. / இவையெல்லாம் முழுமை பெற்றது - / பசுங்கிளையின் கொம்பிலமர்ந்த / ஒரு சாதாரணப் பறவையைப் போல். (மொழியாக்கம்: கவிஞர் சுகுமாரன்)



பெட்டிப் பெட்டியாக மகிழ்ச்சியைத் தூக்கிச் செல்கிறான் ஐஸ்வண்டிக்காரன், இல்லையா? என்றாள் தோழி. உருகும் மகிழ்ச்சியென்பதால் தான் பெட்டியில் அடைக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்கிறாள் அவளின் தோழி!


குட்டி ரேவதி

செல்வியும் சிவரமணியும் – சொற்களால் நிலம் கவர்ந்தவர்கள்


ஆதிக்க சமூகத்தினுடைய இலக்கியங்கள் தாம் இன்றுவரை உயிர்வாழும் தகுதியைப் பெற்றிருக்கின்றன. இது, சங்க இலக்கியங்களுக்கும் பொருந்தும். காலந்தோறும் அரசு மற்றும் இதர சமூக நிறுவனங்களின் அதிகார நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் தக்கபடி தமது கருப்பொருட்களையும் வடிவ உத்திகளையும் கையாண்ட இலக்கியங்கள் தாம் வாழும் தகவமைப்பைப் பெறக்கூடிய வாய்ப்பையும் பெற்றிருக்கின்றன. சமகாலத்திலும் கூட அதிகார அரசின் சமர்ப்பணங்களுக்கு உள்ளாகிய படைப்புகளையும் நாம் அடையாளம் காட்டமுடியும். இத்தகைய சமரசங்களுக்கு ஆளாகாமல், அதே சமயம் சமூகத்தின் புண்களையும் சொறிந்து கொடுக்காமல் படைப்பாக்கம் பெறும் மொழியின் பயன்பாடுகள் முற்றிலும் வேறானவை. ஒடுக்கப்பட்ட உயிரினமாய் இருக்கும் பெண்ணின் மொழி சமூகத்தில் பெறும் பயன்பாட்டிலும் செயல்பாட்டிலும் முக்கியமான ஒன்றாய், நான் இங்கே குறிப்பிட விரும்புவது, மொழியின் வழியாக, அதிலும் தாங்கள் கூர்மைப்படுத்தி வழங்கும் சொற்கள் வழியாக அவர்கள் தங்களுக்கான மண்ணைத்தான் முதலில் உடைமையாக்க விரும்புகிறார்கள். விட்டு விடுதலையாகித் தெறிக்கும் சொற்களினும் பெரிய, தீவிரமான இயக்க நடவடிக்கை ஏதுமில்லை.

இத்தகையதொரு சித்தாந்தத்தை தம் உடல் வழியாக உள்வாங்கி, தம் சொற்கள் வழியாக பெருங்குரலெடுக்கச் செய்தவர்கள் தாம் செல்வியும் சிவரமணியும். இவர்கள் இருவருக்கும் இடையே இலங்கும் ஒற்றுமை என்பது ஈழத்தில் தோன்றிய கவிஞர்கள் என்பது மட்டிலுமே. மற்றபடி, படைப்பின் அகன்ற வெளியிலும் ஆளுமையிலும் தங்களுக்குள் செழுமையாக்கி வைத்திருந்த கருத்தாக்கத்திலும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

1996-ல் வெளிவந்த செல்வி சிவரமணி கவிதைகள் எனும் நூல் தமிழ்ச்சமூகத்தில் மிகத்தொடர்ச்சியான, அதே சமயம் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை உருவாக்கின. செல்வியின் எட்டு கவிதைகளும் சிவரமணியின் இருபத்தியிரண்டு கவிதைகளும் அடங்கிய சிறு தொகுப்பு அது. அவர்கள் இருவரையும் ஒரு சேர நான் இங்கே முன்வைப்பதற்கு காரணம் அந்நூலின் வழியாக அவர்கள் தமிழ்ப் பெண்கவிதையின் மீது நிகழ்த்திய தாக்கமும் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பமுடியாத சிதைப்பும் தாம்.

இராமனே இராவணனாய்

…………………………………………………………..

அசோக வனங்கள் அழிந்து போய்விடவில்லை

இந்த வீடே

எனக்கான அசோகவனமாயுள்ளது.

ஆனால்

சிறைப்பிடித்தது இராவணனல்ல. இராமனே தான்.

இராமனே இராவணனாய்

தனது அரசிருக்கையில் முதுகுப்புறமாய்

முகமூடிகளை மாற்றிக்கொண்டதை

பார்க்க நேர்ந்த கண்கள்…

இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.

…………………………………………………………………………………………….

எனக்குள்ளே…….

…………………………………….

பூமியின் மையத்துள் கொதிக்கும் தழலென

எனது மனமும் கொதிக்கும்; குமுறும்

பார்; நீ – ஒரு நாள்

வாமனன் நானென நினைக்கும் உமது

எண்ணங்கள் யாவையும் பொடிப் பொடியாக்குவேன்

வானமெங்கும் அதற்கப்பாலும்

நீண்டு நீண்டு விரிக்கும் என் கைகள்

பாதாளத்துக்கும் அதற்கும் ஆழமாய்

எனது கால்கள் அழுந்திப் புதையும்

பூமிக்குள் குழம்பெனக் கொதிக்கும் தழல்போல்

சீறியெழுந்து எரிமலையாவேன்

அன்றேயுமது சாத்திரம் தகரும்;

அன்றேயுங்கள் சடங்குகள் மாளும்

இன்னதின்னதாய் இருப்பீரென நீர்

எழுதிய இலக்கியம் நெருப்பினில் கருகும்.

வானம் பொழியும்; எரிமலைக் குழம்பிலே

ஆறுபாயும்-

அதில் நான் நீந்துவேன்-

சமவெளிகள், காடுகள், மலைகள் எங்கும்

தனித்தே சுற்றுவேன்

இனிய மாலை, எழில் மிகு காலை – எல்லாம்

எனது மூச்சிலே உயிர்க்கும்.

இக்கவிதையின் வீச்சு இதுவெளியான காலத்தில் மட்டுமன்று இன்றும் புத்துயிர்ப்புடன் இருக்கிறது. வீட்டின் சுவர்களையும் வேலிகளையும் உடைத்து முறிக்கும் பெண்களுக்கு இடையே, நிலத்தின் எல்லைகளையும் அதன் வரையறைகளையும் கிழித்துப் போடும் ஆவேசமான மூச்சுடன் இவ்வெழுத்துக்கள் எழுதப்பட்டன. இவை இங்கு எழுதிக்கொண்டிருந்த பெண்களிடமும் எழுத வந்த பெண்களிடமும் தம் ‘மண்’, ‘இனம்’ என்ற கருத்தாக்கத்தை எப்படி அணுகுவது, எப்படிச் சிதைப்பது, எப்படி மீண்டும் எழுதுவது அல்லது எப்படி அவர்களின் நினைவுகளுக்குப் பயிலப்பட்டிருக்கிறது என்பதை அறிமுகப்படுத்தியது. இவை தனக்கான நிலத்தைக் கோரும் கவிதைகள்!

இன்றும் தந்தையின் நிலத்தில் பங்கு கேட்கும் உரிமையும் சட்டமும் பெண்களுக்கு இருந்தும் சமூகத்தின் அதிகாரத்தினால் அதை மறுக்கும் புறக்கணிக்கும் நோக்கமும் இருக்கிறது. இது பெண்ணை நிலத்துடன் கால் பதிய விடாமல் எப்பொழுதும் அவளை அந்தரத்தில் இருக்கச் செய்து, பேரம் செய்யும் தந்திரம் தான். இனவொடுக்கு முறையிலும் முதலில் நிலத்திலிருந்து வேரோடு பெயர்க்கப்படுவது பெண்கள் தாம். இதை உணர்ந்த ஈழத்துக் கவிப்பெண்கள் தங்கள் சொற்களாலேயே உறுதியாக நிலம் பற்றிக்கொள்ளும் வலிமையைப் பெற்றுக்கொண்டவர்கள்.

விடை பெற்ற நண்பனுக்கு

மின் குமிழ்கள் ஒளியுமிழ

நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில்

விரைவில் வருவதாய்

உனது நண்பனுடன் விடைபெற்றாய்.

உன்னிடம் பகிர

எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன

முகவரி இல்லாது தவிக்கின்றேன் நண்ப.

செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து

வசந்தம் பாடிய குயில்களும்

நீயும் நானும் பார்த்து இரசித்த

கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது

தலையை அசைத்தும்

எனது செய்தியை உனக்குச் செல்லும்.

பருந்தும், வல்லூறும் வானவெளியை மறைப்பதாக

இறக்கையை வலிந்து விரித்தன நண்பா

கோழிக்குஞ்சுகள் குதறப்பட்டன;

கூடவே சில கோழிகளும்…

இந்தப் பருந்தின் இறக்கையைக் கிழிக்க

எஞ்சி நின்ற குஞ்சுகள் வளர்ந்தன.

நடந்து நடந்து வலித்துப் போகும்

கால்களின் மீது படியும் என்

மண்ணின் புழுதியை

முகர்ந்து

வீதியிலன்றி வீட்டினுள்ளும்

முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்கி

குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடு –

இறையைத் தேட,

இறக்கையைக் கிழிக்க-

வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த

கொடுமைகட்கெதிராய்க் கோபம் மிகுந்து

குமுறும் உனது குரலுடன்

குழந்தைச் சிரிப்புடன் விரைந்துவா

நண்பா!

அடர்ந்த மெளனத்தை தனது உணர்வாக்கிக்கொண்டு எழும்பும் இவருடைய ஒவ்வொரு கவிதையிலுமே இம்மெளனமே மொழியாவதை உணரமுடியும். இந்த மெளனம் என்பது அவர்கள் பிறந்த நிலத்தைப் பொறுத்தவரை இன்னொரு தாய்மொழி. இம்மொழியைச் சுமந்தும் இதன் வழியாக தங்கள் உணர்ச்சிகளைச் செரித்துக்கொண்டும் வாழ நேர்ந்த தருணங்களை மொழி வழியாகக் கடக்கும் போதெல்லாம் கண்டிக்கப்பட்டிருக்கின்றனர். தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மெளனம் நாவறுந்த ஒரு பெரிய வெண்கல மணியைப் போல மிகவும் கனமான அந்தகாரம் மிக்கது. போர் மற்றும் அதிகாரத்திற்கான நேரடியான சொல்லாட்சிகள் ஈழத்தில் துலக்கம் பெறும் இக்காலத்திற்கு முன்பே சொற்களே படிமங்களாகவும் குறியீடுகளாகவும் கவிதைகளுக்குள் பேணப்பட்டன. முட்டைகளை அடைகாப்பதற்கான தகிப்பையும் அச்சொற்களுக்கு வழங்கியிருந்தனர். அக்கவிதைகள் ஒவ்வொரு முறையும் வாசிப்புக்காகத் திறக்கப்படும் போதெல்லாம் அடுக்கடுக்காய் அர்த்தங்களுடனும் உணர்வெழுச்சிகளுடனும் மன அறையை நிறைக்கின்றன. அரசியல் ஊக்கத்துடன் இயங்க வைக்கின்றன.

செல்வியின் கலக மனம் வெறும் மேம்போக்கானது அன்று. சொற்களை அலட்சியமாய் கற்களைப் போல தூக்கியெறியும் இலகுவான செய்கையும் அன்று. சொற்களைத் தீட்டித் தீட்டி அதிக பட்ச வெப்பங்களோடு தோல் தீய்க்கும் கங்குகளாக்குவது! அதுமட்டுமன்றி, இவருடைய கவிதைகள் எங்குமே கவித்துவச் செம்மை குலையாமல் கருப்பொருள் மீது கண்வைத்தே நகரும்.

கோடை

………………………………………………..

வீதியில் கிடந்த கல்லை

கால் தட்டிச்செல்ல

அதன் கூரிய நுனி

குருதியின் சுவையறியும்

ஒதுங்கிப் போன கல்

ஏளனமாய் இளிக்கும்

இதயத்தின் நினைவுகள் விரிந்து

சர்ரென்று வலியெடுக்கும்

வாடைக்காற்றின் சிலிர்ப்பும்

வரப்போரத்தில் நெடிதுயர்ந்த

கூழா மரத்தின் பசுமையும்

நிறைந்த குளத்தின் மதகினூடு

திமிறிப்பாயும் நீரினழகுமாய்

ஒதுங்கிப் போன இனிய பொழுதுகள்

ஊமையாய் மனதை அழுத்தும்.

செல்வியின் சுயசரிதை மிகவும் சுருக்கமானது. 1991 – கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்ட இவருக்கு, 1992 ஆம் ஆண்டு International PEN என்ற சர்வதேச கவிஞர்கள், கட்டுரையாளர்கள்

மற்றும் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு சிறப்புப்பரிசு அறிவித்தது. 1994- ஆம் ஆண்டுக்கான Poetry International விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விரண்டு பரிசுகளுமே இவரால் பெறப்படவில்லை.

சிவரமணி

தனது எழுத்தையெல்லாம் எரித்துவிட்டு,

“எனது கைக்கெட்டியவரை

எனது அடையாளங்கள் யாவற்றையும்

அழித்துவிட்டேன்”

என்று இறுதி நேரக்குறிப்பாக எழுதியும் வைத்திருந்தார், சிவரமணி. ஈன்ற பாம்பே தன் குட்டிகளை உண்ணுவது போல! 1991 – ஆம் ஆண்டில் தனது இருபத்திமூன்றாவது வயதில் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவ்வாறு அவர் எரிக்காமல் மிஞ்சிய இருபத்தியிரண்டு கவிதைகள் தாம் இன்று சிவரமணியினுடையதாக அடையாளம் பெறுகின்றன.

சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் ஈழத்தின் பெண்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான பருவம். பெண்ணியக் கருத்தாக்கங்கள் எல்லாம் செயலூக்கம் பெற்று கலை இலக்கியங்களாக மலர்ந்த காலம். பெண்கள் அரசியல் போராட்டங்களிலும் இயக்கங்களிலும் நேரடியாகத் தங்களை இணைத்துக்கொண்டு பிரச்சாரக் குரல்களாகவும் கருத்தாளர்களாகவும் மாறியிருந்தனர். இது தமிழகத்தில் நிகழ்ந்ததினும் வீரியமிக்கதாயும் மொழி-நிலம் தொடர்பான பெண்ணிய அரசியலை சீரமைக்க முனைவதாயும் இருந்தது. விடுதலைப் போராட்டங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தங்கள் அரசியல் தெளிச்சியை வெளிப்படுத்த முடிந்தது, என்றாலும் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் வேறானது என்ற அக்கறையும் இருந்தது.

சிவரமணியின் பெரும்பாலான கவிதைகள் பிரச்சாரக்குரலாகவே எழுந்துள்ளன. இதனால் கவித்துவ அழுத்தம் பெறாமல் வெறுமனே வாக்குமூலங்களாக சரேலென்று முடிந்து போகின்றன. கவித்துவ எழுச்சிக்கான பயிற்சியை ஒருவர் தனக்குத்தானே அளித்துக்கொள்ளாமல், வார்த்தைகள், நீச்சல் குளத்தின் மேலுச்சியில் உள்ள அசைப்பலகையிலிருந்து சடேலென்று நீர் நிலையில் குதித்து நீந்த வேண்டும் என்று ஒருவர் விழைவதால், குதித்தல் என்பதில் தான் கவனம் இருக்குமேயொழிய நீச்சல் பற்றிய அனுபவத்திற்கான தயாரிப்பு இருக்காது. அப்படியான கவிதைகள் பலவற்றை எழுதிய சிவரமணி, தனக்குத்தானே ஊட்டிக்கொண்ட படைப்பூக்கத்தினால் சிறகசைப்பினாலும், அவரது மொழியும் அரசியல் பார்வையும் வலிமையுற்று வீர்யமெடுத்ததையும், இன்று வரை பெண்ணிய அரசியல் ஏட்டின் சமன்பாடுகளாய் மாறி நிற்பதையும் காண முடியும். இதை அவரது இரு முக்கியமான, பிரபலமான கவிதைகளைக் கொண்டு நிறுவலாம். அவை, ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’ மற்றும் ’அவமானப்படுத்தப்பட்டவள்.

யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

யுத்தகால

இரவொன்றின் நெருக்குதல்

எங்கள் குழந்தைகளை

வளர்ந்தவர்களாக்கிவிடும்.

ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற

அவர்களின் அழகிய காலையின்

பாதைகளின் குறுக்காய்

வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த

முகமற்ற மனித உடலும்

உயிர் நிறைந்த

அவர்களின் சிரிப்பின் மீதாய்

உடைந்து விழும் மதிற்சுவர்களும்

காரணமாய்,

எங்களுடைய சிறுவர்கள்

சிறுவர்களாயில்லாது போயினர்.

நட்சத்திரம் நிறைந்த இரவில்

அதன் அமைதியை உடைத்து வெடித்த

ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை

எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை

இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ

ஊமங் கொட்டையில் தேர் செய்வதையும்

கிளித்தட்டு மறிப்பதையும்

அவர்கள் மறந்து போனார்கள்.

அதன் பின்னர்

படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும்

நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்

கேள்வி கேட்காதிருக்கவும்

மெளனமாயிருக்கவும்

மந்தைகள் போல எல்லாவற்றையும்

பழகிக் கொண்டனர்.

தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவது

தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி

எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்

எமது சிறுவரின் விளையாட்டானது.

யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்

எங்கள் குழந்தைகள்

“வளர்ந்தவர்” ஆயினர். (1989)

அவமானப்படுத்தப்பட்டவள்

உங்களுடைய வரையறைகளின்

சாளரத்துக்குப் பின்னால்

நீங்கள் என்னைத் தள்ளமுடியாது.

இதுவரை காலமும்,

நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து

வெளியே எடுத்துவரப்பட்ட

ஒரு சிறிய கல்லைப்போன்று

நான்

என்னைக் கண்டெடுத்துள்ளேன்.

என்னுடைய நாட்களை நீங்கள்

பறித்துக்கொள்ள முடியாது.

கண்களைப் பொத்திக் கொள்ளும்

உங்கள் விரல்களிடையே

தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்

ஒரு குட்டி நட்சத்திரம் போன்று

எனது இருத்தல்

உறுதி பெற்றது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்.

இனியும் என்ன

தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்

நான் பிரசன்னமாயுள்ளேன்.

என்னை

அவமானங்களாலும்

அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,

உங்கள் எல்லோரினதும்

நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது

ஓர் அழுக்குக் குவியலாய்

பளிச்சிடும் உங்கள் சப்பாத்துக்களை

அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்

நிராகரிக்கப்படும் வரை

உங்களின் எல்லாப்பாதைகளும்

அழுக்குப் படிந்தவையே.

என் கடந்தகால இலக்கியப்பயணத்தில் எத்தனையோ முறைகள், பல வேறுபட்ட தொகுப்புகளுக்காகவும் ஆய்வின் பொருட்டும் இவ்விரண்டு கவிதைகளையும் பலமுறை கடந்து சென்றிருக்கின்றேன். ஓர் அகழியை எப்படித் தாண்டுவது? கடந்து தானே செல்லவேண்டும். அம்மாதிரியான ஒரு நிராகரிக்கமுடியாத அனுபவத்திற்கு, வாசிக்கும் எந்தவொரு பெண்ணையும் இழுத்துச்செல்பவை. இவ்விரண்டு கவிதைகளே சிவரமணியின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அகப்பெருவெளியையும் நமக்கு எந்தவித சிரமுமின்றி வெளிப்படுத்தக் கூடியவை. ‘யுத்தகால இரவு’ என்பதில் வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் அதிமுக்கியமான கவலையும், அது அகண்ட உருவம் கொள்ளும் அரசியல் சிக்கலையும் கவிதையாக்கியிருக்கிறார். இம்மாதிரியான அசாதாரண தருணங்களையும் அதற்கான நெகிழ்ச்சிகளையும் சொற்களால் முன்வைப்பதில் பெண்களுக்கு நிகர் எவரும் இல்லை என்று எழுதிக்கொள்வதன் வழியாக, சிவரமணியின் இக்கவிதையை எம்மெல்லோருக்குமான வாயில் ஆக்கிக்கொள்கிறேன்.

இனஒடுக்குமுறையின் தொடர்துயர்களுக்கு ஆளான இப்பெண்களின் கவிதைகள் வழியாகத் தாம் தமிழகத்திற்குள்ளும் பெண் கவிதை தனது அழுத்தமான பாதங்களை எடுத்துவைத்திருக்கவேண்டும். ‘இனியுமென்ன தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் நான் பிரசன்னமாயுள்ளேன்’ எனும் ஒற்றை வரி, பெண்ணிலைவாதத்தை முன்னெடுப்பவர் எல்லோருக்கும் அவர் நெஞ்சத்தின் கூரையின் மீது அசைந்து பறக்கும் கொடியைப் போன்ற பொலிவு மிக்கது. இன்னும் சொல்லப்போனால், இக்கவிதையில் அவர் நிறைத்திருக்கும் நெஞ்சுரம் மிக்க அழுத்தமான நிலைநிறுத்தலையும் இருப்பையும் ஒவ்வொரு பெண்ணும் தன்னிலையிலிருந்து மீண்டும் மீண்டும் பிரதியெடுப்பதும் பதிவுசெய்வதும் தாம் நம் பெண்ணிலைவாதமாக இருக்கமுடியும்.

எழுத வரும் எந்த ஒரு பெண்ணும் எந்த ஒரு வரலாற்று ஆசிரியனாலும் எழுதவே முடியாத ‘தன் வரலாற்றைத்’ தாம் எழுதிச் செல்கின்றனர்!

குறிப்பு:
செல்வநிதி தியாகராஜ என்ற இயற்பெயருடைய கவிஞர் செல்வி வவுனியாவில் உள்ள
சேமமடுவில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில், ‘நாடகமும் அரங்கியலும்
துறையில் சிறப்புப் பட்டம் பெற்றிருந்தார். ‘தோழிஎன்ற இதழின் ஆசிரியராக
இருந்தார். கவிஞர் சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் பிறந்தவர். யாழ்
பல்கலைக்கழகத்தில் அரசறிவியல், ஆங்கிலம், மொழியியல் ஆகியவற்றைக் கற்றார்.
இறுதிப்பரீட்சைக்குச் செல்லும் முன்னரே தற்கொலை செய்து கொண்டார்.
இலக்கியத்தில் மட்டுமன்றி ஓவியம்,இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு
கொண்டிருந்தார்

குட்டி ரேவதி