நம் குரல்

ஆண்மை இல்லை



தாழ்த்தப்பட்ட பெண்களின் மீது தாழ்த்தப்பட்ட ஆண்களின் ஆண்மை உணர்வு இயங்கும் முறை குறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓர் ஆய்வு நடந்தது.


ஆதிக்க சாதி ஆண்கள் பிற ஆண்கள் மீது செலுத்தும் ஆண்மை உணர்வு பற்றியோ ஏன் அவர்களே தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது காட்டும் ஆண்மை உணர்வு பற்றியோ ஓர் ஆய்வை செய்யத் துணியாத சூழலில் மேற்சொன்ன ஆய்வு முற்றிலும் விசித்திரமான விளைவுகளை எழுப்புவதாகவும் ஆபத்தான நோக்கங்களையும் கொண்டதாகவும் இருந்தது.


மேலும் இவ்வாய்வு ஆதிக்கசாதிப் பெண்கள் தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீது கொண்டிருக்கும் சாதிமயமான அகப்பிடிவாதத்தை அகற்ற விழையாததாகவும் இருந்தது.


இன்று நேரடியாக ஆண் – பெண் என்ற எதிரெதிர் நிலைகளை எடுக்கமுடியாத ஓர் அரசியல் நிலை உருவாகும் சூழலில், கவிதை, கட்டுரை, புனைவு, ஆவணம் என எல்லாவற்றிலும், ஆண் என்ற ஒன்றே போதுமானது பெண் எதிர்ப்பதற்கு என்ற காரணம், நவீனப் பெண்ணிய இயக்கங்களுக்கு பெருத்த அளவில் தோல்விகளை ஈட்டித் தந்தது என்று சொல்லவேண்டும்.


சாதியையோ மற்ற அதிகாரத் தடிகளையோ துணை கொண்டு அதே விதமான அதிகாரத்துடன் இயங்கும் பெண்களால், ஒடுக்கப்பட்ட பிற சாதி அல்லது பிற நிலைப் பெண்களுக்கு தம் அதிகாரத்தில் குறைந்த பட்ச அதிகாரத்தைக்கூட பகிர்ந்தளிக்கவோ பெற்றுத்தரவோ இயலாமல் போயிற்று. என்ன தான் கவிதை எழுதினாலும், ஓவியம் தீட்டினாலும் திரைச்சித்திரங்கள் வடித்தாலும் இந்தியப் பெண்களின் அகமனநிலை ஆண்மையை வலிந்து ஏற்றுக்கொள்வதாகவே இருக்கும் வரை அதிகாரக் குலைப்போ, அதிகார நசிவோ, ஏன் அதிகாரப் பகிர்வோ கூட சாத்தியப்படாமல் போகலாம்.


ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக, தன் கைகளில் இருக்கும் அதிகார ஆண்மையை இழக்கும் துணிவும் பெண்களுக்கு வேண்டும்.


இந்தச் சமன்பாடுகளைப் புரிந்து கொள்ள, தன் ஓய்வில்லா அதிகாரப் போட்டிகளுக்கிடையே சிறிது இடைவேளையும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் போராடிக் கொண்டிருக்கும் அப்பெண்கள் அதிகாரப் போட்டிகளில் பங்கெடுப்பதே இல்லை. அது ஒரு பழங்குடிப்பெண்ணின் மனம்!



பெண்மையும் ஆண்மையும் மயங்கிய நிலையில் எங்கோ துயில் கொண்டிருக்கிறது உடலின் பிரக்ஞை. அதைத் தொட்டு எழுப்ப விடுதலையான மொழி உதவுக்கூடும்.

ஆண்மை இல்லை

அன்று மழையோ மழை

நதியின் மீதெல்லாம் மழைக்குஞ்சுகள்

அடிவயிற்றின் பயிர்மேடு

பரவசத்தில் சிலிர்த்து எழ

ரம்மியமான மந்தகாசப் புன்னகையை

உடலெங்கும் நழுவவிட்டபடி

மழை தரையிறங்கியது

நனைந்து உடலொட்டிய பாவாடையை

உயர்த்தி நின்றது காடு

ஓய்ந்த மழையை

அம்மாவின் சொல் மீறித்

திமிறிப் பறந்த பறவை சொன்னது

நினைவுகளின் தடயங்களை

மழையால் அழிக்கமுடிவதில்லை

பகல் முழுதும், பின்னும்

அதன் பாடல் ஓயவேயில்லை

மகரந்தச்சேர்க்கைக்குப் பின் தளும்பும் மலர்

சோர்வுடன்

பூமியில் எங்குமே ஆண்மையில்லை

தனிமையின் ஆயிரம் இறக்கைகள், (கவிதைத் தொகுப்பு, பக்கம் 9, 2003)




குளிர்ந்த விதை

ஏற்கெனவே இதயத்தின் கனிவான சதைப்பகுதிகளையெல்லாம்

அவன் தின்று தீர்த்திருந்தான். விதையைத்

தரிசுநிலப் பாழ்வெளியில் விட்டெறிந்தான்.

முன்னோர்களின் எச்சம் என்னோடு தீர்ந்துவிடாதபடிக்கு

ஆயிரமாயிரம் மரங்கள் பருவமெய்துவதற்கான

ஊட்டத்தை

எனது கால்களுக்கிடையே ஒளித்து வைத்திருந்தேன்

எறும்புகளும் சுவைத்திடா வண்ணம் ஓட்டை

வலியதாக்கிக் கொண்டேயிருந்தேன்

தளிரற்ற மரக்கிளையில் பறவைகள் வந்தமர்வதில்லை

சூரியன் ஒளியை வெப்பமாய் எங்கெங்கும்

ஊற்றிக் கொண்டிருந்தான்

அவ்வழியே களைப்பாறிய எருமை சொரசொரப்பான

தனது நாவால் எனை முழுதுமாய் விழுங்கியது

அதன் சீரணமண்டலம் குளிரூட்டியது

சிறிதும் சேதமிலாது வெளியே பாய்ந்தேன்

மழைக்குப் பூமி தயாராக

மண்ணுள்ளே கருக்கொண்டேன்

முளையெழுந்தது

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (கவிதைத் தொகுப்பு, பக்கம் 50, 2003)



குட்டிரேவதி

சிக்காகோவில் நடைபெறும் நவீன தமிழ் இலக்கிய மாநாடு



விவரம் அறிய இந்தத் தொடுப்பைச் சுண்டுங்கள்

http://southasia.uchicago.edu/highlights/2010-2011/091610-creativepresents.shtml









ஓவியம்: கவிஞர் பிரமிள்










முலைகள் நான்கு

ஒரு சிறப்பான தருணத்திலும் உணர்ச்சிகளின் கலவையுடனும் எழுதப்பட்ட இக்கவிதை என்னுடன் அன்னியோன்யமான உறவில் இருந்த ஒரு பெண் தோழிக்கானது.



அவள் இப்பொழுது எந்த ஊரில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது எனது இலட்சியமில்லை. உறவு என்பது காலக் கனதியை வரையிட்டு வளரும் என்பதை நான் ஏற்பதில்லை.


பல வருடங்கள் பழகினாலும் சிலரிடம் உணரவே இயலாத ஓர் எண்ணப்பெருவெளியுடன் முதல் சந்திப்பிலேயே நெருங்கியவள் என்பதால் அவள் உறவைத் தொடர்வதற்கான அத்தனை முயற்சிகளும் அபத்தமானவையாக முடியும் என்று எண்ணி விலகினேன்.


அவள் எதன் அழகையும் குலைத்ததில்லை. அதற்காக எந்த அதீதத்திற்கும் தயங்கியதுமில்லை. இந்த இரு பண்புகளுமே எங்கள் இருவருக்கும் போதுமானதாய் இருந்ததாய் உணர்ந்தேன்.


இதை கவிதைப்படுத்தும் முனைப்பும் இல்லை. அவளைப் பற்றிய எந்த ஒரு பதிவும் காகிதங்களை அர்த்தப்படுத்தும் என்பதால் எனக்கு இதை எழுதுவதில் எந்த மெனக்கெடலும் இல்லை.


இந்தக் கவிதையை வாசிக்க நேர்ந்தால் கூட, இது தன்னைப்பற்றியது என்பதை அவள் அறிவதற்கான எந்தக் குறியீடுகளும் இல்லாத கவிதை இது. ஆனால் பல அடுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது.


ஒரே ஓட்டத்தில் அடித்தல் திருத்தல் திருகுதல் இல்லாமல் எழுதப்பட்ட கவிதை என்பதும் நினைவில் இருக்கிறது.


பெண் – பெண் பாலிய உறவு தாய்க்கும் மகளுக்கும் இடையே கூட நுணுக்கமான தருணங்களால் செயல்படுகிறது. அது மலினத்தை எட்டாதவரை அது பாலிமையாகக் கருதப்படுவதில்லை.


அவள் தான் சொன்னாள்: ‘ஒருவரை எவ்வளவு விமர்சித்தாலும் அது அவரது புண்ணைப் பற்றியதாகவே இருக்கவேண்டுமென்று!’ தேவதேவனின் கவிதை வரியொன்று: ஈயை ஈயை நோகாதே. புண்ணை புண்ணைக் கவனி!


பாலிமை கடந்ததென்றாலும் பெண்-பெண் உறவு எவ்வளவுக்கெவ்வளவு சிக்கல் நிறைந்தது என்பதைப் பற்றி ஓர் ஆய்வே செய்யலாம். ஆணாதிக்கத் தத்துவச்சிந்தனைகளைத் தங்கள் மூளைகளில் கொடிபரவ விட்டதால் வந்த விளைவு இது என்று இன்றும் இன்னும் சப்பைக்கட்டிக் கொண்டிருக்கமுடியாது.


சமீபத்தில் ஓர் இலக்கியப் பதிப்பாளர் என்னிடம் ஒரு கட்டுரை எழுதிக்கேட்டிருக்கிறார். பெண்படைப்பாளிகள் விமர்சனங்களை அணுகும் உளவியல் பற்றி!


தன்னிலை குறித்த பாதுகாப்பின்மையை நினைவிற்கொண்டு, பிற பெண்களின் நிலையுடன் தன் நிலையை ஒப்பிட்டுப்பார்த்து, தன் இருப்பை உறுதி செய்து கொள்ள எதையும் செய்யத் துணியும் பெண்களாய் மாறிப்போகிறார்கள்.

எல்லோரும் ராஜவள்ளியைப் போல ஆகிவிட முடியாது. அவள் பெண்களை ஒரே கொடியில் பூத்த பல வகை மலர்கள் என்கிறாள்.

அவள் ஒரு தாமரைக்குளம்


உடலெங்கும் நீர்மொக்குகளுடன் அவள் எழும்பிவருகையில்
ஒரு மொக்கும் முறியாது நாவினால் பறித்துக்
கனிகளாக்கி உண்பேன்
நீரலை கரையேறிச் சறுக்குவதைப் போல
அவள் இதயத்தின் பெருஞ்சுவாசம்
மார்புகளின் மீது அலையெனப் புரண்டடங்கும்
உள்ளங்கைகளை அகலவிரித்து
இலையின் குழிவோடு உந்தியை விரித்துக்கொடுப்பாள்
ஒரு கிளி கவ்வியிருக்கும் கனியைப் போல
தன்னுடலைத் தானே
ஏந்திவந்து என்னிதழுக்குள் வழங்குவாள்
ஒருவரது பரவசத்தின் தேநீரை மற்றவர் குடித்துக் களிப்போம்
நிரம்பப் புகையும் கூந்தலுக்குள் மூழ்கி
திசை குழம்பி மூச்சுத்திணறி மீளுவேன் நான்
கால்தடங்களால் தரையெங்கும் கிளைத்துக்கிடந்தவள்
நீருக்குள் இறங்கியதோ
பாம்பின் சரவேகம்
மழையின் கனத்த தொடைகளுடன் ஓடிவந்து
பூச்சகதியாக்குவோம் ஒருவரையொருவர்
அவளது தேனடையைச் சுற்றிப் பறந்து
இரைச்சலிடும் என் மூச்சு
பின் விடியற்காலை தோறும்
முலைகள் நான்கும்
விரிந்த தாமரைகளாய் மிதந்து சிரிக்கும்.

குட்டி ரேவதி
’உடலின் கதவு’ (2006, கவிதைத்தொகுப்பு) பக்கம் 116.

பெண்பேய் - காரைக்கால் அம்மையார்




காரைக்கால் அம்மையாரை வாசித்தேன். சில பாடல்களில் அவரின் உடல் எழுந்து நின்று உருக்கொண்டு ஆடும் தாளலயம் சொற்களின் பின்னிருந்து ஒலிக்கிறது. அவரின் உடற்சித்திரமும் பெண்ணெனும் பொது உருவிற்கு முற்றிலும் எதிரானது. புதிதானது.



பெண்பேய் என்னும் உருக்கொள்ளும் விருப்பீர்ப்பில் வந்து விழும் சொல்லாட்சி அவரை அப்பெண்பேயாகவே ஆக்குகிறது.



சுடுகாட்டை பெண்ணின் உலவுவெளியாகவும் பொதுவெளியாகவும் ஆக்கிய ஆளுமை. அதற்கு பக்தி ஒரு சாக்கு.



பெண்பேய் என்பது தன்னைத் தானே சிதைவின் தளத்தில் இருத்திப்பார்க்கும் ஒரு பெண்ணின் நுட்பமான குறியீடு.



நாடகார்த்தமான அனுபவத்தைத் தருகிறது. காரைக்கால் அம்மையார் நாடகத்திற்கான ஒரு கதாபாத்திரம். உடல் எழுச்சியும் மனோவேகமும் மிக்க பெண்கள் முயன்று பார்க்கலாம்.



கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிய பெண்பேய், பழைய தமிழ்திரைப்படங்களில் நிலைபெற்றதொரு கற்பனை.



இங்கு எனக்குப் பிடித்த மூன்று பாடல்களைத் தந்திருக்கிறேன்.


கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டி


கடைக் கொள்ளி வாங்கி மசித்து மையை


விள்ள எழுதி வெடுவெடென்ன


நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்


துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்


சுட்டிட முற்றுஞ் சுளிந்து பூழ்தி


அள்ளி அவிக்க நின்றாடும் எங்கள்


அப்பனிடந் திரு ஆலங்காடே


-மூத்த திருப்பதிகம் 1:2


எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்


சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கெளவப்


பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்


கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.

-மூத்த திருப்பதிகம் 2:13


கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தண லாடும் எங்கள்
அப்பனிடம்திரு ஆலங் காடே.

-மூத்த திருப்பதிகம் 1:1


குட்டி ரேவதி

யோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு

‘உடலின் கதவு’ என்ற என் நான்காவது கவிதைத் தொகுப்பு என்னைப் பொறுத்தவரை ஒரு பரிசோதனை வடிவிலான தொகுப்பு. தீவிர இலக்கிய வாசிப்பின் விதிகள் மடியும் துணிவின்மையும் நிறைந்தவை என்று எனக்குத் தோன்றும். காலங்காலமாகப் பழகிவந்த விதிகளை நொந்தவாறோ அல்லது விமர்சனம் பாராட்டாதோ தொடர்ந்து பின்பற்றுவது வழக்கமாக உள்ளது. அவற்றையெல்லாம் வேகத்தடையென மனதில் ஏற்காது, இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் புறங்கையால் தள்ளிவிட்டு நூற்றுக்கும் மேலான கவிதைகளையும் அதிக அளவில் நீள் கவிதைகளையும் கொண்டு உருவான தொகுப்பு இது. வாசகர்களின் கவன ஈர்ப்பைக் கணக்கில் வையாமல் என்னையே நான் தொடர்ந்து சென்ற போது கண்டடைந்த பதிவுகளின் தொகுப்பு.




கருப்பொருளிலும் வேறு வேறு தளங்களைக் கண்டடைய உதவிய தொகுப்பு என்று சொல்லவேண்டும். பல வகையான பெண்கள் என்னுள் உறைந்து கிடப்பதாயும் அவர்களின் ஆளுமை வளர வளர என் புறத்தேவைகள் குறைவதாயும் தோன்றும். சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல அவை உருக்கொண்டு எழுந்து நிகழ்வுகளுடன் உரையாடுவதைப் போலவும் தோன்றும்.


அவ்விதம் எழுந்த கவிதைகள் இந்தத் தொகுப்பில் நிறைய உள்ளன. அரசியின் மேதமை, வனதேவதை, காந்தாரி, மணப்பெண், கண்ணகி, வனம் திரட்டிய சுகுணா, கடலை வரைந்தவள், பாட்டியின் ஆவி, நீலியின் கண்ணொளி… என்னில் மட்டுமல்ல எல்லோரிலும் இப்படித்தான் தருணங்களுக்கேற்ற பெண் படிமங்கள் உயிர்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.


ஒரே மூச்சில் படிப்பதற்குத் திணறல் தரும் தொகுப்பென்றாலும் அப்படி ஒரே மூச்சில் படிப்பதற்கு இல்லை கவிதைத் தொகுப்பு என்பது என் நம்பிக்கை.


எழுதி, திருத்தி, லயம் தொடர்ந்து, சொல்லவந்ததன் அருகில் சென்று திரும்பி, மீண்டும் மீண்டும் சரியாகச் சொல்லிவிட்டோமா என்று தன்னையே ஆராய்ந்து மீளும் வேதனை நிரம்பிய உருவாக்க முயற்சிக்குப் பின்பாக ஒரு தருணம் இளைப்பாறல் வந்து குடியேறும். அப்பொழுது தான் கவிதை முற்றுப்பெற்றதாய் ஒரு நிம்மதி. சொல்ல வந்ததைச் சிறு சொல் பிசிறும் இல்லாமல் சொல்லமுடிந்து விட்டால் அக்கவிதை யார் வாசிப்பிற்கும் இலகுவானது. மற்றபடி மொழியின் ஜாலங்கள் எனப்படுபவை எல்லாம் கவிதையைப் பொறுத்தவரை பேத்தல்கள் தாம்!


எனக்கு நண்பர்கள் இருவர் இருக்கிறார்கள். வேணு மாதவன் மற்றும் சந்திரா கமலநாதன். என் கவிதையை முதல் தொகுப்பிலிருந்து இதோ வெளிவரப்போகும் ஐந்தாவது தொகுப்பு வரை நுட்பமாக வாசித்திருப்பதுடன் இயல்பாகவே என் கவிதைகளை மனனம் செய்தவர்கள். எந்த ஒரு சொல்லையும் அதே அர்த்தத்தில் மீண்டும் நான் பயன்படுத்த நேர்ந்தாலோ படிமப்பிசகு இருந்தாலோ எங்கிருந்தாலும் வேதாளம் போல் முன்வந்து குதித்து இரைபவர்கள். அவர்கள் என் நெடுஞ்சாலையைச் செப்பனிட்டு என்னைப் பயணப்படுத்துபவர்கள். நான் அவர்களின் திறனுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்.



‘உடலின் கதவு’ தொகுப்பில் பக்கம் 16-ல் இடம்பெற்றுள்ள கவிதை இது:

நினைவின் மதகு
உனது நினைவின் மதகு
ஒரு மழைக்காலத்தின் வருகையை அறிவிப்பதாய்ப்
பெருகி வீழ்கிறது என் வெயில் பிரதேசமெங்கும்
கொஞ்சமும் தளராத வேட்கையுடன்
நுரை சுழித்த திமிரில் எனது பூமியில் குழிபறிக்கிறது அது
ஒரே நாளை ஆயிரம் முறைகள் வாழநேர்ந்ததாய்ச்
சலிப்பூட்டும் அதிகாலைகளைக் கசக்கி எறிகிறது
குகையினூடே ஒளி துளைக்கும்
அதன் சீற்றத்தின் கொதிப்பு உணர்ந்தும்
கைகள் பொசுங்க அள்ளிப் பருகுகிறேன்
நெடிய மரங்களினூடே அலையும் என் பார்வை
ஓர் அற்புதமான குறிஞ்சிப்பூவைக் கண்டுகளிக்கிறது
தொடுவானத்தை இடித்துவிடாமல் இருக்கட்டும்
நமது பிரிவு
இறக்கைகள் வலைக்கண்ணிகளில் சிக்காத பறவையைப் போல
பாயட்டும் நமது உடல்விசை
சிந்தும் ஒவ்வொரு துளியும்
கடலின் கருவறையைத் தொடக்கூடும் ஒருநாள்
யோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு








குட்டி ரேவதி

இன்றைக்கு இது விருந்து


கபீர்தாசரின் வாக்குகள் படித்தேன். சொற்சுவையும் பொருட்சுவையும் கலந்த இவை பிடித்திருந்தன.

ஒரே குளத்தில் திரியும் கொக்கும் அன்னமும் ஒரே நிறமாகத் தான் காணப்படும். ஆனால் பாலையும் நீரையும் தந்து தெரிந்து கொள்ளலாம். கொக்கு அப்பொழுதே வெளியாகி விடும்.

உடல் கப்பல்; மனம் காகம்; இலட்சம் யோசனை தூரம் பறந்து செல்லும்; சில போழ்தில் கடல் ஆழத்தில் அழிந்து ஒழியும். சில நேரத்தில் ஆகாயத்தில் மறையும்.

ஆண்டவனே, எனக்குக் காய்ந்த ரொட்டியைக் கொடு. நெய்யுண்டி கேட்க நான் பயப்படுகிறேன். காய்ந்த ரொட்டியையும் பிடுங்கிக் கொள்ளாதே.

ஒரு தொழில் விதைத்தல். அநேக விதைகள் விளைந்து வரும். ஒரு தொழில் வறுத்தல். முளைநூலே எழாது.

இனிய சொற்கள் மருந்து; சுடு சொற்கள் அம்புகள். சுடு சொற்கள் காதுத் துளைகள் வழியே சென்று பரவி உடல் முழுவதையும் குத்துகின்றன.

மனது குளிர்ந்திருந்தால் உலகத்தில் எதிரி ஒருவரும் இல்லை.

காட்டுத் தீயில் எரிந்த கட்டை நின்று கூவுகிறது; ‘இப்பொழுது கருமான் வீடு செல்வேன். மீண்டும் இரண்டாம் முறை எரிவேன், கரி உருவத்தில்.’

மனம் பறவையாகி விட்டது. எங்கு விருப்பமோ அங்குப் போகட்டும்.

சந்தை சரியில்லை என்றால் அங்கே வைரத்தைத் திறக்காதே, இறுக்கி முடிச்சில் கட்டு; எழுந்து வழிநட.

சக்கயி என்ற பெண் புள் இரவில் ஆணிடமிருந்து பிரிகிறது. காலையில் வந்து சேர்கிறது.

வழி பார்த்துப் பார்த்து விழிகள் குழி விழுந்து விட்டன. பெயரைக் கூவிக் கூவி நாவில் கொப்புளம் ஏற்பட்டுவிட்டது.

தலையை இறக்கிப் பூமியில் வை. அதன் மேல் காலையும் வை. இப்படி முடியுமானால் ‘வா!’

அன்பு தோட்டத்தில் முளைக்காது. சந்தையில் விற்காது. அரசனோ, குடியோ, வேண்டுபவன் தலையைக் கொடுத்துவிட்டு எடுத்துச்செல்லட்டும்.

சூல் - உயிருடலின் பேரற்புதமான பணி

சூல்
பாம்போடு பாம்பு பிணையும்
அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும்
வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும்
உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ
முட்டை மீது முட்டையடுக்கி அவயங்காக்கும்
மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு
உடல் விரித்து ஆனந்திக்கும்
உயிரிழுத்துப் போட்ட பின்னும்
கண் துஞ்சாமல் சூல் கொள்ளும்
பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும்
உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும்
ஆணொன்று விரட்டிப் புணர
உடலெல்லாம் கருக்கொள்ளும்
வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத்
தாய் மரிக்கும்
உடலின் சிறகடியில் நினைவு குவித்து
முட்டைகள் அவயம் காக்கும்
கண்ணில் புத்துயிரின் வெறி
நெஞ்சில் பெருஞ்சுவாசம்
நிலை தாங்கி நின்றக்கால் கரு காலாட்டும்
பூக்களின் மீது வண்ணாத்தியாய்க்
காற்றில் மிதக்கும்
கறையானின் புற்றுக்குள்
குஞ்சுகள் பொரியுமட்டும்
சீறிக் காவல் காக்கும்
இரத்தச் சகதியில் கால் எழும்பி நிற்பதற்காய்
ஈர நாவால் நக்கி நக்கி உயிர் கூட்டும்
மெல்ல நினைவின் கண் திறந்து
கடலுக்குள் பதுங்கும் முன்
கழுகொன்று கொத்திப் போகும்
திசைகள் அறியும்
கனவுகளடக்கி முட்டைகளாய் ஊதும்
நிலவொளியில் உடலைப் புரட்டி
உயிர்கொள்ளும் மீண்டும்.

2006 – ல் வெளியான ‘உடலின் கதவு’ கவிதைத் தொகுப்பில் பக்கம் 12- ல் இடம்பெற்றுள்ள ‘சூல்’ என்ற இக்கவிதை எப்பொழுது எழுதப்பட்டது என்று நன்றாக நினைவிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டையில் இருளர்களின் குடியிருப்பில் ஒரு மாதத்திற்கு மேலாகத் தங்க வேண்டியிருந்தது. அவர்கள் பாம்பு பிடிப்பதை நேரில் கண்டு ஆவணம் செய்யும் முயற்சி. பின் ரோமுலஸ் விட்டேகர் மற்றும் அவருடைய மாணவர்களுடன் இணைந்து இருளர்கள் பாம்பு பிடிப்பதற்கு என்ன விதமான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற ஆய்வுப் பயணம். தொடர்மழைக்குப் பின்பாக மழை ஓய்ந்திருந்த நாட்கள். பாம்புகள் வசிக்கும் இடங்களைத் தேடி கடப்பாரைகளால் அவற்றின் இடத்திற்கு அருகில் குழி வெட்டி அதனூடாக ஒரு பாதையை அவற்றின் உறைவிடத்திற்குக் கொண்டு போய் பாம்புகளை உருவியெடுத்து சாக்குப்பையில் போடுவார்கள். சாரைப்பாம்பு என்றாலும் கண்ணாடிவிரியன் என்றாலும் அவர்கள் கண்டறியும் நுட்பமான வழிமுறைகள் எந்தப் பாடப்புத்தகத்திலும் இல்லாதவை.
இருளர்களின் குடியிருப்பு நாய்கள், கோழிகள், ஆடுகள் என்று விதவிதமான உயிர்களால் சூழ்ந்திருக்கும். பக்கத்தில் உள்ள முந்திரிக்காடுகளுக்குச் சென்று அன்றைய மதிய உணவிற்காக ஒரு பெண் எலிகளைப் பிடித்து வருவார். தான் பிடித்த உடும்புடன் வெகுசாதாரணமாக ஓர் ஆள் நம்முன் கடந்து செல்வதைப் பார்க்க முடியும். பிடித்த பாம்பை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவென்று ஒருவர் பாம்பைக் கட்டி எடுத்துக் கொண்டு போவார். இது மாதிரியான காட்சிகள் அங்கு சர்வசாதாரணம்.

பேணுதல் என்பது அடிப்படை மனித குணமாக இருப்பதை உணர்வதற்கு இருளர்கள் பற்றிய ஆய்வு எனக்கு உதவியது என்று சொல்லவேண்டும். தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கூட தங்களிடமிருந்து தொலைதூரம் அனுப்ப மாட்டார்கள். தன் அன்பு தான் அவர்களைப் பேணும் ஆரோக்கியமான உணவு என்ற நம்பிக்கை தான் அவர்களின் மரபுக்குணம் என்று சொல்லலாம்.
சூலுறுதல் என்பதை பேணுதல் என்பதாகவே எல்லா உயிர்களும் அர்த்தப்படுத்திக் கொள்கின்றன. இது பெண் ஆண் இரண்டு பால்வகையினர்க்கும் பொதுவானது. எல்லா உயிர்களிலுமே இது பொதுவானது. உயிருடல் போன்ற பேரற்புதமான ஒர் உலகவிஷயம் கிடையாது. உயிர் வாழ்தலைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் போராடும் உயிர்களுக்கிடையே பிற உயிர்களைப் பேணுவதில் தன்னை கரைத்துக் கொள்ளும் உயிர்கள் மகத்தானவை இல்லையா? இது எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற கலந்திருக்கிறது. மஞ்சள் நிறத்தைப் பற்றிய ஒரு கவிதை எழுதச் சொன்னால் எப்படி சாத்தியமோ அதே போல் தான் இக்கவிதையும் சாத்தியப்பட்டது. அடர்ந்த குளிர் நாளொன்றில் எந்நேரமும் பாம்போ பிற விஷ உயிரோ தன்னொத்த உயிர்களைப் பேணும் பொருட்டு சஞ்சரிக்கும் முந்திரிக்காட்டின் இரவொன்றில் எழுதப்பட்டது.





குட்டி ரேவதி

என் உடல் சொற்களாலான தேன்கூடு


என்னுள் கொந்தளிக்கும் ஒவ்வொரு உணர்வும் சொல்லின் உருவெடுத்த பின்பே அமைதியடைகின்றது.





மறுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட புறக்கணிக்கப்பட்ட சொற்கள் எல்லாம் என் நெஞ்சுக்குள் சிறகடிக்கின்றன. சரியானதொரு பருவ முதிர்ச்சியில் தடைசெய்யப்பட்ட உணர்ச்சிக்கீடான ஒரு சொல்லைத் தேடித் தான் என் கவிதை தொடங்குகிறது.




உணர்ச்சிகளை எல்லாம் உச்சரித்துவிடுவது மிக மிக அவசியம். எனக்கும் சரி. உனக்கும் சரி. எனக்குப் பித்தேறாது இருக்கும். உன்னைக் கொலை செய்யாது இருப்பேன். வசவுச் சொற்கள் கூட இம்மாதிரியான சந்தர்ப்பங்களுக்காகக் கண்டறியப்பட்ட கவித்துவச் சொற்கள் தாம்.




ஓர் உணர்விற்குள் ஆட்பட்டிருக்கும் நேரத்தில் நெஞ்சக் கடலில் ஒற்றைச்சொல் அலைபாய்ந்து இருக்கும். பின் அதனுடன் ஒட்டிய சொற்களை எல்லாம் கரைக்கு அழைத்துவரும். அங்கோ கவிதை பிறக்கத் துடித்து செவுள் விரிக்கும்.




என்னைப் பொறுத்தவரை கவிதையில் பங்கேற்கும் சொல் ஒவ்வொன்றும் ஒரு படிம உரு. மாறாக நேரடியான சொற்கள் எல்லாம் வணிகத்திற்கு உதவுபவை. உதாரணங்கள்: பற்று, வரவு, முதலீடு.




அல்லது கதாசிரியர்க்கு உதவக்கூடியவை. கவிதையில் சொற்கள் காலத்தின் பயணதூரமும் வலியும் பதிவான கூழாங்கற்களாக மாறவில்லையென்றால் அது கவிதையே இல்லை.




அதைவிட கவிதை உருவாக்கத்தின் எத்தருணத்தில் ஒரு சொல் குறியீடாகவோ சமிக்ஞையாகவோ பருவம் எய்துகிறது என்பது மிக முக்கியமான அவதானம்.




சொற்களின் உருவம் காணும் முயற்சியற்றவர்கள் தொடக்கத்திலேயே நின்றுவிடலாம். அவர்கள் கவிதை தரும் அலுப்பை, புரிதலின்மையைச் சந்திக்கும் அபாயமிருக்கிறது.




நேரடியான பெண்ணியச் சொற்களான ஆண் பெண் ஆண்மை பெண்மை உடல் தூமை யோனி முலைகள் செயலிழந்து போய் அவை பலபரிமாண எழுச்சியடைந்துள்ள காலத்தை எட்டியுள்ளோம்.




ஒற்றைப் பரிமாணச் சொற்கள் கரும்புச்சக்கைகளைப் போல துப்பப்படுபவை. அகராதியில் இருக்கும் சொற்களைப் போல நேரடியான அர்த்தம் கொள்வதற்கு அகராதிகளே போதுமானவை இல்லையா?




என் உடலில் எல்லா வகையான அனுபவங்களையும் நினைவுகளையும் உணர்ச்சிகளையும் சொற்களாகவே சேமித்துவைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவற்றை என்னுள் விதைநெல்லைப் போல பேணுகிறேன். அவை விளைந்து காட்சியாக்கும் சொர்க்கத்தால் தான் நான் அமைதியுறுவேன்.




கவிதைக்குச் சொல்லே அலகு என்று சொல்லவே இத்தனை முழக்கங்களும்.




இறுதியாக ஒரு முறை என்ற இக்கவிதை 2003- ல் வெளியான தனிமையின் ஆயிரம் இறக்கைகள் கவிதைத் தொகுப்பில் பக்கம் 63-ல் இடம்பெற்றது.




இறுதியாக ஒரு முறை
இதயக்கமலங்கள் மலரும் மாலைப்பொழுது


ஓர் உறவின் முறிவைப் போல்
சடாரென்று விழுந்து நொறுங்கிப் போகின்றன
சூரியனின் கைகள் மேற்கே


தெருவெங்கும் கூச்சமிழந்த பெண்களின்
சிரிப்பொலிகள்
வாணவேடிக்கைகளாய் வெடித்து ஓய்கின்றன


நிசப்தம் ஜன்னலையும் கதவுகளையும்
சாத்தும்போது
அவள் அன்று ஐந்தாம் முறையாகக் களைப்புற்றிருந்தாள்


‘சுவர்களையெல்லாம் உடைத்துக் கொண்டு வெளியேற வேண்டும்.
ஆடைகள் எதுவும் தடுக்காது நகரத்தின் மைய வீதி வழியே
ஓடிக் கொண்டே இருக்கவேண்டும்
பருவம் காலம் இடம் மனிதர் பேதமின்றி
ஒரு பழைய ஞாபகத்தின் தொங்குபாலமும்
வேகத்தைக் குறைக்காது…
ஒரு பாடலின் கடைசி வார்த்தை மலைமடிப்புகளுக்கிடையே
ஒலித்துக் கொண்டேயிருப்பது போல்’
நிலத்திலிருந்து உடலை உயர்த்தும்போது
உடலெங்கும் பாசி படர்ந்து தரையோடு அழுத்தியது
 
குட்டி ரேவதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



ஆண் உடல் ஒரு பிரமை





காதலுக்கு நிகரான மனித உணர்வேதும் இல்லை. அதிலும் காமத்தீவிரமுற்ற காதல் உன்னதமாகிறது. மனித வேட்கையின் ஒரு வடிவம் தான் காதல். வன்முறையின் மறு பக்கம் தான் காமம். கலையின் எழுச்சியெல்லாம் இத்தகைய காதல் காம வேட்கையிலிருந்து தான் பிறக்கிறது. பெண் ஆண் உடல் - மன பேதங்கள் காமத்தின் துல்லியமான கரையில் தான் உருவழிகின்றன. காதல் மகிழ்ச்சியானது இல்லை. காமம் சுகமானதும் இல்லை. என்றாலும் மனிதனை ஆதாரணைக்குள்ளாக்குவது இவை.


எத்தனை முறை இவ்வுடல் வழியாக அப்பேராறு பாய்ந்து செழிக்கிறதோ அத்தனைக்கு இது வளமுள்ள பூமியாகிறது என்று என்னை மீண்டும் மீண்டும் காமத்தால் ஆன காதலால் மகத்துவப்படுத்திக் கொள்கிறேன். ஒரு கவிதையில் இடம்பெறும் காதலினும் அடுத்த கவிதையில் கிளைக்கும் காதல் உயர்ந்து பறக்கிறதா என்பதை வைத்து என் விடுதலையை உறுதி செய்து கொள்கிறேன். எதிரி, இலட்சியம் ஆகியவற்றுக்கு நிகரான கசப்பான வார்த்தைகளே வெற்றியும் தோல்வியும். விடுதலை மட்டுமே உண்மையான மனநிலை.


காதலில்லா காமமா காமமில்லா காதலா வெற்று பட்டிமன்ற விவாதங்கள். இரண்டும் மூளையின் இரு புறத்தையும் அழுத்திக் கொள்கின்றன தருணத்தின் உத்திரவாதத்தைப் பொறுத்து. ஆனால் யார் உடலை வரலாறு மெளனமாய் வந்தழுத்துகிறது, யாருடலை கடந்த கால நிகழ்வுகளின் குற்றங்கள் வந்தழுத்துகின்றன என்பது தான் இருவரின் காதல் ஊடாட்டத்தின்போது விடுதலையைத் தீர்மானிக்கின்றது. ஆண் உடல் நினைவுகளை சேமித்து வைப்பதில்லை. பெண்ணுடலை வரலாறு விடுவதாயில்லை. அவள் உடலை அரசியலும் அன்றாட சம்பவங்களும் குறுக்கிட்டுக் கொண்டே இருக்க, ஆண் உடலை பெண் உடல் சந்தேகித்துக் கொண்டே இருக்கிறது. ஆண் உடல் பெண்ணின் பார்வையில் ஒரு பிரமை. அந்தப் பிரமை எழுப்பும் சந்தேகங்களின் பேரில் அவனது வார்த்தைகளை மட்டும் தனக்குள் மெளனமாய்ச் சுருட்டி வைத்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் சந்தேகத்தின் பேரில் தான்!


பெண்ணின் முழுமையான விடுதலை ஆண் உடலை நிராகரிக்குமா? பயன்படுத்திக் கொள்ளுமா? சித்திரவதை செய்யுமா? சீரழிக்குமா? இன்னும் பெண் உடல் அது குறித்த தீவிரமான கேள்விகளுடன் தாம் ஆண் உடலை அணுகுகிறது. பல ஆண் உடல்களுடனான அனுபவங்களுக்குப் பின்னும் ஒரே மாதிரியான உடலை அணுகிய ஆதங்கமே மேலிட, பெண் உடல் தன்னையே திரும்பிப்பார்க்கிறது. தன் உடல் போன்று இருக்கும் பிற உடல்களையும் ஆராய்கிறது. அனுபவிக்கிறது. வேறு வேறு வாய்ப்புகளைக் கையில் எடுத்துப் பரிசீலிக்கிறது. புத்தனும் இதையே நம்பினான்: ஆண் உடல் மீது பெண் உடல் கொள்ளும் வியப்பும் பெண் உடல் மீது ஆண் உடல் கொள்ளும் வியப்பும் தீராத இவ்வாழ்க்கையே விடுதலையின் தோற்றத்திற்கிடமானது என்று. எனில், இலட்சியக் காதல் பற்றிய சித்திரங்கள் எல்லாம் வெறும் பிரமையே.

பிரமை

உனது கண்களின் போதை

அகலப்பாய்ந்து

என்னுள் உதிரத்தின் பேரருவி

என்புக்குள் சீறிப்பாய

தீண்ட ருசிக்கும்

எனது பார்வைகள்

உன்னில் பதியனிடும்

வரலாற்றின் தண்டுகள்

உனது வார்த்தைகள்

என்னுள் நிரம்பி

மூலத்தில் மெளனமாய்ச்

சுருள்கின்றன

நீ மெளனத்தை

இரு துண்டுகளாகக் கிழித்து

என் மீதெல்லாம்

மழையடிக்கிறாய்

பின் இறுகிய தரையில்

ஒன்றிரண்டாய்

அதன் கனத்த துளிகள் வீழும் சப்தம்

நீண்ட நேரம்...

பருவத்தின் பின் பருவமாய்க்

காலம் இழுத்துச் செல்லும்போது

விடுதலைக்கான கதறல்

அழைத்து வந்தது என்னை

உனது வார்த்தைகள்

என்னுள் நிரம்பி

மூலத்தில் மெளனமாய்ச்

சுருள்கின்றன

குட்டி ரேவதி

(தனிமையின் ஆயிரம் இறக்கைகள், முதல் பதிப்பு: 2003, பனிக்குடம் பதிப்பகம்,

பக்கம்; 48)

ஆண் உடலை பிரமை என்று இக்கவிதையின் வழியாக உறுதிசெய்து கொண்டேன்.

நிர்வாணம் - நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம்


பெண்ணின் நிர்வாணம் ஆபாசமானது, கவர்ச்சியானது என்பதைத் தாண்டி அதன் ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் அறிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ள சமூகக் காலக்கட்டம் இது. மாண்டோவின் கதைகளில் வரும் பெண்கள், நிர்வாணத்தைத் தான் எப்பொழுதும் தமது அணிகலன்களாக அணிந்திருப்பர். தம்மை நசுக்கும் சூழல்களையும் ஆண்களையும் தம் நிர்வாணங்களால் பரிகாசம் செய்வர். ஏன் கொலையும் செய்வர். சாதத் ஹசன் மாண்டோவின் கதைகளின் வரும் பெண்களைத் தொடர்ந்து சென்றிருக்கிறீர்களா? அவர் முன்வைக்கும் ‘பெண் நிர்வாணம்ஒரு கருப்புக் குதிரையைப் போன்றது. இரவுகளில் துரத்தும் கனவைப்போன்றது. பீதி நிறைந்தது. அல்லது மாண்டோவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால் அது ‘நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம் பொதிந்தது. கண்ணைக் குருடாக்குவது.


பெண் நிர்வாணம் குறித்த என் இரண்டு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஆறு மாதம் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய காலம் அது. பகல் இரவு என்று பாராமல் பெண்களுக்குப் பிரசவம் பார்க்கும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். பொது வார்டுகளில் பெண்கள் வரிசையாக இருபுறமும் மெத்தைகளில் பெரும்பாலும் உடலில் உடையின்றி கிடத்தப்பட்டிருப்பர். ஆனால் உடையில்லாத உணர்வே அங்கு எவருக்கும் இருக்காது. நிர்வாணத்தின் பிரக்ஞையின்மை. பிரசவ வலியுடன் அவர்கள் போராடுவது கதறலாகவும் ஓலமாகவும் அழுகையாகவும் முதலில் காணும் எவரையும் நடுங்க வைக்கும். மூஞ்சில் அறையும். அங்கு குழந்தைகள் அழுது கொண்டே பிறப்பர். இறந்து பிறப்பர். உருவச் சிதைவுகளுடன் பிறப்பர். அரைகுறையான பிரசவத்தால் பல்லிகளைப் போலவும் உரித்த கோழிக்குஞ்சுகளைப் போலவும் குருதிப்பூச்சுடன் நழுவி விழும் பிண்டங்களாய்ப் பிறப்பர். அங்கு நிர்வாணம் என்பது மானுட வாழ்விற்குத் தேவையான மறு உற்பத்திப் பணியுடன் தனிமனித விழைவின் வலியை இணைப்பதாகத் தோன்றும்.

இன்னொரு நிகழ்வு. தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற ஓர் இளம்பருவப் பெண் ஆற்றொடு போக, அவளைக் காப்பாற்றும் முயற்சியில் அவளின் உடையும் நீரொடு போயிருந்தது. அம்மணமாகத் தான் காப்பாற்றப்பட்டாள். அந்த அம்மணம் அவளுக்கு அவமானமாகத் தோன்ற, தான் உயிர்பிழைத்ததினும் அவமானமே அவளுக்குப் பெரியதாகத் தோன்ற அவள் தூக்கிட்டுத் தன்னை மாய்த்துக் கொண்டாள்.

ஆனால், மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஆயுதப்படைக்கு எதிரான போராட்டம். மனோரமா என்ற பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ஆயுதப்படைக்கு எதிராக பத்துக்கும் மேலான தாய்மார்கள் உடைகளைக் களைந்து, அசாம் துப்பாக்கிப் படையின் முகாம் முன்னால், ‘எங்களைக் கற்பழியுங்கள்! எங்களைக் கொல்லுங்கள்! எங்கள் சதைகளை எடுத்துக் கொள்ளுங்கள்!என்று கோஷமிட்டனர். உடலின் நிர்வாணத்தினும் கூர்மையான ஆயுதம் ஏதுமில்லை என்பதை நிரூபித்த போராட்டம் அது.

மேற்சொன்ன வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு உணர்ச்சிகளை எதிரொலிக்கிறது, நிர்வாணம். எனக்கும் நிர்வாணம் என்பது ஓர் ஆயுதமாகவே படுகிறது. அதை உறையிலிருந்து வெளியே இழுக்கும் அவசியம் பொருத்து தான் அதற்கு ஒரு மேன்மையான அர்த்தத்தைக் கொடுக்க முடியும் என்று நம்பினேன். அதன் பொருட்டே ‘நிர்வாணம்’ என்ற இக்கவிதை, 2003 - ல் வெளிவந்த கவிதைத் தொகுப்பான ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகளில்’ இடம்பெற்றது.


நிர்வாணம்

உனக்கும் எனக்கும் அவளுக்கும்
நிர்வாணம் தான் பளபளக்கும் ஆயுதம்;
குருதியின் வியர்வையில் நனையும் போதெல்லாம்
ஒரு பயிற்சியின் முழுமையை அடைகிறது
மரங்கள் நிர்வாணத்தை யடையும் போதுதான்
இறக்கைகள் துளிர்க்கும் பறவைகளாயின
சீனப் போர்வீரன் சொல்லுவான்:
‘உறையிலிருந்து ஒரு பொழுதும்
வாளை வெளியே இழுக்காதே
அவசியமின்றி
நிர்வாணம் வளர வளரத்
தீயின் கொழுந்தைப் போல்.
நிர்வாணத்துடன் வாழ்வது எளிதன்று
அது உன்னை அலைக்கழிக்கும்
உபயோகிக்கும் வாய்ப்பைத் தேடி
வாளை ஒரு போதும்
வெளியே இழுக்காதே அவசியமின்றி
அது துருப்பிடித்துச் சல்லடையானாலும்
ஆனால் உன்னோடே
எப்போதும் வரித்துக்கொள் அதை.







குட்டி ரேவதி
(தனிமையின் ஆயிரம் இறக்கைகள், முதல் பதிப்பு: 2003, பனிக்குடம் பதிப்பகம்,
பக்கம்; 38)

யோனியைப் பற்றிய தமிழ் மொழியாடல்கள்







கார்த்திகா என்ற இதழியலாளர் இப்பத்திக்கென என்னுடன் நேரடியான இரு உரையாடல்களை மேற்கொண்டார். இப்பத்தியை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ பதிவு செய்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட உழைப்பும் காலமும் அகண்டது.



இதைப் படித்ததும் இரண்டு முக்கியமான விடயங்கள் தோன்றின. இப்பத்தியில் உள்ளீடுகளும் வெற்றிடங்களும் நிறைய இருந்தாலும் இதில் கருத்துருவமாக இடம்பெறாமல் போன கவிஞர்கள் தாம் என் சிந்தையை மிகுதியாய் அலைக்கழிக்கின்றனர். அந்த வரிசை மிக நீளமானது என்று அறிவேன். ஒன்று.



இரண்டு, தங்களை நெருக்கியடித்துக்கொண்டு முன்வைக்காமல் திரைக்குப் பின்னே தீவிரமாய் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களும் இருக்கையில் இக்கவிதைச் செயல்பாடு ஓர் இயக்கத்தினும் மேலானது என்பதை என்னால் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மங்கை போன்றவர்களின் மேம்போக்கான கருத்துகளால் கவிதை எழுதுபவர்களுக்கும் கவிதை வெளியில் இயங்குபவர்களுக்கும் எந்தப் பாதகமும் இல்லை. இப்பத்தியின் நோக்கத்திற்கு எதிராக அவர் மொழிந்திருப்பது வேடிக்கை. தமிழகத்தில் பெண்கள் இயக்கமே இல்லை என்பதை அறியாத ஒரு பெண்ணியவாதியாக அவர் இருப்பதும் வியப்பு. இது ஒரு பெரிய விவாதத்திற்கான தளம்.



தமிழகத்தில் பெண்கள் உதிரிகளாகத் தாம் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் சமீபத்திய எல்லா நிகழ்வுகளும் ஏன் தோல்விகளைக் கண்டுள்ளன என்பதற்கான ஆராய்ச்சியும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில்’ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



குட்டி ரேவதி

உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன.


இந்த ஒரே ஒரு வாழ்க்கைக்குள்...
வாழ்க்கையே... இந்த ஒரே ஒரு வாழ்க்கைக்குள்
மலை முகட்டிலிருந்து ஒரு சிறு பாறையென
என்னை உருட்டித் தள்ளிவிடு
துயரங்கள் எழும்பி அடங்கும் கடலுக்குள்
உணர்ச்சிகளில் உடலை நீந்தவிடு
சிதிலங்களின் மறைவில் வாழப்பணி
முலைகள் பூக்கத் தொடங்கும் போது
பருவத்தின் படகில் வந்து மிதந்து பறித்துச்செல்
மலைகளின் உடலுக்குள்ளிருந்து புறப்படும்
மிருகங்களின் வாயினைச் சந்திக்கவை
இரத்தம் சூடாகிப் பிளிறும்போது
கண்ணாடிகளை அழைத்துவா எதிரில்
நெருப்புக்கங்குகளான எனது வார்த்தைகளாலேயே
என்னைச் சாம்பலாக்கித் தூவிவிடு
பிசாசுகள் கோஷமிட்டுச் செல்லும் தெருவில்
கடவுள் என்பவரின் சுவடுகளைக் காட்டு
உடலை எரியூட்டும் காதலோடு
வேசியாய் அலையவிடு தெருமுனைகளில்
பூமியெங்கும் இரத்தம் மடை திறக்கையில்
மானுடர்க்கு மத்தியில் ஒரு புல்லாக்கிக் கருக்கு
என்னை
நட்சத்திரங்கள் சுடும் உயரத்தில்
ஒரு பறவையாகி உடலை நீட்டவேண்டும்
ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு சூரியன் உண்டல்லவா?
(முலைகள், முதல் பதிப்பு: 2002, தமிழினி, இரண்டாம் பதிப்பு: 2003, பனிக்குடம் பதிப்பகம்,
பக்கம்; 55)
2002 -ல் வெளியான ‘முலைகள்தொகுப்பில் இடம்பெற்ற கவிதை இதுவும். உடலின் சாத்தியங்களை அதிகப்படுத்துதலையும் அசாத்தியங்கள் என நிர்ப்பந்திக்கப்பட்டவைகளைப் பரிசோதனைகளாக உடல் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதலையும் முன்மொழியும் தொனி. அடுத்தடுத்த வரிகளிலேயே இருமையின் இரு முகங்களையும் கொண்டு விரியும் இக்கவிதையின் ஊடுபாவாய் தொனிக்கும் பிரக்ஞை என்பது பற்றிய சந்தேகம் என் வாழ்வின் பாதைகளோடும் சம்பந்தப்பட்டவை என்பதால் இங்கு அது குறித்து எழுதலாம்.

இந்த ஒரு சிறு கவிதைக்குள்ளேயே என் ஒட்டுமொத்த பிரக்ஞையையும் நிறைத்துவிடத்துடித்தேன். பிரக்ஞை என்பது ஒரு தனி மனிதன் பிரபஞ்சத்துடன் கொண்டிருக்கும் உறவைச் சுட்டும் புலனுணர்வு என்று சரியாகப் பொருள் கொள்வோமானால், அதை என்னுடல் வழியாகவே முழுமையும் நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததை பல முறை நான் உணர்ந்திருக்கிறேன். இது பெரிய தத்துவ விசாரம் மட்டும் அன்று; தர்க்கப்பூர்வமானதும்.

ஆண்மைக்கு ஒரே ஒரு தட்டையான உடல் தான். பெண்மைக்கு பருவந்தோறும் எழுச்சியுறும் பல பரிமாண உடல்கள். எனில் பெண்ணென்பவள் மனதின் விழிப்பு நிலைகளையெல்லாம் எவ்வாறு ஒன்றாகத் திரட்டிச் செயல்படுகிறாள் என்பதை வியப்புறுகிறது இக்கவிதை. பெண்ணுக்கு மறுக்கப்பட்ட எல்லா வெளிகளையும் அபகரிக்கும் தீவிரத்தையும். எல்லாவிதமான உணர்வுகளும் பெருகிப்பாயும் பேராற்றில் பாய்ந்து நீந்தும் தீரத்தையும்.

என்னைப் இப்பிரபஞ்சத்துடன் இணைக்கும் முயற்சியே இக்கவிதை. நான் எழுதியிருந்த ஒரு கவிதை மனித மரணத்தைப் பற்றியதாக இருக்க, ஒரு கவிஞர் கிண்டலடித்தார்: இந்த வயதில் மரணத்தைப் பற்றி எனக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது என்று. நான் சித்தமருத்துவம் பயில விரும்பி இரண்டு வருட முயற்சிக்குப் பிறகு தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இரு வருடங்களுக்குப் பிறகும் நான் பிடிவாதமாக அம்மருத்துவம் படிக்க விரும்பியதன் நோக்கம், உடல் எனும் விந்தையை முழுமையாய் அறிதலில் எனக்கு இருந்த தீவிரமும் அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த தத்துவப் பின்புலத்தை அறிவதில் இருந்த ஆர்வமும் தான்.

உடல் ஐம்பூதங்களின் கூட்டுக் குழம்பு. மரணத்தின் போது அது ஐம்பூதங்களாய்ச் சிதைந்து போகிறது, அவ்வளவே என்று நான் திடமாக நம்புகிறேன். ஆனால் என் கவிதைகளின் வழியாக என் உடல் உணர்ந்த பிரக்ஞையைத் துல்லியமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என் பிரக்ஞையின் தூல வடிவமே கவிதை. படைப்பூக்கம் உள்ள ஒவ்வொருவரும் தன் பிரக்ஞைக்குத் தான் வடிவம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

ஒவ்வொரு முறை இக்கவிதையை படிக்குந்தோறும் எழுதும் போது உணர்ந்ததைக் காட்டிலும் அதிக நீட்சியடைந்த பிரக்ஞையை என் உடல் உணர்கிறது. பூத்துக்குலுங்குகிறது. மேலெழுந்து பறக்கிறது. தன்னைச் சிதைத்துக் கொள்கிறது. மீண்டும் புது உருக்கொள்கிறது. என் பேரரசை விரிக்கிறது. உடலின் பிரக்ஞையைச் சொற்களுக்கு ஊட்டும் வித்தையே கவிதை என்பதை முன்மொழிகிறேன். இப்பொழுது மீண்டும் கவிதையை படித்துப் பாருங்கள். வேறெவரின் கவிதையையும் கூட. அதில் பிரக்ஞை தொனித்தால் கவிஞனின் புலன்கள் இனியன என்பதையும் ருசித்துப்பாருங்கள்!




குட்டி ரேவதி
தலைப்பு: பாரதியாரின் ‘முதற்கிளை: இன்பம்வசனகவிதையின் ஒரு வரி.