நம் குரல்
ஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி
இலங்கையில் மதம் என்பது தொடர்ந்து ஓர் அரசியல் அமைப்பாக வலியுறுத்தப்பட்டு வந்தமை குறித்து இத்தருணத்தில் பேசுவது இன்றைய அரசியலுக்கு எவ்வாறு தொடர்புடையதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்கும் என்பது தெளிவாகும். ஓர் அரசு ஏன் மதத்தைத் தன் துணையாக எடுத்துக்கொண்டு இயங்குகிறது என்பது இலங்கையின் அரசியலைமைப்பில் பெளத்தத்திற்கு என்ன மாதிரியான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து அறியலாம். எல்லா மதங்களையும் அங்கீகரிக்கும் அதே வேளை புத்த சாசனம் என்பதை முதன்மையாகக் கொள்வதும் அதைக் காப்பாற்றி வளர்ப்பதும் அரசின் கடமை என்பதை 1978-ல் அரசியல் அமைப்பில் உள்ளடக்கியதும் உறுதி செய்ததும் சாதாரண அர்த்தத்தில் அல்ல. மேலும் மேலும் மதத்தின் கட்டமைப்பை அரசின் வல்லமைக்கு ஆதரனவானதாக மாற்றுவது என்ற அர்த்தத்தில் தான். அதற்கு ஏதுவாக அரசியல் வரலாறு முழுமையும் புத்த மதகுருக்களும் தொடர்ந்து அரசியல் குறுக்கீடுகளைச் செய்துள்ளனர்.
அயல்நாட்டு அரசுகள் குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற நாடுகள் ஈழத் தமிழர்களுக்காக ஆதரவு செலுத்திய போது மிகப்பெரிய கண்டனக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். அரசின் குரலாக மதகுருமார்கள் முன்னின்று நடத்திய இக்கண்டனக் கூட்டத்தில் அவர்கள் கூறியது, ’மற்ற நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிடக்கூடாது; இது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை. இதை நாங்களே தீர்த்துக் கொள்வோம்’, என்பது தான். இவ்விடத்தில் அரசு அளித்த பாதுகாப்பு உணர்வே, பெளத்த குருமார்களை அரசியல்வாதிகளாக இயங்கச் செய்தது. ஆக தொடக்கத்திலிருந்தே அரசு பேணிவந்த மத ஆதிக்க ஆட்சியின் விளைவால், இந்த மத குருமார்கள் மக்களுக்காக நிற்காமல் அரசிற்காக நிற்கத் தலைப்பட்டனர். சர்வதேச அளவில் யாரும் தலையிட முடியாத அளவிற்கு மதத்தால் இறுகிப்போன அரசு, இலங்கை அரசு. வரலாற்றிலேயே மதத்தைப் பயன்படுத்தி ஒரு மனிதக்கூட்டத்தை அழித்தொழித்த நிகழ்வுக்கு இலங்கை அரசும் அங்கு நிலவும் பெளத்தமுமே என்றென்றும் உதாரணமாயிருக்கும். கடந்து சென்ற அரசியல் பாதையில் இந்த மதகுருமார்கள் தமிழர்களுக்கு அடிப்படைகளைப் பெற்றுத் தருவதற்கான அரசியலமைப்புச் சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இதே காரணத்திற்காக 2000-ல் ஒரு பெளத்த மதகுரு இறக்கும் வரையிலான உண்ணாவிரதத்தைக்கூட மேற்கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு துறவியோ, குறிப்பாக பெளத்தத்தை உள்வாங்கிய ஒருவரோ செய்யக்கூடிய காரியமாக இது இல்லை. இனவாத உணர்வை பலப்படுத்தும் பரப்பும், செயல்களின் தொடர்ச்சி தாம் இவையெல்லாம். வேறுவேறு வடிவில் காலந்தோறும் தமிழர்களுக்கெதிரான போரை முடுக்குவிட்டவர்களின் இப்பெளத்த குருக்கள் கடுமையான அதிகாரங்களைப் பிரையோகித்துள்ளனர்.
அதற்குப்பின்பு, 2002 – லும் அரசியலமைப்பில் எந்த மாற்றம் செய்தாலும் அது மகா சங்கத்துடன் விவாதிக்கப்பட்டு செய்யப்படவேண்டும் என்றும் சிங்கள அரசின் விழைவைக் கருத்தில் கொண்டும் செய்யப்பட வேண்டும் என்றும், சிங்கள மக்களுக்கு மட்டுமே இந்த தேசத்துடன் அடிப்படையான உறவு உண்டு என்றும் இம்மத வாதிகளால் வலியுறுத்தப்பட்டது. மேலும் தேசிய அடையாளங்களும் பெளத்த குறியீடுகளால் மட்டுமே ஆனவையாக இருக்கவேண்டும் என வற்புறுத்தப்பட்டது. சமாதானக்குழுவில் இருந்த நார்வே தூதுவரை வெளியேற்ற மதத்தலைவர்கள் கையொப்பமிட்டு பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமிய கிராமங்களில் கூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. ஆழிப்பேரலை அழிவுக்குப்பின்பு புனரமைப்புப் பணியில் ஈழத்தமிழர்களுக்கு எந்த அளவிலும் பங்களிக்கப்படக்கூடாது என்பதற்காக புத்த மத வாதிகளால் போராட்டம் நிகழ்த்திக் கட்டுப்படுத்தப்பட்டது.
அரசு மதகுருமார்களுக்கு இத்தகைய அரசியல் முக்கியத்துவம் அந்த அரசால் தரப்பட வில்லையெனில், அவர்களுக்கு இத்தகைய மேலோங்கிய சமூக முக்கியத்துவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அரசும் இந்த மதவாதிகளை ஒரு நிறுவனமாக்கி தனது இனவாதத்துக்குப் பயன்படுத்தவில்லையெனில் இத்தகைய ஓர் இனவாதப்போரை அவர்களால் நிகழ்த்தியிருக்க முடியாது. எப்போதுமே இலங்கை வாழ் தமிழர்களுக்கு பண்பாட்டு ரீதியாக தங்களை தமிழகத் தமிழர்களோடு அடையாளப் படுத்திக்கொள்வதற்கான தேவை இருந்ததால் இந்த மத ரீதியான சூழ்ச்சியும் நடவடிக்கைகளும் தோற்கடிக்க முடியாதனவாக வளர்ந்துவிட்டன. இன்று இலங்கை அரசினை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது புத்த சாசனங்களும் அம்மதவாதிகளும் தாம். மேலும் ஒட்டுமொத்தமாக நடந்து முடிந்த இன அழிதொழிப்புக்கு அதுர்லியே ரதானாதான் நாம் அறிந்த எல்லா சிங்கள அரசியல்வாதிகளையும் விட முக்கியமான காரணம். இவரது பிரச்சாரத்தால் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கு மேலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தால் இணைந்தனர், தமிழர்களைக் கொன்று குவிக்க. அதுமட்டுமின்றி சமாதான நீரோட்டத்தைச் சேறாக்குவதில் இவரது பங்கு ராஜபக்க்ஷேக்களைவிட மேலதிகமானது. அவரது அடிப்படையான நோக்கம் மண்ணின் ஆதிக்கத்தை மதம் என்னும் பெயரில் தன் கையில் கொள்வது தான்.
இந்த அபாயத்தை தமிழ்ச் சூழலிலிருந்தே நான் புரிந்து கொள்கிறேன். தமிழகத்தில் சாதி எனும் அமைப்பை எதிர்க்க வேண்டியை, கட்டுடைக்க வேண்டிய ஒன்றாக ஒத்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் ஆன்மீகம் என்பதை இந்து மதத்தோடு மட்டுமே இணைத்துப் பார்ப்பதைப் போன்றது இது. அவர்கள் தேசியவாதிகளாகவும் மதவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் ஏன் அரசியல்வாதிகளாகவுமே தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர் என்பதே இதன் அர்த்தம். இந்தியச் சமூகத்தில் மதம் ஒடுக்குமுறையை நிகழ்த்தும் ஒரு வல்லரசாக எவ்வாறு உருக்கொண்டிருக்கிறது என்பதை இங்குள்ள சாதிய அரசியலை புரிந்து கொள்வதன் மூலம் தெளியலாம். அவ்வாறே இலங்கையிலும் மதம் என்பது ஓர் ஆயுதமாக, ஒரு வன்முறை வடிவமாக வார்க்கப்பட்டு அரசியல் ஆதாயத்துக்காக, இனவாதத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் எந்தத் திசையிலிருந்து வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரியும். தீவிரமான மதவாதம் ஒரு துப்பாக்கியை இயக்குதலைவிட வன்முறைப் பூர்வமானது.
குட்டி ரேவதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக