ஒயு-சாமா (Miss Oyu) – நாம் தலைப்பை ஒயு என்றொரு பெண் என வைத்துக்கொள்ளலாம். இது ஒரு ஜப்பானிய திரைப்படம். முக்கோண வடிவ உறவின் போக்குகள் தாம் கதை. ஆனால் ஒரே வரிக்கதை என்றாலும் சுவாரசியத்தையோ கவனத்தையோ மட்டுப்படுத்தாத ஒரு கதை. முதல் காட்சியிலேயே கதை தொடங்குவது தான் இக்கதைத் திரையின் வலு. எந்த இடத்திலும் யதார்த்தத்தின் தரம் பிறழாமல் அழகியலோடும் உறவின் பேதலிப்போடும் கதை நகர்கிறது.
இரு சகோதரிகள் சேர்ந்து தங்கையின் திருமண ஆணைப் பார்க்கப்போகும் ஒரு சம்பிரதாயமான நிகழ்வுடன் கதை தொடங்குகிறது. அக்காவும் தங்கையும் மணமகனைப் பார்க்கப்போகும்போது மணமகன் அவர்களைத்தொலைவில் இருந்து காணும் ஒரு சந்தர்ப்பத்தில் அக்காவைத்தான் மணமகள் என்று அசந்தர்ப்பமாய் நினைத்துவிடுகிறான். இந்த ஓர் அசந்தர்ப்பமான நிகழ்வே கதையின் விதை. படத்தின் தொடக்கத்திலேயே இவ்விதை பார்வையாளரின் மனத்திலும் கதாநாயகர்களின் நடிப்பிலும் விதைக்கப்பட்டு அவ்வாறே அவர்கள் அசைவும் நிகழ்த்தப்படுகிறது. முழுப்படமும் இந்த விதையிலிருந்து முளைவிடும் நேரடியான கிளைகளே.
பல திரைப்படங்களில், படம் ஆரம்பித்து பல காட்சிகளின் நகர்வுக்குப் பின்னும் கதை தொடங்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும். மேலும் ஒரு சிதறிய வடிவம் பெற்று பார்வையாளர்களுக்குச் சோர்வையும் தரும். ஆனால் மிசோகுச்சியின் இப்படம் தெளிவான கதையோட்டத்தைக் கொண்டுள்ளது. இது பெண்களுக்கான ஒரு சினிமாவாகவே இருக்கிறது. அக்கா மீது ஈர்ப்பு கொண்ட மணமகனை தனக்கு ஒவ்வாத ஒரு கணவனாகவே தங்கை பார்க்கிறாள். அவளின் மரணம் வரை அந்த எண்ணம் மாறவே இல்லை. ஆணுடனான உறவில் பெண் ஏற்கும் தீவிரமும் அதற்கான அறச்சிரமங்களும் ஆழமாகப்பேசப்பட்டிருக்கிறது. முக்கோண உறவின் துன்பியல் வெளியினை மேன்மைப்படுத்திப்பேசாமல் தருக்கப்பூர்வமாக அணுகுவதும் அதன் அடித்தளத்தினை கதாப்பாத்திரங்களின் உணர்வுகள் வழியாகத் தொட்டுப்பார்ப்பதும் மிசோகுச்சியின் சிறப்புத்திறன். இக்கதையில் கையாளப்படும் மென்னய உணர்ச்சிகள், வழக்கொழிந்து போனவை இல்லை என்பது நவீன ஊடகங்களின் ஆக்கிரமிப்பைக் கடந்தும் இம்மாதிரியான சுழலுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நமது மனித மனம் மாறாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.
1951 இல் வெளிவந்த இத்திரைப்படம், இன்றும் அதன் நவீனமும் மனித மனத்துடனான பொருத்தப்பாடும் இழக்காமல் இருக்கிறது. இவர் இம்மாதிரியான படக்கருவை எடுத்துக்கொள்வதற்கு அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாக இருக்கலாம். அவரது சகோதரி கெய்சாவாக (ஆண்களின் சமூகக்கூட்டங்களில் பங்கேற்று உரையாட, நடனமாட, இசையமைக்க தயார்செய்யப்பட்ட பெண்களுக்கான ஒடுக்குமுறை வடிவாக) ஜப்பானில் விற்கப்பட்டது அவரின் மனநிலையை முற்றிலும் மாற்றியிருக்கவேண்டும். அவரது தந்தை தாய் மீதும், சகோதரி மீதும் தொடர்ந்து அதிகாரத்தை செலுத்திக்கொண்டேயிருந்ததும் மிசோகுச்சிக்குக் கடுமையான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். வாழ்வியலையும் அழகியலையும் ஒருங்கிசைக்கும் பயிற்சியை தனது வாழ்விலிருந்து இவர் எடுத்திருக்கவேண்டும்
இவர் கதையைப் பின்னிச்செல்வதில் கையாளும் நேர்த்தியும் அழகியலும் எந்த தர சமரசமுமற்றது. இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு அமைதியானதும் திடமானதுமான தமிழ்ப்படத்தை திரையில் காணுவது சாத்தியமா என்பது ஐயமே. குளிர்ந்த பாறைகளுக்கிடையேயான நீரோடையைப் போன்றதொரு சில்லிப்பை அடியாழத்தில் நம்மை உணரச்செய்து கொண்டேயிருக்கிறார். கால எல்லைக்குள் கட்டுப்படாததாக இருக்கிறது இத்திரைப்படம்.
குட்டி ரேவதி
1 கருத்து:
விமர்சனம் அழகாக அருமையாக இருக்கிறது!
கருத்துரையிடுக