நம் குரல்

தமிழகத்தின் ’படிம உரு’ அரசியல்



தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமையைக் கருத்தில் கொள்ளுகையில் ஒரு புனைவுரு செயல்பாட்டை தொடர்ந்து அவதானிக்க முடிக்கிறது. அது மக்களே தயாரித்துப் பரப்பும் படிம உரு வழிபாடுகள் தாம். கடவுளை மறுத்து இயக்கமாற்றிய பெரியாருக்குப் பின்பு, கடவுளின் இடத்தை தனிமனிதர்கள் எடுத்துக்கொண்டனர். வெகுசன மக்களிடம், தனக்கு அளிக்கப்பட்ட, அல்லது தான் எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தைப் பெருக்கிக்கொண்ட சினிமா, அரசியல், இலக்கியம், மதம் போன்றவற்றின் வழியாக தம்மை கடவுளராக வளர்த்தெடுத்துக் கொள்கின்றனர். கிட்டத்தட்ட குறுநில மன்னர்களைப் போல அந்தந்தத் தளத்தை அவர்கள் பேராட்சி செய்கின்றனர். இக்குறுநில மன்னர்கள் மயக்க மருந்தாக மக்களின் குருதியில் இந்த மனித வழிபாட்டு உணர்வை ஏற்றுகின்றனர்.

உதாரணத்திற்கு, திரைப்படக் கதாநாயகர்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் தமது திரைப்படங்களில் காட்டும் கதாநாயகன், சொல்லப்படும் கதை, அவன் சம்பந்தப்படும் ஆபாசங்கள், வன்முறைகள் நியாய அநியாயங்கள் ஆகியவற்றால் தம்மைப்பற்றிய தீவிரப் பதிவுகளை தொடர்ந்து உருவாக்கி, அந்தச் சித்திரங்களை நோக்கியே பார்வையாளர்களை நகர்த்துவதும் அந்த கதாநாயகனின் குணாதிசயங்களை மனப்பதிவுக்குள் செலுத்துவதும் நடக்கின்றது. ஆனால் அந்தக் கதாநாயகன் ஆயிரமாயிரம் பணியாளர்கள் இயங்கும் திரைத்தளத்தை அதற்கான அறம் மீறியும், அதன் சமூக மதிப்பீடுகளை புறக்கணித்தும் அதைத் தன் சுயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றான். அந்தக் கதாநாயகனைப் போற்றி வழிபடும் நிலைக்கு நகர்த்தப்பட்ட ரசிகர்கள், அக்கதாநாயகன் திரைக்குப் பின்னால் அந்தத் திரை வழியாகக் கிடைத்த அதிகாரத்தை எப்படி தனக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை ஒரு போதும் அறிவதில்லை. அறியும் நிலைக்கும் அனுமதிக்கப்படுவதில்லை.

திரைப்படத்துறையைப் போலவே மற்ற துறைகளிலும் நிகழ்ந்துள்ளன. திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் போன்றவர்களும் அரசியலில் கருணாநிதி, மு.க.அழகிரி, ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் போன்றவர்களும் இலக்கியத்தில் சுஜாதா, ஜெயகாந்தன் போன்றவர்களும் இவ்வாறு உருவாக்கப்பட்ட குறுநில மன்னர்களே. இவர்கள் ஏற்படுத்திய விபரீதங்களை ஆராய்வது அவ்வளவு சுலபமானதும் அன்று. ஏனெனில் இந்த பிம்பங்கள் ஒரு பதிவாய் நமக்குள் நிகழ்வதும் அவர்களின் சுயமாய் நாம் அறிவதும் இரு வேறு பிம்பங்கள். ஆனால் நம்மெல்லோருக்கும் ஒரு கற்பனைக் கதாநாயகன் தேவைப்படுகிறான். நமது கற்பனை உலகிற்கு ஊட்டமளித்துக் கொண்டேயிருக்க இத்தகைய முரண்பட்ட பிம்பங்களை நாம் நாடுகிறோம். இவர்களை எந்த வித விமர்சனமும் இன்றி நமது சிந்தனைக்குள் ஏற்றிக்கொண்டு நடைமுறை யதார்த்தத்தை நம்ப மறுக்கிறோம். இத்தகைய கதாநாயகக் குறுநில மன்னர்கள் ஆளும் தமிழகமாய் நம் மாநிலம் மாறியிருப்பதை உணரமுடிகிறது. ஆகவே தான் சமீப காலங்களில் எந்தச் சமூகப் புரட்சியும் தமிழகத்தில் நிகழ்ந்து விடவில்லை. தொலைக்காட்சிகளில், வானொலியில், செய்தித்தாள்களில் என்னென்ன தகவல்கள், உரையாடல்கள், உரைகள் நிகழ்த்தப் படவேண்டும் என இக்குறு நில மன்னர்கள் தாம் தீர்மானிக்கிறார்கள். அவை, நமது மற்ற சமூக வடிவங்களான குடும்பம், மதம், திருமணம், காதக், கல்வி, உடை, உணவு, வாழும் முறை என எல்லாவற்றையும் வடிவமைக்கிறது.


எந்த ஒரு சிறந்த தலைவரும் சமூகப் பிரபலமும் முதலும் முடிவானவரும் இல்லை என்பது தமிழ்ச் சிந்தனை மரபை உள்வாங்கிய எல்லோருக்கும், அதில் ஈடுபடுத்திக் கொண்ட எல்லோருக்கும் தெரியும். இதில் சாதாரண மனிதர்களாகிய நாம் எவ்வாறு நமது சிந்தனையைப் பங்களிக்க முடியும் என்பதை உணரத்தலைப்பட வேண்டுமே அன்றி ஒரு தலைவரின் மலிவான கருத்துச் சுமையை வாழ்வெங்கிலும் இணைத்துப் பார்த்துப் புளகாங்கிதமுறுவதில் எந்த தனிமனித, சமூகப்பயனும் இல்லை.
இத்தகைய வழிபாட்டுருவங்களைத் தகர்ப்பதில் நாம் ஒவ்வொருவரும் மெல்ல ஈடுபடவேண்டியிருக்கிறது. கருத்தாழங்களைத் தொட விடாமல் இந்த ’படிம உருவங்கள்’ சுமைகளாய் மாறிவிடுவார்கள். அந்தப் படிம உருக்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள்? வெளி பற்றிய உங்கள் நம்பகத்தன்மையைக் குலைக்கிறார்கள், மு.க. அழகிரி மதுரை மாநகரின் அழகியலைக் கலைப்பது போல. கதைக்கூற்றின் மைய நீரோட்டமாய் இருக்கும் கதாநாயகனாய் நீங்களும் மாற வேண்டுமென்று நினைக்கும் போது உங்களுக்குள்ளும் ஆபாசத்தையும் வன்முறையையும் திணிக்கிறார்கள். சமூக மதிப்பீடுகள், நீங்கள் சமூகத்துடன் செய்து கொள்ளும் சமரசங்களாலானவை என்று உங்களையும் கட்டுப்படுத்தும் நாவலாசிரியர்களைப் போல. எந்த உண்மையானதொரு சிறந்த ஆளுமையும் இந்தப் பூமியில் ஒரு சிலையாக மாறி விட தன்னையே தான் மறுக்கிறான். மேலும் அவன் அடுத்த மனிதனை நோக்கி, அவன் தான் என்னை விடச் சிறந்தவன் எனக் கை காட்டுகிறான். அத்தகைய சமுதாயத்தில் தான் பொதுவுடைமை உதயமாகும்.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: