நம் குரல்

பனிக்குடம் - நூல் பதிப்பின் வழியாக ஓர் இயக்கச்செயல்பாடு


பனிக்குடம் கடந்த மூன்று வருடங்களாக பெண்ணிய இலக்கியங்களையும் பெண்களின் படைப்பாக்கங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக இத்தகைய பெண்ணிலக்கிய கவனக்குவிப்புச் செயல்பாட்டை படைப்பாக்கச்செயல்பாட்டோடு இணைத்துப்பார்க்கும் பணியில் பனிக்குடம் தீவிரப்பட்டுள்ளது.

தமிழ்ச்சூழலில் பெண்களின் படைப்புகள் பெரிதும் கவனமும் அரசியல் முக்கியத்துவமும் பெற்றுவரும் சூழலில் வெறும் வியாபார முக்கியத்துவத்துடனே மட்டும் அணுகப்படுவதைத் தவிர்க்கவும் பரவலான வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் கொண்டு செல்லவும் பனிக்குடம் முனைந்துள்ளது. பெண்ணியம் என்பது எழுதப்படுவதற்கான தத்துவம் மட்டுமேயன்று. தற்காலத்தொடர்பான இலக்கியங்களையும் பெண்ணியம் தொடர்பான மொழிபெயர்ப்பு மற்றும் மறுபதிப்பு படைப்புகளையும் வெளிக்கொணர இருக்கிறது. மிக அழகாகவும் அர்த்தப்பூர்வமான வடிவிலும் கொண்டுவர இருக்கிறது. பெண்ணிலக்கியங்களையும் பெண்ணியப் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முயற்சியைப் பனிக்குடம் பரந்த அளவில் எடுத்துச்செல்ல இருக்கிறது.

பெண்ணியப் பேச்சை இலக்கியம் அரசியல் உரையாடல் இயக்கம் மூலமே முழுமையானதாகவும் காத்திரமானதாகவும் ஆக்கமுடியும். அதற்கு பெண்ணியத்தளத்தின் வெற்றிடங்களை இனங்கண்டறிந்து அரசியல்படுத்தவும், பெண்ணிய இலக்கியப்பரப்பை விரிவுபடுத்தவும் வேண்டியிருக்கிறது. பெண்ணியத்தளம் பெண்களின் தொடர் ஆக்கங்களான நாவல் கவிதை சிறுகதை கட்டுரைகள் வழியாகத் தீவிரப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இலக்கியத்தளத்தில் ஏற்பட்ட இம்முளைகளை உறுதிப்படுத்தும், விரிவாக்கும், விதமாக பெண்ணியத்தின் ஆழமான உயிரோட்டமான, இதுவரையிலும் கவனிக்கப்படாதிருந்த இலக்கிய வடிவங்களை ’பனிக்குடம்’ மீட்டுக் கொண்டு வரும் செயல்பாட்டில் இறங்கியுள்ளது.

பனிக்குடத்தின் இப்பெண்ணிய இலக்கிய பதிப்பு முயற்சி, வழக்கொழிந்துபோன பெண்ணியப்பாதைகளை மீள்விசாரணை செய்தல், தனித்த சிறப்பான பெண்ணிய முறைமைகள் சார்ந்த கட்டுரைத்தொகுப்புகள், மேலைப் பெண்ணியத்தத்துவங்கள் பற்றிய மொழிபெயர்ப்புகள், பிறமொழி பெண்படைப்பாக்கங்களின் மொழிபெயர்ப்புகள், நவீன வாசிப்புக்குட்படுத்த வேண்டிய மூத்தப் பெண்படைப்பாளிகளின் படைப்புகளின் மறுபதிப்புகள், ஈழப்பெண்களின் புத்துயிர்ப்பு ஆக்கங்கள் என விரியப்பார்த்திருக்கிறது. இதுவரை பனிக்குடம் குட்டி ரேவதியின் பெண்ணீய கவிதை ஆக்கங்ளையும் கு. உமாதேவியின் கவிதை ஆக்கம், ஈழப்புலத்திலிருந்து புத்துயிர்ப்புடன் கவிதை அளிக்கும் தமிழ் நதி, பஹீமா ஜஹான் போன்றோரின் படைப்புகளையும் உருவாக்கித்தந்துள்ளது. ப. சிவகாமியின் உடலரசியல் இந்தியச்சூழலில் இயங்கும் சாதியத்தை மறுக்கும் விசாரணைகளுடன் வந்துள்ளது. குறுகிய காலத்தில் தனது சாத்தியப்பாடுகளை தேர்ந்தெடுத்த படைப்புகளால் நிரூபித்துள்ளது.

மேலும் ’பனிக்குடம்’ என்னும் பெண்ணிய இலக்கியச்சிற்றிதழையும் புதிய பெண்ணிய இலக்கிய வகைக்கான ஊடகமாகவும் உரையாடல் வெளியாகவும் தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறது. இதனால் இளம் பெண்படைப்பாளிகளின் சிந்தனை வெளியாகவும் படைப்பாக்க வெளியாகவும் அது தன்னை மாற்றிக்கொண்டது. பெண்ணியத் தளத்தின் வெற்றிடங்களை இனங்கண்டறிந்து அரசியல்படுத்தவும் பெண்ணிய இலக்கியப்பரப்பை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

2009 முதல் பனிக்குடம், தீவிரமான பதிப்பகமாக இயங்கிவரும் ஆழிப்பதிப்பகத்துடன் கைகோர்த்து இதே பனிக்குடம் என்ற சிறப்புப்பெயர் மற்றும் முத்திரையுடன் வெளிவர இருக்கிறது. பனிக்குடம் பதிப்புகளை ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட இருக்கிறது. பெண்ணியப் பதிப்பாசிரியர்கள் ஒரு குழுவாக இப்புத்தகத்தயாரிப்பில் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்புதிய நூல்களுக்கான வெளியீட்டு விழாக்களும் விவாதக் களங்களும் திறக்கப்பட இருக்கின்றன. இலக்கியம் – இயக்கம் – நிபுணத்துவம் என முப்பரிமாண வடிவில் இப்புத்தகத்தயாரிப்புப் பணியை பரிணமிக்கச் செய்ய இருக்கிறோம். கல்லூரிகள், அமைப்புகள், இயக்கங்கள் என பெண்ணிய முளைகளுக்கான விளைநிலங்களாக இருக்கும் இடங்களிலெல்லாம் இந்நூல்கள் பெண்ணியத்தின் பிரச்சார கருவிகளாக பயன்படுத்தப்பட இருக்கின்றன.

நூல்கள் திறந்து தரும் உலகங்களுக்குள் பயணிக்க வாருங்கள்!
குட்டி ரேவதி

6 கருத்துகள்:

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

மகிழ்வாக இருக்கிறது. எனது வாழ்த்துக்கள் !

நேசமித்ரன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி

வாழ்த்துக்கள்

உங்கள் தளம் குறித்து அறிந்ததில் புதையலை பார்த்த சந்தோசம்

நிறைய சொல்லக் கேட்டிருக்கிறேன்

இரத்தினபுகழேந்தி சொன்னது…

வாழ்த்துகள் ரேவதி சிரந்த நூல்களை வெளியிட வாழ்த்துகள்

வல்வை சகாறா சொன்னது…

வாழ்த்துகள் குட்டிரேவதி.
உங்களைப்பற்றி எங்கள் தாயகக் கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்களின் வாயிலாகவும், தோழி தமிழ்நதியூடாகவும் அறிந்துள்ளேன். எதிர்வரும் காலங்களில் பனிக்குடத்தின் இலக்கியப்பயணம் எல்லைகளைக் கடந்து பயணிக்க வாழ்த்துகள்.

குட்டி ரேவதி சொன்னது…

எம். ரிஷான் ஷெரீப், நேச மித்ரன் மற்றும் இரத்தின புகழேந்தி எல்லோருக்கும் எனது நன்றிகள்.

வல்லவை சகாறா அவர்களே, புதுவை இரத்தினத்துரைக்கும் தமிழ்நதிக்கும் எனது நினைவார்ந்த நன்றிகள்!

பனிக்குடம் பதிப்பக இயக்கத்தில் தன்னையும் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டவர் தமிழ்நதி!

பனிக்குடத்தை உங்கள் தோழியர்க்கும் அறிமுகப்படுத்துங்கள்!
நன்றியுடையவளாய் இருப்பேன்.

குட்டி ரேவதி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.