நம் குரல்
ஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி - 2
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வடிவில் மதம் என்பது பெரும் ஆயுத வடிவமாகவும் அரசியல் வெளிப்பாடாகவும் இருந்துள்ளது. ஏன் பெரிய போர்களுக்குக் கூட காரணமாக இருந்திருக்கிறது. இந்தப் பத்திகள் வழியாக இலங்கையைப் பொறுத்தவரை எப்படி மதம் அரசியல் ஆதிக்கம் மிக்கதாக உள்ளது என்பதை ஒரு பகுத்தாய்வு செய்ய விரும்புகிறேன். இன்று ஈழப்போராட்டம் அடைந்துள்ள நிலைக்கான காரணங்களை அறிவதற்கான ஒரு சிறிய மீளாய்வு இது. இதுபோலவே மொழிப்போர், தொன்ம ஆதாரங்கள், தமிழக அரசியல், இந்திய அரசின் நிலைப்பாடு, சிங்கள அரசின் தந்திர நடவடிக்கைகள் என பல திசைகளிலிருந்து இவ்வினவொழிப்பு நடந்தேறியதற்கான ஆய்வையேனும் நாம் செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். வெறுமனே உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இப்பிரச்சனையை அணுகிவிட முடியுமென்றோ, சிங்கள அரசு மற்றும் அதற்கு உதவியாக இருக்கும் நாடுகளின் சூழ்ச்சித்திறன்களை வெல்ல முடியுமென்றோ நான் நினைக்கவில்லை. ஈழத்திற்கு ஆதரவாக இனவாதத்திற்கு எதிராக உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் உண்மையில் நடந்து கொண்டிருப்பது என்ன என்பதை ஒரு சிலரேனும் கருத்தியல் ரீதியாகப் பகுத்தாய வேண்டியிருக்கிறது.
மதம் என்பது தனிமனிதனுக்கானது; அரசியலுக்கானது அன்று. அரசியலும் மக்களுக்கானதே அன்றி மதத்தின் ஆதாயத்துக்கானது அன்று. ஆனால், இலங்கையில் சிங்கள-பெளத்த பிணைப்பு என்பது 1972ம் ஆண்டிலிருந்தே இலங்கையின் அரசியல் சட்ட அமைப்பில் சிறப்பான மரியாதைகளைப் பெற்றுவந்துள்ளது. இதனால் தாம் இலங்கையின் எல்லா பெளத்தமத சங்கங்களும் அரசியல் சட்ட அமைப்பினூடாகவே அரசியல் செயற்பாடு மேற்கொள்வதற்கு ஏதுவானது. 1986-ம் ஆண்டு, இருபதுக்கும் மேலான பெளத்த அமைப்புகள் இணைந்து ”தாய்நாட்டுப் பாதுகாப்புப் படை” என்பதை உருவாக்கின. இந்த அமைப்பின் பெயரிலேயே அது என்ன நோக்கத்திற்கானது என்பது புலனாகும். அந்த நாடு, அவர்களுக்கான தாய்நாடு என்பதான அர்த்தம் கொள்கிறது. இவர்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துச் செல்வதற்கான ஒரு பெருவழியாக இந்த அமைப்பு இருந்தது. இவர்கள் எல்லோரும் ஓர் அமைப்பாக ஒன்றிணைந்தது இனரீதியான மாகாண சபைத்தீர்வினை எதிர்ப்பதற்காகவே.
இந்த அமைப்பு 1986-ல் வெளியிட்ட அறிக்கை இவர்களின் உள்நோக்கங்களையும் அந்த அறிக்கையில் அவர்கள் பிரயோகித்த வார்த்தைகள் அடிப்படையான அவர்களின் எதிர்ப்புணர்வையும் பட்டவர்த்தனமாக்குகின்றன. சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் தலையீட்டையும் சமாதானப் பேச்சுவார்த்தையையும் ’நமது தாய்நாட்டைப் பிரிப்பதற்கான சூழ்ச்சி’ என்று முறையிட்டனர். அதுமட்டுமல்லாது இந்த மாகாண சபைத்தீர்வு கூட ’நாட்டைத்துண்டாடும்’ சதி என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டனர். அவர்கள் ஈழ இனவாதத்தையும் ’ஈழக் கொலைகார வாதம்’ என்றே குறிப்பிடுகின்றனர். அம்மண்ணின் அடிப்படையான உரிமைகள் சம அளவில் கொடுக்கப்படாதிருந்த நிலையில், மேற்குறிப்பிட்ட, ’ஈழக் கொலைகார வாதம்’ என்ற சுட்டுதலுடன் அந்நாட்டின் எல்லா வளங்களும் சமமாக ஏற்கெனவே பிரித்தளிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடுவதும் நகைப்புக்குரியது. மேலும் அந்த அறிக்கையில் தமிழர்களின் நிலையினை குறிப்பிடும் எந்தக் கருத்து வாதமும் இல்லை.
மாகாண சபைத்தீர்வை அவர்கள் எதிர்ப்பதற்காகக் கூறிய காரணங்கள் இரண்டு: ஒன்று, அது ஒரு தேசத்துரோக நடவடிக்கை. மற்றொன்று, அது ஓர் ஈழக் கொலைகார வாதம். மேலும் தாய்நாட்டுப் பாதுகாப்புப் படை, தங்கள் இலட்சியங்களாக வலியுறுத்தும் இறையாண்மை என்பதும் ஒற்றுமை என்பதும் அதற்கான இலச்சினைகளும் அர்த்தப்படுத்துவது, பெளத்தத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்று பட்டிருக்க வேண்டும் என்பதே. அவர்களின் இறையாண்மை என்பது கூட முழு அதிகாரமும் பெளத்தத் தலைமையை மையமாக்கியதாக இருக்கவேண்டும் என்பதே. இந்தக் கட்டத்திலிருந்தே தொடர்ந்து அத்தாய்நாட்டுப் பாதுகாப்புப் படைக்கு ஆதரவான பிரச்சாரங்களையும் போரட்டங்களையும் ஓர் இராணுவம் போலவே பெளத்த சங்கத்தினர் செயல்படுத்தி வந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சிங்கள அரசே கூட இந்த பெளத்த அமைப்பின் ஆதரவைக் கோரிப்பெற வேண்டிய தேவை இருந்துவந்துள்ளது.
தா.பா.ப-வின் இரண்டாவது அறிக்கை அவ்வியக்கத்தினை நிர்வகிக்கும் முறையைக் குறித்ததாக இருக்கிறது. மூன்றாவது அறிக்கையின் வழியாக அவர்கள் சிங்கள அரசு, தமிழீழ வாதிகளுடன் பேச்சு வார்த்தைக்குச் செல்வதையே கூட கண்டித்தனர். ஏக சத்தா, அதாவது; ஒரு குடையின் கீழ்’ என்ற சிங்கள–பெளத்த மேலாதிக்கத்தீன் கீழ் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறியது மூன்றாவது அறிக்கை. ஆனால் இந்த ’ஒற்றுமை’ என்பதும் ‘இறையாண்மை’ என்பதும் ஒரு மாய வாதத்தைப் பேச்சளவில் குறிப்பிடும் சொற்களே. அல்லது அவற்றிற்கான அர்த்தங்கள், ’எங்களின் கீழ் நின்று செயல்படுங்கள் என்பதே’. மேலும், மரபார்ந்த ஒற்றுமை, இறையாண்மை போன்றவற்றை வேண்டும் தேசத்தின் கொடியும் பாடப்படும் தேசிய கீதமும் சிங்கள இனத்தினை மட்டுமே நாட்டோடு இணைத்துப்பார்ப்பதாக இருந்தது. (இது இன்னொரு விவாதத்திற்கானது.) ஆக, கருத்தியல் அளவில், உடல், பொருள் அல்லது எல்லா இருப்பு சார்ந்த அளவிலும் இனவாதத்தை மக்களிடம் தொடர்ந்து திணித்துக் கொண்டே இருந்தனர். 1980-களில் நிகழ்ந்த இவை தாம் இன்று இனவாதம் இத்தகைய பேருரு எடுப்பதற்கு பெரிய அளவில் அடிப்படையாகவும் அரசியல் காரணியாகவும் இருந்து வந்துள்ளன.
பெளத்தமத சங்கங்களின் இத்தகைய அரசியல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருப்பது அவர்களின் அதிகார விழைவும் அதிகாரத்தின் மீது இருக்கும் பேராசையுமே. ஏற்கெனவே அவர்களின் சங்கங்களுக்குள்ளேயே இம்மாதிரியான, அதிகார கட்டமைப்பிற்கான நடவடிக்கைகளுக்குப் பெருத்த முக்கியத்துவம் இருந்து வந்திருக்கின்றது. அவற்றில் சொத்துக்களைச் சேகரிப்பதும், உடைமைகள் தலைமுறைகளூடே வழிவழியாகச் சென்று சேர்வதைக் கண்காணிப்பதும் முதன்மையானவையாகும். மண்ணின் மீதான அதிகார ஈர்ப்பை அவர்கள் பெளத்த சங்கங்களிலிருந்தே உருவாக்கிக்கொள்கின்றனர். சொல்லப்போனால் பெளத்த குருமார்களே அந்நாட்டை ஆள்கின்றனர். என்றென்றும் ஆள விரும்புகின்றனர். உண்மையில் பெளத்தம் சொல்லும் அறத் தத்துவங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வகையான பொருத்தப்பாடும் இல்லை.
குட்டி ரேவதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
its an excellant ariticle on the so called budhism and its philosophy grt revvathy . wish uy all the best
i am very happy to knw that u r having pen and the sword
bhaamini
குட்டி ரேவதி,
இந்தக் கட்டுரை தவிர்த்து ஒரு விடயம்.
...
சில நாட்களுக்கு முன் தான் 'உன்னதம்' இதழை வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அதில் நீங்கள் எழுதும் பத்திகள் -குறிப்பாய் ஈழத்தமிழர் விடயத்தில் தமிழக் எழுத்தாளர்களின் தப்பித்தலை பற்றி எழுதியது- முக்கியமானதாக எனக்குத் தோன்றியது. 'உன்னதம்' தனிச்சுற்றுக்காய் மட்டுமாய் இருப்பதால் அதிகம் பேர் வாசிக்கும் சந்தர்ப்பம் இல்லையெனவே நினைக்கின்றேன். இயலுமாயின் 'உன்னதம்' போன்ற அச்சு இதழ்களில் நீங்கள் எழுதுபவற்றை, உங்களது வலைப்பதிவிலும் பகிர்ந்து கொள்வீர்களாயின் நன்றாக இருக்கும்.
அன்புடன்,
டிசே
நன்றி, அதீனா. பெண்களின் எழுதுகோல் வாளாகவும் உருமாற்றம் பெறுகிறது. சமூகத்தேவை தானே அது, அதீனா?
டிசே தமிழன் அவர்களுக்கு,
தங்கள் ஆலோசனைக்கு நன்றி. மகிழ்ச்சி.
விரைவில் அப்பத்திகளை வலைப்பதிவிற்கும் தருகிறேன்.
கருத்துரையிடுக