நம் குரல்

மழைச்சாலை



விரல் நடுக்கத்தில் நரம்பு அதிர மழை அவிழ்கிறது. மழை அறுக்க முயலும் வாகன ஓட்டமோ தெருவில் ஒரு நதியாகப் பாய்கிறது. அதில் கலக்காது மிதக்கும் மின்சார இரத்தம் ஒரு கலவரத்தை எழுப்பாது மயக்கத்தையூட்டுகிறது. என்ன சொல்ல முயன்றும் வார்த்தை அகப்படாத குளிரால் நீரின் கயிறு உடலைக்கட்டுகிறது. ஓங்கி விழுந்த சரடின் அடியை மண்டையில் வாங்கிக்கொண்டு பொறி கலங்கி எழுந்து நடப்பவரே போல் உடலை முன் சாய்த்து சாலையின் மழையை பின்கட்டி இழுத்துச்செல்கின்றனர் பாதசாரிகள். சூனியம் தழுவிய வெயிலின் பருவத்திலிருந்து அடுக்கு சிமெண்ட் மஞ்சரிகளை வானத்தின் கோலாகலம் நோக்கும் மொட்டை மாடிகளாக்குகின்றது. காரை தலைகீழாய் புரட்டும் நீரின் முரட்டுக்கரங்கள் தாம் சைக்கிளின் சக்கரக்கம்பிகளில் கூந்தல்மயிராய் சிக்கிக் கொள்கின்றன. எச்சில் ஒழுகும் கீழுதடுகளுடன் நீருக்கிள்ளிருந்து எழும்பி வருகின்றன எருது வகை வாகனங்கள். வர்க்கம் மறக்கும் பொழுதில் மழை ஒரு சூடான தேனீராய் மாறிவிடும் அழகைக்கொள்கிறது. பின் விடாது வருடிக்கொடுக்கும் ஒரு செல்ல நாயாயிற்று.

குட்டி ரேவதி

4 கருத்துகள்:

Ayyanar Viswanath சொன்னது…

வருக

நாமக்கல் சிபி சொன்னது…

வருக வருக!

கேள்விப்பட்டிருக்கிறேன்! இப்பதான் உங்க வலைப்பூ பக்கம் வரேன்!

Unknown சொன்னது…

ஒரு குறும்படம் பார்க்கும அனுபவம்.
வசன கவிதை நன்றாக இருக்கிறது.

// மழை அறுக்க முயலும் வாகன ஓட்டமோ தெருவில் ஒரு நதியாகப் பாய்கிறது. அதில் கலக்காது மிதக்கும் மின்சார இரத்தம் ஒரு கலவரத்தை எழுப்பாது மயக்கத்தையூட்டுகிறது//

”கலக்காது மிதக்கும்” சூப்பர்.

//காரை தலைகீழாய் புரட்டும் நீரின் முரட்டுக்கரங்கள் தாம் சைக்கிளின் சக்கரக்கம்பிகளில் கூந்தல்மயிராய் சிக்கிக் கொள்கின்றன//

அதீத கற்பனை.வேறு ஒரு படிமம்?

வாழ்த்துக்கள் மேடம்.

குட்டி ரேவதி சொன்னது…

நன்றி, அய்யனார்! முத்து மீனாள் நலமா?

நாமக்கல் சிபி, கே.ரவிஷங்கர் ஆகியோருக்கும் நன்றி.
கவிதை வாசிக்கப்படுவதும் கருத்துரைக்கப்படுவதும் மன மகிழ்ச்சியைத் தருகிறது.