நம் குரல்

உயிர்நிலம் - 1

அதிகாலையில் அந்தத் தொடர்வண்டி நிலையம் தூக்கச்சடவில் இருக்கும் குழந்தையைப் போல நச்சரிப்புகளுடன் இருப்பதாகப் பட்டது நீலவேணிக்கு. தன்னுடைய பெட்டிகளை இடம் தேடி வைத்தப் பின் படிப்பதற்கென்று சில நூல்களை மட்டும் வெளியே வைத்துவிட்டு அமர்ந்தாள். இன்னும் நாற்பத்தியெட்டு மணி நேரம் அந்தத் தொடர்வண்டியில் பயணம் செய்வது குறித்து அலுப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. வானூர்தியில் பயணச்சீட்டு கிடைக்காததால் இந்தப் பயணம். தன் தொழில் நிமித்தமான ஒரு நேர்காணலுக்கான தேதியில் அவள் சரியாகச் சென்று சேர வேண்டியிருந்ததால் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு தொடர்வண்டியில் பயணப்பட்டாள். வண்டி நகரத்தொடங்கியது. பருவம் ஒன்றும் மோசமில்லை. இனிமையான குளிர் காற்று சன்னலோரம் சிறகடித்துக் கொண்டே இருந்தது, மனதிற்கு இளைப்பாற்றுவதாக இருந்தது. கோடை வெயிலில் இதே தொடர்வண்டியில் பயணம் செய்யும் போது கூரையின் வழியாக வெப்பமே மழையைப் போல பெய்துகொண்டிருக்கும். நல்லவேலையாக ஜன்னலோரப் பயணம்.


அவளுக்கு எதிரே முப்பது வயது மதிக்கத் தக்க ஓர் ஆண் அமர்ந்து நீண்ட நேரமாகக் கண்மூடி அயர்ந்திருந்தான். வேணிக்கு விசித்திரமாகப் பட்டது. வண்டிப் பெட்டிகளில் இன்னும் கூச்சல் ஓயவில்லை. அங்கும் இங்குமாக ஆட்கள் நகர்வதும் அடுத்தவர் இருப்பின் கவனமின்றி உரையாடல் நிகழ்த்துவதுமாக எல்லா அறைகளும் இணைந்து ஒரே வீடாக ஆகிக் கொண்டிருந்தது. அதற்குள் தனக்கு அருகே இருந்த நான்கு பேரைக் கொண்ட ஒரு வட இந்தியக் குடும்பம் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத் தொடங்கியிருந்தது. ஒவ்வொரு பொட்டலமாய்ப் பிரித்து எல்லோரும் பரிமாறிக் கொள்ளத்தொடங்கியிருந்தனர். ஒவ்வொரு பொட்டலத்தையும் அவர்கள் பிரிக்கும் போதும் ஒவ்வொரு வகையான வாசனை அங்கு பரவியது. பெட்டியில் இருந்த எல்லோரும் தங்கள் கடைக்கண்களால் அவர்களின் உணவு வகைகளை நோட்டமிட்டனர். தங்களுக்கும் ஏதோ உண்ண வேண்டும் போல உணர்வு ஏற்பட்டது போலும். வண்டியில் விற்றுக் கொண்டு வரும் ஏதேதோ நொறுக்குத் தீனிகளையும் பொழுதைப் போக்கும் உணவு வகைகளையும் வாங்கி வயிற்றை ஆற்றினர். இப்பொழுதும் எதிரே இருந்தவன் அதே போல கண்மூடி அமர்ந்திருந்தான்.


அவனை நிதானமாக நோட்டமிட்டாள் வேணி. அவன் அணிந்திருந்த வெங்காய நிறப் பருத்திச் சட்டையினூடே மார்புக்குள் நெரிந்து கொண்டிருந்த மயிர்கள். சிறிதாய் தாடி வளர்த்திருந்தான். தலைமுடி அக்கறையில்லாமல் பறந்துகொண்டிருந்தது. அடர்த்தியான புருவம் செதுக்கப்பட்டது போல் வரையப்பட்டிருந்தது. முகத்தில் ஓயாத சிரிப்பு என்பது அந்த மெளனமான நிலையிலும் தென்பட்டது. வேணி எழுந்து கழிவறைக்குச் சென்று தன் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். நூல்களைப் படிப்பதற்கு முன்பான ஆயத்தங்கள் மன அளவிலும் உடல் அளவிலும் அவளுக்கு நிறைய தேவைப்படும். முகம் கைகால்களை ஈரப்படுத்திக் கொள்வாள். படிக்கும்போது ஊடே தின்று கொண்டிருப்பதற்கு கடலை அல்லது பொரி போன்றவற்றை அருகில் வைத்துக் கொள்வாள். கிட்டத்தட்ட உடல் முழுதும் புத்தகங்களிலிருந்து சொற்களை வாங்கிக் கொள்ளத் தயாராகிவிடும். இதற்குப் பின் தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை இருந்த இடம் விட்டு அகலாம்ல் அவளால் வாசிக்க முடியும். தொடர்வண்டியின் கழிப்பறையில் கண்ட தன் முகம் ஏதோ ஒரு கிராமத்துப் பெண்ணின் முகம் போலவும் அவள் இடையறாத அலைக்கழிப்பில் இருப்பது போலவும் சட்டென்று நினைவுக்கு வந்து மறைந்தது.


தன் இருக்கைக்கு வந்து அமரும்போது எதிரில் இருந்த அந்த ஆள் விழித்திருந்தான். அவள் தன் இருக்கையில் விட்டுச் சென்ற புத்தகங்களை கையில் எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான். அது அவளுக்கு கொஞ்சமாய் எரிச்சலைக் கொடுத்தாலும் அவளுக்கு அவனைப் பிடித்துப் போயிருந்தது.


‘மன்னிச்சுக்குங்க, இஸபெல் ஆலண்டேவா...கைகளைக் கட்டுப்படுத்த முடியல?’

உரையாடலை இவள் ஆரம்பிக்கவேண்டியதில்லை.

‘என்னடா, ஒரு ஆம்பிள பெண் எழுத்தாளர வாசிக்கிறாருன்னு நினைக்கிறீங்க இல்லையா?’ சிறியதாய் சிரித்தாள்.


‘இவங்களோட தீவிர ரசிகன் நான். இவங்களோட இவா லூனா படிச்சிருக்கீங்களா? கதைய அடுத்தடுத்து மாற்றி அடுக்கிக் கொண்டே போவாங்க. இவங்க தன்ன ஒரு கத சொல்லின்னு சொல்றாங்க. என்னைய கேட்டா கதைய நிகழ்த்துறவங்க. உண்மைக்கும் புனைவுக்கும் இடையில வித்தியாசமே இல்லன்னு நம்பவச்சிருவாங்க’


பொதுவாக வேணிக்கு அதிகமாகப் பேசும் ஆண்களைப் பிடிப்பதே இல்லை. உலகின் எல்லா மூலை முடுக்கிலும் எந்த விதத் தயக்கமுமின்றி நுழையக்கூடிய ஆண்களால் தங்கள் அறிவு வெளிப்பட வெளிப்பட பீற்றிக் கொள்வதில் என்ன இருக்கிறது? என்று தோன்றும். ஆலெண்டேவின் நூல்கள் அவளை அவனுடன் நெருக்கமாக்கின. தன்னை மனோகர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான். மனோ என்றே கூப்பிடுங்கள் என்று சகஜமானான். பாம்பைப் பழக்கும் இனக்குழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அத்தகைய இனக்குழுக்களை நாடு முழுதும் தேடி அலைந்து அவர்களுடன் வசித்து அம்மக்கள் கையாளும் தொழில்நுட்பங்களைக் கண்டறிவதுமாக இருக்கிறான் என்று கூறினான். பேசும்போது தெளிவான உச்சரிப்பை ஏற்படுத்த விரும்பிய முயற்சியில் முகம் ஏதோ விநோதமான களையைத் தந்தது.

இருவரும் ஒன்றாகவே வந்து வண்டியில் ஏறியது போல ஒன்றாக உண்டனர். ஒன்றாகத் தேநீர் வாங்கிப் பருகினர். ஒருவரையொருவர் இணக்கமாக்கிக் கொண்டனர். கடந்த காலம் பற்றிய நிகழ்வுகளையும் சென்று சேர விரும்பிய இடம் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். உரையாடல்களுக்கிடையே இருந்த மெளனம் கூட ஒருவரையொருவர் முழுவதுமாக அறிந்திருந்த இருவருடையதாக இருந்தது. பொழுது நகர்ந்து நாளின் எல்லையைத் தொட்டது. இரவு என்பது முற்றிலும் தனக்கேயானது என்பதைப் போல ஓடிக்கொண்டிருந்தது வண்டி. உறக்கத்தின் போது நழுவி கீழே விழுந்த போர்வையை அவன் இழுத்துப் போர்த்திவிட்டு உறங்கச் சென்றான் என்பதை அரைத் தூக்கத்திலும் கவனித்தாள். கண்மூடிய போது அவளை ஒரு கனவு அழுத்தியது. அவள் மல்லாக்கப் படுத்திருக்கத் தடிமனான பாம்பு ஒன்று அவள் தலையிலிருந்து மெதுவாக அவள் மீது கீழ் நோக்கி நகர அவள் எந்த ஒரு தருணத்திலும் பாம்பின் மூச்சுடன் தன் மூச்சு உரசி பாம்பைச் சீண்டாமல் இருப்பதற்காக தன் மூச்சை அடக்கி அது, கால் வழியாக வெளியேறும் வரை காத்திருந்து அது நகர்ந்ததும் பெருமூச்சிட விழித்துக் கொள்கிறாள்.


மறுநாள் காலை அவளுக்கு முன்பாகவே எழுந்திருந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தான் மனோ. அவள் எழுந்ததும் மென்மையாக சிரித்துவிட்டு, காலை உணவு வாங்கி வைத்திருப்பதாகக் கூறிவிட்டுத் தொடர்ந்து படிக்கத் தொடங்கினான். பெட்டியில் இருந்தவர்கள் தொடக்கத்தில் இருவரின் நடவடிக்கைகளையும் அந்நியர்களைப் போல கவனித்தனர். அவ்விருவரும் தம் உலகில் முற்றிலுமாகத் தொலைந்தப் பின் அவர்களை அப்படியே மறந்து விட்டனர்.


மனோ பேசும்போது கண் நோக்கிப் பேசினான். தன்னையே முன்வைக்கும் குணமழிந்து எல்லோரின் இருப்பையும் பொருட்படுத்தியதான எண்ணங்களே அவன் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்ததாகப் பட்டது. அவளுடன் பேசுகையில் அவள் உடல் மீறிய உரையாடலையும் அதே சமயம் அவள் உடலைப் பொருட்படுத்திய ஒரு கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தான். அவள் அவனை கவனிக்காத சமயங்களில் அவன் தன்னை உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றானோ என்று தோன்றினால் அவன் நன்கு உறங்கிக் கொண்டிருப்பான். இப்படி இருநாட்களும் திளைப்பாகவும் விழிப்பாகவும் இருந்தது. அவள் உடல் ஒரு காட்டைப் போல அவள் வாழ்க்கையினும் பெரிதாக மாறிக் கொண்டே இருந்தது. கட்டறுந்த கொடிகளாய் அவளுடைய உணர்ச்சிகள் மரமேறின. மரங்களின் தடித்த அடிமரங்கள் வெளிப்படுத்த முடியாத ரகசியங்களுக்குள் புதைந்திருந்தன. மண்ணையும் உயிரையும் இணைக்கும் உடலுக்குள் கூக்குரலிட்டுச் சிறகடிக்கும் பறவையின் உணர்வைத்தந்துகொண்டிருந்தான். அடுத்த இரவும் வந்தது.


கழிவறைக்குச் சென்று திரும்பியவள் மனோ பெட்டியின் நுழைவாயிலில் காற்று அவன் தலைமுடியை களியாட்டம் கொள்ளுமாறு நிற்கக் கண்டாள். புன்னகைத்தவாறே இவளும் சென்று அவனருகில் நின்றாள். எதிரே நிலவு வானில் நகர்ந்து கொண்டிருந்தது. சாம்பலாய் பூத்திருந்த வானில் நிலவு வெள்ளியாய் மின்னியது. அதுவும் வண்டிக்கு இணையாக வேகமாய் ஓடியது போலவும் தோன்றியது. மலைத் தொடர்கள் பின்னணியில் கருமையாய் உயர்ந்திருந்தன. குளிர் காதருகில் காற்றாய் கீறியது. தனது துப்பட்டாவை சுழற்றிப் போர்த்திக் கொண்டாள். இருவரும் பேசாமலேயே மெளனமாய் நீண்ட நேரம் அங்கேயே நின்றாற்போல இருந்தது. ’உள்ள போலாமா?’ என்று கேட்டாள். அந்தக் கூட்டத்துக்குள்ள ரொம்ப நெருக்கடியா இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் நிக்கலாமே?’ என்றவன் அவளின் இடது கையைப் பற்றி அவளை அருகிழுத்து நெஞ்சிலும் இதழிலும் முத்தமிட்டு அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். இவள் அவனை அருகிழுத்து இதழில் மீண்டும் முத்தமிட்டாள். இதழ் கொஞ்சம் நுங்கைப் போல சுவைத்தது. அருகில் அணக்கம் கேட்க தோள்பக்கம் திரும்பினாள். ஓர் ஏழைப் பெண் கையில் குழந்தையுடன் அருகே ஒரு சிறுமி, அவளின் மகளாக இருக்க வேண்டும், ஒரு புறம் அழுகிய கொய்யாவை வாயடைத்துக் கடித்துக் கொண்டிருக்க இரந்து நின்றனர். இருவரும் விலகிக் கொண்டனர் வெட்கம் நிறைந்த புன்னகையுடன். *

கருத்துகள் இல்லை: