நம் குரல்

இதழ்களின் செய்தி


முக்கியமான சில பத்திரிகைகளையும் செய்தித்தாள்களையும் தவிர மற்றவற்றைப் படிப்பதைக் குறைத்துக் கொண்டே வருகிறேன். ஏனெனில் அவற்றின் பின்னுள்ள நம்பகத்தன்மை எனக்குக் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் இது தான் சம்பவம் என்று உரைக்கப்பட்ட செய்தியின் பின்னால் மறைந்து கிடக்கும் உண்மை மிகவும் தாமதமாகக் கிடைக்கிறது. ஆகவே எந்தச் செய்தியின் மீதான எனது நம்பகத் தன்மையும் முற்றிலுமாக எனக்கு இல்லாமல் ஆகிவிட்டது. அல்லது செய்தியின் வரிகளுக்கிடையே நான் வேறொன்றை வாசிக்கும் கண்களை வளர்த்துக் கொள்வதில் முனைந்திருக்கிறேன்.

காதலர் தினத்தை எதிர்த்து இந்து மக்கள் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது தினமணியில் வெளியான செய்தி. இன்றைய யதார்த்தத்தில் சாதிக்கலப்பு நடைபெறும் சாத்தியம் அதிகமுடையது காதலர் திருமணத்தில் தான். ஆகப்பட்ட வழிகளிலெல்லாம் இதை தடுத்து விட்டால் இந்து மதத்தின் சனாதனத்தைக் காப்பாற்றி விடலாம் இல்லையா?


பொதுவாகவே மஹாஸ்வேதா தேவி முதல் அருந்ததி ராய் வரை, ஏன் இந்தியர்களாக அறியப்பட்ட உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கூட உலகப்பொது அரங்கில் இந்தியப் பிரச்சனைகளைப் பேசும் போது அவற்றின் மையமாகவும் மூலமாகவும் சாதியமைப்பு இருக்கிறது என்று பேசத் தயங்குகிறார்கள். ஏனெனில் அவர்களாக எழுத்தாளர்களாக எழுந்து வந்ததெல்லாம் மேல் சாதித்தளத்திலிருந்து தானே! கிரிஷ் காசரவல்லி என்ற முக்கியமான கன்னட திரை இயக்குநரிடம், ‘நீங்கள் பொதுவாக மற்றவர்களிடம் விரும்பாதது என்ன?’ என்ற கேள்வியை முன்வைத்த டெஹல்கா பத்திரிகையிடம், ‘மற்றவர்களிடம் காணப்படும் சாதி குறித்த முற்சாய்வு நிலைகள்’ என்று கூறியிருப்பதே கூட எனக்கு அவரின் நுண்மாண் நுழைபுலம் என்று வியக்கத் தோன்றுகிறது.


சென்ற வார ’த வீக்’ பத்திரிக்கையின் முகப்புக் கதை 95 வயது நிறையும் குஷ்வந்த் சிங் பற்றியது. நிறைந்த பாலியல் சுகங்களுடனும் பெண்களுடனான அவரது உறவுகளையும் தூக்கிப் பிடித்த கதை. 95 வயது நிறைந்த எழுத்தாளர் தன் படைப்பாற்றலுக்குப் பின் ஆதாயமாக்கிக் கொள்வது இவை மட்டும் தானா என்ற சலிப்பு தோன்றுகிறது.


தினமணியில் ஞாயிறு தோறும் வரும் புதிய பகுதி ‘தமிழ்மணி’ என்பது. சில மாதங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க ஒரு பகுதி. தமிழ் மொழியினை நுணுகி ஆராய்ந்த மரபார்ந்த படைப்பாளிகளையும் நவீன படைப்பாளிகளையும் அதே சமயம் நவீன படைப்பாளிகளையும் பற்றிய குறிப்புகளாகவும் பத்திகளாகவும் வெளிவருவது அரிய தகவல்களை தருவதுடன் இன்றைய காலத்துடனான பொருத்தப்பாடுகளையும் உணர்த்துகிறது.


மூலை முடுக்கெல்லாம் உண்மைகளையும் சத்தியங்களையும் மொழிவது போய் எங்கோ மூலை முடுக்குகளில் மட்டுமே அவை காணக் கிடைப்பதாய் பத்திரிக்கைகள் ஏன் மாறிவிட்டன?
குட்டி ரேவதி

2 கருத்துகள்:

Muruganandan M.K. சொன்னது…

"செய்தியின் வரிகளுக்கிடையே வேறொன்றை வாசிக்கும் கண்களை வளர்த்துக் கொள்வது"
நீங்கள் சொல்வது சரி.
அது எப்பொழுதும் அவசியம்தானே?

Unknown சொன்னது…

//ஒரு நாள் இது தான் சம்பவம் என்று உரைக்கப்பட்ட செய்தியின் பின்னால் மறைந்து கிடக்கும் உண்மை மிகவும் தாமதமாகக் கிடைக்கிறது.//

செய்தி தாள்களின் உண்மை உங்களுக்கு தாமதமாகவெனும் கிடைகிறதா?,

இல்லை என்னால் ஒப்புக்கொளள முடியாது.

சென்னையில் 3 வட இந்தியாவை சார்ந்த பெண்கள் கடத்தபட்ட செய்தி 6 மாதங்களுக்கு முன் வந்தது, அன்று நான் ப்லரை சந்திக்க பல இடஙகளுக்கு செல்ல வேண்டி இருந்தது , ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாளிதழ்கள், தினகரன் த்னமலர், தினமணி, என....

ஆனால் பொதுவாக, ஒரு செலவ செழிப்பன வட இந்திய குடும்பத்து பெண்கள் சென்னைகு விடுமுறைக்கு வந்த பொழுது அவர்களை பணம் பறிக்கும் நேக்குடன் சிலர் கடத்தினர், அவர்களின் தந்தை காவல் துறையயை தொடர்பு கொள்ள கைது செய்ய பட்டனர்.

ஒவ்வொறிலும் கடத்தல் நடந்த விதம் கைது நடந்தது குறித்து ஒவ்வொறு நாளிதழிலும் ஒவ்வொறு செய்தி......

காவல் துறையில் பணியாற்றும் நண்பரை எதிர்பாரமல் சில நாட்கட்கு முன் சந்தித்து, பேசும்பொழுது அவர், இந்த வழக்கு பற்றி சொன்னது....


3 பெண்களும் ஒரு நாளுக்கு 25000 பெறும் உயர் வகுப்பு விபச்சரிகள் . அவர்களின் செல்வசெழிப்பை அருகில் பார்த்த அவர்களின் வாடிக்கையாளர் சிலர் அவர்களிடம் பணம் பறிக்க கடத்தினர் . ஆனால் அது இயலாமல் போக... கற்பழித்தனர் ???... பின்னர் அவர்களின் ம்ற்ற சில வாடிக்கையாளர்கள் ... அதிகாரம் பெற்றவர்கள் மிட்டு கற்பழித்த்தனர்.???... ஒத்துழைக்க மறுத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று மிரட்டி இலவசம்மாக் அனுபவித்த பின் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பும் முன்...தான் மீட்க பட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட பட்டது....

என்று சொன்னர்.....

இப்பொது சொல்லுங்கள் ... உண்மை மிகவும் தாமதமாகக் கிடைக்கிறது ??... நான் நமபவில்லை...