நம் குரல்

கவிதையினும் ஆயுதம் இல்லை





ஒன்பது வருடங்களாகத் தமிழில் கவிதையெழுதி வரும் எனக்கு, இன்றும் ஒரு கவிதையை எழுதி முடிக்கையில் ஈடேறும் இன்பத்தினும் எதுவும் பெரிதில்லை. ஆனால் சில பல சோதனைகளை தமிழகத்தில் கவிதையெழுதுவோர் சந்திக்கத்தான் இருந்தது. அவையெவையுமே கவிதையியலின்பாற்பட்டது அன்று என்பது ஒரு கொடுங்கனவு. ஆகவே அக்கவிதை எழுச்சி முழுமையான ஓர் அரசியல் செயல்பாடாக மாற முடியாமல் போனது இலக்கிய சாபமே. ஆனால் இன்றும் கவிதையை ஓயாமல் சிந்தித்தும் கவித்துவ உணர்வில் தோய்ந்தும் வாழ்ந்தும் எழுதியும் கொண்டிருக்கும் கவிஞர்கள் மைய நீரோட்டத்திற்கு வருவதேயில்லை. புகழின் வெளிச்சம் அவர்களுக்கு ஒரு பொழுதும் சூரியனாவதில்லை. அத்தகையவர்களுடனான எனது உறவு இன்று வரை தொடர்வதாலோ என்னவோ கவிதையைப் பற்றிய எனது அபிப்ராயங்கள் இன்னும் ஆழமாகிக் கொண்டேயிருக்கின்றன. கவிதையை அன்றாட இயக்கமாக மாற்றிக்கொண்டவர்களின் கவிதைகள் தம்முள் ஒரு பேராற்றையும் நீர்ச்சுழலையும் ஒரு சேரக்கொண்டிருக்கின்றன.

தமிழ்ப் பெண் கவிதையைப் பலவாறான திசைகளிலிருந்து அணுகி விமர்சித்து ஓய்ந்த காலங்களில் அதுவரை அவை பேசி வந்த அரசியலையும் பெண்மொழியையும் கையிலெடுத்துக்கொண்டதுடன் அவற்றின் நுட்பத்தையும் விரிவையும் பேசத்தொடங்கியவை ஈழப் பெண்களின் கவிதைகள் தாம். ஈழப் பெண் கவிதையென்றால், இன்று அந்தப்போர் வெக்கை மூண்ட நிலத்திலிருந்து எழுதுவோரும், புலம் பெயர்ந்து வேறுவேறு நிலங்களில் வாழ நேர்ந்தாலும் தாய்மொழியை தாய் நிலமாக உணர்ந்து எழுதுவோருமென எல்லோரையும் தாம் குறிப்பிடுகிறேன். வெறுமனே அவை துக்கப்புலம்பலாக இல்லாமல் அரசியலை பேசும் தெளிவோடும் கவிதை வடிவை அழகுற ஆயுதமாக மாற்றும் வல்லமையோடும் உருவாகி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் தமிழகப் பெண்கவிதையின் நீட்சியாகவும், அவை தொட முடியாமல் போன கவித்துவ உச்சத்தையும் தமிழின் ஈழச்சுவையையும் அதன் அரசியலையும் கலந்து அளித்து கொண்டிருப்பதும் ஒரு கவித்துவ வெறி நிறைந்த அனுபவம்.

இனவாதத்தால் சிதறுண்டு உலகெங்கும் விரவிக்கிடக்கும் தமிழினத்தின் ஒட்டு மொத்தக் குரலாக ஒலிப்பது இன்று ஈழப்பெண் கவிதைகளே. வேறு வேறு அரசியல் விஷயங்களைப் பேசும் போது கூட, நுட்பமான கருத்தியலை பேச முடியாத அளவிற்கு முன் அபிப்ராயங்களையும் அவை சார்ந்த வெறுப்பையும் உக்கிரத்தையும் கொண்டு இயங்கும் மனித மனத்திலிருந்து விலகியிருக்கும் இவர்களின் கவித்துவ மனம், புரையோடியிருக்கும் புண்ணுக்குச் சொற்களால் மருந்திட்டு ஆற்றுவதாக உள்ளது. அவை நவீனமும் வடிவமும் அழகும் குன்றாமல் ஓர் அரசியல் போரைத் தங்கள் கவிதைகள் வழியாக நடத்தத் தொடங்கியிருக்கின்றன. கருத்தியல் - அரசியல் நுட்பங்களையும் தவறவிடுவதில்லை. துப்பாக்கிக்கு அடிபணிவதில்லை. தாய் நிலத்தை நிதந்தோறும் முத்தமிடும் கவிதைகளாக வடிவெடுக்கின்றன.

ஈழப் பெண் கவிதை, செல்வி-சிவரமணியின் கவிதையின் விழியாக எனக்கு அறிமுகம். சிவரமணியின், ’தூக்கியெறியப்பட முடியாத கேள்வியை’த் தொடங்கி தூக்கியெறிய முடியாத கவிதைகள் ஈழப் புலத்திலிருந்து வந்த வண்ணம் இருந்தன. பின்பு பனிக்குடம் பதிப்பகத்திற்காக ஃபஹீமா ஜஹான் மற்றும் தமிழ்நதியின் கவிதைத் தொகுப்புகளை தொகுக்கும் வாய்ப்பு கிட்டியது. கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் நின்றியங்கும் ஓர் இலக்கிய அமைப்பிற்காக எனது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண்ராமன் அவர்களுடன் இணைந்து தமிழ்ப் பெண் கவிதையின் நவீனக்குரலை தொகுக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது பரவலாகவும் ஒருமுனைப்பட்டும் ஈழக்கவிதைகளைத் தொடர்ந்து வாசித்தேன். நிலவும் போர்ச் சூழலில், பதைபதைக்கும் மனித இதயத்திற்கு நம்பிக்கையையும் தெளிவையும் வழங்கக்கூடிய குரலை அவை கொண்டிருந்ததோடன்றி முழுமையும் அரசியல் கவிதைகளாகவும் கவிதையியலின் நவீனத்தோடும் அவை இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை உணர முடிந்தது. ஓர் இனத்தின் மொழி கவிதை வழியாகவே புதுப்பிக்கப்படுகிறது என்று நம்புகிறேன்.


அனாரின் சமீபத்திய தொகுப்பான ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பில் இரண்டு விதமான கவிதைகள் சுழன்று கொண்டிருக்கின்றன. காதலும் அவற்றின் கனிவும் கசியும் கவிதைகளும் போருக்கு மத்தியில் உயிர்வாழத் தகித்துக் கொண்டிருக்கும் கவிதைகளும் நிரம்பியிருக்கின்றன. சிமோன்தி மற்றும் தில்லையின் கவிதைகளை ஊடறு இணைய இதழில் கண்டடைந்தேன். அவர்களின் கவிதைகளில் நவீனம் பீடிக்கப்பட்ட பெண்ணுடலும் மரபார்ந்த ஒடுக்குமுறை வடிவங்களும் இசைவோடு கவிதையாகியுள்ளன. கவிதை எனும் இலக்கிய வடிவம், தனக்கு மறுக்கப்பட்ட ஒரு நிலவெளியையே தனக்குள் சுமந்து செல்லமுடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அதைப் பெண்கள் தாம் தமது மொழியால் சுமந்து கொண்டிருக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்துமில்லை.
ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் பல்முனைகளிலும் வடிவெடுக்க வேண்டிய போராட்டமென்று நான் அங்கலாய்த்துக் கொள்வதுண்டு. வெறுமனே ஓர் இயக்கத்தின் போராட்டமாக மட்டுமன்றி எல்லா சமூக அரசியல் பண்பாட்டு இலக்கிய வடிவங்களிலும் அவை முகிழ்க்க வேண்டிய தேவையிருக்கின்றது. போராட்டத்தின் பன்முகத்தன்மை தான் விடுதலையை ஈட்டித்தரும் சாத்தியமிக்கது. குறிப்பாக, நாவல், சிறுகதை போன்ற புனைவிலக்கிய வடிவங்களுக்கு இடையே கவிதை ஓர் ஆரம்ப நிலை இலக்கிய வடிவமாகவே கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், கவிதை எத்தைகையதோர் ஓர் இலக்கிய ஆயுதமாக மாற முடியும் என்பதை ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளை கூர்ந்து அவதானிக்கையில் தான் புலப்படும். இந்தச் சிறிய பத்தி நம்மையெல்லாம் அக்கவிதைகளை வாசிக்கச் செய்வதற்கான ஓர் ஆயத்தமே.




குட்டி ரேவதி

3 கருத்துகள்:

நேசமித்ரன் சொன்னது…

சரியான சூழலில் நீங்கள் எழுதியிருக்கும் பத்தி என்று தோன்றுகிறது
மதுரை நிகழ்வில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தமிழ்நதிக்கு நிகழ்ந்த அனைத்துக்கும் பிறகு இந்த பத்தியின் வரிகள் முக்கியமானவை

குமரன் சொன்னது…

//வெறுமனே ஓர் இயக்கத்தின் போராட்டமாக மட்டுமன்றி எல்லா சமூக அரசியல் பண்பாட்டு இலக்கிய வடிவங்களிலும் அவை முகிழ்க்க வேண்டிய தேவையிருக்கின்றது. போராட்டத்தின் பன்முகத்தன்மை தான் விடுதலையை ஈட்டித்தரும் சாத்தியமிக்கது. //

மொத்தப் பத்தியும் புரியல என்றாலும், இந்த வரிகள் உண்மை. காலமும் நீருபித்திருக்கிறது.

Jerry Eshananda சொன்னது…

தோழியே வணக்கம்,தலைப்பே ஆயிரம் கவிதைகளுக்கு அடித்தளம்.ஒவ்வொரு வார்த்தைகளையும் வழி மொழிகிறேன்.பாராட்டும் வாழ்த்தும்.
ஜெரி ஈசானந்தா
மதுரை.