நம் குரல்

கொல்வோம் அரசனை - 2




காதற்ற ஊசிகள்






வேறெப்போதையும்விட உரையாடலின் போது ஒரு தனி மனிதனின் ஆளுமையும் உள்நோக்கங்களும் எளிதில் புரிந்து விடுகின்றன. ஒரு பேராசிரியர் தனது வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் அவர் சென்ற தேசங்களின் நிலவெளிகள் விரியும்படியான கதைகளையெல்லாம் சொல்லி முடித்தப் பின்பு மேலை நாடுகளின் ஆய்வு முறைகளையும் பல்கலைக்கழகங்களையும் பற்றிப்பேசினார். அங்குள்ள மாணவர்கள் படிக்கும் போது மிகுந்த ஆய்வுமனப்பான்மையுடன் இயங்குவதாகவும் படித்து வெளியேறியதும் அவர்களின் அடிப்படைச் சிந்தனையாக இன உணர்வு பீடித்துக்கொள்கிறது என்றும் கூறினார். வெள்ளையின மக்கள் கறுப்பின மக்கள் மீது காட்டும் வெறுப்புணர்வை அநியாயத்துக்குக் கடிந்து கொண்டார். இத்துடன் அவர் முடித்திருந்தாரென்றால் அவரைப்பற்றிய எனது எண்ணம் மாறியிருக்காது. தொடர்ந்து அவர் பேசியது அவரது ஆசிரியப்புலமையை எடுத்தியம்புவதாகவே இருந்தது. இந்தியாவில் சாதிக்கொடுமையென்றெல்லாம் ஏதுமில்லை. அநியாயத்துக்குக் கூப்பாடு போடுகிறார்கள். வேலைப் பாகுபாட்டின் வடிவத்தை சாதிப்பாடுபாடு என்று திரிக்கிறார்கள். நாயர் சமூகத்தைச்சேர்ந்த அவரின் மனக்கொதிப்பு பிரிட்டிஷார் மீது திரும்பி, அவர்களின் துப்பாக்கியால் எப்படி கூட்டம் கூட்டமாக நாயர்களை அவர்கள் கொன்று போட்டனர் எனப் புலம்பிக் கொண்டே வந்தார்.


ஒரே நெடுஞ்சாலையை மட்டும் கொண்டதன்று வரலாறு என்பது. பல கிளைச் சாலைகளையும் பல ஒரு வழிப்பாதைகளையும் கொண்டும் அவை பயணிக்கின்றன. ஆகவே அவர் அறியாத வரலாற்றையும் அவர் அறிய விரும்பாத வரலாற்றையும் நானும் என்னைப்போல பலரும் அறிய முயல வேண்டியிருக்கிறது. இருளடைந்த பக்கங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சவேண்டியிருக்கிறது. அவர் மீது மிகுந்த இரக்கம் ஏற்பட்டதுடன் நீங்கள் பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது என்று எடுத்துச்சொல்லவெண்டியிருந்தது.

மேலை நாட்டு கறுப்பின மக்களின் மீது அபரிமிதமான கரிசனம் காட்டும் அவருக்கு தமது நாயர் மக்களை, சாதி வன்மத்துடனும் அதிகாரத்துடனும் இயங்கிய அவர்களை பிரிட்டாஷார் கோபித்துக்கொண்டது எரிச்சலாக இருக்கிறது. இந்தியாவின் வர்ண பேதத்தை வேலைப்பகிர்வுக்கான ஏற்பாடு என்று தனது அறியாமையை வெளிப்படுத்தும் துணிவைத் தருகிறது. மலம் அள்ளும் வேலையை இவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் விட்டது பிரிட்டாஷார்களின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது.


தமிழகத்தில் பல சுற்று உரையாடல்களும் பிரச்சாரங்களும் ஏற்பட்ட பின்பும் சாதிச்சட்டகத்தின் துலங்காத பக்கங்கள் இன்னும் நிறைய இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை. அரசியலிலும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் அதன் விரிவான செயல்பாடுகளை எடுத்துப் பேசுவற்கான இயந்திரங்கள் செயலிழந்து போய்விட்டதாகவே தோன்றுகிறது. அரசியல் தளத்தின் மூர்க்கமான சக்கரங்களால் அரைபடும் நுண்ணிய உறுப்புகளுடைய வரலாறு பற்றி எவருக்குமே எந்த கவலையுமே இல்லை.





தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றிய புத்தகங்கள் கொண்டிருக்கும் நுண்ணிய மெளன இடைவெளிகள் காட்சிகளாகப் புரிந்து கொள்ள முடியாதவை. மேலும் தோற்றவர்களின் வரலாறுகளுக்கு அரசியலில் இடமில்லை என்பதும் கண்கூடு. இந்நிலையில் அரசு உருவாக்கத்தைக் கண்டு எள்ளி நகையாடாமல் இருக்கமுடியவில்லை. நுண்ணிய பிணக்குகளும் சுணக்கங்களும் கொடிய நஞ்சை நாளுக்கு நாள் இரத்தில் கலக்கும் பண்பாட்டின் விளைவுகள் அல்லாமல் வேறென்ன?


வரலாறு என்பது அரசுடையதும் அரசினைக் காபந்து செய்தவர்களைப் பற்றியதுமாக இருக்கிறது. பேணப்படும் போற்றப்படும் இலக்கியங்களும் அவ்வாறே. மற்றெல்லா சமூகத்தினரும் அரசின் உருவாக்கத்தில் கொள்ளும் பங்கேற்புகள் நேரடியானவை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு விலங்குகளைப்போன்ற இடம் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. அடக்கமுடியாத ஆத்திரங்கள் எல்லாம் அரசனோடும் அரசோடும் நெருக்கமான உறவு கொண்டோருக்கு மட்டுமே இருக்கிறது. அந்த ஆத்திரமும் அரசாங்க அதிகாரத்தில் தனக்கான பங்கு குறித்த சுயநலத்தோடும் பேராசையோடும் எழுந்த குரலாக இருக்கிறது.


தமிழக அரசியல் வீழ்ச்சி காலந்தோறும் ஒரு சீரிய வகையினால் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தத்துவச்செறிவு அற்ற ஒரு அரசு நிறுவப்படுவதும் காலப்பொருத்தமற்ற பாங்குகளுடன் அந்த அரசு இயங்குவதும் அந்த வீழ்ச்சியை நிலைப்படுத்துகின்றது. பிராமணிய எதிர்ப்பை தனது ஒரு நீண்ட கால அரசியல் இலட்சியமாகக் கொண்டிருந்த தமிழகத்தில் இன்று கெட்டிப்பட்டுபோயிருப்பது இடைநிலை சாதிகளின் அதிகாரமயமாக்கமே. சாதி ஒழிப்பு என்பது வெறும் கண்துடைப்பு என்பது புரிந்து விட்டது. பிராமணிய ஆதிக்கம் இவர்களுக்கு எரிச்சலைக்கொடுத்தது அவ்வகையான வன்கொடுமையை தான் இழைக்கும் அதிகாரம் தனக்கு இல்லாமல் போனதால்தான் என்பது வெளிப்படையாகிறது. இந்நிலையில் ஓர் அரசன் மிக எளிதாக முளைத்து விடமுடிகிறது. அவனால் மேற்சொன்ன பேராசிரியரைப்போல தனது அறியாமையைக் காலந்தோறும் கொண்டாடியதைப் போலவே கொண்டாட முடிகிறது. அவர்களின் உரையாடல்களில் எப்பொழுதும் ஒரு புனைவு கைகால்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது தன்னை அரசனின் சேவகனாக இந்த மண்ணின் மைந்தனாக நாட்டுப்பற்று உடையவனாக அப்படி இருப்பது வெறுமனே ஒரு பழக்கமாக வெளிப்படுத்திக் கொள்கிறது.
இருள் முற்றிப்போன காலங்களையெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உயிர்ப்பான சிந்தனையாலும் பூமியில் புதையுண்ட வேர்களாகவும் எதிர்கொண்டு தங்களைத் தற்காத்துக்கொண்டிருக்கின்றனர். நியாயமாக அரசனைக்கொல்லும் அதிகாரமும் அரசனாகும் அதிகாரமும் இவர்களுக்கு கிடைக்கவேண்டும். இளைத்த அரசர்களாக ஆகிவிட்டனர் அதிகாரவர்க்கத்தினர். அவர்களின் வரலாறும் அரசியலும் பண்பாடும் உரையாடலும் தந்திரங்களால் மலிந்து அவர்கள் நசுங்கிய பிளாஸ்டிக் பொம்மைகளாக இருக்கின்றனர். அவர்களின் உரையாடலில் விரவிக்கிடக்கும் பூடகங்களும் வெளிப்படையான சாமார்த்தியங்களும் தன்னளவில் தான் ஓர் அரசனாகப் பரிணமிப்பதிலேயே இருக்கிறது. அதற்கான எந்த ஒரு தகுதியையும் பண்பாட்டையும் தாம் பெற்றிராமல் அரசியல் வித்தகர்களாக தங்களை மாற்றிக்கொள்ளும் சூழ்ச்சி தொடந்து கொண்டேயிருக்கிறது.
நாம் வேகவேகமாக உரையாடலின் போக்குகளை மாற்றிக் கொள்ளவே வேண்டியிருக்கிறது. நமது சொற்ப வெற்றியால் ஆதிக்க அதிகாரத்தை நாம் கழுத்தைப் பிடித்து நெறித்துவிட்டதாகக் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். அவர்களின் மெளனம் நம்மை அவ்வாறு ஆற்றுப்படுத்துகிறது. ஆனால் அவர்கள் தங்களின் உரையாடல்களை சதிகளாக மாற்றிக்கொண்டார்கள். வரலாற்றின் நுணுக்கங்களைத்தேடிப்பிடித்து புனைவுகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவை கடந்த கால அரசர்களின் வரலாறுகளாக இருக்கின்றன. அந்த அரசர்களின் பராக்கிரமங்களை வல்லமைகளை மீண்டும் ஒருமுறை எழுதிவைக்கத் துடிக்கிறார்கள். அதே அரசர்களின் இடங்களில் தங்களை அமரவைத்துப் பார்த்து எல்லோரின் கழுத்தையும் தாமும் நெறித்துப்பார்க்கும் கற்பனைத்திறன் அவர்களிடம் மிகுதியாக இருக்கிறது. ஒரு வரலாற்றுக் கல்வெட்டையும் கல்தூணையும்கூட அவர்கள் விடுவதாயில்லை. அவற்றின் இடுக்குகளுக்கிடையே ஏதேனும் அரசன் ஒளிந்திருக்கின்றானா எனத் தேடிப்பார்க்கின்றனர். இப்படியாக அவர்கள் தங்களை உறக்கமில்லாமல் வைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு தேடியலையும் காலக்கட்டத்தில் அவர்களுக்கு உணவுப்பற்றாக்குறையே ஏற்படுவதில்லை.


ஒரு நாட்டின் பருவத்தைத்தீர்மானிப்பவனாக அரசன் இருக்க வேண்டியதில்லை. மக்களின் பண்பாடும் சமூக எழுச்சியுமே அதைத் தீர்மானிக்கின்றது என்பதையும் அரசனுக்கு நாம் உணர்த்தவேண்டியிருக்கிறது. ஒடுக்குமுறையை செயல்படுத்தும் ஆண்மை மட்டுமே ஓர் அரசை நிறுவப் போதுமானதென்ற கற்பனை நொறுக்கப்படவேண்டும். அந்த ஆண்மையைக் கட்டமைக்கும் அரச சாதனம் பெரும்பாலும் வரலாற்றிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. அந்த வரலாற்றினால் இன்றைய இந்த மண் உயிர்த்திருக்கவில்லை என்பதை வரலாறாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆண்மையைக் கொன்று பார்க்கலாம் அதற்கு. ஒரு தற்காலிக நெருக்கடியையேனும் அதற்கு கொடுக்கமுடியுமெனில் அது வெற்றி தான். புலம் பெயர்ந்த இலங்கைக்கவிஞர் பானுபாரதியின் கவிதை அதைச்செய்ய முடியுமென சொல்கிறது.



எருமையின் முதுகுதோலில் துளையிட்டு
உட்புகுந்த மழைத்துளிபோல்
எனது வார்த்தைகள்
உனது ஆண்மைக்குள் புகுந்து குடைகிறதென்பதை
நீ தூக்கம் தொலைந்து
இரவுகளை
புகை வளையங்களால் நிரப்பிக்கொள்வதிலிருந்து
புரிந்து கொள்ள முடிகின்றது
எறிகணையின் வலிமையோடு
எறியப்படும் உனதொவ்வொரு வார்த்தைகளும்
தோற்றுப்போய் விழுகின்றன நேர்மை வயப்படாத்தினால்


வானம் நீலமென்கிறாய்
கடல் உப்பென்கிறாய்
முத்தம் இனிப்பென்கிறாய்
வியர்வை சூடென்கிறாய்
விந்து குளிரென்கிறாய்
ஆண்மை அதுவே, அதற்கே அனைத்துமென்கிறாய்

நல்லது
போதனைக்கு நன்றி
ஆண்மை அரியாசனத்திலிருந்து இறங்கிவர
நீ மறுக்கும் ஒவ்வொரு கணமும்
கலவியின் உச்சநிலையில் சோர்ந்து சூம்பிக்கிடக்கும்
ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது

வோட்கா நிரப்பப்பட்ட
உனது கண்ணாடிக்குவளையில்
எலுமிச்சைச்சீவல்கள்
எனது கனவுகளோடு வாழ்வும்
கரைந்து போனதேன் என்ற
எனதொரு கேள்விக்கு உன்னிடமும் விடையில்லை
உன்னைப்படைத்த
உன்னப்பனின் ஆண்மையிடமும்
விடையிருக்கப்போவதில்லை


அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்
சிதறு தேங்காய்போல்
உனதாண்மை நொறுக்கப்படும்போது
வோட்காவிலும் பியரிலும்
கரைந்துபோன கணங்களிலிருந்து
எனக்கான பதில் கண்டடையக்கூடும்

அல்லது
இரத்தமும் வியர்வையும் தெறித்துச்சிதற
ஆண்மையை
அறுத்தெறியும் திராணியுண்டாயின்
வா பேசுவோம்
சுதந்திரமான வார்த்தைகளின் அக்களிப்போடு



குட்டி ரேவதி





நன்றி: உன்னதம் இதழ்

கருத்துகள் இல்லை: