நம் குரல்

கொல்வோம் அரசனை 1


செங்கோல் தரும் வலி


அரசனின் உருவகங்கள் பூமியில் பெருகிக்கொண்டேயிருக்கின்றன. அவை ஏற்கெனவே இலங்கிய அரசர்களின் பிரதிகளாயோ அல்லது அந்த அரசர்களின் பிரதிகளை தோற்கடிக்கும் நகல்களாயோ துலக்கம் பெறுகின்றன. அரசர்களின் குணநலன்களைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் பெரிய வித்தியாசமிருப்பதில்லை.

வரலாற்றிலும் வாழ்க்கையிலும் அத்தகைய அரசர்களின் உருவகங்களைக் கண்டடையும் முயற்சியையும், அவற்றை விமர்சிக்கும் பண்பாடும், யதார்த்தம் மீறுகையில் அவ்வுருவகங்களைக் களையும் தீரமும் தேவைப்படுவதை புறந்தள்ள முடியாது. ஏனெனில் அரசர்கள் மாய்ந்தாலும் காலங்களுக்குப் பின்னும் அவர்களை அழிக்க முடிவதில்லை. அவர்களின் கொடுஞ்செயல்கள் உறக்கம் பெறுவதில்லை. பூமியின் அதிகார சட்டகத்தில் அரசர்கள் அறையப்பட்ட ஆணிகளாய் ஆகிவிடுகின்றனர்.

வரலாற்றில் முன்னோக்கி நகர்ந்தாலும் பின்னோக்கிச் சென்றாலும் அரசன் எனும் அதிகார பிம்பம் எங்கெங்கும் எதிரொளியாய் நெளிந்து கொண்டிருக்கும். அதிகாரப் பூர்வமான பேரரசுகள் எல்லாமே வீரத்தாலும் தந்திரத்தாலும் பலத்தாலும் வெல்லக்கூடிய ஓர் ஆணால் உருவாக்கப்பட்டதாகவே நமக்குக் கதைகளும் வரலாறுகளும் வழங்கப் படுகின்றன. அத்தகைய ஓர் ஆணே அரசன் எனப்படுகிறான். ஆனால் பேரரசின் எல்லா அறைகளிலும் பாதைகளிலும் மூலை முடுக்குகளிலும் வாசற்படிகளிலும் ஜன்னல் வெளிகளிலும் பெண்கள் இருந்து கொண்டே இருந்தனர் என்றாலும் அரசன் எனும் பிம்பமே காலந்தோறும் உருவாக்கப்பட்டதும் நிறுவப்பட்டதும். பின்னும் அத்தகைய பிம்பங்களுக்கு வார்ப்புகளாகிப் போவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.


அரசன் எனப்படுவோன் இங்கே ஒரு நாட்டை சிற்றரசை பேரரசை ஆட்சி செய்வோனாக மட்டுமில்லை. பலவீனமான மக்கள் குழுமத்தை இன்னும் ஒடுக்கும் அதட்டி சிறுமைப்படுத்தும் ஒரு செங்கோலைக் கொண்டிருப்பவனாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவனுக்கு விதவிதமான எல்லைகள் உண்டு. ஒரு நாட்டின் பூகோளத்தின் வரவெல்லை மட்டுமேயன்றி ஒரு குறிப்பிட்ட பண்புக்கு இயங்கு சக்தியாக இருக்கும் மக்கள் குழுமமே கூட அவனது வரவெல்லை என்றாலும் அவன் செலுத்தும் ஆட்சி சாதாரண பலம் கொண்டதன்று. பல நிலைகளில் நோக்கும்போது ஒரு பெண்ணின் மனவெல்லை கூட அவன் பேராட்சி செய்ய வரைவெல்லையாகிவிடும்.

எனில் அரசன் என்போன் உருவாகும் அரசியலை மானுட வரலாற்றின் வழியாக ஊடுருவிக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அரசன் சார்ந்த சமூகத்தின் குற்றங்கள் எனப்படுபவை அரசனின் அன்றாட வழக்கங்களாயும் மக்களுக்கு அவை தண்டனைகளைப் பெற்றுத்தரும். குற்றவுணர்வை விடாது கிளறிக்கொண்டேயிருக்கும் அசம்பாவிதங்களாகவும் மாறிவிடுகின்றன. அரசனை வரையறுப்பதென்பது தடித்த சப்தங்களுடன் அதிரும் ஆதிக்கக் காலணிகள், எவரோடும் சமதையற்ற அரியணை, இயல்பான உடல் அசைவுகள் வெட்டி நீக்கப்பட்ட தோரணைகள். தலைக்குக் கனமேற்றும் கிரீடம், எல்லோரையும் பொம்மையைப் போல ஆட்டுவிக்கும் செங்கொல் இவற்றுடனான அதிகாரத்திற்கான விசையை உடலாகக் கொண்டிருக்கும் ஒரு மனித உயிர் என்பது.

இப்படியான அரசன் வரலாறு முழுமையும் ஓர் ஆணாகவே இருந்ததன் பொறாமையேதும் நமக்கில்லை. ஆனால் அவன் அதன் வழியாக செதுக்கிக்கொண்ட ஆண் எனும் சமூக உயிரி, ஆணாதிக்கம், அதிகாரம், அரசியல், ஆட்சியெல்லை என்பவை முற்றிலும் பெண்ணினத்துக்கும் நலிந்தோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் எதிராக இருந்து கொண்டேயிருக்கிறது. அடிப்படையில் இப்படியான பேரரசுகளும் பேரரசர்களும் உருவாக பெண்களின் இரக்கமும் உழைப்பும் ஆற்றலும் மிகுந்த பேராசையுடன் குடிக்கப்பட்டிருக்கிறது. அரசர்களின் மறு உற்பத்திக்கு பெண்கள் தாதிகளாக இருக்கப் பணிக்கப்படுகின்றனர். ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். பேரரசின் விரிவாக்கங்களுக்கு பெண்களின் ஆளுமைகளைச் சிதைப்பது என்பது ஒரு தொற்று நோயாக இருந்து கொண்டேயிருக்கிறது.

இத்தகைய பேரரசு உருவாக்கத்தாலும் அவற்றின் விரிவாக்கத்தாலும் பல வருடங்களாகத் தொடர்ந்து ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்கும் ஒற்றைப் படித்தான பெண்களாக நமது மூதாதைப் பெண்கள் மாற வேண்டியிருந்தது. அது குறித்த அவமானத்தையும் ஆற்றாமையையும் சுமக்க வேண்டியிருந்தது. ஓர் அரசனின் மறு உற்பத்திப் பணிக்கெனவும் பாலியல் ஆதிக்கத்தை நிரூபிக்கவும் பெண்களைத் தொடர்ந்து வழங்குவது என்பது கூட அவனது பேரரசின் அதிகாரத்தை மறு உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றே. 1788-ல் ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் நாடு கடத்தப்பட்ட முன்னூற்றுக்கும் மேலான பெண்கைதிகள் கரையிறங்கும்போது அவர்கள் அனைவரும் ஆண்களின் நுகர்வுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படும் விபச்சாரிகளாகவே அணுகப்பட்டனர். அவர்கள் காலிறங்கிய காலனி முழுதும் ஒரு விபச்சார விடுதியாகவே மாறியது. பெண்ணின் விருப்பத்திற்கு எதிரான பாலியல் நடவடிக்கையை இங்கே நாம் விபச்சாரம் என்றே கூறுவோம். ஏற்கெனவே நாடு கடத்தப்பட்ட பெண்கைதிகள் என்ற நிலையிலும் விபச்சாரிகள் என்ற நிலையிலும் இரண்டடுக்கு அதிகார நசிவிற்கும் இழிவிற்கும் பெண்கள் உள்ளாவதை உணர இயலும்.



இவ்வாறு பெண் என்பவள் பேரரசனின் மனைவியாக இருந்தாலும் ஒரு கடைநிலை குடிமகனின் மனைவியாக இருந்தாலும் இரண்டு எதிரெதிர் அதிகார நிலையிலிருக்கும் ஆண்களுக்குமே பெண் என்பவள் கையகப்படுத்தப்படும் ஓர் உயிர்ப்பொருள். அதன் மீது தான் மேலதிகமான உரிமை கொள்ள முடியும் தனது அதிகாரத்தைச் செலுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து வேறுபட்ட சமூக உறவு நிலைகளை மேற்கொண்டு அதாவது தந்தை, கணவன், அதிகாரி, தலைவன், அரசன் என அதிகார நிர்வாகத்தை எடுத்துக் கொள்கிறான். ஓர் அரசன் என்போனும் தந்தை என்போனும் ஆணே என்றாலும் இருவருமே பெண் மீது செலுத்தும் அதிகார முறைகளும் அதன் தொழில் நுட்பமும் வேறு வேறானது என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தான் முழுமையான சமூக மாற்றம் சாத்தியமாகும்.


பெண்ணினத்தை மிதமிஞ்சிய அளவுக்குப் போகிக்கும் பேரரசு வர்க்கமும் அவ்வினத்தின் மீது தமது அதிகாரக் குறியீடுகளாலும் ஆதிக்கக் கருவிகளாலும் வெறுப்பையும் உமிழ்ந்து கொண்டேயிருக்கின்றது. தனது பாலியல் நுகர்வுக்கும், இச்சைக்கும் பலியாகும் பெண்ணை வேசி என்று இழிவு அடையாளம் தருவதும் செவ்வியல் பெண் பிம்பங்களை அவர்கள் வாழ்ந்த காலங்களோடு தொடர்புப்படுத்தி நோக்காது தம் குடிப் பெண்கள் மீது திணிப்பதும் அரசனின் ஆதிக்க சூழ்ச்சிகளாக இருக்கின்றன. அந்த செவ்வியல் பெண்பிம்பங்களே மிகுதியும் போலிமைகளால், அரசனின் கற்பிதங்களால் செதுக்கப்பட்டவளாயிருப்பாள்.


இலங்கைக் கவிஞர் அனாரின் ‘உரித்தில்லாத காட்டின் அரசன்’ எனும் கவிதை அரசனின் கவர்ச்சியான பிம்பத்தையும் அதற்கு இரையாகும் பெண்ணின் பிம்பத்தையும் எதிர் வைத்துப் பேசுகிறது.
”மலைகளுக்கப்பால்
சூரியனுக்குப் பதிலாக நீ எழுந்து
வளர்கிறாய்
பனிமூடிய முகடுகளை
விலக்கி அமர்ந்திருக்கிறாய்
கடும் பச்சை நிற, சுருண்ட தலைகளுடன்
அடர்ந்திருக்கிறது என் காதல் காடு
காட்டின் அரசனாகப் பிரகடனப்படுத்தி
ஒளிர்வுக்கிரணங்களால் நுனி வேர்வரை ஊடுருவி
தழுவிச் சிலிர்க்க வைத்து ஆட்சி செய்கிறாய்
வளைந்த பாதைகளில் நதியைப் போல இறங்கி உருள்கிறேன்
உன்னிடம் இறக்கைகள் இருக்கின்றன
எல்லா இடுக்குகளிலும்
என்னைக் கவ்விப் பறக்கிறாய்
காடு முழுவதிலும் மேய்கின்றன
நம் கவிதைகள்
உள் நுழைந்தவனின்
பிரகாசமும் பாடலும்
ரகசியப் பூட்டுக்களை திறக்கின்றன
இனி
அரசன் கீறிவிட்ட காயங்கள்
என் காடெங்கும் பூப்பெய்யும்
கமழும் அஸ்தமனம் வரை”

இக்கவிதையில் பேசும் பெண்ணின் குரல் காதலால் கவ்வப்பட்ட பெண்ணினுடையது மட்டுமன்று. தன் மீது ஆளுகை செய்யும் ஆணின் கவர்ச்சியை இயற்கை மீது ஏற்றிக்கூறும் நுட்பமும் மிக்கது. இங்கு அரசன், தன்னை அரசனாகவே பிரகடனப்படுத்திக் கொள்வதோடு அத்தகைய ஆட்சிக்கான எல்லா அம்சங்களையும் கூட தன்னகத்தே கொண்டிருக்கிறான்.
’கொல்வோம் அரசனை’ என்ற இக்கட்டுரைப் பயணத்தில், நாம் சிக்குண்டுள்ள அரசனின் கொடுங்கனவுகளிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள தொடர்ந்து முயலலாம். ஏனெனில் நமது சமகாலமும் சமவாழ்வும் கூட அரசனின் பிம்பங்களால் சூறையாடப் பட்டிருக்கின்றன. மேலும் தனது வாரிசுகளை அப்பிம்பத்தின் வார்ப்புகளாகவும் ஆக்கிக் கொள்கிறான் அந்த அரசன்.

அரியணையைச் சூடேற்றுகின்றன அவனது பிட்டங்கள். அவனது சூதாட்டங்களில் இடையறாது வெட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன நமது கனவுகள். நலிந்த, ஆதிக்கச் சுமைகளுக்குக் கீழே அழுந்திய மனிதனை மரணப்படுக்கையில் உறங்கச் சொல்கின்றன அவனது அறிக்கைகள். அவனது செங்கோல் தரும் வலி அளவிலாதது.




குட்டி ரேவதி

நன்றி: உன்னதம் இதழ்

4 கருத்துகள்:

Jerry Eshananda சொன்னது…

தோழியே வணக்கம்,கொல்வோம் அரசனை கட்டுரை பயணத்தில் நானும் ஒரு யாத்திரிகன்.கால காலமாக நம்மீது விழுந்தளுத்தும் இந்த புரட்ட முடியா சுமையை அசைத்து விட முடியும் என்று நம்பு கிறீர்களா?

நேசமித்ரன் சொன்னது…

பெண் என்பவள் பேரரசனின் மனைவியாக இருந்தாலும் ஒரு கடைநிலை குடிமகனின் மனைவியாக இருந்தாலும் இரண்டு எதிரெதிர் அதிகார நிலையிலிருக்கும் ஆண்களுக்குமே பெண் என்பவள் கையகப்படுத்தப்படும் ஓர் உயிர்ப்பொருள்

அவனது செங்கோல் தரும் வலி அளவிலாதது.

//

பெரும் பாரமாய் இருக்கிறது
ரேவதி உங்கள் பதிவு உலுக்கிப் பார்கிறது ...!

Theepachelvan சொன்னது…

மிகவும் ஆழமாக இருக்கிறது வாசிப்பு.

துபாய் ராஜா சொன்னது…

//பேரரசின் விரிவாக்கங்களுக்கு பெண்களின் ஆளுமைகளைச் சிதைப்பது என்பது ஒரு தொற்று நோயாக இருந்து கொண்டேயிருக்கிறது.//

ம(ற)றுக்க முடியாத உண்மையான உண்மை.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட பெண்ணிணம் வீறு கொண்டு எழுந்து பீடுநடை போட
எல்லோரும் போராட வேண்டும்.