வெயில் விறைத்திருக்கும் உச்சிவேளையிலிருந்து
இலையொன்று சுழன்று மாலைக்குள் ஒதுங்குகிறது
காரில் நகரத்தெருக்களைக் கடக்கையில்
அவசரமாய் ஓடி மறைகிறது
பழைய காதலின் புறமுதுகுப்பிம்பம்
அது அவனாயிருக்கலாம்
பேராச்சியின் உடலில்
மதர்த்துக்கிடக்கும் காமப்பூக்களை
முகர்ந்து பார்த்தவன்
பிறகொரு நாள் அவனைச் சந்திக்க நேரலாம்
தனது மூளைக்குள் நெளியும் நினைவுப் புழுக்களை
நசுக்குவது எப்படியென எப்படியும்
அவன் ஆலோசனை கேட்கலாம்
அல்லது
உறங்கவிடாது
கண்களுக்குள் கள்ளிச்செடிகளை வளர்க்கும்
தோட்டக்காரனாய் அவன் இருந்ததை
நான் இடித்துக் காட்டலாம்
உஷ்ணமுட்கள்
வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன
குட்டி ரேவதி
6 கருத்துகள்:
கவிதை வித்தியாசமா நல்லா இருக்கு..
வாசிக்க வாசிக்க அர்த்தங்களை தருவது போல் உள்ளது.
தொடர்ந்து எழதுங்கள்..
நன்றி, மதுவதனன்.
கவிதைகள் வாசிக்கப்படுவது என்பது
ஆரோக்கியமான
இலக்கிய நுகர்வின் வெளிப்பாடே.
Nice poem.
Vinothini
நன்றி, வினோதினி.
அற்புதமா எழுதுறீங்க
" இங்க பேராச்சி -ங்கறது பேரா?
சொல் சரிபார்ப்பு எடுத்துட்டா நல்ல இருக்கும்னு தோணுது...
"உஷ்ணமுட்கள்
வேகமாய் வளர்ந்துகொண்டே இருக்கின்றன"
நானும் ஒரு தடவை சொல்லிக்கொள்கிறேனே ரேவதி.:) word verification எடுத்துடுங்க. அது பின்னூட்டமிட கொஞ்சம் இலகுபண்ணும்.
கருத்துரையிடுக