அன்பார்ந்த தோழிகளே, வாழும் கலை பற்றி நிறைய மனிதர்கள் வகுப்பெடுக்கும் காலக்கட்டதில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்களோடு பெண்களும் சரிசமமாய் முட்டி மோதி வாழும் வாழ்க்கையில் நாமும் பங்கு கொண்டவர்களாய் மாறிவிட்டோம். நாமே தீர்மானிக்கும் முன்பு பந்தய மைதானத்தின் கோடிட்ட பாதைகளில் நமது கால்கள் தலை தட்ட ஓட வேண்டியிருப்பதை நாம் தீர்மானிக்க வில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஓடத்தொடங்கிய பின்பு நாம் ஓட்டத்தை நிறுத்த முடியாது போலிருக்கிறது. பின்னே ஓடி வந்து கொண்டிருப்பவர் நம் மீது எகிறி விழுந்து நாமும் விழுந்து பல்லுடைக்க இயலாது என்பதால் மட்டுமன்று. வாழ்க்கை நம்மை ஒருபொழுதும் பார்வையாளர்களாய் மட்டுமே வைத்திருப்பதில்லை. பக்கத்து வீட்டுப் பெண்ணுடனோ, தூரத்தில் தன் ஆற்றாமையால் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுடனோ நமது பந்தயம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
எனது தோழி ஒருத்தியை அவள் கணவர் அடிப்பதாக புண்பட்ட மனதுடன் என்னிடம் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டாள். அவளை சிறு பருவத்திலிருந்தே நான் அறிவேன். என் கண்களுக்கு போராளி என்று நானே கற்பிதம் செய்து கொண்ட எல்லா குணாம்சங்களும் வீர தீரங்களும் கொண்டவள். என்று, எப்படி, இப்படியானாள் என்று எனது மூளையைக் கசக்கித் தேய்த்தேன். வாழ்க்கை அவளையும் சோதித்துப் பார்க்கிறது என்ற மூட நம்பிக்கை என் பிடரியில் இருந்து கதறிக் கொண்டே இருக்கிறது. அவள் தன் காதலனுக்குத் தன்னை முழுதுமாய் ஒப்படைத்து விட்டாள்.அதாவது தன்னைப் பற்றிய அத்துணை ரகசியங்களையும். தோழியரே, மனதின் மூலையில் பசுமையாய் அடர்ந்து, நினைக்குந்தோறும் எல்லையிலா களிப்பை ஊறச்செய்து கொண்டிருப்பதே ரகசியம். அவள் தன் பழைய உறவுகளைப் பற்றி, தனது அதீதமான பால்ய நம்பிக்கைகளைப் பற்றி கணவனிடம் பகிர்ந்து கொண்டேயிருந்திருக்கிறாள். ஆண்களின் ரகசியங்கள் அதிகார விழைவுக்கானவை. அவை ஒரு பொழுதும் பெருஞ்சபையில் நுகர்வுப் பொருள் இல்லை. ஏனெனில் அதன் வழியாகத் தானே அவர்கள் தம் ஆளுமையைக் கட்டமைக்கின்றனர். ஆனால் பெண்ணின் இரகசியங்கள் அரசியலாகுபவை. வியாபாரச் சந்தையில் அவற்றுக்கு விலை அதிகம்.
நமது அந்தரங்க உறவுகளை எவரிடமாவது பகிரப் போய் அதன் விளைவுகள் நாம் எதிர்பாராத திசையிலிருந்து வரும் போது கூனிக்குறுகிப் போவீர்கள். காரணம் அந்த உறவிற்கு நீங்கள் அளித்த வந்த மதிப்புகள் கரைந்து போய் அழுகிய முடை நாற்றத்துடன் அவை வெளிவரும். காலங்களால் அடித்துச் செல்லப் படவே உறவுகள் என்பதை அவை உணர்த்தும். மரணமும் முறிந்து போகும் உறவுகளும் முழுமையான நம்பிக்கையுடன் எந்த நபரையும் அணுகுவதற்கு மனத்தடையாக இருக்கின்றன.
உறவைக் கட்டியெழுப்ப வித்தியாசமான அரசியல்கள் உண்டு, நமது சமூகத்தில். கணவனிடம் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் வித்தியாசமானவை என்பதை என் தோழி உணர்ந்திருக்கவில்லை போலும். காதல் கணவருடன் கருத்தொருமிக்கும் வழி தன் பழைய காதலையும் பகிர்ந்து கொள்வது என்று புரிந்துகொண்டாள் போலும். ஒரு தோழி இவ்வாறு தனது காதலனைப் பற்றி இன்னொரு தோழியிடம் பகிர்ந்து கொண்டதோடு அவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்கள் உறவு திடமாவதைச் சகியாத இவள் சிக்கலான மனப் போராட்டத்திற்கு ஆட்பட்டாள். தோழியிடம் உறவைத் தொடர்ந்தாள். காதலனைத் துண்டித்தாள். இன்றும் ரகசியங்கள் மூவர் வழியிலும் பேணப்படுகின்றன. மூவருக்கும் காயங்கள் தொடர்கின்றன.
சமூகப் போக்குகளுக்கு ஏற்றவாறு ரகசியங்கள் உருவாவதில்லை என்று சொல்ல வருகின்றேன். அவை எதிர்த் திசையிலிருந்து கிளம்புகின்றன. அந்த ரகசியங்களை எவரும் மதிப்பதில்லை. உங்கள் மனோ வெளியில் ரகசியங்களாயிருக்கும் வரையிலுமே அவை பொன் முட்டைகள். அதன் மென் சூடான வயிற்றை ஒரு போதும் பிறரிடம் பகிர வேண்டிய சொற்களால் கிழிக்காதீர்கள். அவை பருவத்திற்கு ஒப்ப கருத்தரிக்கட்டுமே.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக