நம் குரல்

உயிர்நிலம் - 2


நீலவேணியின் இருபத்தியொராவது பிறந்த நாளன்று அசோக்கைச் சந்தித்தாள். மீனாவை தன் வீட்டில் கொண்டுவந்து விட வந்தவன் அவளுக்கும் மென்மையாகத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தான். அசோக் அவள் தோழி மீனாவின் சகோதரன். மழை கொட்டிக் கொண்டு இருந்த ஒரு நாள் மீனா தன் வீட்டிற்கு வந்த போது தவறவிட்டுச் சென்ற குறிப்பு நோட்டை எடுத்துச் செல்ல வந்திருந்தான். மழை வலுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அவனிடம் வீட்டிலிருந்த அனைவரும் பரவாயில்லை, மழை குறைந்ததும் போகலாம் என்று கூறியதும் தான் அவனுக்குப் பருக காபி தந்த போது அவன் தயக்கத்துடனும் அவசியமில்லையே என்ற பாவனையுடனும் வாங்கி வேகவேகமாகக் குடித்தான். இருப்புக் கொள்ளாமல் தவித்த அவனது இருப்பு எனக்கு மழையில் வெயிலாய் நீண்ட நாட்களுக்கு என்னுள் சுடர்விட்டுக் கொண்டே இருந்தது. பின்னாட்களில் அவனுக்குள் பற்றிக்கொண்ட காதலை அவன் பலமுறைகளில் தோழியின் நோட்டுப் புத்தகத்தில் கடிதங்களாக மறைத்து வைத்தும் அவள் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சைக்கிளில் திரும்புகையில் காத்திருந்து அவனும் சைக்கிளில் உடன் வந்தும் தன்னை அவளுக்குள் செலுத்திக்கொண்டே இருந்தான். நீலவேணி அதை ஏற்றுக்கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. அது இருவர் வீட்டிற்கும் தெரிந்தால் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள்.


அவர்கள் வாழ்ந்த அந்த ஊர் சிறு நகரத்தை ஒத்தது. எல்லோரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தனர். ஊர் சதுர வடிவில் சாலைகள் நான்கு முனைகளிலும் முட்டிக் கொள்வதுடன் இரு கரைகளிலும் வளைந்த முதுகுகளையுடைய மரங்களையும் கொண்டிருந்தன. சதுரத்தின் ஒரு மூலையில் அம்மன் கோயில் ஒன்று அதிக அளவில் பெண்கள் கூடுவதாயும் எப்போதும் இரைச்சலுடனும் இருக்கும். மற்ற பகுதிகளில் மரங்களில் வந்தமர்ந்து ஆக்கிரமிக்கும் பறவைகளின் இரைச்சலை தவிர பெரிய சப்தஙக்ளையோ கூச்சலையோ காணமுடியாது. மாலை விரைவிலேயே அந்த ஊருக்குள் வந்து விடுவது போல மரங்கள் அந்த ஊரை கூரையிட்டுக் கொண்டு இருக்கும். இளவயது பெண்கள் வேலை நிமித்தமும் படிப்பு நிமித்தமும் வெளியே செல்பவர்கள் விரைவில் திரும்பிவிடுவர்.


கல்லூரிப்படிப்புக்குப் பின் ஒரு சிறிய நிறுவனத்தில் உடை வடிவமைப்பாளராகச் சேர்ந்தாள் வேணி. அவளுக்கு அதுவே பிடித்தமான பணியாக இருந்தது. அதில் அவளே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஈடுபாடுடையவளாகி விட்டாள். பணியிலிருந்து வீடு திரும்ப எட்டு மணி ஆகிவிடும். ஊர்ச்சதுரம் இருட்டிலும் மரங்களின் அடர்ந்த கருப்பிலும் உறைந்து போய்விடும். அம்மாதிரியான மாலைகளை அசோக் தனதாக்கிக் கொண்டான். ஏதோ மரத்தின் பின்னிருந்து பாய்ந்து இழுத்து மறைவில் வைத்து முத்தமிடுவதில் அசுரனாய் இருந்தான். ஒவ்வொரு நாளும் அம்மாலையை நோக்கியே நகர்ந்தது. அல்லது மாலையில் தான் அந்த நாள் தொடங்குவதாக இருந்தது அவளுக்கு. அன்றைய இரவு முழுதும் அவள் பெற்ற முத்தம் என்ன வகை என்பதாயும் அதன் தித்திப்பு எவ்வளவு ஆழமானது என்பதாயும் படுக்கையில் புரண்டு புரண்டு யோசிக்க இனிமையானதாயும் உடலெங்கும் கவனமான பாதிப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. உடலின் வேறு பகுதிகளை தொடுவதற்கான அவனுடைய ஆவல் அங்குலம் அங்குலமாய் வளர்ந்து கொண்டிருந்தது என்பதை நீலா கவனிக்கத் தவறவில்லை. அசோக் மட்டும் தான் அவளை நீலா என்று அழைப்பான்.

காமத்துக்கும் காதலுக்குமான வேறுபாட்டை அறியாத பரவச வெளியாக மட்டுமே இருந்திருக்கிறது. திடீரென வெட்கை வீசும். எதிர்பாராத கணத்தில் மழையடிக்கும். எல்லோரின் தொடுகையிலிருந்தும் தூரத்தில் இருக்கும். பொதுவாக வீட்டில் யாருமே தொட்டுப் பேசுவதே இல்லை. வயது வந்த பெண்ணிடமிருந்து உலகமே விலகி இருப்பது போல தோன்றும். விடலையான மனம் கொண்ட உறவினர்கள் செய்யும் சில்மிஷங்கள் வீட்டினர் அறியாமல் தன் மீது பாயும் போதோ உடல் தன் மீது ஏதோ பறவையின் எச்சம் விழுந்து விட்ட எரிச்சலைக் கொடுக்கும். மற்ற படி உடலே சிந்தனையை முழுக்க முழுக்க மூடிக்கொள்ளும். உடல் அல்லாததை மனம் சிந்திப்பதே இல்லை எனும் அளவிற்கு இருந்த உடலை அசோக் அற்புதமான முன் தயாரிப்புகளுடன் தொட்டான். பரபரவென கூரையைப் பிரிப்பது போல அவசரப்படவில்லை. செடிக்கு நீரூற்றும்போது ஒவ்வொரு இலையையும் நீரால் கழுவி நீவி விடுவது போல் நடந்து கொண்டான். மனித கைகளின் ஆதரவான தொடுகையையே அறியாத உடல் அவன் பிடிகளில் தன் உணர்நரம்புகளை எல்லாம் வேகமாக நீட்டிக்கொண்டு வளர்ந்தன.

ஒரு ஞாயிறு மாலை அவன் அப்பா திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார் என்று வீட்டிற்கு வந்து கூறினாள் மீனாவிற்கும் வேணிக்கும் தோழியான குண்டு கனகா. வேணியும் தன் அப்பாவுடன் செய்தி அறிந்த பத்து நிமிடத்திற்குள் மீனாவின் வீட்டிற்குச் சென்றனர். மீனா வேணியைப் பார்த்ததுமே அவளின் இதயம் வெடிக்கும் படியாக ஓலமிட்டு அழுதாள். அவளுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ எனும்படியாக அவள் அழுவதும் மயங்கிவிழுவதுமாக இருந்தாள். மீனாவின் அம்மா தலைவிரி கோலமாக இறந்தவர் உடலைப் பார்த்தவாறே சுவர்சாய்ந்து இருந்தார். அசோக் வேணியின் கண்களைச் சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்தான். அவன் கண்கள் ஏற்கெனவே சிவந்த கரைகளை உடைய கலங்கிய குளமாக இருந்தது. வீட்டை இருள் அப்பிக் கொண்டது. உறவினர் வரும்வரை இறுதிச்சடங்குகளுக்குக் காத்திருக்க வேண்டும் என்று மீனாவின் தாய் மாமா முடிவெடுத்திருந்தார். வீட்டினை ஓலம் சுழன்று சுழன்று வந்தது. கூட்டம் வாயிலையும் சாலைகளையும் அடைத்துக் கொண்டது. மீனா வேணியின் கைப்பிடியை விடவே இல்லை. அவளின் நிலைமையைக் கண்டு வேணியின் கண்களில் அவளை அறியாமலேயே கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அங்கு பரவிய இறந்தவர் உடலிலிருந்து புறப்பட்ட மணமும் அறையில் கமழ்ந்த ஊதுவர்த்தி வாசனையும் சேர்ந்து அது ஒரு பழக்கமில்லாத வாசனையாகி வயிற்றைப் பிரட்டியது. மீனாவை அந்நிலையில் விட்டுவிட்டு நகர வேணிக்கு இயலவே இல்லை.


நடுநிசிக்குப் பின் நெருங்கிய சில உறவினர் மட்டுமே இறந்தவர் உடலைச் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். மீனா முழுதுமாய் மயங்கிப் போய்க் கிடந்தாள். மீனாவின் அத்தை ஒருவர், அவரை கரிசல் குளம் அத்தை என்றே அழைப்பார்கள். மீனாவின் தந்தை மீது மிகவும் பாசம் உடையவர். அவர் தான் பழைய நினைவுகளை எல்லாம் கூறிக் கூறிப் புரண்டழுதார். எல்லோரும் சேர்ந்து அவரைக் கட்டுப்படுத்தி வேறு ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

வீட்டின் பின்னாலிருந்த கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற வேணியை அசோக் இருளுக்குள்ளிருந்து கையை நீட்டி இழுத்தான். அவளை இறுக்கிக் கொண்டு கண்ணீரா எச்சிலா என்றறியாத அளவிற்கு அவள் முகத்தை ஈரமாக்கினான். வேணி அவன் நிலைமையால் எல்லாவற்றிற்கும் அவனை அனுமதித்தாள். பின் அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு இடப்புறமாய் திறந்த அறைக்குள் அவளை அழைத்துச் சென்று கதவுகளைத் தாழிட்டு அவளுடைய உடலுக்குத் தன்னை முழுதுமாகப் பரிச்சயப்படுத்தினான். மரணத்தின் அச்சமும் அது தந்த கலக்கமும் அவனை அதை செய்யத் தூண்டியிருக்கவேண்டும் என்று வேணி நினைத்தாள். வேணியும் மழைக்குத் திறந்து கொடுக்கும் காட்டைப் போல முழுமையாகத் தன் உடலை நனைய அனுமதித்தாள். அது காமமா, காதலின் வெளிப்பாடா, மரணத்துயரைப் பகிர்ந்து கொள்வதற்கான அனுசரனையா என்றெல்லாம் யோசித்தாலும் அது அவளின் அத்தகையதொரு முதல் அனுபவமாய் அவளுக்குள் பதிந்துவிட முற்றிலும் தகுதியானதாக இருந்தது.
*

உயிர்நிலம் - 1

அதிகாலையில் அந்தத் தொடர்வண்டி நிலையம் தூக்கச்சடவில் இருக்கும் குழந்தையைப் போல நச்சரிப்புகளுடன் இருப்பதாகப் பட்டது நீலவேணிக்கு. தன்னுடைய பெட்டிகளை இடம் தேடி வைத்தப் பின் படிப்பதற்கென்று சில நூல்களை மட்டும் வெளியே வைத்துவிட்டு அமர்ந்தாள். இன்னும் நாற்பத்தியெட்டு மணி நேரம் அந்தத் தொடர்வண்டியில் பயணம் செய்வது குறித்து அலுப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. வானூர்தியில் பயணச்சீட்டு கிடைக்காததால் இந்தப் பயணம். தன் தொழில் நிமித்தமான ஒரு நேர்காணலுக்கான தேதியில் அவள் சரியாகச் சென்று சேர வேண்டியிருந்ததால் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு தொடர்வண்டியில் பயணப்பட்டாள். வண்டி நகரத்தொடங்கியது. பருவம் ஒன்றும் மோசமில்லை. இனிமையான குளிர் காற்று சன்னலோரம் சிறகடித்துக் கொண்டே இருந்தது, மனதிற்கு இளைப்பாற்றுவதாக இருந்தது. கோடை வெயிலில் இதே தொடர்வண்டியில் பயணம் செய்யும் போது கூரையின் வழியாக வெப்பமே மழையைப் போல பெய்துகொண்டிருக்கும். நல்லவேலையாக ஜன்னலோரப் பயணம்.


அவளுக்கு எதிரே முப்பது வயது மதிக்கத் தக்க ஓர் ஆண் அமர்ந்து நீண்ட நேரமாகக் கண்மூடி அயர்ந்திருந்தான். வேணிக்கு விசித்திரமாகப் பட்டது. வண்டிப் பெட்டிகளில் இன்னும் கூச்சல் ஓயவில்லை. அங்கும் இங்குமாக ஆட்கள் நகர்வதும் அடுத்தவர் இருப்பின் கவனமின்றி உரையாடல் நிகழ்த்துவதுமாக எல்லா அறைகளும் இணைந்து ஒரே வீடாக ஆகிக் கொண்டிருந்தது. அதற்குள் தனக்கு அருகே இருந்த நான்கு பேரைக் கொண்ட ஒரு வட இந்தியக் குடும்பம் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத் தொடங்கியிருந்தது. ஒவ்வொரு பொட்டலமாய்ப் பிரித்து எல்லோரும் பரிமாறிக் கொள்ளத்தொடங்கியிருந்தனர். ஒவ்வொரு பொட்டலத்தையும் அவர்கள் பிரிக்கும் போதும் ஒவ்வொரு வகையான வாசனை அங்கு பரவியது. பெட்டியில் இருந்த எல்லோரும் தங்கள் கடைக்கண்களால் அவர்களின் உணவு வகைகளை நோட்டமிட்டனர். தங்களுக்கும் ஏதோ உண்ண வேண்டும் போல உணர்வு ஏற்பட்டது போலும். வண்டியில் விற்றுக் கொண்டு வரும் ஏதேதோ நொறுக்குத் தீனிகளையும் பொழுதைப் போக்கும் உணவு வகைகளையும் வாங்கி வயிற்றை ஆற்றினர். இப்பொழுதும் எதிரே இருந்தவன் அதே போல கண்மூடி அமர்ந்திருந்தான்.


அவனை நிதானமாக நோட்டமிட்டாள் வேணி. அவன் அணிந்திருந்த வெங்காய நிறப் பருத்திச் சட்டையினூடே மார்புக்குள் நெரிந்து கொண்டிருந்த மயிர்கள். சிறிதாய் தாடி வளர்த்திருந்தான். தலைமுடி அக்கறையில்லாமல் பறந்துகொண்டிருந்தது. அடர்த்தியான புருவம் செதுக்கப்பட்டது போல் வரையப்பட்டிருந்தது. முகத்தில் ஓயாத சிரிப்பு என்பது அந்த மெளனமான நிலையிலும் தென்பட்டது. வேணி எழுந்து கழிவறைக்குச் சென்று தன் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். நூல்களைப் படிப்பதற்கு முன்பான ஆயத்தங்கள் மன அளவிலும் உடல் அளவிலும் அவளுக்கு நிறைய தேவைப்படும். முகம் கைகால்களை ஈரப்படுத்திக் கொள்வாள். படிக்கும்போது ஊடே தின்று கொண்டிருப்பதற்கு கடலை அல்லது பொரி போன்றவற்றை அருகில் வைத்துக் கொள்வாள். கிட்டத்தட்ட உடல் முழுதும் புத்தகங்களிலிருந்து சொற்களை வாங்கிக் கொள்ளத் தயாராகிவிடும். இதற்குப் பின் தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை இருந்த இடம் விட்டு அகலாம்ல் அவளால் வாசிக்க முடியும். தொடர்வண்டியின் கழிப்பறையில் கண்ட தன் முகம் ஏதோ ஒரு கிராமத்துப் பெண்ணின் முகம் போலவும் அவள் இடையறாத அலைக்கழிப்பில் இருப்பது போலவும் சட்டென்று நினைவுக்கு வந்து மறைந்தது.


தன் இருக்கைக்கு வந்து அமரும்போது எதிரில் இருந்த அந்த ஆள் விழித்திருந்தான். அவள் தன் இருக்கையில் விட்டுச் சென்ற புத்தகங்களை கையில் எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான். அது அவளுக்கு கொஞ்சமாய் எரிச்சலைக் கொடுத்தாலும் அவளுக்கு அவனைப் பிடித்துப் போயிருந்தது.


‘மன்னிச்சுக்குங்க, இஸபெல் ஆலண்டேவா...கைகளைக் கட்டுப்படுத்த முடியல?’

உரையாடலை இவள் ஆரம்பிக்கவேண்டியதில்லை.

‘என்னடா, ஒரு ஆம்பிள பெண் எழுத்தாளர வாசிக்கிறாருன்னு நினைக்கிறீங்க இல்லையா?’ சிறியதாய் சிரித்தாள்.


‘இவங்களோட தீவிர ரசிகன் நான். இவங்களோட இவா லூனா படிச்சிருக்கீங்களா? கதைய அடுத்தடுத்து மாற்றி அடுக்கிக் கொண்டே போவாங்க. இவங்க தன்ன ஒரு கத சொல்லின்னு சொல்றாங்க. என்னைய கேட்டா கதைய நிகழ்த்துறவங்க. உண்மைக்கும் புனைவுக்கும் இடையில வித்தியாசமே இல்லன்னு நம்பவச்சிருவாங்க’


பொதுவாக வேணிக்கு அதிகமாகப் பேசும் ஆண்களைப் பிடிப்பதே இல்லை. உலகின் எல்லா மூலை முடுக்கிலும் எந்த விதத் தயக்கமுமின்றி நுழையக்கூடிய ஆண்களால் தங்கள் அறிவு வெளிப்பட வெளிப்பட பீற்றிக் கொள்வதில் என்ன இருக்கிறது? என்று தோன்றும். ஆலெண்டேவின் நூல்கள் அவளை அவனுடன் நெருக்கமாக்கின. தன்னை மனோகர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான். மனோ என்றே கூப்பிடுங்கள் என்று சகஜமானான். பாம்பைப் பழக்கும் இனக்குழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அத்தகைய இனக்குழுக்களை நாடு முழுதும் தேடி அலைந்து அவர்களுடன் வசித்து அம்மக்கள் கையாளும் தொழில்நுட்பங்களைக் கண்டறிவதுமாக இருக்கிறான் என்று கூறினான். பேசும்போது தெளிவான உச்சரிப்பை ஏற்படுத்த விரும்பிய முயற்சியில் முகம் ஏதோ விநோதமான களையைத் தந்தது.

இருவரும் ஒன்றாகவே வந்து வண்டியில் ஏறியது போல ஒன்றாக உண்டனர். ஒன்றாகத் தேநீர் வாங்கிப் பருகினர். ஒருவரையொருவர் இணக்கமாக்கிக் கொண்டனர். கடந்த காலம் பற்றிய நிகழ்வுகளையும் சென்று சேர விரும்பிய இடம் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். உரையாடல்களுக்கிடையே இருந்த மெளனம் கூட ஒருவரையொருவர் முழுவதுமாக அறிந்திருந்த இருவருடையதாக இருந்தது. பொழுது நகர்ந்து நாளின் எல்லையைத் தொட்டது. இரவு என்பது முற்றிலும் தனக்கேயானது என்பதைப் போல ஓடிக்கொண்டிருந்தது வண்டி. உறக்கத்தின் போது நழுவி கீழே விழுந்த போர்வையை அவன் இழுத்துப் போர்த்திவிட்டு உறங்கச் சென்றான் என்பதை அரைத் தூக்கத்திலும் கவனித்தாள். கண்மூடிய போது அவளை ஒரு கனவு அழுத்தியது. அவள் மல்லாக்கப் படுத்திருக்கத் தடிமனான பாம்பு ஒன்று அவள் தலையிலிருந்து மெதுவாக அவள் மீது கீழ் நோக்கி நகர அவள் எந்த ஒரு தருணத்திலும் பாம்பின் மூச்சுடன் தன் மூச்சு உரசி பாம்பைச் சீண்டாமல் இருப்பதற்காக தன் மூச்சை அடக்கி அது, கால் வழியாக வெளியேறும் வரை காத்திருந்து அது நகர்ந்ததும் பெருமூச்சிட விழித்துக் கொள்கிறாள்.


மறுநாள் காலை அவளுக்கு முன்பாகவே எழுந்திருந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தான் மனோ. அவள் எழுந்ததும் மென்மையாக சிரித்துவிட்டு, காலை உணவு வாங்கி வைத்திருப்பதாகக் கூறிவிட்டுத் தொடர்ந்து படிக்கத் தொடங்கினான். பெட்டியில் இருந்தவர்கள் தொடக்கத்தில் இருவரின் நடவடிக்கைகளையும் அந்நியர்களைப் போல கவனித்தனர். அவ்விருவரும் தம் உலகில் முற்றிலுமாகத் தொலைந்தப் பின் அவர்களை அப்படியே மறந்து விட்டனர்.


மனோ பேசும்போது கண் நோக்கிப் பேசினான். தன்னையே முன்வைக்கும் குணமழிந்து எல்லோரின் இருப்பையும் பொருட்படுத்தியதான எண்ணங்களே அவன் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்ததாகப் பட்டது. அவளுடன் பேசுகையில் அவள் உடல் மீறிய உரையாடலையும் அதே சமயம் அவள் உடலைப் பொருட்படுத்திய ஒரு கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தான். அவள் அவனை கவனிக்காத சமயங்களில் அவன் தன்னை உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றானோ என்று தோன்றினால் அவன் நன்கு உறங்கிக் கொண்டிருப்பான். இப்படி இருநாட்களும் திளைப்பாகவும் விழிப்பாகவும் இருந்தது. அவள் உடல் ஒரு காட்டைப் போல அவள் வாழ்க்கையினும் பெரிதாக மாறிக் கொண்டே இருந்தது. கட்டறுந்த கொடிகளாய் அவளுடைய உணர்ச்சிகள் மரமேறின. மரங்களின் தடித்த அடிமரங்கள் வெளிப்படுத்த முடியாத ரகசியங்களுக்குள் புதைந்திருந்தன. மண்ணையும் உயிரையும் இணைக்கும் உடலுக்குள் கூக்குரலிட்டுச் சிறகடிக்கும் பறவையின் உணர்வைத்தந்துகொண்டிருந்தான். அடுத்த இரவும் வந்தது.


கழிவறைக்குச் சென்று திரும்பியவள் மனோ பெட்டியின் நுழைவாயிலில் காற்று அவன் தலைமுடியை களியாட்டம் கொள்ளுமாறு நிற்கக் கண்டாள். புன்னகைத்தவாறே இவளும் சென்று அவனருகில் நின்றாள். எதிரே நிலவு வானில் நகர்ந்து கொண்டிருந்தது. சாம்பலாய் பூத்திருந்த வானில் நிலவு வெள்ளியாய் மின்னியது. அதுவும் வண்டிக்கு இணையாக வேகமாய் ஓடியது போலவும் தோன்றியது. மலைத் தொடர்கள் பின்னணியில் கருமையாய் உயர்ந்திருந்தன. குளிர் காதருகில் காற்றாய் கீறியது. தனது துப்பட்டாவை சுழற்றிப் போர்த்திக் கொண்டாள். இருவரும் பேசாமலேயே மெளனமாய் நீண்ட நேரம் அங்கேயே நின்றாற்போல இருந்தது. ’உள்ள போலாமா?’ என்று கேட்டாள். அந்தக் கூட்டத்துக்குள்ள ரொம்ப நெருக்கடியா இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் நிக்கலாமே?’ என்றவன் அவளின் இடது கையைப் பற்றி அவளை அருகிழுத்து நெஞ்சிலும் இதழிலும் முத்தமிட்டு அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். இவள் அவனை அருகிழுத்து இதழில் மீண்டும் முத்தமிட்டாள். இதழ் கொஞ்சம் நுங்கைப் போல சுவைத்தது. அருகில் அணக்கம் கேட்க தோள்பக்கம் திரும்பினாள். ஓர் ஏழைப் பெண் கையில் குழந்தையுடன் அருகே ஒரு சிறுமி, அவளின் மகளாக இருக்க வேண்டும், ஒரு புறம் அழுகிய கொய்யாவை வாயடைத்துக் கடித்துக் கொண்டிருக்க இரந்து நின்றனர். இருவரும் விலகிக் கொண்டனர் வெட்கம் நிறைந்த புன்னகையுடன். *

இதழ்களின் செய்தி


முக்கியமான சில பத்திரிகைகளையும் செய்தித்தாள்களையும் தவிர மற்றவற்றைப் படிப்பதைக் குறைத்துக் கொண்டே வருகிறேன். ஏனெனில் அவற்றின் பின்னுள்ள நம்பகத்தன்மை எனக்குக் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் இது தான் சம்பவம் என்று உரைக்கப்பட்ட செய்தியின் பின்னால் மறைந்து கிடக்கும் உண்மை மிகவும் தாமதமாகக் கிடைக்கிறது. ஆகவே எந்தச் செய்தியின் மீதான எனது நம்பகத் தன்மையும் முற்றிலுமாக எனக்கு இல்லாமல் ஆகிவிட்டது. அல்லது செய்தியின் வரிகளுக்கிடையே நான் வேறொன்றை வாசிக்கும் கண்களை வளர்த்துக் கொள்வதில் முனைந்திருக்கிறேன்.

காதலர் தினத்தை எதிர்த்து இந்து மக்கள் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது தினமணியில் வெளியான செய்தி. இன்றைய யதார்த்தத்தில் சாதிக்கலப்பு நடைபெறும் சாத்தியம் அதிகமுடையது காதலர் திருமணத்தில் தான். ஆகப்பட்ட வழிகளிலெல்லாம் இதை தடுத்து விட்டால் இந்து மதத்தின் சனாதனத்தைக் காப்பாற்றி விடலாம் இல்லையா?


பொதுவாகவே மஹாஸ்வேதா தேவி முதல் அருந்ததி ராய் வரை, ஏன் இந்தியர்களாக அறியப்பட்ட உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கூட உலகப்பொது அரங்கில் இந்தியப் பிரச்சனைகளைப் பேசும் போது அவற்றின் மையமாகவும் மூலமாகவும் சாதியமைப்பு இருக்கிறது என்று பேசத் தயங்குகிறார்கள். ஏனெனில் அவர்களாக எழுத்தாளர்களாக எழுந்து வந்ததெல்லாம் மேல் சாதித்தளத்திலிருந்து தானே! கிரிஷ் காசரவல்லி என்ற முக்கியமான கன்னட திரை இயக்குநரிடம், ‘நீங்கள் பொதுவாக மற்றவர்களிடம் விரும்பாதது என்ன?’ என்ற கேள்வியை முன்வைத்த டெஹல்கா பத்திரிகையிடம், ‘மற்றவர்களிடம் காணப்படும் சாதி குறித்த முற்சாய்வு நிலைகள்’ என்று கூறியிருப்பதே கூட எனக்கு அவரின் நுண்மாண் நுழைபுலம் என்று வியக்கத் தோன்றுகிறது.


சென்ற வார ’த வீக்’ பத்திரிக்கையின் முகப்புக் கதை 95 வயது நிறையும் குஷ்வந்த் சிங் பற்றியது. நிறைந்த பாலியல் சுகங்களுடனும் பெண்களுடனான அவரது உறவுகளையும் தூக்கிப் பிடித்த கதை. 95 வயது நிறைந்த எழுத்தாளர் தன் படைப்பாற்றலுக்குப் பின் ஆதாயமாக்கிக் கொள்வது இவை மட்டும் தானா என்ற சலிப்பு தோன்றுகிறது.


தினமணியில் ஞாயிறு தோறும் வரும் புதிய பகுதி ‘தமிழ்மணி’ என்பது. சில மாதங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க ஒரு பகுதி. தமிழ் மொழியினை நுணுகி ஆராய்ந்த மரபார்ந்த படைப்பாளிகளையும் நவீன படைப்பாளிகளையும் அதே சமயம் நவீன படைப்பாளிகளையும் பற்றிய குறிப்புகளாகவும் பத்திகளாகவும் வெளிவருவது அரிய தகவல்களை தருவதுடன் இன்றைய காலத்துடனான பொருத்தப்பாடுகளையும் உணர்த்துகிறது.


மூலை முடுக்கெல்லாம் உண்மைகளையும் சத்தியங்களையும் மொழிவது போய் எங்கோ மூலை முடுக்குகளில் மட்டுமே அவை காணக் கிடைப்பதாய் பத்திரிக்கைகள் ஏன் மாறிவிட்டன?
குட்டி ரேவதி

வானம்பாடிகள் ஏன் கொக்கரிக்கவேண்டும்?

இருபத்தியோராம் நூற்றாண்டின் கவிதைச் செல்நெறிகள் என்ற பொருளில் ஒரு நாள் கருத்தரங்கை கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் சாகித்ய அகாடமியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் இரவிச்சந்திரன் அவர்களின் அழைப்பின் பெயரில் நானும் சென்றிருந்தேன். பேசப்பட வேண்டிய பொருளும் காலகட்டமும் பொருத்தமானதாக இருந்தாலும் ஏனோ அங்கு அதன் தொடக்கத்தைக் கூட நிகழ்த்திட முடியாத ஒரு சூழலைத் தான் வானம்பாடிகள் ஓங்கியிருந்த அந்த அரங்கம் கொண்டிருந்தது.


வானம்பாடிகளின் கவிதை இயக்கத்திற்கு இணையாகவும் எதிராகவும் மறுத்தும் நிறைய இயக்கங்கள் தோன்றி செழுமையான மொழியையும் அரசியலையும் எட்டிவிட்ட இக்காலக்கட்டத்தில் வானம்பாடிகள் என்ற இயக்கம் முதுமையை எய்துவிட்ட ஓர் இயக்கமாகவே தோன்றுகிறது. வெளிப்படையாகப் பேசுவோம், வெடிப்புறப் பேசுவோம் என்ற முழக்கங்களோடு இருந்தாலும் கவிஞன் என்ற ஆளுமையையும் கவிதையின் அர்த்தப்பாட்டையும் கவிதையின் சமூகப் பங்கெடுப்பையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மனோநிலையை இன்றும் அவர்களிடம் காண நேர்ந்தது அவர்களின் அவலநிலைக்கு ஒரு சான்று. முற்போக்கான கருத்துகளைக் கொண்ட கவிதைகள் என்ற அடைமொழியுடன் அவர்கள் எழுதுவது எனக்கென்னவோ தினமலரில் இடம்பெறும் துணுக்குக் கவிதைகளைப் போன்று தாம் இருக்கின்றன. அதுமட்டுமன்றி, ஒருவரின் கவிதையில் இடம்பெற்ற ‘வாடகைத் தாய்’ என்ற சொல்லுக்கு மேடையில் இருந்த புவியரசு அவர்கள் கொல்லென்று சிரிக்க அரங்கத்திலிருந்தோரும் சிரித்து வைக்க ஓர் அந்நியமாதலை என்னால் உணர முடிந்தது.


வானம்பாடிகள் கவிதை இயக்கமும் என்னைப் பொறுத்த வரை ஒரு கவிதைப் போக்கு அவ்வளவே. அது மாதிரியான வேறு வேறு நவீன சிந்தனைப் போக்குகளுடன் கிளர்ந்தெழுந்த கவிதை இயக்கங்கள் எல்லாம் இன்று தீவிரப்பட்டிருக்கையில் ஓய்ந்து போனதே வானம்பாடிகள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அதே சமயம் அன்று நவீனக் கவிதை என்று சொல்லப்பட்ட இடத்திலேயே அது நிற்கவில்லை. மொழியை பரிசோதனை வடிவத்தில் கையாண்டு கவிதை படைத்தளித்தப் போக்கும், மொழியை அக மலர்ச்சிக்குப் பயன்படுத்திப் புறஎழுச்சியை உருவாக்கிய கவிதைப் போக்கும் ஒரே சமயத்தில் இணையாகச் செயல்பட்டுள்ளன. மொழியை ஒரு சொகுசாகக் கருதிய இடத்திலிருந்து நகர்ந்து அதை ஒரு சமூக அசைவாக நோக்கிய இடத்திற்கு நகர்த்தி வந்த படைப்பாளிகள் எல்லோருமே அந்த வானம்பாடிகள் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாகித்ய அகாடமியின் மைய நாற்காலியில் அமர்ந்து கொண்டதாலே தங்களின் சித்தாந்தத்தை அங்கிருந்தே திணித்துவிட முடியும் என்ற ஒற்றை நம்பிக்கையில் இன்னும் அந்த இயக்கம் பாடிக்கொண்டிருப்பது வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய விஷயம்.


மற்ற மாநிலங்களில் இது போல இல்லை. தங்களின் மொழியில் நிகழும் நவீனத்தையும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் முதன்மையாகப் பறைசாற்றிக்கொள்வதில் அவர்கள் பின் தங்குவதில்லை. அதுமட்டுமல்லாமல் சாகித்ய அகாடமி விருதுபெற்று மற்ற இந்திய மொழிகளுக்கு ஆக்கம்பெறும் தமிழ்ப் படைப்புகளை வாசித்து அவற்றின் தரம் குறித்து எள்ளி நகையாடுவார்கள் என்பதும் ஐயமில்லை.


நூறு பேருக்கும் மேலான மாணவர்கள் நிறைந்த அரங்கில் கவிதை என்பதற்கு வழங்கப்படும் முகவுரையும் செல்நெறிகளும் அவையில்லை என்பதே என் ஆதங்கம். பழமொழிகளைப் புரட்டிப்போட்ட வரிகளோ, ஒரு சிந்தனையின் புதிய ஆனால் மலிவான பதிவையோ எந்த வகையான ஒரு சொல் அல்லது நடை லயமும் அற்ற வடிவத்தில் எழுதி வாசிப்பது, அரசியல் அரங்கங்களின் வடிவங்களாய்ப் பொதியப்பட்ட தொலைக்காட்சி கவியரங்கங்களில் இடம்பெறும் அதே தொனியில் இரண்டிரண்டு முறைகள் வாசிக்கப்படும் வரிகள், திரைப்பாடலாசிரியர்கள் எழுதுவதே கவிதை வரிகள் என்ற சராசரி மனிதனின் சமரசங்களை ஏற்ற மொழியின் பதிவு, என்ற ரீதியில் கவிதை என வழங்கப்பட்டதும் கவிதையாக நம்பப்படுவதும் காலத்தின் தேக்க நிலை போல தோன்றியது.


வானம்பாடிகள் குறிப்பிடும் புரட்சி என்பது வெறுமனே பேச்சளவில் இருப்பது. செயளவிலும் இயக்க அளவிலும் அவை வடிவுறாமல் இருப்பதற்குக் காரணமாக இதில் ஈடுபடும் ஒவ்வொருவரும் எவ்வாறு தத்தம் புகழுக்காக அங்கீகாரத்திற்காக அதிகாரத்திற்காக சமரசங்களுக்குச் சரணடைந்தார்கள் என்பதை வரலாறு அறியும் அல்லது அவர்கள் பெற்ற விருதுகள் வழியேயும் அறியக்கூடும். இவர்களின் ஆளுமையின் குறைபாடாகவே இவர்களின் குரல்கள் ஒலித்ததாகத் தோன்றுகிறது. அரங்கில் ஒலிக்கும் தற்காலிக சபாஷ்களுக்காகவும் ‘உச் உச்’களுக்காகவும் கவிதை வாசிக்கும் இவர்கள் கோவையைப் பீடித்த நோய்களைப் போன்று தோன்றினர்.


ஒடுக்கப்பட்ட மக்களின் குரலென்று தங்களைக் கூறிக்கொள்ளும் இவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்று தம்மை முன்மொழியும் இவர்கள் தம்மைக் கூவிக்கூவி இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு சமூகப்பிரக்ஞை அழுத்தமாக இல்லை. மேலோட்டமான பொருள் விளையாட்டுகள் தாம் இருக்கின்றன. பிரச்சார முழக்கங்களைப் போலவும் இன்றைய சுவரொட்டிகளில் ஒலிக்கும் கோஷங்களைப் போலவுமே இருக்கின்றன.


அன்றைய நிகழ்வு குறித்த எனது சில எதிர்வினைகள்:

1.புவியரசு அவர்கள், ’நாங்கள் இப்படித்தான் எழுதுவோம், பூடகமாய் எழுதவேண்டிய அவசியம் எமக்கில்லை’ என்று மேடையில் கையடித்துப் பேசியது மாணவர்களை எதிரிகளாகக் கருதியா அல்லது அழைக்கப்பட்டிருந்த கவிஞர்களான சுகுமாரன், உமா மஹேஷ்வரி, என்னைப் போன்றவர்களை எதிரிகளாகக் கருதியா என்று தெரியவில்லை

2.எல்லோர் சொல்லிலும் விளையாடிய இறுமாப்பு கவிஞர்களின் ஆளுமைக்குப் பொருத்தமானது என்பதை உருவாக்கியது திராவிட இயக்கமா அல்லது அதன் மரபைத் தூக்கிச் சுமக்கும் வானம்பாடிகளுக்கே உரியதா?

3. மாணவர்கள் வானம்பாடி இயக்கத்தின் போக்கைப்பற்றித் துளியும் அறியாதவர்கள் என்பதும் ஏன், நவீனக் கவிதை குறித்த எந்தப்பரிச்சயமுமே அவர்களுக்குத் துறையிலிருந்து வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதும் தெளிவானது.

4. 1971 –ல் கோவையில் தொடங்கி இன்னும் ஓர் நோயைப் போல இலக்கியத்தையும் சமூகத்தையும் பீடித்துக் கொண்டிருக்கும் வானம்பாடியை வளர்த்தெடுப்பதைக் காட்டிலும் வேறு பணிகளை சாகித்ய அகாடமி கையிலெடுக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

5. மேடையில் ஓய்ந்து போன குரலில் உணர்ச்சி வயப்பட்ட வானம்பாடிகளைப் பார்க்கும்போது அக்கவிஞர்களின் உடல் நலம் குறித்தும் அவர்களைக் கவிஞர்களாகக் கொண்ட நமது சமூக நலம் குறித்தும் அநியாயத்திற்குக் கவலை கொண்டேன்.

6. எல்லாவற்றிலும் வேதனையானது, பாரதியார், பாரதிதாசன் பெயரைச் சொல்லிச்சொல்லி இவர்கள் தம்மை அவர்களின் வாரிசுகளாக ஆக்கிக் கொண்டது தான்.

என்றாலும் கோவைக்கு மேற்கொண்ட பயணம் விரயமாகவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சூழல் இயற்கையின் அழகுகள் அசையக் கூடியது. கண் முன்னே மயில்கள் பறந்து திரிவதையும் சாலைகளை முயல்கள் கடப்பதையும் புதருக்குள்ளிருந்து குயில்கள் பறந்து வெளியேறுவதையும் நேரடியாகக் காணலாம். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் ’தோற்றுப்போனவர்களின் பாடல்’ கவிதைத் தொகுப்பை வாசிக்க நேரம் கிட்டியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர் முத்துக்குமாரைச் சந்திக்க முடிந்தது. வேறென்ன வேண்டும், என் போன்றவர்க்கு?
குட்டி ரேவதி