நம் குரல்

எதன் பொருட்டுத் தொலையும்?



முப்பது வருடங்களிலேயே கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும் ஒரு நிலைமையும் காலத்தின் வேகமும் கூடிவிட்டது. அதில் புதியதைப் புரட்டிப் போடுகையில் பழைய மனிதர்களும், ஏன் மிகவும் முக்கியம் என்று நாம் மதித்திருந்த பொருட்களுமே கூட தொலைந்து போவது தான் கண் முன்னால வந்து நிற்கின்றன. நாம் உறுதியான பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்த மனிதர்களும் மிகச் சிறிய அசந்தர்ப்பமான காரணங்களால் தொலைந்து போயிருக்கிறார்கள். வனஜாவைப் போல. எப்படி ஏன் வாழ்க்கையிலிருந்து தொலைந்து போனாள் என்று யோசித்துப் பார்க்கையில் கொசுவர்த்திச் சுருள் போல ஒன்று கண் முன்னே சுழல்கிறது. சமீபத்தில் ஜகன் மோகினி திரைப்படம் பார்த்த விளைவு தான்!

அந்தச் சிற்றூரில் நானும் அவளும் மட்டும் தான் முதன் முதலாக சைக்கிள் வாங்கிய பெண்கள். ஒருவரையொருவர் சந்திக்கும் போதே இருவரும் சொந்தமாக சைக்கிள் வைத்திருந்தோம். பள்ளி நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலையிலேயே எங்கு செல்வது என்று திட்டமிட்டு விடுவோம். வீட்டிலிருந்து கிளம்பி அந்த ஊரின் புறப் பகுதியில் இருக்கும் கோவிலைச் சுற்றி ஐந்து மைல்கள் தாண்டி இருக்கும் கல் குவாரியையும் அதைச் சுற்றியும் உள்ள கிராமங்களையும் கடந்து திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலை வரைத் தொட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோம். வெளியை விரிக்கும் எங்கள் உடல் கட்டுக்கடங்காத ஆற்றலுடனும் ஊக்கத்துடனும் இருந்தது. குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டும் பெண்களாக எங்களிருவரால் வளைய வரமுடியவில்லை. எங்கள் சைக்கிள்களின் சக்கரங்களில் காலத்தின் இறக்கைகளைக் கட்டிக் கொண்டிருந்தோம். எங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றிய கற்பனைகளை நாங்கள் சிறிதும் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் சமூகப் பணிகள் ஆற்றுவது என்று இருபது வருடங்களுக்கு முன்னேயே முடிவெடுத்திருந்தோம். அம்மாதிரியான அபத்தங்கள் இன்றைய பிடிமானமற்ற தனிமையில் சுவரைப் பார்த்து முட்டி முட்டிப் புன்னகைக்க வைக்கின்றன.

எங்கள் சைக்கிள் பயணங்கள் பாதையறுந்த நாட்களில் பேருந்தேறி காவிரிக் கரை அடைவோம். எங்களுக்குப் பிடித்தமான நிழலார்ந்த குளிரடைந்த இடம் மலைக்கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ள மிகப் பெரிய பாலம். அதன் அடியில் சூரிய மினுமினுப்புடன் பாயும் காவிரி கரை மோதும் இடம். நாங்கள் அங்கு காவிரிக்குள் இறங்கி அதன் மத்தியப் பகுதி வரை நடந்து உள்ளே சென்று நீரில் மிதப்பது போல தோன்றும் பாறைகளைத் தேர்ந்தெடுத்து அமர்வோம். மாலை சூரியன் நீருக்குள் மூழ்கும் வரை அமர்ந்து விட்டு நீர் பொன்னாகக் கரைந்து ஒழுகியோடும் வரை காத்திருந்து விட்டு வீடுகளுக்குத் திரும்புவோம். தொலைந்து போய் விட்டன அந்த நாட்களும். வனஜாவும். காலம் காவிரியைப் போல நினைவுகளைத் தேக்கும் சக்தியற்றது போல.

அப்பாவின் மரணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஓர் அறுவை சிகிச்சை நடப்பதாக இருந்தது. அதில் அப்பா பிழைப்பதற்கான வாய்ப்பு இரு சதவிகிதமே இருப்பதாக மருத்துவர் கூறியிருந்தார். அப்பாவை அதற்கான அறையில் அழைத்துச் செல்லும் முன் அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் அவர் எப்போதும் வைத்திருக்கும் பேனா மற்றும் சில நினைவடர்ந்த பொருள்களான பர்ஸ், உபயோகித்த மர சீப்பு, முக்கியமான சிறிய புகைப்படங்கள், இரவு ஒரு மணி வரை அம்மாவும் அப்பாவும் கேட்டு மகிழ ஏன் ஒருவரையொருவர் கேட்டுக் கொஞ்சிக்கொள்ள பயன்படுத்திக் கொண்ட வானொலி, நுட்பமான மரவேலைப்பாடுகள் செய்யப் பயன்படுத்திய உளிகள் என எல்லாமும் அடங்கிய சிறு கைப்பை என்னிடம் கொடுக்கப்பட்டன. அதை நித்தமும் என் பையில் வைத்திருந்தேன். ஒரு முறை வண்டியில் என் வேகமான பயணத்தின்பொழுது நழுவி வீழ்ந்துவிட்டது. அதைக் கண்டெடுக்கவே முடியாத படிக்குத் தொலைந்து போனது. தொலைந்த அப்பொருட்கள் இன்றும் கனவின் மாயாலோகத்தில் சுழன்று மிதந்து கொண்டிருக்கின்றன.

நாட்கள். மிகுந்த வெளிச்சம் சிறகடிக்கும் அந்த நாட்கள் எங்கோ பழுத்து உதிர்ந்து விட்டன. நீருக்குள் மூர்க்கமாய் மூழ்கித் திளைத்த நாட்களும் மலையின் உச்சம் நோக்கி மூச்சிளைக்க நடந்த நாட்களும் காடுகளில் நெடிதுயர்ந்த மரங்களினூடே திடீர்த்திருப்பங்களுடன் புதிர்விளையும் வெளியை நுகர்ந்த நாட்களும் தொலைதூரத்திலேயே தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அந்த நாட்களில் கண்ட அனுபவங்கள் இரத்தத்தில் சேர்ந்து கரைந்து சிவப்பாகிக் கொண்டிருக்கின்றன. முதல் முத்தத்தை எப்படிப் பொத்தி வைப்பது? அதைப் போலத்தான்.

மேலும் எதையும் தொலைந்த இடத்தில் போய்த் தேடிக் கண்டுபிடிக்க இயலாத படிக்கு வெளி என்பது நினைவுகளின் சுவரிடிந்த அறைகளில் ஓவியமாய் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றைக் குடைந்து நம்மால் அங்கு செல்ல முடியாத படிக்கு அவை முற்றிலும் கற்பனை வெளியாக இருக்கின்றன. தொலைந்த பொருட்கள் வேறு வேறு உருவமெடுத்துக் கொண்டே இருக்கின்றன என்பதும் அவை ஒரு கட்டத்தில் அந்நியமாகி விடுகின்றன என்பதும் உறைந்து போன உண்மைகளாக இருக்கின்றன.
ஆனால் என்னுடைய அனுபவத்தில் ஒரு பொருள் தொலைந்து போகும் முன்னர் ஒரு முறை பொய்யாகவேனும் தொலைந்து காட்டுகிறது. நம்மை மூர்ச்சிக்க வைக்கிறது. எண்ணங்கள் எல்லாமே புகையாகக் குழம்பி என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற திக்கற்ற வெளியில் நம்மைக் கொண்டு போய் நிறுத்தி விடும். எண்ணாயிரம் பொருட்கள் நிறைந்த வெளியில் எந்தப் பொருளைத் தேடுகிறோம் என்று தெரியாத சிந்தனைக் கொம்பில் தன்னந்தனியே நம்மை விட்டுவிடும்.


குட்டி ரேவதி

2 கருத்துகள்:

tamiluthayam சொன்னது…

ஆனால் என்னுடைய அனுபவத்தில் ஒரு பொருள் தொலைந்து போகும் முன்னர் ஒரு முறை பொய்யாகவேனும் தொலைந்து காட்டுகிறது. நம்மை மூர்ச்சிக்க வைக்கிறது. இது பயம் கலந்த கற்பனை. ஆனால் பாருங்கள். நிறைய விஷயத்தை, நடப்பதற்கு முன்பே கற்பனை செய்து பார்க்கிறோம். இது வழக்கமான ஒன்று. நல்ல அனுபவ பகிர்வு

chandru / RVC சொன்னது…

பதின்மங்களின் அபத்தங்களும், கேட்டு வளர்ந்த சாகசக்கதைகளும், பேசி தீர்த்த நண்பர்களும்... நீண்ட பயணம் போய்வந்த உணர்வு.
தொலைவது - தொலைந்தது என்றாகிவிட்டபின் உணர்வென்ன? பொருளென்ன? நினைவின் இடுக்கில் ஒட்டியுள்ள சேகரங்களைச் சுரண்டி எஞ்சிய நாட்களுக்கான கழிவிரக்க பெட்ரோலை நிரப்பிக்கொள்ள வேண்டியதுதான்..!