நம் குரல்

இன்று எனது 120-வது பயண நாள்!

இன்றைய வருடத்தின் என்னுடைய நூற்றி இருபதாவது பயண நாள். ஏதேச்சையாக டைரியைப் புரட்டி இந்த வருடம் பயணம் செய்த நாட்களை எண்ணிப்பார்த்த போது ஏறத்தாழ நான்கு மாதங்கள் அளவிற்கு பயணம் செய்திருக்கிறேன். சென்ற வருடம் இதைக் காட்டிலும் அதிகமாயிருக்கும். எழுத்தாளர் சிவகாமி அவர்களுடன் இணைந்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து பெண்களிடையே அவர்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். எங்களை ஒரு மூர்க்கமான நல்விசை அவ்வாறு பயணிக்கச் செய்தது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு பயணிக்கவில்லையெனில் என் கூடு நூலாம்படை படர்ந்து வீச்சமடிக்கத் தொடங்கிவிடும் என்று நம்புகிறேன். எண்ணங்களைத் தீர்க்கவும் உடனுக்குடன் கருத்துக்களைப் புதிப்பிக்கவும் முக்கியமாக மனோபாவத்தை ஆரோக்கியமானதாகப் பேணவும் ஒவ்வொரு மனிதனுக்கும் பயணம் அவசியம் என்பது என் கருத்து. இந்த மாதத்தில் இன்னும் பன்னிரண்டு நாட்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது.

இன்று சேலத்தில் வந்து இறங்கியிருக்கிறேன். பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வுக்கான பயிற்சிகள் அளிப்பதற்காக. தொலைதூரக் கிராமத்துப் பெண்களைச் சந்தித்து அவர்களுடன் சிந்தனைப் பரிமாற்றம் செய்ய வேண்டும். பாலின சமத்துவம் பற்றிய அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதுடன் என்னுடைய கருத்துக்களை அவர்களுடன் பரிமாறிக் கொள்ள வேண்டும். இன்னும் நான்கு நாட்களுக்கு இதுவே என் பணி. பெண்களை அதுவும் கிராமத்து, அடித்தட்டுப் பெண்களைச் சந்திப்பதை எனக்கே நான் அளித்துக் கொள்ளும் பயிற்சியாக வைத்துக் கொள்கிறேன். ஓர் அளவுமானி போல. பெண்ணியம் என்பது அதரப் பழசான வார்த்தை தான். என்றாலும் என்னளவில் அது தொடர்ந்து இயங்க வேண்டிய தேவையையும் எவர் மறுத்தாலும் அதன் பாதையில் நான் சீராகப் பயணப்படுவதில் என்னுடைய முழு கவனத்தையும் கோருவதாகவும் உணர்கிறேன்.

சேலத்தில் பெண் சிசுக் கொலை நிகழ்வது அன்றாடச்செயல்களில் ஒன்று. இன்று காலையிலும் செய்தித் தாளில் ஒரு செய்தி உண்டு: ஒரு பெண் தனது எட்டு மாதக் குழந்தையை மருத்துவமனையில் உட்கார்ந்திருந்த ஒரு முதிய பெண்ணிடம் கொடுத்து, ‘கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்! பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்’, என்று சொல்லிவிட்டுச் சென்றவர் திரும்பவும் வரவே இல்லை. பெண் சிசுக் கொலை முன்பை விட இப்பொழுது குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் பிரசவத்திற்குத் தாய்வீட்டுக்குச் சென்றவர் திரும்பி வரும்போது பிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறுவார். மேலும், பெண் குழந்தைகள் வளர்ப்பில் தொடரும் அலட்சியமும் வெறுப்பும் வேதனையை அளிக்கக் கூடியது. முதல் குழந்தை பெண் என்றால் தப்பித்தது. முக்கியமான இன்னொரு விஷயம் இளம் வயதுத் திருமணம். பெண்கள் தங்கள் பதினைந்து வயது வரைக் கூடத் தாமதிப்பதில்லை. அரை குறையான கல்வி. கல்வி துண்டிக்கப்படுவதன் காரணத்தைக் கேட்டால் வறுமை என்று கூறும் பெற்றோர் உடனே நடத்தப்படும் திருமணத்திற்குச் செலவு செய்யத் தயங்குவதில்லை. தான் ஒரு காவல் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்த ஒரு பெண், காதல் திருமணம் செய்து கொண்ட கணவனே படிக்கக் கூடாது என்று தடையிட்டதைக் கூறி அழுதார். பெண்களுக்கு எதையும் விட திருமண ஆசை இளம்பருவத்திலேயே தாயாலும் சுற்றியுள்ள பெண்களாலும் நாடி நரம்பெல்லாம் ஊட்டப்படுகிறது. அது ஒரு சொர்க்கம் என்பது போலத்தான் கழுத்தில் மாலையை வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் தான் அது பலி கொடுப்பதற்கான நிகழ்வு என்று விளங்குகிறது. இத்தகைய திருமணங்கள் ஆண்களையும் கண்டிப்பாய் வாட்டி வதைக்கத் தான் செய்யும்.

இன்று அத்தகைய பெண்களுடன் ஏழு மணி நேரம். நீண்ட உரையாக இல்லாமல் உரையாடலாக எல்லோரின் வாழ்வையும் பிளப்பாய்வு செய்வதான வேலையை எளிதாகவும் வருத்தமில்லாமலும் செய்து பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் வலி மருந்தை ஏற்றிப்பார்ப்பது போல. தொடர்ந்து கண்ணீர் முட்டும் விழிகள் சுடரும் வரை உடனிருக்க வேண்டியிருக்கும். கல்வி, வேலை, வருமானம், ஆரோக்கியம் என்பதெல்லாம் பெண்களுக்கு யாரோ வந்து கொடுக்கப் போவதில்லை. அதைப் பெறுவதற்கான ஊக்கமும் பிடிவாதமும் அவர்களே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை ஏதும் பெற முடியாத பெண்கள் அன்றாட வாழ்வோடும் வறுமையோடும் கணவனோடும் நோயோடும் படும் பாடுகள் வேகவேகமாய் முதுமையைக் கூட்டி வருகின்றன. மேற்கண்ட எனது அனுபவத்திற்குப் பிறகு சேலம் என்ற நகரம் ஒளி மங்கிய தூங்குமூஞ்சி நகரத்தின் தோற்றம் கொள்கிறது என் நினைவில். கூட்டங்களில் கலந்து கொண்ட பானுமதியும் கீதாவும் ஒருவரோடொருவர் கை கோர்த்து சிரித்து சிரித்துக் களித்தது அவர்களின் நாற்பது வயதுக்கான அழகாகவும் இன்றைய நாளின் வெளிச்சமாகவும் தோன்றியது! மாலையினை இரவுக்குள் அழைத்துச் சென்ற பெருமழையும் இன்றைய நாளுக்கான வரவு தான்.


குட்டி ரேவதி

2 கருத்துகள்:

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

இன்றைய வருடத்தின் என்னுடைய நூற்றி இருபதாவது பயண நாள்//

வாழ்த்துக்க‌ள்

Nathanjagk சொன்னது…

குட்டி ரேவதி கவிதைகள் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே இந்த ​பெயர் பிரபல்யமாகத் ​தொடங்கிவிட்டிருந்தது. நவீன தமிழ் பெண்கவிஞர்களின் வரிசையில் எப்போதும் இடம் ​பெறும் பெயர். தவிர்க்க முடியாத சர்ச்சைகள் / கண்டனங்கள் / குழுச்சண்டைகள்.. இத்யாதி.
இது நான் படிக்கும் உங்களின் முதல் கட்டுரை. முன்னேற்பாடான தீர்மானங்களைத் தொட்டுச் சாய்க்கும் எழுத்து. நிரம்ப எளிமை!
உங்கள் முயற்சி வெற்றி ​பெற வாழ்த்துகள்!
நன்றாகயிருக்கிறது.. இது என் இன்றைய நாளுக்கான வரவுதான்!