நம் குரல்

’ஏகாந்தம் ஏதுக்கடி?’



பெண்கள் எல்லோரும் வாழ்வியல் பெருஞ்சுமையினால் தமது தனிமையின் இருள் வெளியில் உழன்று கொண்டிருக்கும் சமயத்தில், அதையே நான் வேண்டி விரும்பிப் பெற்றுக் கொள்வதன் காரணம் தனிமை என்பது எனக்குத் தரும் உல்லாசமும் ஆசுவாசமும். தமிழ் மொழியில் ஒன்றுக்கொன்று எதிரான ஆனால் ஒரே மாதிரியான இரண்டு மனித நிலையைக் குறிப்பிடுவதற்கான சொற்களுண்டு; ஏகாந்தம் மற்றும் தனிமை. ஏகாந்தம் நேர்மறையான அழுத்தமற்ற பொருளுடனும், தனிமை துக்கத்தின் சாயல்களுடனும் ஒலிக்கின்றன. கூட்டத்திற்கு மத்தியில் இருந்தாலும், நெருங்கிய உறவினர் குடும்பத்தினர் மத்தியில் இருந்தாலும் எவருமே தொட்டுப்பார்த்து உணர முடியாத தனிமை என்னும் தோடால் (தோலால்) பெண்கள் மூடப்பட்டுள்ளனர். இந்தத்தனிமை எந்த வகையிலும் இனிமையானது அன்று. ஆண்களால் எப்பொழுது வேண்டுமானாலும் தங்களுக்கான ஏகாந்தத்தை அதிகாரத்தாலும் உரிமையாகவும் ஏன், இயல்பாகவும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். வெட்டவெளி, சிதம்பரம், விண், அந்தரம் போன்ற சொற்கள் எல்லாமே உணர்த்தும் வெளிசார்ந்த அர்த்தங்கள் ஆண்களின் வாழ்வியலுடன் தான் நெருங்கியவையாக இருக்கின்றன. இவையெல்லாம் பெண்கள் பிரவேசிக்க முடியாத வெளிகளாக நிறுவப்பட்டிருப்பதும், பெரும்பாலும் சமயங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதும், தம் உடலை விட்டு வெளியேற முடியாதவர்களாகப் பெண்கள் இயக்கப்படுவதும், தாம் காரணம்.


பெண்கள், தனிமை என்ற அழுத்தமான வெளியிலிருந்து வெளியேறி எப்பொழுதாவது ஏகாந்தம் என்பதை நுகர்கிறார்களா என்று நான் யோசித்ததுண்டு. கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் இந்த சமகால, யதார்த்தமான வெளியிலேயே தாங்கள் இல்லை என்பது போல நடந்து கொண்டிருப்பதை பல சமயங்களில் நான் பார்த்திருக்கிறேன். குழந்தையின் பூவுடலின் மீது கொண்டிருக்கும் பேரன்பும் அதைப் பேணும் சகல உரிமைகளும் அதிகாரங்களும் பெற்றுள்ள தாய்மை நிலையில், அவர்கள் தங்களைச் சுற்றி இயங்கும் இந்த உலகத்தையே மறந்து வேறு ஒரு கற்பனை அல்லது மீமெய் வெளிக்குள் சஞ்சரிப்பது போல அவர்கள் முகத்தில் சிற்சில சொற்பக் கணங்கள் பேரொளி வீசக் கண்டதுண்டு. ஆனால் குழந்தை வளர வளர அந்த ஏகாந்த உலகமும் உருவழிந்து அவர்கள் மீண்டும் தனிமைக்குள் தள்ளப் படுகின்றனர்.

தனிமை என்பது பெண்ணை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தான் தனிமையில் இருக்கிறோம் என்று அறிய முடியாத அளவுக்கு அவள் அதனால் அழுத்தப் பட்டிருக்கிறாள். மூச்சடைக்கச் செய்கிறது அவளின் வீடு. பெரும்பாலான சமயங்களில் தனது சுயத்தேவைகள் குறித்த சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் பெண்கள் நிர்க்கதியாய் நிற்பதன் காரணம் தனிமை குறித்த அவர்களின் கற்பனையான பயம் தான். ஏதோ அவர்கள் ஏற்கெனவே தனிமைக்கு வெளியே தப்பித்து நின்றவர்களைப் போல. காலங்காலமாய் ஆண்மைய தத்துவங்கள் எல்லாம் வாழ்வியலின் விளிம்புகளில் பெண்ணுக்கான தனிமையையும் நிரந்தரமின்மையையும் வரைந்து அதை நோக்கி அவளைத் தள்ளிக் கொண்டேயிருக்கின்றன.

தங்கும் விடுதிகளில் நாட்களைக் கழிக்க நேரும் போதோ அல்லது எழுதுவதற்கான காலத்தைத் தேர்ந்தெடுத்துத் தனியாக அமரும் போதோ இந்தத் தனிமையின் அடுத்த ஆரோக்கியமான கட்டமான ‘எல்லா தற்கால அழுத்தங்களிலிருந்தும் விடுபட்ட நிலை’யை உணர்கிறேன். தொலைபேசிகளின் அலைகளால் நான் அவ்வப்பொழுது கவனம் சாய்க்கப்படாத நிலை அது. காலம், என் கையில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடும். என் சுவாசத்தின் காற்று மட்டுமே வீசும் சப்தத்தின் பின்னணியில் நான் ஏதோ மலையின் உச்சியில் நிற்பதைப் போல உணர்ந்ததுண்டு. அந்த அளவிற்கு சுகமும் அதே சமயம் விட்டு விடுதலையாகி இயங்குவதற்கான ஆர்வமும் என் கைகளிலேயே இருக்கும். மரங்கள் கூட்டமாக தோட்டங்களில் தோப்புகளில் வாழலாம். ஆனால் தனிமையைத் தாங்கி தனியே வளரும் மரம் தான் உறுதியாக வளர்கின்றது.


‘சாகாமல் தாண்டித் தனி வழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி? – குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி?’, என்பது குதம்பைச் சித்தரின் வரிகள். இதில் கூறப்பட்டுள்ள ஏகாந்தம் என்பதின் பொருள்கனம் மிகையானதாகவோ நான் மேலே இயம்பியிருக்கும் விவாதத்திற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும். சித்தர்கள் தாம் அதிகமான ஆண் மையச் சொற்களை உருவாக்கியவர்கள். இதையெல்லாம் புறம் தள்ளி, தனிமைக்கும் ஏகாந்தத்திற்கும் கருத்து மயக்கம் உள்ள நிலையில் நானே விரும்பி ஏற்கும் தனிமை என்பது என்னை மூதாதையரின் அகாலமான சிந்தனைவெளியோடும் முக்காலத்தோடும் என்னைத் தொடர்புப்படுத்தி இயங்கத் தூண்டுகிறது, வெகு தற்காலிகமான கணத்திற்கே என்றாலும்...




‘ஏகாந்தம் ஏதுக்கடி?’ – குதம்பைச் சித்தரின் பாடல் வரி.




குட்டி ரேவதி

1 கருத்து:

Chithra சொன்னது…

Just amazing! Great ,kutti revathi . Keep going ..we need more such people like u ..

Your clear observation and above all the courage to stand apart is just unbelievable. Keep going ..

Felt good reading this article. Since women ae kept in unforeseen dark ,as you said,cannot take the decisions correctly and blamed for being weak ..