நம் குரல்

பாலாற்றின் மீது நடந்தோம்









பாலாறு, ஒரு விதவையின் வெள்ளைப்புடவையைப் போல உலர்ந்து வறண்டிருந்தது. இந்த உவமானம் இன்றைய தேதிக்குப் பழமையானது. ஆனால் தொன்மையான ஆற்றைக்குறிக்க இந்த உவமையைப் பயன்படுத்துவதில் தவறில்லை. பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கம், முக்கூடல் அருகே ஒரு பிரச்சார நடை பயணம் ஒன்றை மேற்கொள்வது என்று முடிவு செய்திருந்தது. முக்கூடலிலிருந்து வாலாஜாபாத் நோக்கி நடந்து செல்வது என ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. 8.8.09 அன்று மாலை ஏறத்தாழ இருநூறு பேர் நடக்கத் தொடங்கினோம். அப்பொழுதும் உச்சி வெயில் தான். தலையில் கழுத்தில் உடலில் வியர்வையாய்க் காய்ந்தது. கோஷங்கள் நிகழ்கால இயற்கை அரசியல், தமிழக அரசியல், பாலாற்று விஷயத்தில் இந்தியா மற்றும் அண்டை மாநிலங்களின் அரசியல் என எல்லாம் கலந்தன. உற்சாகமான வேகத்துடன் ஏழெட்டுக் காவல்காரர்கள் உடன் வர நடக்கத் தொடங்கினோம். சிறிது தொலைவு சென்றதும் பிரச்சாரத்தில் இருந்த ஒருவர் காவல்காரரிடம் சொல்லிப் பார்த்தார், ‘ஐயா, இந்த வெயிலில் இவ்வளவு தொலைவு நீங்களும் ஏன் சிரமப்பட்டு நடக்க வேண்டாம்’. ஆனால் அவர் இன்னும் வேடிக்கையாக, ‘எனக்கு சர்க்கரை வியாதி, ஐயா. நடைப்பயிற்சி வேணுமின்னு டாக்டர் சொல்லியிருக்காரு. அதனால இப்படி நடந்தாத் தான் உண்டு.’




முக்கூடல் அருகே மணல் கொள்ளையர்கள் இன்னும் ஆற்றை அதன் மற்ற பகுதிகளைப் போல தோண்டியிருக்கவில்லை. அங்கு 18 அடியிலேயே கழிமண் இருப்பதாலும் பெருமணலாய் இருப்பதாலும் அவர்கள் இன்னும் அந்த ’சமூக நலப் பணி’யைத் தொடங்கியிருக்கவில்லை. வழியெங்கும் ஆயிரம் வருடங்களாய் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆற்றில் அதன் நீரோட்டத்துடன் ஓடி ஓடிக் களித்த கூழாங்கற்களையும் சேகரித்துக் கொண்டே நடந்தேன். அந்தக் கற்களில் கூட ஆற்றின் வருடம் எழுதப்பட்டிருந்த்தைப் போல பழமையாய் ஒரு பறவையின் முட்டையை நினைவுப்படுத்துவதாயும் இருந்தன. அந்த ஆற்றில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளும் எங்கள் பின்னால் வெகு தூரத்திற்கு நடந்து வந்தன. எதிரில் வானம் மாலையின் தோரணங்களைக் நிகழ்த்தத் தொடங்கியிருந்தது. ஒளித்தூண்கள் வடக்கு தெற்கென தூரிகையால் வரைந்ததைப் போல இருபுறமும் சரிந்து வீழ்ந்தன. மெல்ல மெல்ல மேகங்களும் கூடின. வாலாஜாபாத்தை சென்று சேர்ந்த போது தூறல் கனத்தத் துளிகளாயிருந்தது.



இன்றைய நாளின் அதிகாலையில் எந்த ஊரைத் தொட்டாலும் கணவனும் மனைவியுமாக, அல்லது ஆணும் பெண்ணும் தனித்தனியாக மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நடைப் பயிற்சியை மேற்கொள்வதைப் பார்க்கலாம். நடைப் பயிற்சி இதயத்திற்கு ஊக்கமும் மனதிற்கு உற்சாகமும் தரவல்லது. ஆனால் இம்மாதிரியான நடைப் பயணத்தின் கொடையை என்னென்பது? பரந்த வானத்தின் கீழே அகண்ட மணற்பரப்பின் மேலே நடந்து செல்வது. நூற்றுக்கணக்கான வேறுபட்ட வயதினர் ஒன்றாக இணைந்து இதில் ஈடுபடுவது. ஒரே நோக்கத்திற்காக ஒரே திசையை நோக்கி பயணிப்பதும் அந்நோக்கம் பற்றிய பாடல்களை பாடிக்கொண்டே செல்வதும், ஒருவித கூட்டுணர்வை எல்லோர் மனதிலும் கிளர்த்துகிறது. பறவைகள் இருபுறமும் வானத்தை அவ்வப்போது அளந்தன. ஆனால் ஆற்றில் நீந்திச் செல்வதற்குப் பதிலாக நடந்து செல்கிறோம். என்னவொரு கொடுமை!



ஆறுகள் மனித மனத்திற்கான லயத்தைக் கூட்டுபவை. ஆறுகள் மட்டுமன்று. எல்லாவிதமான நீர்நிலைகளும் அவ்விதமான இசைவை மனதிற்கு ஊட்டக் கூட்டியவை. இம்மாதிரியான வறண்ட பாழ்வெளிகள் அவற்றின் குணாம்சங்களையே மனத்திலும் வாழ்க்கையிலும் விதைக்கின்றன. ஆகவே தாம் ஆற்றங்கரை ஒத்த நாகரிகங்கள் மனித பரிணாமத்தை வளர்த்தெடுப்பதாய் இருந்தன, இன்றும் இருக்கின்றன. ஆறுகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத மனித சமூகம் வயிற்றை அறுத்துப் பேறு பார்ப்பது தான். மனிதர்கள் நீர்நிலைகள் பற்றிய நினைவுகளில் தாம் தமது பால்யத்தை வளர்த்தெடுத்திருக்கின்றனர். . ‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’. ஆறில்லாமல் போகும் போது அந்த ஆற்றைச் சார்ந்து வாழ்ந்த ஒட்டு மொத்த குமுகத்தின் வளமும் தூர்ந்து போகிறது. வாழ்வியலின் அழகியல் அழிந்து போகிறது. இயற்கையுடனான தனது பிணைப்பை அறுத்துக் கொள்கிறது. மனித மனமும் மற்ற உயிர்களின் இயக்கமும் தறிகெட்டுப் போகின்றன.


ஆற்றில் நடந்து செல்கையில் ஆங்காங்கே தவளைகள் சிறு குமிழிகளாய் கண்மிதக்க நீந்திக்கொண்டிருக்கும் குட்டைகள் தென்பட்டன. வேலிக்காத்தான் செடிகளும் எருக்குப் புதர்களும் கருவேல முள்மரங்களும் ஆற்றை ஆக்கிரமித்திருந்தன. மாடுகள் மேய்ந்த குளம்படிகள் பதிந்து ஆற்றின் பரப்பெங்கும் வரைபடங்களை ஏற்படுத்தியிருந்தன. எல்லாவற்றையும் மீறி ஒரு சூன்யம் அவ்விடமெங்கும் பரவி குரலற்றுக் கதறிக் கொண்டிருந்தது. ஆற்றின் நீர்ப்பெருக்கைக் கொண்டாடும் ஆடிப்பெருக்கை இந்த வறண்ட ஆற்றின் மத்தியில் கொண்டாடியிருந்தனர், கரையோரத்தில் வதியும் சில இருளர் பழங்குடியினர். வருடந்தோறும் ஆடிப்பெருக்கிற்கு காவிரியை வேடிக்கைப் பார்க்கச் செல்லும் நதியின் காதலி நான். காவிரி பார்க்கப் பார்க்கத் தீராத புத்துயிர்ப்பை அளிக்கும் அழகு கொண்டது. பாலாறு, அந்தக் காட்சி சித்திரத்திற்கு முற்றிலும் எதிராயிருந்தது. ஒரு தாயின் வயிற்றின் மீது நடந்து செல்வது போல இருந்தது.



காஞ்சி அமுதனும் சமூகச் செயல்பாட்டு இயக்கத்தின் துரையும் ஏற்கெனவே இந்தத் தொலைவை நடந்து சென்று நடை பயணத்தில் ஈடுபடும் மற்றவர்களாலும் நடக்க இயலுமா என சோதித்துப் பார்த்திருந்தனர். ஆற்றின் மணல் அலை காலை உள்ளுக்குள் இழுத்துச் சிரமப்படுத்துகிறது. வழியில் சில மணல் மேடுகளை ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. என்றாலும் ஓர் இயக்கம் முளை விட்டிருப்பதன் அடையாளமாக இருந்தது. மண்ணை கொள்ளையடிக்கும் அரச இயந்திரம் பாலாற்றைக் காத்திட என்ன செய்து விடப்போகிறது? மக்கள் தாம் திரண்டெழ வேண்டும்.

குட்டி ரேவதி

3 கருத்துகள்:

நர்சிம் சொன்னது…

//ஒரு விதவையின் வெள்ளைப்புடவையைப் போல உலர்ந்து வறண்டிருந்தது. இந்த உவமானம் இன்றைய தேதிக்குப் பழமையானது. ஆனால் தொன்மையான ஆற்றைக்குறிக்க இந்த உவமையைப் பயன்படுத்துவதில் தவறில்லை//

தவறாகவே படுகிறது தோழி.எந்தக் காரணம் சொன்னாலும் வெள்ளைப் புடவை உவமானம் தவறாகவே படுகிறது,அதுவும் உங்கள் போன்ற எழுத்தாளரிடம் இருந்து.

அதைத் தவிர்த்து,

பதிவு மிக அற்புதம்.

குட்டி ரேவதி சொன்னது…

அன்புள்ள நர்சீம்,
அந்த உவமை இன்றைய தேதிக்குப் பழமையானது என்று தான் எழுதியிருந்தேனே தவிர, காலப்பொருத்தம் பற்றிய கேள்வியெழுப்பியிருந்தேனே தவிர கைம்பெண் நிலை இன்னும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. நீங்கள் தவறான அர்த்தத்தில் அதைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. தயவு செய்து மீண்டும் வாசியுங்கள்.


ஆனால் உங்கள் கருத்துரையை வாசித்த பின் பெருங்கோப்பெண்டு என்ற பாண்டிய அரசி பற்றி எழுதும் எண்ணம் எழுந்தது. விரைவில் எழுதுகிறேன். நன்றி, நர்சீம்.

கைம்பெண் மன நிலை இன்னும் அழியவில்லை. மற்றெல்லா பெண் ஒடுக்குமுறைகளும் இருக்கும் வரை அதுவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

குட்டிரேவதி

உயிரோடை சொன்னது…

அன்பின் ரேவ‌தி,

நீங்க‌ளும் காவிரி த‌ண்ணீர் குடிந்து வ‌ள‌ர்ந்த‌ த‌லைம‌க‌ளோ? ச‌ந்தோச‌மாக‌ இருக்கின்ற‌து அறிந்து கொண்ட‌தில். உங்க‌ள் ப‌கிர்வு க‌வித்துவ‌மாக‌ வ‌ந்திருக்கின்ற‌து. வாழ்த்துக‌ள்.

ந‌ட்புட‌ன்,
லாவ‌ண்யா.