நாம் சந்தித்து இரு வருடங்களிருக்கும். உனது முகம் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவிலிருந்து அதன் செழுமையை இழந்ததை நான் உணர்ந்து கொண்டுதானிருந்தேன். உனது காதையொட்டிய நரைமுடிகள் இன்னும் பழுத்திருக்கலாம். நடை அசைவுகள் மாறியிருக்கலாம். குறுகிய மெலிந்த உடல் எனது நினைவுகளில் காலாகாலங்களில் நான் உன்னைப்பற்றிக்கொண்டிருந்த நினைவுகளுக்கேற்றவாறு தன்மைகள் மாறிக்கொண்டிருந்தது. இன்றும் ஆனால் உன் நினைவின் வழியாக தரும் ஆதூரம் தேய்ந்து போகாமல் இருப்பது வியப்பில்லை. எல்லாம் தனிமனிதனாக தன்னை தினந்தோறும் தேற்றிக்கொள்வதற்கு இப்பிரபஞ்சம் அளிக்கும் பயிற்சியும் விழிப்பும் என நான் அறிவேன்.
காலம் வேகமாய் நகர்வது குறித்த எனது புரிதலுக்கு அடிப்படையாக இருப்பது நாம் தான். உன்னை சந்தித்து இருவருடங்களாகிவிட்டன. பல மாதங்கள் தொடர்ச்சியாக நாமே நம்மை மறந்தே போய்விடுகிறோம். வியப்புமில்லை. அதிர்ச்சியுமில்லை. வெயில் மழை புழுக்கம் வியர்வை வெறுப்பு சோர்வு தப்பித்தல் என நம்மை பருவங்கள் கடத்திக்கொண்டே செல்கின்றன. ஒருவரிடமிருந்து ஒருவரை தூரத்திற்கு அல்ல. மிக அருகினில். நெருக்கடியான தருணங்களில் இறுக்கிக்கொள்ளும் ஆசைகள் மெலெழுந்தவாறு நுரைத்து அப்படியே தணிந்து நீர்த்தும் போய்விடும்.
எவருக்கும் புரியும் படியாக சொல்வது கடினமாகத்தான் இருக்கும். உடலை இணைக்காத உறவில் எவருக்கும் நம்பிக்கை இல்லை. உடலை ஒரு முகமூடியாக எல்லோரும் வைத்துக்கொள்வது நகைப்பானது. ஆனால் உடல் தன்னை ஒரு கனவுக்குப்போல திறந்த வெளியாக மாற்றிக்கொள்கிறது. நாம் ஒருவரையொருவர் தொட்டது கூட இல்லை. உடலோடு பேச்சை இழைத்து இழைத்துப்பார்த்ததுமில்லை. ஒருவருக்கொருவர் பரிமாறவென்று வைத்திருக்கும் சொற்கள் பூக்களைப்போல இந்த உடலிலிருந்து உதிரும் வரை காத்திருப்போம். பிறகு பேசிக்கொள்வோம். நதியின் கரைகளைப்பற்றிக்கொண்டிருக்கும் பருத்த மரங்களின் வேர்களைப்போல தடித்து புடைத்துப்போயிருக்கிறது நமது நம்பிக்கை. நாம் இதற்கு மேல் பேசாமல் கூட போகலாம். ஏனெனில் இரவின் மீது கவியும் நட்சத்திரங்களை நோக்கி நான் உனக்காக எதையும் சேமித்து வைப்பதேயில்லை.
பழகும்வரை தாம் தேநீர்க் கோப்பைகள் குறித்த எச்சில் பட்டுவிடக்கூடாது எனும் தெளிவான வரையறைகள், உரையாடல்களுக்கிடையிலும் உயர்ந்து எழும்பிய வண்ணம். பின் அசப்பில் இரு கோப்பைகளும் தமது பருமனை இழந்து மற்றொன்றோடு கலந்து கை எந்த கோப்பையையும் தேடிச்சென்று தொண்டையை நனைத்துக்கொள்ளும் படியாக கரைந்து விடும். அப்படித்தான் இன்று தோழியின் கோப்பைத் தேநீரை எடுத்துப்பருகினேன்.
நினைவைத் துழாவிப்பார்த்தால் உன்னைப்பற்றிய எல்லாமே அரைபட்டு அரைபட்டு மாவாகிப் பறந்து போயின. நீ எங்கேனும் உயிரொன்றுடன் இலங்குகிறாயா என்பதும் சந்தேகம் தான். சிறுமைகளை நினைவில் ஏந்திக்கொள்ளும் பழக்கத்தைத் தவிர்க்க ஒருவரையொருவர் தவிர்க்கத்தொடங்கி ஒரு பெரிய இடைவெளி உறவை விலக்கிவைத்தது. இதுவரை உறங்கி விழிக்கக் கண்ட மேற்கூரைகள் எல்லாம் காலத்தை இறுகிப்போகச் செய்த உணர்வுகளுடன் உயரம் எம்பியவை. அப்பொழுதெல்லாம் மேற்கூரையைப்போல வண்ண வண்ண காலைகளாக விடிந்து பரவசப்படுத்திப்பார்க்கிறது ஆழமாய் வேரோடி அடர்ந்திருக்கும் உனது பார்வை. நம் பார்வைகள் இரண்டும் ஒன்றோடொன்று விரிந்து தழுவி கிளைபரப்பி சூழலைக்கணக்கில் கொண்டு பிரிந்து வளைவுகளுடன் ஓர் அடர்ந்த காடாகியது.
சரியாகச்சொன்னால் மூன்றுமுறை கூட நாம் தொடர்ந்து சந்தித்திருப்போம் என்று கூறமுடியாது. சந்திப்புகளின் எல்லைகளை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் நம்மை அண்டி இருப்பவருக்குத்தான் அதிகமாய் இருக்கிறது. முழுநாளும் காலை முதல் மாலை வரை எத்தனை நாட்கள் விரயமாய் கழிந்திருக்கின்றன. சூரியன் உதயமாகி ஏறுவதைப் பார்த்திருக்கமாட்டோம். வெளியே சென்று சாலைகளின் நிகழ்வுகளைக் கடக்காமல் வீட்டிலே சோம்பலாய் மெத்தையில் புரண்டு புரண்டு நினைவுகள் கூரைகளை இடித்து இடித்துக் களைத்துப் போகும்வரை தொடர்ந்து நெஞ்சம் முனகிக் கொண்டேயிருந்திருக்கும். காகமோ குருவியோ ஒற்றையாய் வந்து ஜன்னல் கம்பியை சில முறைகள் அலகால் கொத்திப் பார்த்து விழி விரைக்க உட்கார்ந்து போயிருக்கும். இரவும் தீவிரமாய்ச் சுழலும் மின்விசிறியின் கீழே வியர்வை உடையை ஈரப்படுத்தப் படுத்துக் கிடந்திருப்போம்.
நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கும் குரல்கள் சொற்களற்றவை. அர்த்தங்களுமற்றவை. விரைத்துப்போன இமைகள் கருவேல முட்கள் என்பதெல்லாம் பழைய உவமானங்கள். நினைவுகள் தகரப்பலகையைபோல நெஞ்சை ஆக்கி இரும்பு ஆணியால் கீறிக்கீறிப் பார்ப்பவை. சரி போகட்டும்.
இன்று நீ அழைத்துவிட்டாய். உனது பயணங்கள் எங்கிருந்து எங்கு என வர்ணனை தொனிக்க விவரித்தாய். நான் கேட்டுக்கொண்டிருந்தேன், எனது பயணங்களின் மென்சிறகுகள் துளிர் விட்ட வண்ணம். உச்சி வெயிலில் கதவடைத்திருந்த, நூற்றாண்டுகள் கடந்த கோயிலின் வாசலில் உறங்கிக்கிடந்த கதையும் சொன்னாய். இருவர் தலைமீதும் கொன்றைப் பூக்கள் தூறலாய்க் கொட்டும் நான் கண்ட கனவை மீண்டும் நீ அழைக்கும் போது நான் சொல்ல மறந்து போகலாம்.
குட்டி ரேவதி
4 கருத்துகள்:
நல்லாயிருக்குங்க!
குட்டி ரேவதி,
நல்ல பகிர்வு, வாசித்தால் உள்ளிழுத்துக்கொண்டு வெளிவிட மறுக்கிறது. நீங்கள் இணையத்திலும் இப்பக்கம் மூலம் எழுத வந்திருப்பது மகிழ்வுக்குரியது. நன்றி.
அன்புள்ள சென்ஷி மற்றும் செல்வநாயகிக்கு, நன்றிகள்.
காதல் உறவின் சுதந்திரமான பக்கங்களை தேடிக் கண்டடையும் விழைவில் எழுதியது தான் இப்பத்தி.
இணையத்தில் எழுத வருவது குறித்து எனக்கு நிறைய தயக்கங்கள் இருந்தன. காரணம் சிலரின் வலைப்பதிவுகள் எழுத்திற்கான மதிப்பை இழந்துவிடும் படியாக இருப்பது தான். அவ்வாறு நீர்த்துப் போகாமல் இருப்பதற்கான எல்லா சத்தியப்பிரமாணங்களுடன் தாம் நான் எழுத முடிவெடுத்திருக்கிறேன். அப்படி எழுதுவதைத் தவிர பூமியில் வேறெந்தப் பணியும் எனக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. இதைப் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி.
உங்கள் பதிவின் ஒவ்வொரு வரிகளையும் குறிப்பிட்டு சொல்லும் வண்ணம் இருக்கின்றன. நல்ல பகிர்வு. நன்றி
கருத்துரையிடுக