நம் குரல்

பெண்கள் தினம்!





எந்தக் காலகட்டத்தையும் விட, தற்பொழுது தான் பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான தேவையும் பொருத்தமும் நிறைய இருப்பதாக நினைக்கிறேன்!

சமீபத்திய நிகழ்வுகளால், பெண்கள் மீது இது வரையிலும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த வன்முறை பகிரங்கமாவதையும் அதிகமாவதையும் உணரமுடிகிறது.

பெண்களுக்குக் குடும்பமும் வீடும் கூட பாதுகாப்பானதாக இல்லை என்பதை முதலில் நாம் அறியவேண்டும்.

பெண்கள் ஆண்களை அறியவும் கையாளவும் முடியாதபடிக்கு அறியாமையே பெண்களுக்கு உணவாக அளிக்கப்படுவதை முதலில் பெண்கள் மறுக்கவேண்டும்.

சாதிய அமைப்புகளின் 'மினியேச்சர்' போல இயங்கிக்கொண்டிருக்கும் வீடு, திருமணம், குடும்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவும் அவசியப்பட்டால் புறக்கணிக்கவும் பெண்களுக்குப் பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

ஆனால், நம் உடல் தான் எல்லா அறநெறிகளையும் பயில்வதற்கும் பாராட்டுவதற்கான இருப்பிடம் என்பதும் நமக்கு பெருத்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கக் கூடியது இல்லையா?

தனிமனித அதிகாரத்தால் இந்த உலகத்தில் எதையும் செய்ய முடியாது என்ற நிலையை ஒட்டுமொத்த உலகமும் அடைந்துள்ளது. 

அதே சமயம், அன்பினாலன்றி அதிகாரத்தால் ஏதும் செய்ய இயலாது என்பதும் வாழ்வியலின் இலக்கணமாக இருக்கிறது.

பெண்கள் தம் கலைத்திறமைகளையும் பிற பெண்களுடனான ஒருங்கிணைதலையும் தாம் இதற்கு ஆயுதமாக்கவேண்டும்.

பெண்ணுடல் என்பது இயற்கைச் செயல்பாட்டின் மூலமாக இருக்கிறதே அன்றி உடலின் பாவனைகளாலும் வெற்று உடல் நடவடிக்கைகளாலும் ஏதும் செய்ய இயலாது!

பெண்களே, ஆண்களுடன் நாம் அன்பு பாராட்டும் 'பூவுலகமாக' இதை மாற்ற நம்மால் தான் இயலும்! அதை சாதிப்போம்! 

பெண்கள் தின வாழ்த்துகள்!



புகைப்படத்தில் இருப்பவர்: போராளி ஆங் சான் சூ கி

நவீனக்கவிதை!






நவீனக்கவிதைக்கான விமர்சனக்குரலை எப்படி, எங்கே தொடங்குவது?

அதற்கு இலக்கிய அரசியல் தெரியவேண்டாமா?

அது எப்பொழுதும் ஒரு பக்கச்சாய்வுடன் இயங்கியதை நவீனக்கவிஞர்கள் அறியவேண்டாமா?

அறியாமையுடன், தன் சுயம் சார்ந்த சொற்ப, அற்ப உணர்ச்சிகளைச் சொறிந்து கொடுக்கும் சொற்கள் மட்டுமே கவிதைக்குப் போதுமா?

அற்பமான உணர்ச்சிகளிலிருந்து மானுடத்திற்குப் பொதுவான உணர்வெழுச்சிகள் நோக்கி தனிமனிதனை உந்திச்செல்லும் நெம்புகோல் இல்லையா, கவிதை?

தமிழ்க்கவிதையியல் அறிய வேண்டாமா?

காலந்தோறும் நவீனக்கவிதையின் அகக்குரல் சமூக நீதிக்காகத் தன் உயிர்பலி ஈந்ததை நாம் மறைக்க முடியுமா?

கவிதை என்ற பெயரில் சாதி எழுத்தை எழுதிக்குவித்த சொற்களில் வீசும் முடை நாற்றத்தை இல்லை என இயலுமா?

உரத்த குரலால் கவிதை, கவிதை எனப்பட்டவை எல்லாம் காலத்தின் சுழிப்பில் இன்று செத்துப் போனது ஏன் என்று கேள்வி எழுப்பினோமா? உரத்த குரல்களால், உரையாடல் சாத்தியப்படாமல் போனதை மறுப்பீர்களா?

கவிதையைத் தொங்கிக்கொண்டிருக்கும் இரும்புக்குண்டுகளாய் நாம் ஆனக்காலத்தில் நவீனக்கவிதையின் வரையறை தான் என்ன?

எல்லா வகையிலும் கவிதையாக இருக்க முடிந்த ஒன்று, சமூகத்தில்  அன்று செய்யமுடிந்ததை ஏன் இன்றைய நவீனக்கவிதை செய்யவில்லை? குருதியில் தோய்ந்த சொற்களைச் சிறந்த கவிதைகள் என்று ஏன் கொண்டாடுகிறோம்?

ஒரு சிம்மாசனத்திற்காகத்தானே 'நவீனக்கவிஞர்' பட்டம் தேவைப்படுகிறது, இல்லையா?

சிந்தனையின் வெளியில் தக்கையாக மிதக்கும் சொற்களின் பயணம் மட்டுமே கவிதை என்பதா?








குட்டி ரேவதி

புத்தகக்கண்காட்சி -2



அருள் எழிலன் குறிப்பிட்டிருப்பது போலவே, இந்த வருடம் புத்தகக் கண்காட்சி படுதோல்வி தான்! இதற்குக் காரணம், புதிய படைப்பாக்கங்கள் பெருமளவில் வராதது தான்! இதற்குக் காரணம், அரசு முன்பு போல நவீன இலக்கியப்படைப்புகளை நூலகங்களுக்கு வாங்கிக்கொள்ளாதது தான்! தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, இச்சமூகம் ஓர் அறிவுச்சமூகமாய் இருப்பதில் எந்த உவப்புமில்லை.

பெரும் நிறுவனங்களாய் இயங்கும் பதிப்பகங்கள் தம் விருப்பப்படி நூல்களை கண்டபடிக்கு வெளியிட, கவனமாயும் சமூக அக்கறையுடனும் குறிப்பிட்ட எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகளை வாங்கி வெளியிடும் சிறு பதிப்பகங்கள் இந்த முறை கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

இன்று மீண்டும் புத்தகக்கண்காட்சிக்குச் சென்று வந்தேன். வருடத்திற்கு ஒரு முறை புத்தகக்கண்காட்சியில் மட்டுமே சந்திக்க முடியும் நண்பர்களையெல்லாம் பார்த்துக் கைகுலுக்கி மகிழமுடிகிறது. மற்ற படிக்கு, கண்காட்சியில் ஈக்கள் தாம் சுற்றித் திரிகின்றன. கருத்தரங்க வெளியில் ஒலிக்கும் காட்டுக்கத்தல் சொற்பொழிவுகளைப் பத்துபேர் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நம் சமூகத்தின் முக்கியமானதொரு பண்பாட்டு வெளியெங்கிலும் ஈக்களே ஆடிப்பாடித் திரிகின்றன!







குட்டி ரேவதி

புத்தகக்கண்காட்சி 2013 - 1




நேற்று புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு கடையாகச் சென்று, நான் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தேன். பட்டியலில் உள்ள நூல்களை கண்காட்சி முடிவதற்குள் வாங்கிவிட வேண்டும்!

எல்லா நூல்களையும் கண்காட்சியில் மொத்தமாகப் பார்க்கும் போது வழக்கத்திற்கு மாறாக, ஏனோ ஓர் ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டது.

நூல்களை அதிகமாகக் காட்சிப்படுத்துவதிலும் ஏதோ ஒரு பிழை இருக்கத்தான் செய்கிறது.

மூத்த எழுத்தாளர்கள் சமகாலத்துடன் கொண்டாட முடியாத உறவினாலும் புரிந்துணர்வு இன்மையாலும் நூல்கள் எல்லாம் பின் தங்கிப் போய் முகஞ்சுழித்துக் கொண்டதைப் போலிருந்தன.

இளம் எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் புதிய கதை சொல்லலுடன் எழுந்து வருகையில், மூத்தப்படைப்பாளிகள் எல்லாம் மண்டையில் தட்டி மூர்க்கத்தைக் குறைத்துவிடுவார்களே என்று தோன்றுகிறது.

அட்டைகளும் அழகுணர்ச்சி இழந்து முகம் தொங்கப் போட்டுக் கொண்டு உயரே நிற்கின்றன, புத்தகங்கள்.

புனைவு நூல்களின் மீது தான் விருப்பம் அதிகமாக இருக்கிறது. என்னைக் கண் சிமிட்டி வாவென்று பிடிவாதமாய் அருகில் அழைக்கும் நூலை வாங்கிவிடுவது என்று உத்தேசித்து இருக்கிறேன்!





குட்டி ரேவதி

எழுத்தாளரும் விமர்சகருமான சாரு நிவேதிதாவே 2012 - ம் ஆண்டின் சிறந்த மனிதர்!

எழுத்தாளரும் விமர்சகருமான சாரு நிவேதிதாவே 2012 - ம் ஆண்டின் சிறந்த மனிதர்!

உண்மையிலேயே சென்ற வருடத்தின் 'சிறந்த மனிதர்' விருது, சாரு நிவேதிதாவிற்குத் தான் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த நேர்மையிலிருந்து நாம் தவறி விட்டோம் என்பதைத் தான் சாரு நிவேதிதாவின், 'உரத்த சிந்தனை: "சலவை'யாக்கப்பட்ட சிந்தனைகள்!' பதிவு எனக்கு உணர்த்துகிறது.

சாரு நிவேதிதாவின் எழுத்துப் பணிகளுக்காகவும் தேசப்பற்றுக்காகவும், ஒரு பத்திரிகையாளராக அவரது உரத்த சிந்தனைக்காகவும், 'சிறந்த மனிதர்' விருது அவருக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்துல்கலாமிற்குப் பிறகு, அணு உலைகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறிந்த ஒரே அறிவு ஜீவி, நவீன இலக்கியப்படைப்பாளி சாரு தான். அணு உலை விவகாரத்தில் அவர் என்ன சொன்னாலும் அது சரியாகத் தான் இருக்கும்.

அரசையும், காவல் துறையையும், உதயகுமாரையும் விட மக்கள் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட கொள்கைகளை நான் சாருவிடமே காண்கிறேன்.

தினம் தினம் மக்களின் குரலைத் தன் குரலாகப் பதிவு செய்யும், நம்மில் ஒருவராய் நம் அருகிலேயே இருக்கும் மாபெரும் இலக்கியவாதிக்கு விருது கொடுக்காமல் தொலைதூரத்தில் தென் எல்லையில் இருக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது எந்த வகையில் நியாயம்?

இதற்காக எத்தனை வழக்குகளை சாரு அவர்கள் சந்தித்து இருக்கிறார்?

எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்?

கடந்த ஐந்நூறு நாட்களாக, அணு உலையை ஆதரித்து வீதிவீதியாகச் சென்று சாரு நிவேதிதா பிரச்சாரம் செய்ததையெல்லாம் நாம் மறந்தால் வருங்கால சந்ததி ஒருபோதும் நம்மை மன்னிக்காது!

இவ்வளவு நன்றியுணர்வு அற்றதா தமிழ் கூறும் நல்லுலகம்?




குட்டி ரேவதி