நம் குரல்

புத்தகங்கள் உறங்குவதே இல்லை!


புத்தகங்களுடன் புழங்குவதற்கான நெருக்கமும், அவற்றை வாசிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்க, அதிகரிக்க புத்தகங்கள் மீதான அளவுக்கதிகமான உடைமை உணர்வு மாறியே விட்டது.
ஆனால், பிடிவாதமான சில விடயங்கள் இன்னும் மாறவே இல்லை.
இன்றும் ஒரு நண்பருக்கு அல்லது குறிப்பிட்ட நிகழ்விற்கு, தருணத்திற்கு அன்பளிப்பாக செய்ய புத்தகத்தினும் உன்னதமானதும், பொருத்தமானதும் வேறு இல்லை.
நம் அடிமனதில், எந்த விடயத்தின் மீது அதிகமான ஆர்வமும் ஈடுபாடும் உள்ளதோ, அதுகுறித்த முக்கியமான நூலைத் தேடிச்செல்லும் வாய்ப்பு அல்லது அந்த நூலே உங்கள் கைகளுக்கு வரும் வாய்ப்பு மிகவும் குறைந்த தூரத்தில் இருக்கிறது. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தான், அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும் நூல் எனக்கு நிகழ்ந்தது.
மேலும், ஒரு நூலை மிக விருப்பத்துடன், அட்டை முதல் அட்டை ஒவ்வொரு சொல்லையும் வாசித்து அதன் அர்த்தத்தை உறிஞ்சிய பின்னும், நூலை கீழே வைக்க மனமில்லாமல், உடன் தூக்கிச் சுமக்கும் மனநிலையும் மாறவில்லை.
ஒவ்வொரு நூலுக்காகவும் நீண்ட காலம் உழைத்து, அதனுடன் பொறுமையானதொரு காலம் செலவழித்த பின்னும், அச்சான அந்த நிமிடத்தில், நூலுக்கு இறக்கை முளைத்தது போல் அது என்னிடமிருந்து பறந்துவிட்ட உணர்வே ஏற்படுகிறது. அந்த நூல் மீது, பின் எந்த ஒட்டுதலும் இருப்பது இல்லை.
உண்மையில், சரியான நோக்கத்துடன் எழுதப்பட்ட எவருடைய ஒரு நூலும், அது கவிதையோ, கட்டுரையோ, நாவலோ, ஒரு விசித்திரமான மாயக்கம்பளம் தான். அது, தன்னுள் எல்லாவிதமான மந்திரவித்தைகளையும் கட்டுகளாகக் கொண்டிருக்கிறது.
மனிதர்களை விட, புத்தகங்களே மேலானவையாக இருக்கின்றன என்ற கருத்தை எப்பொழுதும் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்காது என்றும் மனம் உறுதியாக நம்புகிறது.
புத்தகங்கள் உறங்குவதே இல்லை. நிரப்பப்பட்ட சொற்களின் முழு உணர்வெழுச்சியுடன் எப்பொழுதும் விழித்திருக்கின்றன.
புத்தகங்கள் ஒரு தனிமனிதனுடன் கொண்டிருக்கும் இடத்தை வேறெந்த ஊடகமும் எடுத்துக்கொள்ளமுடியாது என்றே நினைக்கிறேன்.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: