நம் குரல்

'நீங்கள் முன்னே செல்லுங்கள்!'







TOMMERVIK - ன் MAN AND BIKE க்யூபிச ஓவியம்.


'நீங்கள் முன்னே செல்லுங்கள்!' என்ற வாசகத்தைச் சாலைகளெங்கும் நீங்கள் காணமுடியும். இது ஒரு சாலை பாதுகாப்பு வாசகம்.
நடைமுறையில், நோய், முதுமை எனப் பிற காரணங்களால் இறப்போரின் மொத்த எண்ணிக்கையை விட, விபத்தில் சாவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.



நம் போக்குவரத்து முறையில், எந்தவிதமான திடமான ஒழுங்கும் இல்லை. அவரவரின் அவ்வப்பொழுதைய மனநிலைக்கு ஏற்றாற்போல, வண்டியின் வேகத்தையும், விதிகளையும் மாற்றிக்கொள்கிறோம்.

எங்கள் வீட்டைச் சுற்றிலும், இளைஞர்களின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளைக் காணும் பொழுதெல்லாம், அவர்கள் முந்திக்கொண்டு மோதி மடிந்த சாலை விபத்துகளைத் தான் நினைவுறுத்துகின்றன.


பெரும்பாலான நாடுகளில், சாலை விதிகள் மிகவும் கண்டிப்பானவை. நடுநிசியில், சாலையில் யாரும் அதிகமாகப் பயணிக்காத கணங்களில் கூட, எரியும் சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகளுக்கு ஒரே ஒரு வாகனம் என்றாலும், காத்திருக்கும். எதிர்பாராமல், எவர் மீதும் மோதிவிடக்கூடாதே என்று, மற்றவரின் உயிருக்குப் பொறுப்பெடுக்கும்.
நம் நாடு இவ்விடயத்தில் கடுமையாக மாறவேண்டியிருக்கிறது. ஃபேஸ்புக்கில், விபத்தில் சிதைந்த உடல்களைப் புகைப்படங்களாகப் பார்க்கும் பொழுதெல்லாம், உயிரும் உடலும் நடங்குகிறது.

இந்த இடத்தில், 'நீங்கள் முன்னே செல்லுங்கள்!' என்ற மனோபாவம், மிகவும் கைகொடுக்கக் கூடியது. எல்லா வகையான எதிர்பாரா, கவனக்குறைவான விபத்துகளையும் தவிர்க்கக் கூடியது.
அது மட்டுமன்று: சாலையில் யாரென்றே அறியாத நாம் ஒருவருக்கு விட்டுக்கொடுக்கவும் அன்பை வெளிப்படுத்தவும் கிடைத்த வாய்ப்பு, அழகானது. சுயநலமும் பொதுநலமும் சமூகநலனும் கலந்த ஒரு சமூகப்பழக்கம் இது.

என்னைப் பொறுத்தவரை, சாலைப்பயணத்தில் மட்டுமன்று, வாழ்க்கைப்பயணத்திலும் கூட, 'நீங்கள் முன்னே செல்லுங்கள்!' என்ற வாசகம் மிகவும் உதவக்கூடியது, மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.

ஏனெனில், மற்றவர்கள் முன்னே செல்லும் வாய்ப்பை நீங்கள் அவர்களுக்குக் கொடுத்துவிடும்போது, பின் நீளும் முழுச்சாலையும் உங்கள் பயணத்திற்கானது.
மகிழ்ச்சியைப் பெறுவதிலும் கொடுப்பதிலும், நாம் முந்திக்கொள்வது நன்று. அதற்கு, "நீங்கள் முன்னே செல்லுங்கள்!' என்று உரையாடலைத் தொடங்கலாம்.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: