நம் குரல்

கதை சொல்ல தலை வேண்டும்! - அம்பிகா

டில்லி பயணம். நண்பரும் கவிஞருமான விவேக் நாராயணன் அவர்கள் குழந்தை அம்பிகாவை இந்தமுறை டில்லி பயணத்தில் சந்தித்தேன்.

நான்குவயது அவளுக்கு. தினமும் தன் அம்மாவுடன் கவிதை வாசிப்பு நிகழ்விற்கு வந்துவிடுவாள். பார்க்கும் பொருளையெல்லாம் வைத்து, பார்ப்பவரிடம் எல்லாம், 'இந்தக் கரண்டியை வைத்து ஒரு கதை சொல்லுங்கள், அந்தப் பூவை வைத்து ஒரு கதை சொல்லுங்கள்!' என்பாள்.

என்னிடம் ஒவ்வொரு முறை, தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்பொழுதும், 'இப்பொழுது நான் ஒரு முயல்!, இப்பொழுது நான் ஒரு பூனை!' என்பாள்.

பொறுக்கமாட்டாமல், நான் என்னை ஒரு டைனசோர் என்று அவளிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
'ஏன், அப்படி?' என்று கேட்டாள். ' ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தது!' என்று சொன்னதும் என்ன யோசித்தாளோ, தன்னை ஒரு 'குட்டி டைனசோர்' என்று மாற்றிக்கொண்டாள்.
'அவளால் இப்பொழுது என்னவெல்லாம் செய்யமுடியும்?' என்று கேட்டேன். 'எவ்வளவு பெரிய தலையென்றாலும் தன்னால் விழுங்கிவிட முடியும். என் தலையையும் கடித்து விழுங்கிவிட முடியும்' என்றாள். நானும் அனுமதித்துவிட்டேன்.

தொடரும் நாட்களில், தினமும் நான் என் தலை எனக்கு மீண்டும் வேண்டும் என்று கேட்பதாயும், அவள் அதை அன்று காலை உணவாகக் கடித்துச் சாப்பிட்டுவிட்டதாகவும் மீதியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டதாகவும் சொல்வாள்.

இரு நாட்களாக டில்லியில், கழுத்தில் மஃப்ளரைச் சுற்றிக்கொண்டு அலைகிறேன். கவிதை வாசிக்க, எனக்குத் தலைவேண்டும் என்று நான் கேட்டாலும், அவள் எப்படி என் தலையை அன்று காலையில் கடித்து ருசித்துச்சாப்பிட்டாள் என்பதை மிகவும் ரசனையுடன் விவரிப்பாள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் கூட, வீட்டில் தலையை மறைத்துவைத்திருப்பதாகச் சொல்வாள்.

நிகழ்வின் கடைசி நாளில், அவள் வழக்கம்போல இதையே பதிலாக்கிவிட்டு, 'சரி! அதெல்லாம் இருக்கட்டும். ஒரு கதை சொல்லுங்கள்!' என்றாள்.

'தலையில்லாமல் நான் எப்படி கதை சொல்வது?' என்று கேட்க, என்னை ஒருவிதமாகப் பார்த்தவள், 'சரி, இந்தாங்க! இருநூறு ஆயிரம் தலைகள். வைத்துக்கொள்ளுங்கள். இருநூறு ஆயிரம் கதைகள் சொல்லுங்கள்!' என்று சொன்னாள்.
நான் ஒரு கதை சொன்னேன். ஒரு பெரிய டைனசோர், பாலைவனத்தில் பெரிய பெரிய முட்டைகள் இட்டதையும், அவ்வளவு முட்டைகளும் மணலுக்குள் இறங்கி ஆழத்தில் மறைந்துவிட, முட்டையிலிருந்து வெளி வந்த குட்டிகள், மீண்டும் மணலூடே ஏறி வெளிவந்ததையும் கூறினேன்.
சொல்லி முடித்ததும், 'அப்படி வெளியே வந்த குட்டி டைனசோர், தான் தான்!' என்று கூறி, அந்தக் குட்டி டைனசோரின் சாதனைகளை எனக்கு விவரித்தவள் அப்படியே என் கைவிரல்களைப் பற்றிக்கொண்டு தூங்கிப்போனாள்.

என் விரல்களுடன் பின்னியிருந்த அவள் விரல்களை, அவள் தூக்கம் கலையாமல் மெல்ல விரித்து எடுத்து அவள் அம்மாவின் கைகளில் கொடுத்துவிட்டு, டில்லிக்கு விடை கொடுத்தேன்.


குட்டி ரேவதி
இடம்: Craft Museum, New Delhi

கருத்துகள் இல்லை: