'Bird Man' படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தாலும், அதையும் தாண்டி பரந்த அளவில் முக்கியத்துவம் பெறும் படமாக இருக்கிறது.
சமகால சினிமாவின், கலைவடிவத்தின் எல்லையின்மையை இதில் தொட்டிருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.
திரைப்படங்களில் பறவை மனிதராக நடித்த நடிகரே, எழுத்தாளர் ரேமண்ட் கார்வரின் ஒரு கதையை அரங்க நாடகமாக்கும் முயற்சி தான் கதை.
ஆனால், திரைக்கதை, அது நெய்யப்பட்டிருக்கும் விதத்தில், பல அடுக்குக் கதைகளைச் சொல்லிச் செல்கிறது.
இன்றைய சினிமாவின் நவீனத்துவம் என்பது, தேர்ந்தெடுக்கப்படும் கதை எந்த அளவிற்கும் புதியதாக இருக்கிறது என்பதிலும், அது எந்த வடிவத்தில் சொல்லப்படுகிறது என்பதிலும் தான் இருக்கிறது.
அந்த வகையில், தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கும் கதையும், கதையைச் சொல்லும் விதமும் ஒரு கலைஞனின் தனிப்பட்ட மனச்சிக்கல்களிலிருந்து, பரந்த அளவில் கலைவடிவம் குறித்த உரையாடல் வரை விரித்துச்சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் முதன்மை என்பதில், இயக்குநன் இனோரிட்டோவின் கதையைப் போலவே, இம்மானுவேல் லூபென்ஸ்கியின் ஒளிப்பதிவும்.
முழுக்கதையையும் நீளமான ஒற்றைக்காட்சியில் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் புனைவின் அழகான சாத்தியப்பாடுகளை எல்லாம் திரையில் வெளிப்படுத்துகிறார்கள்.
சத்யம் திரையரங்கில், என் அருகில் இருந்து படத்தைப் பார்த்த இளைஞர்கள், கதை சொல்லப்படும் விதத்தில் இருக்கும் எதிர்பாராதத்தன்மையைக் கண்டு தொடர்ந்து வியந்து, அனுபவித்துக் கொண்டே இருந்தார்கள்.
லூபென்சி, சினிமா வழியாகக் கதை சொல்லும் அனுபவத்தையும் அதன் வழியாக அது கொடுக்கும் கலை அனுபவத்தையும் ஒரு சேரத்தந்திருக்கிறார். லூபென்சிகியின் இருபதுக்கும் மேற்பட்ட நேர்காணல்களைப்படித்தேன். அவர், அந்த நேர்காணல்களில் கதைக்கேற்ற ஒளிப்பதிவு முறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது குறித்து மிகவும் விளக்கமாகவும் நுட்பமாகவும் பகிர்ந்துள்ளார். இவர் தான் கிராவிட்டி, சில்ட்ரன் ஆஃப் மென் மற்றும் ட்ரீ ஆஃப் லைப் படங்களின் ஒளிப்பதிவாளரும்.
தவிர, ரேமண்ட் கார்வரின் இலக்கியப்படைப்பு, பேர்ட் மேனாக நடித்த ஒரு திரைப்படம், ஒரு மேடை நாடகம் என வெவ்வேறு தளங்களில் ஒரு நட்சத்திரநடிகன் பயணிக்கும் விதத்தை ஒரே கதையில் சொல்லியிருக்கிறார்கள். அடுக்கடுக்கான கதைகள் இருப்பது, பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கவல்லதாக இருக்கும்.
சிலருக்கு, கதை புரிவதற்கு சமயம் எடுத்ததாகச் சொன்னார்கள். ஆமாம், அறிவார்ந்த தளங்களில் இயங்கும் ஒரு திரைக்கதையே.
மொழியை, சப்-டைட்டில் வழியாகப் புரிந்து கொண்டால், முழு நகைச்சுவையையும் அனுபவிக்கமுடியும்.
இந்தப்படம், திரைத்துறை மாணவர்களுக்கு திரைக்கல்விக்கான பயிற்சியைத் தரும் கவனக்குவிப்பையும் கூட வேண்டுகிறது.
படம், அதன் எல்லா அறிவார்ந்த தன்மைகளையும் கடந்து மனிதனின் எளிமைகளையும் அறியாமைகளையும் போற்றுவதும் அதன் சிறப்பு. இயக்குநர் இனோரிட்டோ, முந்தைய 'பேபல்' படத்திலிருந்து, அசாதாரணமான திரைச்சாதனையைச் செய்துள்ளார்.
இது இப்படம் குறித்த விமர்சனமோ, மதிப்புரையோ அன்று. சினிமா என்னும் கலைத்துறையின் வளர்ச்சியை மனிதன் தன் நிவாரணங்களுக்கும் பலத்திற்கும் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் திரைக்கலைஞர்களும் பார்வையாளர்களும் தொடர்ந்து இன்னும் அதிகமாக ஈடுபடவேண்டும் என்பதை முன்வைப்பதற்காக இதை எழுதுகிறேன்.
சில நாட்களாகத் தொடர்ந்து, இரவுகள் நண்பர்களுடன் படம் பார்ப்பதிலேயே கழிகிறது.
சில (தமிழ்ப்)படங்களைப் பார்த்துவிட்டு நடு இரவில் வீடு திரும்புகையில், மனதில், வாழ்க்கை குறித்த நம்பிக்கையின்மையும் இனம்புரியா கோபங்களும் சூழ்ந்து சங்கடப்படுத்தும்.
ஆனால், 'பேர்ட்மேனை'ப் பார்த்துத் திரும்புகையில், மனதில் பெருத்த நம்பிக்கையும் ஊக்கங்களும் நிறைந்தன. ஒரு கலைப்படைப்பு தரும் ஊக்கம், அவரவர் வாழ்வு வரையும் விளிம்புகள் பொருத்ததும் கூட, என்றாலும் ஒரு படைப்பின் முதன்மையான வேலையும் அது தானே!
பேர்ட்மேனை, இன்னும் சில முறைகளேனும் திரையரங்கில் சென்று பார்க்கவேண்டும் என்று இருக்கிறேன்.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக