நம் குரல்

போரும் காதலும் - 'With You Without You' படத்தை முன் வைத்து!





"உன்னுடன் இருப்பதும் நீ இல்லாமல் இருப்பதும்" படத்தை மையமாக வைத்து
"With You Without You"

பிரசன்ன விதானகே என்ற சிங்கள இயக்குநரின் தமிழ்ப்படம்.

முன்பு சிங்கள இராணுவத்தில் இருந்து, இப்பொழுது அங்கிருந்து வெளியேறி ஓர் அடகுக்கடை வைத்திருக்கும் சிங்கள ஆணுக்கும் தன் இரண்டு சகோதரர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ்ப்பெண்ணுக்கும் இடையே உள்ள உறவின் இயங்கியலை மிகவும் நுட்பமாகவும் ஒற்றைக்கயிற்றில் நடக்கும் எச்சரிக்கையுடனும் சொல்லியிருக்கிறார்.

தாஸ்தாயேவ்ஸ்கியின். 'அடக்கமான பெண்' என்ற நாவலை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டு எடுக்கப்பட்ட கதை.

இந்தத்திரைக்கதையை படம் உருவாகும் முன்பே வாசிக்கும் வாய்ப்பு நண்பன் மாமல்லனாலும் இயக்குநர் பிரசன்ன விதானகேயினாலும் கிடைத்தது. அப்பொழுது மனக்கற்பனையில் உருவாகிய கதாபாத்திரங்களின் மன இருள் கூட படத்தில் அப்படியே வெளிப்படையாகி இருக்கிறது.

'எங்கள் எனத்தைக் கொன்றழித்த ஓர் இனத்துடன் எப்படி நான் வாழமுடியும்?' என்று அந்தத்தமிழ் மனைவி கேட்கும் பொழுதும், 'உன் கனவுகள் என்னவென்று கூட நான் அறிந்து கொள்ளவே விரும்பவில்லை. ஏனெனில் அவை என் கனவுகளைக் குறிக்கிடும் என்று நான் பயந்ததால்' என்று அந்தச் சிங்களக் கணவன் சொல்லும் போதும் சிங்கள இனத்தின் அடக்குமுறை குறித்த விசாரணையும் மனிதர்களின் குற்றவுணர்வுகளும் ஆண் பெண் அதிகார முறைமைகளும் நீருக்கடியே அழுத்தி வைக்கப்பட்டிருந்த பந்துகளைப் போல மேலே வருகின்றன.

அதே 'சமயம், தமிழ் மனைவியும் சிங்களக்கணவனும்' என்ற குடும்பம் ஒரு குறியீடாகி இருக்கிறது. அது போலவே, இரு வேறு கடவுளரும் கூட குறியீடாகி இருக்கின்றனர். இதனால், இன அதிகாரமும், அதன் வழியான வன்முறைகளும் தெள்ளத்தெளிவாக, எந்தச் சமரசமுமின்றி, எந்தத்தயக்கமும் குழப்பமுமின்றி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

ஶ்ரீகர் பிரசாத் தான் படத்தொகுப்பு பணியைச் செய்திருக்கிறார். கதையின் போக்கு பலவாறான குறுக்கு வெட்டுகள் கொண்டு சொல்லப்படும்போது, இன்னும் பலவாறான அர்த்தப்புரிதல்களையும் கதாபாத்திரச்செறிவையும் கொடுப்பதுடன், ஒரு கொடுங்கோன்மையான வரலாறு இரு இனத்தின் மனிதர்களை எங்கெங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

இப்படியாக, தமிழ்ப்பண்பாட்டின் அரசியலை அடையாளம் காட்டும், படமாக்கும் வாய்ப்பை, நேர்மையை நம் தமிழ் இயக்குநர்கள் யாருமே எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனையான ஒன்று. அப்படிப்பார்க்கையில், முதன்மையான இயக்குநர் ஆகிறார், பிரசன்ன விதானகே.

தமிழ் மனஓட்டங்கள் எப்படியாக இருக்கும் என்பதையும் அவற்றின் பதைபதைப்புகளையும் ஒரு 'தமிழ்ப்பெண்' கதாபாத்திரத்தின் வழி தீட்டும் அரசியல் புரிதலையும், கலை நேர்மையையும் வியக்காமல் இருக்கமுடியவில்லை. தமிழ்நாட்டில் தான் பெண்கள் மீது என்னவொரு வெறுப்பு மேலோங்கியிருக்கிறது!

சமயம் வாய்க்கும் போது, இந்தப்படத்தை முன் வைத்து, தமிழ் அரசியல் மற்றும் கலைப்படங்களில் என்ன பிரச்சனைகள் மலிந்திருக்கின்றன என்ற ஒரு நூலையே எழுதிவிட முடியும் என்று தோன்றுகிறது.

படம், ஒரு வீட்டை விட்டு வெளியேறாத கதையையும், அதே சமயம் ஓர் அகண்ட போரை நினைவில் கொண்ட தருணங்களும் என நகர்கிறது. தமிழ்ப்பெண், 'மன்னிப்பாயா?' என்று பாடலைப் பாடுகையில், அதன் உள்ளார்த்தம், 'எல்லா வரலாற்றுத் தருணங்களையும் மறந்து விட்டு, உன்னை என்னால் அன்பு செய்யாது, என்னை மன்னித்துவிடு' என்று கேட்பது போல் உள்ளது.

செயல்படுத்திய இன ஒடுக்குமுறைகளை, நம் நனவோட்டத்திலிருந்தும் நினைவுகளிலிருந்தும் அழிக்கவே நூற்றாண்டுகளாகும் என்பதை இந்தப்படம் ஒரு பெண்ணின் மனம் வழியாக வலியுறுத்துகிறது.

படம், திரையரங்கில் குறைந்த நாட்களே ஓடும் வாய்ப்பிருக்கிறது. வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேனும் பார்த்துவிடுங்கள்.

ஒரு கலைப்படைப்பு என்றால் மனித வன்முறையின் நோயை ஆற்றவேண்டும் அல்லது நோயை அம்பலப்படுத்தவேனும் வேண்டும். இந்தப்படம் செய்திருக்கிறது!




குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: