நம் குரல்

ஃபன்றியும் பன்றிப்பண்பாடும்








இந்திய சினிமா வரலாற்றிலும், கலைவரலாற்றிலும் ஃபன்றி மிகவும் முக்கியமான படமாக இடம்பெறுகிறது.



சாதி ஆதிக்கம், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒருவிதமான கட்டமைப்பையும் அதிகார முறையையும் கொண்டிருப்பதைத் திரைப்படம் எடுப்பது என்பது ஒரு சிக்கலான விடயத்தை, கலைப்படைப்பாக்குவதே.



இதில் நிறைய பேர் தோற்றுப்போயிருக்கின்றனர். வெகு சிலரே, சாதிக்கட்டமைப்பின் குழப்பமான வடிவத்தைக் கதையாக்கியிருக்கின்றனர். 



இந்திய சாதியக்கட்டமைப்பின் ஓரிடத்தில் தானும் நின்று கொண்டு இதை விளங்கிக்கொள்வதும், அதே சமயம் ஒரு விலகலுடன் கதாபாத்திரத்தைக் கையாள்வது என்பதும் இரு வேறு துருவங்களில் நின்று உலகைப் பார்க்கும் கலை.

கெளதம் கோஷ் எடுத்த, 'அந்தர்ஜாலி யாத்ரா' என்ற வங்காளப்படத்தைச் சிறந்த முன்னுதாரணமாகவும், தொடக்கமாகவும் சொல்லலாம். இந்தியாவின் பார்ப்பன முறை, எப்படி பெண்கள் மீது பாலியல் அதிகாரத்தையும் வன்முறையையும் கொண்டிருந்தது என்பது திரைக்கதை நுட்பங்களாலும், காட்சி அழகியலுடனும் சொல்லியிருந்த, நவீன சினிமா. 1987 -ல் வெளிவந்தது. அந்த வருட, கான் திரைப்படவிழாவில், 'Un certain Regard',பிரிவில் திரையிடப்பட்டது.

அதற்குப் பின், ஆங்காங்கே சிலர் முயன்றும், சாதியவாழ்க்கையின் முடிச்சுகளைப் பிரிக்கும் சினிமா என்பதை, எவரும் நேர்மையாகக் கையாள இயலவில்லை.

சமீபத்தில் வெளிவந்த 'செல்லுலாய்ட்' மலையாளப்படத்தை அப்படியான படங்களில் ஒன்று எனச்சொல்லலாம். அடுத்து, 'ஃபன்றி'.

இந்தியாவின் புகழ்பெற்ற திரைஇயக்குநர்கள் கூட, தம் படங்களில் இதைக்கையாள முடியாமல் ஒதுங்கியே நின்றிருக்கின்றனர். தாங்கள் உருவாக்குவது 'கலை சினிமா' என்ற சப்பைக்கட்டுக்கட்டி, இந்தியாவின் மூலக்கதைப்பின்னலை, மானுட வாழ்வியலை வெளிப்படுத்தாமலே இருந்திருக்கின்றனர்.

இத்தகைய திரைப்படங்கள் உருவாக இயலாமைக்கு முதல் காரணம், முதலீடு எப்பொழுதும் உயர்சாதி மற்றும் ஆதிக்கசாதிகளிடமிருந்து வரவேண்டியிருந்ததே. அவர்கள், இம்மாதிரியான கதைக்களங்களை விரும்புவதில்லை. தன் சாதி அதிகாரம், குடும்ப அதிகாரம், ஆண் அதிகாரம் மற்றும் சலுகைகள் கேள்விக்குள்ளாக்கப்படுவதை விரும்புவதில்லை.

இன்னொரு காரணம், 'திரைப்படக்கலை' எப்பொழுதும் ஆதிக்கசாதி சார்ந்த தயாரிப்பாளர், இயக்குநர் கைகளில் மட்டுமே இருந்தது. அவர்களே, சினிமாவின் விதிகளை நிர்ணயித்துள்ளனர்.

'பெரியார்' களம் கண்ட, தலித் இலக்கியத்த்தின் வீச்சைக்கண்ட தமிழகத்திலும் இத்தகைய சினிமா இன்னும் உருவாகவில்லை என்றே சொல்லவேண்டும்.

'ஃபன்றி' திரைப்படம், தாழ்த்தப்பட்ட சாதிக்கும் பிற சாதி இந்துக்களுக்கும் இடையே இருக்கும் கற்பனைகளின், கனவுகளின் எட்டாத்தன்மையையும், புரிபடாத்தன்மையையும் "தீண்டாமையாக" அடையாளம் கண்ட முதல் இந்திய சினிமா. வாழ்வியலைக் கலை உருவத்திற்கு மாற்றிக்கொடுத்தப்படம்.

'பன்றி' சார்ந்த வாழ்வியலைத் தாழ்மையான, கீழானப்பண்பாடாகப் பார்க்கும் சமூகத்தில், பன்றி என்பதை எதிர்ப்பின் குறியீடாக்கிய கதை இது.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: