நம் குரல்

பெண் கலைஞரும் பாலியல் விசாரணையும்ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் தவறாகக் கைது செய்யப்படும் ஒரு பெண் கலைஞரைப் பற்றிய போலாந்து படம், இது. கதாநாயகி டோனியா, ஒரு காபரே நடனக்காரி.

தற்பொழுதைய ஆட்சிக்கு எதிரான அதிகாரியுடன், முன்பு எப்பொழுதோ உறவு கொண்டிருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணை செய்யப்படுகிறாள், டோனியா. முழுப்படமும் அவள் எம்மாதிரியாக உறவு கொண்டாள் என்று விசாரணை செய்வதும் அவளைத் துன்புறுத்துவதும் தான்.

டோனியா, தன் முழு பலத்தாலும், தான் தவறு செய்யவில்லை என்ற ஒற்றைநம்பிக்கையாலும் தொடர்ந்து போராடுகிறாள். தொடர்ந்த பாலியல் வன்முறை , அவமானப்படுத்துதல், தனிமைப்படுத்துதல், அச்சுறுத்துதல் எனப் பலவழியில் அவளிடம் விசாரணை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு கணத்திலும், தான் தவறு இழைக்கவில்லை என்ற நம்பிக்கையின் தூணின் மீது துணிவாக எழுந்து நிற்கிறாள், டோனியா. எப்படி ஒரு பெண்ணின் அந்தரங்க வெளியும் பாலியல் உறவுகளும், அதிகாரத்தின் பொதுவெளியிலும், கண்காணிப்பின் சிறைவெளியிலும் விசாரணையாக்கிப் பரிகசிக்கப்படுகின்றன என்பது தான் இப்படத்தைக் கலைப்பூர்வமாக்குகிறது.

அவளுக்கு சாட்சியாக இருந்த நன்னம்பிக்கைகள் அத்தனையும் அவளுக்கு எதிராகத் திரும்புகின்றன. அவள் கணவனே கூட அவளைத் திரும்பவும் பார்க்கவிரும்பவில்லை என்று கூறிச்செல்கின்றான். அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். கெடுவாய்ப்பாக, அப்பொழுது காப்பாற்றப்படுகிறாள். துன்பத்திலிருந்து அவள் தப்பிக்கக்கூடாது என்பதே சிறையின் விதி.

சிறை அதிகாரி ஒருவர், அவள் ஆளுமையாலும், உண்மை உணர்வாலும் கவரப்பட்டு அவள் மீது காதல் கொண்டு உறவும் கொள்கிறார். அவளுடனான நேர் அன்பைக் கொள்ளமுடியாத சிறை அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்தும் போகிறார். 

துப்பாக்கி அவள் நெற்றிப்பொட்டிற்கு நேரே நீட்டப்படும் தருணத்திலும் அவள் சலனமுறுவதில்லை. ஒரு பெண்ணின் முழு பலத்தையும் தொடர்ந்த போராட்டத்தையும் அன்பின் மீதான அயராத நம்பிக்கையும் அவள் கதாபாத்திரத்தின் தன்மை ஆக்கியிருப்பார் இயக்குநர். 

கதையின் முடிவில் டோனியா விடுதலையாகி தன் வீட்டின் மாடிப்படிகளில் ஏறும் போது தான் நாமும் கொஞ்சமேனும் ஆசுவாசம் கொள்வோம். டோனியா என்ற கிறிஸ்டினா ஜாண்டா என்ற நடிகை, கான் படவிழாவில் சிறந்த நடிகை விருதைப் பெற்றார்.

இப்படத்தைப் பார்க்கும் போது ஏனோ எனக்கு, "இடிந்தகரை சுந்தரி" அவர்கள் எழுதிய 'சிறைபடாத போராட்டம்' நூலில் விவரித்திருக்கும் போராட்ட வரலாறு நினைவுக்கு வந்தது.

இரண்டுமே உள்ளடக்க அளவிலும், போராட்டத்தை எதிர்த்து நிற்கும் வலிமையிலும், ஆண் அதிகார அமைப்பைச் சவால் விடும் தருணங்களிலும் ஒன்றுக்கொன்று நிகரானவை தான்.

பெண்களின் பாலியல் ஆற்றல் மீதும் அன்பின் மீதும் நம்பிக்கையும் ஆழமான உறவும் கொண்ட படைப்புகள் விசாலமான அளவில் புரிதல்களை ஏற்படுத்துகின்றன. தொடக்கத்தில், போலந்தில் இப்படம் தடைசெய்யப்பட்டது.

திருட்டு வீடியோ கேசட்டுகள் மூலம் மறைமுகமானத் திரையிடல்கள் தொடர்ந்து இப்படம் புகழ்பெற்றது.


குட்டி ரேவதி

'யரலவழள' திரைக்கட்டுரைத் தொகுப்பிலிருந்து.

கருத்துகள் இல்லை: