நம் குரல்

ஈருடல் மேவும் அறமே, காதல்!


  

என், ‘முத்தத்தின் அலகு’ காதல் கவிதைகளின் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை: 




 தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்ததற்காக விஷ ஊசி ஏற்றிக் கொல்லப்பட்ட நிலக்கோட்டை வட்டம்  மலைப்பட்டியைச் சேர்ந்த சங்கீதாவிற்கும் அவரது  காதலர் பாலச்சந்தருக்கும் இந்நூல்!





காதல், ஓர் அதிகாலையில் பூவில் துளிர்த்திருக்கும் ஒற்றைப் பனித்துளியைப் போலத்தான் பூக்கிறது. அது காதல் என்று இனம் கண்டறிய எந்த அளவுமானியும் தேவைப்படவில்லை தான்! ஆனால், அது உடலுக்குள் ஒரு யானையைப் போல நுழைந்து கொண்டு துவம்சம் செய்து, நமது யதார்த்தத்தின் காடுகளை அழித்தொழிக்கும்! மீண்டும் நாம் சூரியனையும் சந்திரனையும் முறையாய்ச் சந்திப்பதற்குள் ஆண்டுகள் ஓடிவிடும்! முத்தங்கள் சிறகு முளைத்து பால்வெளியில் கோள்களாகச் சுழலத் தொடங்கியிருக்கும்! வேறென்ன செய்வது? காதலில் மட்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கவே முடியாது!



இந்த உலகை இன்னும் இன்னும் அழகாய் மாற்றுவது இருவர் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பு தான்! மனிதனின் மகத்தான அனுபவங்களில் ஒன்று அது. கண்ணுடன் கண் நோக்கி, ஒவ்வொரு பார்வையாய் உள்ளிறங்கி மனதின் ஆழ்கடல் நீந்த விட்டு, தானும் நீந்தப் பழகி உடலின் அறங்களைப் பாடும் பாராட்டும் காதல் மனித உயிரின் இன்றியமையாத உணவு!



உடலை செல்போல அரிக்கும் அன்றாடத்திற்கு நடுவே, மனித உடலை எதிர்த்திசையில் அழைத்துச் செல்கிறது, காதல்! காதல் என்றால், முத்தமிட்டுக் கொண்டே இருத்தலும், ஊடலும் கூடலும் கொள்ளலும், தழுவலும் விலக நோதலும் மட்டுமே இல்லை! கருத்தொருமித்தவராய் இருந்து உலகின் ஒற்றை சமூக அலகாய் பெண்ணும் ஆணும், பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் மாறும் பயணம் தான் காதல் என்று அறிய போதுமான காதல் இலக்கியங்கள் இல்லை என்றே நினைக்கிறேன்!



மனித உடலில் பீறிடும் ஹார்மோன்கள் காதலைப் பாடுகின்றன! அவை தாம் கோபிக்கவும், வெறுக்கவும் கூட செய்கின்றன! ஹார்மோன்கள் இரத்தத்தில் சுழன்றோடும் பூக்கள் போலும்! ஆனால், தோட்டத்தில் நட்டு வைத்த செடி பூத்ததா என்று அறிய தினம் தினம் நாடி ஓடிப்போய் அதைப் பார்வையால் வருடிக்கொடுப்பதைப் போல காதல், மகத்தான ஒரு வருடலை சக மனிதனுக்கு பரிசளிக்கும் பக்குவத்தை அளிக்கிறது!



மனிதன் பயிலவேண்டிய அறங்களில் ஒன்றாகவே காதலும் இருக்கிறது! சமூகத்தின் சட்ட திட்டங்களுக்குள் அடங்காமல் முரண்டு பிடிக்கும் ஒரு காட்டு மிருகமாகவும் அது இருப்பதால் தான் அதை காலந்தோறும் வெற்றி கொள்ள முடியாமல் திணறும் ஒற்றை மனித சமூகம் பெருகிக் கொண்டே இருக்கிறது! காதலில் உடல் என்பது இருவருக்குமே அடிப்படையானதோர் உடைமையாக மாறுகிறது.  பேதத்தின் உடைகளைக் களைந்து கொள்கிறது. எந்த வயதானாலும், எந்தப் பின்புலமானாலும், எந்த மொழியானாலும் இருவரையும் சமநிலைக்கு இழுத்து வந்து மகிழ்ச்சியை பரப்புவதில் காதலுக்கு நிகரானதோர் உணர்வு இல்லவே இல்லை!



காதல் என்று சொல்லி இருவர் இணைந்த பின் சமூகத்தின் நடுவில் இருக்கும் குன்றின் மீது ஏறி நிற்கும் விளக்குகளாகி விடுகின்றனர்! அவர்கள் அங்கே நின்று எரியவேண்டும் எனும் போது தான் காதலின் சுடர் விளங்கும்! அவர்கள், சமூக உற்பத்தியில் தம்மைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது! அது வெறுமனே, ‘உயிர்களை’ ஈன்று தருதல் மட்டுமே அல்ல! மாறாக, எல்லா விதமான அறிவு உற்பத்திக்கும் தம்மைத் தொடர்ந்து செலுத்துதலும் ஆகும்! வீடு, குடும்பம், பெண்டு என்று வேலி போட்டுக் கொள்கையில், அந்தக் காதலின் விளக்கு, ‘குடத்தில் இட்ட விளக்கென’ ஆகிறது!



ஈருயிர்கள் இணைந்து பகிர்ந்தும் பகர்ந்தும் இந்தப் பூமிக்குச் செய்ய வேண்டியவற்றை நினைவூட்டத் தான்,  உடலில் ஊற்றெடுக்கிறது, ‘ஹார்மோன்’ என்ற வேதி மது! ’காதல்’ என்பது அன்பினால் ஆன வெறும் உணர்வு மட்டுமே அன்று! சமூக உற்பத்திக்கு ஆதாரமான உறவும் கூட! ஈருயிர்கள் இணைவதால் உண்டாகும் அதிகமான சாத்தியப்பாடுகளை, அன்பு தான் சாத்தியப்படுத்துகிறது! இது ஒரு நுட்பமான இலக்கணம்! சேர்ந்து வாழும் போதும், இயங்கும் போதும், பொதுவான அனுபவங்களுக்கு தம்மை உட்படுத்திக் கொள்ளும் போதும் மட்டுமே உணரக்கூடியது!



’காதல் போயின் சாதல்’ என்று பாரதி சொன்னது கூட, இக்காதல் இல்லாத மனிதன் செத்துப் போனதற்குச் சமானம் என்ற அர்த்தத்தில் தான்! இதற்கு மேல் காதல் என்றால், எழுதியோ உரையாடியோ உணர்ந்து கொள்ள இயலாது! காதலித்தும், காதலிக்கப்பட்டும் வாழ்ந்தால் தான் அது புரிதலுக்குச் சாத்தியப்படும்! காதலென்று ஆகும்!


*



என் காதல் ஐந்திணை வெளிகளிலும் நிகழ்ந்ததாகவே எனக்கு நினைவு இருக்கிறது! மலைகளிலும், காடுகளிலும், ஆற்றின் படுகைகளிலும், கடல் வெளிகளிலும், வயற்புறங்களிலும் என உறவையும் உடலையும் செழுமையூட்டிக் கொள்ள பயணித்துக் கொண்டே இருந்தது!  இன்னும் சொல்லப்போனால் யானைப்பசியுடன் அது திரிந்தது! காதலின் ஐந்திணைத் தன்மைகளையும் நுகர்ந்தது!




தாய் தந்தை ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்ததைக் கண்ட நினைவுகள் மனதைப் பீடித்திருந்தது கூடக் காரணமாக இருக்கலாம்! அதன் அலைக்கழிப்பில், காதலின் தீரங்களைக் கண்டறியும் வேட்கையுடன் நான் எந்தவித மனத் தடையுமில்லாது இருந்தேன்!



ஓர் ஆழமான உறவு, உடலுக்கும் மனதுக்கும் அதன் அகவெளிகளுக்குள்ளும் நிகழ்த்தும் ரசவாதம், பின் எப்போதும் நம் செயல்கள் எல்லாவற்றிற்கும் உரமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது என்பதை இப்பொழுது உணர்கிறேன்! சரியான பருவத்தில் மழை பெய்வது போல காதலும் நிகழவேண்டும்! அது கனமழையாக நம் உடல் நிலத்தில் ஊடுருவ வேண்டும்! பின், வாழ்வியலுக்கான போராட்டங்களில் ஈடுபடும் சவால்களை ஏற்பது மிகவும் எளிதாகிவிடுகிறது!



நான் காதலை ஒரு சமத்துவமான உறவுக்கான அழைப்பாகவே பார்க்கிறேன். காதலின் உறவில் பங்கு பெறும் இருவரையும் நீளமான வாழ்வில் ஒருவருக்கொருவர் செய்யவேண்டிய தியாகங்களுக்குத் தயார் செய்கிறது!  நான் அந்தப் பாதையில், நெடுஞ்சாலையில் பலவிதமான போராட்டங்களையும், தயக்கங்களையும், குழப்பங்களையும் கடந்து வந்து சேர்ந்துவிட்டேன் என்று தான் நினைக்கிறேன்! வாழ்க்கையில் பாலைவனத்தில்  இன்று காதல் நிரந்தர மகிழ்ச்சிக்கான ஓர் ஊற்றாக இருக்கிறது.



*


நவீன வாழ்க்கையும் சமூகக் கட்டமைப்புகளும் வேறு மாதிரியான அனுபங்களைக் காட்டுகின்றன. நவீன தொடர்புசாதனங்கள் உரையாடலுக்கான வாய்ப்பை எளிமைப்படுத்திவிட்டதால், ‘தொடுதல்’ உணர்ச்சியை மிகைப்படுத்தியிருக்கின்றன! உடலைப் பேரமாக்கியிருக்கின்றன! மனதின் அதிகாரத் தேவைகளை உடல் வழி சூழ்ச்சிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன!



எப்பொழுதும் சைபர் ஸ்பேஸைக் கடந்து நீளும்  கைகளை வளர்த்துக் கொண்டோம் நாம்! அதே சமயம், உடலை பணயம் வைத்து எதையும், எந்த ஆதாரத்தையும் ஈட்டும் அறமற்ற செயலிலும் ஈடுபடத்துணிகிறோம்! இரு உடல்களுக்கு இடையே நிகழும் காதல் உரையாடலும் அதன் சூழல், சமூகம், இன்ன பிற மனிதர்கள் சார்ந்த அறங்களும் இன்று மிக முக்கியமாகப் படுகின்றன. உடலை அதிகாரமாகவும், உறவை ஈனமான செயலாகவும் கருதும் சமூகத்தில் மனித நாகரிகமும், பண்பாடும், இயற்கையின் நெறிகளுமே கூட மண்ணாய்ப் போகும். காதல் இல்லாத மானுடம், வண்ணத்துப் பூச்சி தன் சிறகுகளைத் தொலைத்துத் தரையில் வெற்றுத்தாளாய்க் கிடப்பதைப் போல கிடக்கும்!       



நிறுவனங்களை நம்பும் மனித இனமும் சமூகமும் காதலை எதிர்த்தும் நிராகரித்துமே வந்திருக்கின்றன. மனித பரிணாம வளர்ச்சியின் முளையைக் கிள்ளியெறிய முனையும் மனித மனம் தான், காதலில் ஈடுபடுவர்களை சமூக ஏற்றத் தாழ்வைக் காரணம் காட்டி, விரட்டுகிறது, அடிக்கிறது, மரத்தில் கட்டி வைத்து எரிக்கிறது! ஆனால், இதனாலெல்லாம் காதல் அணைந்து போவதில்லை! அங்கு அது கனலாய்க் கனன்று பின்னுமோர் மனத்தைப் போய் பற்றிக்  கொண்டு ஆட்டுவிக்கத் தான் செய்யும்! மனிதனும் மனிதனும் பூமியில் வேறெதற்கு?



சாதியை அதிகாரமாக்கி அதன் பொருட்டு, தாம் ஈன்ற பிள்ளையையே எரித்த, கொன்ற சம்பவங்கள் நெஞ்சின் கலக்கத்தை அதிகப்படுத்துகின்றன. என்றாலும், அத்தகைய சாதி கடந்த காதலில் ஒன்றி, துணிவுடன் போராடிய இளம் நெஞ்சங்களுக்கானது இந்தக் கவிதைகள். ஆழி செந்தில்நாதன் தான், என் காதல் கவிதைகளைத் தொகுக்கும் ஆலோசனைகளுடன் வந்தார். அவரின்றி இந்நூலுக்கான சாத்தியமே இல்லை. அவருக்கு என் நன்றிகள்! ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’, ‘முலைகள்’, ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’, ‘உடலின் கதவு’, ‘யானுமிட்ட தீ’ ஆகிய என் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளுடனும், புதிய கவிதைகளுடனும் வந்திருக்கிறேன்! 



’காதல் கவிதைகளை’ச் சேகரிப்பது என்பது விநோதமான பணி எனத் தோன்றியது! முத்தங்களைச் சேகரிப்பதற்கு நிகரானதொரு பணி தான்! ஒரே சமயத்தில்  பலவிதமான உணர்வுகள் என்னைப் பீடித்தன என்று தான் சொல்லவேண்டும். காதல் என் சுய அளவில் பிரமாண்டமான காலக்கட்டத்தையும் ஆவியையும் எடுத்துக்கொண்டது என்றாலும் அது குறித்து எனக்கு எந்தக் குற்றச் சாட்டுகளும் இன்று இல்லை.



அது என்னளவில் உரையாடலுக்கான ஓர் எழுச்சியாக இருந்திருக்கிறது அல்லது, பேண முடியாது இருந்த மெளனத்தை, ‘காதலின்’ பெயரால் பத்திரப்படுத்துவதாய் இருந்திருக்கிறது! ஓர் உறவு மலரும் போதே அதை உன்னிப்பாய்க் கவனிக்கையில் அதன் ரகசியங்கள் எல்லாம் புலர்ந்ததும், அதன் மீது இருக்கும் பிரமிப்பு தொலைய அது காதலாக அல்லாமல், தோழமையாக எல்லாவிதமான சமூக இயக்கத்திற்கும் அடிப்படையான உறவாய் மாறிவிடுகிறது! அம்பேத்கர் சொன்னது போல, நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட என் பாதையில் பெண்  ஆண் என்ற பாலிமைப் பேதத்தை என் அளவில் வெகு நிச்சயமாக உணர்ந்து கொண்டிருக்கும் போது பெண் – ஆண் நட்பு அல்லது உறவின் மீதான ஈர்ப்பே கூட  மெல்ல கனிந்து, ‘காதலின் சுடரென’ நெஞ்சில் எரியும்!



செழுமையான காதலின் வண்ணமும் வெளிச்சமும் அடங்கிய காதலின் திண்மை அடங்கிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறேன். அவற்றின் கூதல், உங்களுக்கும் உங்கள் உங்கள் காதலை நினைவூட்டிக் களிப்பூட்டட்டும். உங்களை காட்டுப் பறவைகளாகட்டும். காற்றின் புரவிகளாக்கட்டும். மத யானைகளாக்கட்டும். பெருவெள்ளமாய் இழுத்துச் செல்லட்டும். சூரியனாய் உங்கள் தலை மேலே நகரட்டும். தனிமைக்கு ஒரு நிலவைப் பரிசளிக்கட்டும். உங்களை வேறு பருவகாலங்களுக்கு இழுத்துச்செல்லட்டும். வேறென்ன? முத்தத்தின் அலகுகளால் ஒருவருக்கொருவர் அன்பைப் புகட்டிக்கொள்ள காதலின் தேவைக்கான காலம் இது!




குட்டி ரேவதி
15.11.2011



நன்றி: ’ஆழி’ பப்ளிஷர்ஸ்

வம்சி வெளியீடாக என் இரு நூல்கள்









                        வம்சி பதிப்பகத்தின் வெளியீடாக என் இரு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. 
                        'மாமத யானை' - கவிதைத் தொகுப்பு
                        'நிழல் வலைக் கண்ணிகள்' - பெண்ணியக் கட்டுரைத் தொகுப்பு

                        புத்தகக் கண்காட்சியில், வம்சியின் கடை எண்: 313 -ல் இந்நூல்களை 
                        வாங்கிக் கொள்ளலாம் என நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!















குட்டி ரேவதி

புறனடை - சீரிய இலக்கிய இதழ்





புறனடை

மேலும் ஒரு இதழ் வருகிறது
என்ன தேவைகள் குறித்து,
நேற்றும் இது வந்ததா,
எந்த இடைவெளிகள் நிரப்ப?
எதன் நகல், நகலின் நகலின்..
அதன் இதன் எதன் சாயல்
வெறும் பெயர் மாற்றமா ?
யாருடைய சொல்லாக அது இருக்கும்.
காலத்தின் மீது என்ன அசைவுகள் கருதி ?
எந்தக் குழு ? என்ன நிலைப்பாடு ?
சாயமிழந்த ஒரு காலத்தின் உற்பத்தி விளைவா
சந்தைச் சூழலின் ஒரு வெற்றுப் பக்கமா
அதன் உள்ளீடு எதனால் நிரம்புகிறது ?
ஒரு சிறு கல்லெறிதலா, விலகலா, ஊடறுப்பா, உப பிரதியா
பிரபஞ்ச இயக்கத்தில் மெல்லிய சலனங்கள் பரவவிடும்                                                          
ஒரு பட்டாம்பூச்சி விளைவா .
வரலாற்றின் இடைவெளிகளில்                                                                                              
எப்போதும் நிரம்பியிருக்கும் மௌனமா..



ஆசிரியர் குழு: பிரவீண், ராஜ், ரவிச்சந்திரன், அருள், ஆர். அபிலாஷ், செல்வம், தேவா

தொடர்பு எண்: 9710014218 /9884772864
மின்னஞ்சல்: puranadai@gmail.com
விலை: ரூ.15/-









'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்' நூல் வெளியீட்டு விழா















'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்' நூல் வெளியீட்டு விழா 6.1.2012 அன்று சென்னையில் சிறப்பாகவும் எளிமையாகவும் நடைபெற்றது. ஆட்களைக் கவர்வதற்கான எந்தத் தந்திரமும் இன்றி, முழுமையும் இலக்கிய விழாவாகவே நடத்திக்காட்டியதற்கு நாதன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அஜயன் பாலாவிற்கும், முழு விழாவையும் ஒருங்கிணைத்திருந்த தமிழ் ஸ்டுடியோ அருணுக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்!

முக்கியமான விஷயம், நிகழ்ச்சியில் பேசிய படைப்பாளிகள் எல்லோரும் நூலை முழுமையாக வாசித்து அதுபற்றிய நுட்பமான தம் கருத்துக்களைநேர்மையாகப் பதிவு செய்தது. அழகிய பெரியவன், யாழன் ஆதி, தமயந்தி, பாலை நிலவன், பிரவீண், அஜயன் பாலா ஆகியோர் அவ்வாறு அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு கட்டுரை வாசித்தும் உரையாற்றியும் நூலுக்கான பரந்த முக்கியத்துவம், அதற்கான சமூகத்தொடர்பு, அரசியலைப் பதிவு செய்தது உண்மையிலேயே உள மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது. திரை ஆளுமைகளையும், அரசியல் ஆளுமைகளையும் அழைத்து இலக்கியங்களை அணுகுவதற்கானமேடை அமைத்துக்கொடுப்பது என்பது எனக்கு எப்பொழுதுமே ஒரு நேர்மையற்ற செயலாக இருந்திருக்கிறது. அதை இந்த விழாவின் வழியாக, இதில் கலந்து கொண்டோர் அனைவர் வழியாகவும் மீறியிருக்கிறோம்! நிகழ்விற்கு வர விருப்பம் இருந்தும் இயலாமல், வெளியிலிருந்து உறுதுணையாக நின்ற நண்பர்கள் அனைவருக்கும் கூட என் நன்றிகள்!

நூலை எழுத்தாளர் அழகிய பெரியவன் வெளியிட, கவிஞர் அனார் பெற்றுக்கொண்டார். எனக்கு ஜீவநாதன் வரைந்தளித்த ஓவியமொன்று பரிசளிக்கப்பட்டது!கவிஞர் தமிழ்நதி முழு நிகழ்வும் கலந்து கொண்டு சிறப்பித்தார்!

'முலைகள்' கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழாவிற்குப் பின் இது தான் நான் எழுதிய நூல் ஒன்றுக்கு நடக்கும் வெளியீட்டு விழா!ஆனால், இதில் கலந்து கொண்டோர் இந்நிகழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட விதமும், அது குறித்த தம் பார்வையைப் பதிவு செய்த அழகும், நேர்மையும்இந்நூலை ஒரு பொதுநூலாக ஆக்கியுள்ளது! இதைத்தான் நான் அதிகமும் எதிர்நோக்கினேன்! எல்லோருக்கும் மிக்க நன்றி!



குட்டி ரேவதி


'ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்' நூல் வெளியீட்டு விழா






எந்த அதிகாரத்தோடும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டுடியோ! இந்த இயக்கத்துடன் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!
கடந்த பத்தாண்டு நவீன தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போட்ட 
பெண் கவிஞர்களின் விடுதலை மொழியை அலசும் தொகுப்பு! 
உடலரசியலை ஆணித்தரமாய்ப் படைத்த எழுத்தையும் மொழியையும் முன்னிறுத்தும்
நவீன இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் வடிவமான 
பெண் கவிஞர்களை ஒன்று திரட்டிய தொகுப்பு!





தமிழ் ஸ்டுடியோவில் நான் தொடராக எழுதிய, 'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப்பிரதிகள்' நூலாக வெளிவருகிறது,  இன்று! இது, கடந்த பத்தாண்டுகளில்,  என்றென்றுமாய் கட்டமைக்கப்பட்டு வந்த ஆண்மைய இலக்கியப் புரிதலை தம் கவிதை மொழி வழியாகத் தகர்த்தப் பெண் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் நிறைந்தது. தமிழ் ஸ்டுடியோ, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறது. எழுத்தாளர் அஜயன் பாலாவால் தொடங்கப்பட்டு இயக்கப்படும், 'நாதன் பதிப்பகம்' நூலை பதிப்பித்திருக்கிறது.  எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், பாலை நிலவன், யாழன் ஆதி, தமயந்தி, அஜயன் பாலா, நர்மதா, தி.பரமேசுவரி மற்றும்பிரவீண்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.  இன்று மாலை 6  மணி அளவில் எழும்பூர் கன்னிமாரா நூலகத்திற்கு எதிரில் உள்ள ஜீவன் ஜோதி அரங்கத்தில் நடைபெறுகிறது.  இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று அதை முழுமையடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!