கண்டன அறிக்கைகள், வெளிநடப்புகள், ஆர்ப்பாட்டங்கள்,
இவையெல்லாம் அடையாளங்களாய் மட்டுமே மிஞ்சுவதற்கு
அதிக காலமில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் மற்றொன்றை நோக்கி ஓடத்தொடங்கிவிடுவார்கள்.
மீண்டும் துப்பாக்கிக் குண்டுகள் தாழ்த்தப்பட்டோரின்
உயிர்குடிக்கும்....
பரமக்குடியில் ஆதிக்க சாதிவெறியை அரசே அரங்கேற்றி முடித்திருக்கிறது. அரசின் பயங்கரவாதம் என்பதால் கண்டிக்கிற சிலர் இதே வன்முறையை ஆதிக்கசாதிகள் நிகழ்த்தியிருந்தால்
சாதிக்கலவரம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்றும், தமிழர் ஒற்றுமை காப்போம் என்றும் அறிக்கை விட்டிருப்பார்கள்.
ஆதிக்க சாதிவெறியர்களை கண்டிப்பதை விட அரசைக் கண்டிப்பது இங்கேயுள்ள அரசியல்வாதிகள் பலருக்கு எளிது.
ஒரு அரசு அதன் குடிமக்களை காக்கை குருவிபோல் சுட்டுக்கொன்றுவிட்டு எந்தச் சலனமுமின்றி நீடிக்கமுடியும் என்றால் அதற்கான காரணம் என்ன?
குறிப்பாக தற்போது நிகழ்ந்த படுகொலையின் வேர் எங்கிருந்து தொடங்குகிறது.
மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில், வலிமையுள்ள அரசியல் கட்சிகள் என்றால், அதிமுக, திமுக, காங்கிரஸ், வலது இடது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இதில் காங்கிரஸ் மட்டும்தான் தன் வலிமையை இழந்திருக்கிறது.
அதிமுகவின் செயலாளர் மொக்கசாமி தேவர், திமுகவின் செயலாளர் அவரது மாமா சிவனாண்டித்தேவர், காங்கிரஸ் செயலாளர் அவரது பங்காளி தவசித்தேவர், பொதுவுடைக்கட்சி செயலாளர் அய்யாவு. அதாவது தவசித்தேவரின் சித்தப்பா.
இதுதான் அங்கிருக்கும் கட்சிகளின் அமைப்பு முறை. (பெயர்கள் உதாரணத்திற்காகவே)
இது இன்று நேற்று தொடங்கியதல்ல அந்தக் கட்சிகள் தோன்றியதிலிருந்து காலங்காலமாய் நீடிக்கும் முறை.
ஊர் என்கிற சாதியமைப்பிற்கு சற்றும் குறையாத வண்ணம்
இந்த கட்சியமைப்புமுறை அந்த மாவட்டங்களில் இன்றும் நீடிக்கிறது.
முத்துராமலிங்கதேவர் ஜெயந்திக்கு கட்சியின் மிகப்பெரிய தலைவர்கள் போவது ஒருபுறமிருக்கட்டும், அந்த ஊர்வலத்தில் மேற்சொன்ன அனைத்து கட்சியினரும் சாதி என்கிற ஒரேஅடிப்படையில் திரண்டுசெல்வதை பார்க்கமுடியும்.
தாழ்த்தப்பட்டோர் தொடக்கத்தில் இந்தக் கட்சிகளின் அணியாக மட்டுமே இருந்தனர். காலப்போக்கில் தங்களுக்கான அங்கீகாரத்தை இந்த அமைப்புகளுக்குள் பெறமுடியாமல்
தனித்துத் திரண்டனர்.
அதில் அரசியல் வழியிலான திரட்சி என்பதை உருவாக்கியதில்
அப்பகுதியில், தியாகி இம்மானுவேல் பேரவைக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும், அருந்ததியர் விடுதலை முன்னணிக்கும்
பெரும் பங்குண்டு.
முதன்முதலாக ஏப்ரல் 14 ஆம் நாள் அம்பேத்கர் பிறந்தநாளன்று
சிறுத்தைகள் அணிவகுப்பு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் அறிமுகம் செய்தனர். (ஒவ்வொரு தேவர் ஜெயந்திக்கும் கடைகள் அடைக்கப்படுவதும், அடைக்கப்பட்ட கடைகளையும் கல்வீசி தாக்குவதையும் வழக்கமாய் கொண்டிருந்தனர் முக்குலத்தோர்)
சிறுத்தைகள் அணிவகுப்பின் போது, போலீசே கடைகளை அடைக்கச்சொன்னது, ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப்போவதைப்போன்ற பீதியை திட்டமிட்டு விதைத்தது அரசு.
அரசு மட்டுமா? மக்கள் ஒற்றுமை காப்போம், மதுரை வீதிகளில் சிறுத்தைகள் அணிவகுப்பாம், காட்டுக்குள் இருக்கிற மிருகங்கள் நாட்டுக்குள் வரலாமா? என்று சுவரொட்டி அடித்தார்கள் அய்யாவுத்தேவரின் பொதுவுடைமை வாதிகள்.
அதே வேளையில் மறுபுறத்தில், ஆதிக்க சாதிவெறிக்கெதிராய் தன்னுயிர்தந்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் மக்களை மட்டுமன்றி பல்வேறு முற்போக்காளர்களையும் பார்த்திபனூரில் திரட்டுகிற பணியினை மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றது.
இந்த நிலையில், இம்மானுவேல் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், அருந்ததியர் விடுதலை முன்னணி இவற்றிற்கிடையிலான ஒற்றுமையும் பலப்பட்டது. சில உடன்பாடுகளோடு தொடர்ந்து இயங்கி காலப்போக்கில்
மேலும் சில அமைப்புகளை உள்வாங்கிக்கொண்டு (அரங்க குணசேகரனின் தமிழக மனித உரிமை கழகம், தலித் பண்பாட்டுப்பேரவை) தமிழக தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணியாய் பரிணமித்தது.
இதே காலத்தில்தான் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு பெயர்களிலும், அ.மார்க்ஸ் தலைமையிலான நுண் அரசியலாளர்களும் தாழ்த்தப்பட்டோர் சிக்கலில் தலைகொடுக்கத் தொடங்கினர். தமிழகமெங்கும் இரட்டை வாக்குரிமைக்கான நூறு மாநாடுகள் என்று தொடங்கி அதுதான் முதற்பணி என்றும் தங்கள் அரசியலை முன்வைத்தார்கள்.
தொண்டுநிறுவனங்களோ தாழ்த்தப்பட்டோரின் உள்முரண்களை பயன்படுத்தி இயக்கங்களுக்கு இடையே உருவான அந்த ஒற்றுமையை குலைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டன. நுண் அரசிலாளர்களை தங்களின் அரசியல் வடிவங்களாக முன்நிறுத்தினர். ஒற்றுமையை குலைப்பதில் முன்நின்று வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாதிரியார் அந்தோணி ராஜ்.(ஐடியாஸ், ஐகப்) இதில் மதுரை இறையியல் கல்லூரியின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
இதுதான் தருணம் என்று காத்திருந்ததுபோல், தாழ்த்தப்பட்டோரின் அரசியல் சக்தியாய் வளர்ந்திருக்கவேண்டிய இயக்கங்களை தேர்தல் பாதையில் சீரழிப்பதற்கான வேலையையும் நுண்அரசியலாளர்கள் தொடங்கி நடத்தி முடித்தனர்.
மேலும், தமிழர் ஒற்றுமை, தமிழ் தேசியம், பாட்டாளி வர்க்க ஒற்றுமை, எல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும், மேலும் அப்படியொரு தமிழ்தேசிய ஒற்றுமையோ எழுச்சியோ பாட்டாளிவர்க்க புரட்சிக் கனலோ இங்கில்லை, இந்நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு இடையிலான ஒன்றுபட்ட அரசியல் உருவாக்கமே, பரமக்குடி கொடுமைக்கு எதிராய் உறுதியாய் போராடும் வல்லமை கொண்டது. அதுவே ஆதிக்க சாதிவெறியை எதிர்த்து சமரசமின்றி போராடும் தன்மை கொண்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தொண்டு நிறுவன அரசியலால் காவுவாங்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களுக்கு இடையிலான தேவை மீண்டும் உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தில் இதில் முன்னின்ற இம்மானுவேல் பேரவை தேர்தல் பாதையிலும் செல்லாமல், இதை மீண்டும் கட்டியெழுப்பும் முன்முனைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போதும் களத்தில் நின்று அடக்குமுறைக்கிடையே பணியாற்றுகிறார்கள். இந்தப் பணி வெற்றியடையவும், மீண்டும் தாழ்த்தப்பட்டோர் அந்த மாவட்டங்களில் அரசியல் சக்தியாய் உருவெடுப்பதுமே ஆதிக்கசாதிவெறி வன்முறைகளுக்கு சரியான மாற்றாக இருக்கமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக