துயரங்களாலான அம்மாவின் கந்தல் சேலை
காற்றில் அலைந்து பற்றிய தீ, நீ!
பற்றிக் கொண்ட தீயுடன்
அவள் தெருவிறங்கி ஓடுகையில்
கடைசி நினைவாய்
அவள் பாதங்களைச் சுட்டெரித்த
தார்ச்சாலை ஆனவளும் நீ
தீப்பந்தமாய் அவள் ஓடி ஓடி எரிந்த
அத்திருப்பத்தைக் கடக்கும் போதெல்லாம்
ஓர் எரிநட்சத்திரம் உன் மண்டைக்குள்
பரபரவென்று பற்றி எரிகிறது என்பாய்
உன் தாயின் நினைவு பீடித்த பொழுதுகளை
அக்குளக்கரையில் கழித்தோம் நீயும் நானும்
அவள் அழுத கண்ணீராலானது என்பதால்
நம்மை மீன்களாக்க முடியாது
உடல் துடித்துக் கிடந்தோம்
கரையின் அனலில்
நினைவில் காய்ந்த சூரியனை
அக்கண்ணீர்க் குளத்திற்குள் உருட்டிவிட்டோம்.
இரவின் நீர்வெளியிலும் பூத்திருந்தது
நட்சத்திரக் கண்களுடன்
தீக்கங்குகள் ஒருபோதும் அணைவதே இல்லை
கனவிற்குள் நின்று எரியும் தீயை அணைக்க
உறக்கம் கலைத்து எழுந்தாய் அன்றும்
காற்றில் உன் கைகளை வீசினாய்
நினைவுகளைப் பற்றிக் கொண்ட
நெருப்பை அணைக்கப் போராடினாய்
ஒரு கோடி மின்மினிப்பூச்சிகளை
உன் உடலிலிருந்து விடுவித்தாய்!
நீ தீக்குள் சுழன்றாடிய போது
யார் கையைப் பற்றிக்கொள்ள நினைத்தாய்?
யாரும் யாருக்கும்
கை நீட்டுவதில்லை இப்பொழுதெல்லாம்
மொட்டு அவிழாக் கொடிகளைப் போல
எல்லோர் கைகளும்
தனியே புரள்கின்றன தரையில்
தீ பற்றிய உன் செங்கைகளேனும்
உயரே மிக உயரே இறக்கைகளாகட்டும்!
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக