பொருள் ஊடகக் கவிதைகள்
1. துப்பாக்கியின் இரும்புக்கால்கள்
அவர்கள் தம் துப்பாக்கியின் இரும்புக்கால்களால்
என் மீதங்களை எட்டி உதைத்து
இன்னும் என்னுயிர் மிஞ்சியிருக்கிறதோ
எனப் பரிசோதித்தப் பின்னும்
என் செவிகளில் அவர்கள் சொற்கள்
எதிரொலிக்கக் கேட்டேன்
கிணற்றில் விழுந்த கல் போல்
எங்கோ இருட்டுக்குள் துலங்கிக் கிடந்தது
ஏற்கெனவே மூளையைத் தாக்கியிருந்த ரவை
ஆமாம், சொற்களுக்கு வருவோம்!
எறிகற்கள் பூமி அதிர விழுந்தது போல
என் நனவிலியை உலுக்கி அடங்கின
அச்சொற்களின் திரட்சி
அவர்கள் இன்னுமொரு முறை
இரும்புக்குறிகளின் விசையழுத்தினால்
பீறிடும் ரவைகளைத்தாம் ஒத்திருந்தது
அகராதியின் அத்தனைச் சொற்களும்
அந்த இறுதிக்கணங்களில்தாம் உருவாகின்றன
என்றறிந்தேன்
அவை என் அற்புதமான உயிர் உறுப்புகளின் மீது
கவணெழுந்த கற்கள் போல் மோதி
அவை உயிர்தாங்கிக் கடந்து வந்த
எண்ணாயிரம் யோனிகளையும் அவை முகிழ்த்த
முலைகளையும் நினைவுபடுத்தின
இன்னும் இப்பொழுதும் விழித்திருக்கும் நனவிலியை
அணைப்பதற்கு இன்னொரு ரவை அனுப்புங்கள்
என்று குரலெழுப்ப இயலாதபடிக்கு
எப்பொழுதோ என் உயிர் அடங்கியிருந்தது
தோழர்களே!
2. பொத்தான்கள்
காதுகளின் துளைக்குள் பொருந்திய பொத்தான்கள்
ஒளி தெறிக்க மின்னுகின்றன
நீந்திய நிலையில் வடிவில் உறைந்து போன தங்கமீன்
சிகரெட்டுகளின் முன்முனைகளைப் போல கனல்கின்றன
எப்பொழுதில் பொத்தான் என்று அவன் கிள்ளி விளையாடும்
என்னுணர்ச்சி முலைக்காம்பாய் துருத்தியெழுகிறது
என்பதும் கண்டறியப்படாத அரசியல் பகடி
ஏதோ டிஸைனர் கணவான் பெண்ணின் முலைக்குமிழ்களை
ஆண் சட்டையின் மார்பில் பொத்தானாக்கி
அவளையே அணியச் செய்தான்
சட்டையின் பின்னே பூக்கத் தயாராயிருக்கும்
முலையின் மொக்குகளோ கூசிக்குறுகி
போலிமையின் வடுவாகிப் பொத்தான்களாயின
மது பகிரும் வேளையில் நீலத்தீயுடைய
அப்பெண்ணின் கண்கள் விலையுயர்ந்த வைரப்பொத்தான்களாய்
மங்கிய மின்சார ஒளி பரவிய அறையில் துலங்கின
சமையலறைப் பெண்கள் தம் பொத்தான்களை
கேஸ் ஸ்டவ் எரிய வைக்கும்
திருகுப்பொத்தான்களாக்கி வைத்திருக்கின்றனர்
பஸ்ஸில் ஏறிப் பலவேலைக்குப் போகும் பெண்கள்
ஆயத்தப் பொத்தான்களை
ஆங்காங்கே மறைத்து வைத்திருக்கின்றனர்
உயிரோடு உயிர் இணைக்கும் கொப்பூழ் பொத்தானை உருவாக்க
தாயின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டவளின் பொத்தான்
கிளைட்டோரிஸ் = பெண்முளையாகி இருக்கிறது
எவனொருவன் ஏது செய்தலுக்கும் வாகாய்
நான் என் பொத்தானை எங்கு வைத்திருக்கிறேன்
அவன் கண்டறிந்து சொன்னபோது
உடலின் துருத்தல்கள் எல்லாம் பொத்தான்களாய் எழுந்து நின்றன.
3. இசையடங்கிய ஏரி
செங்குருதி கசிந்து நதியாகா நாட்களில்
உடலுக்குள் விரிகிறது
இரத்தத்தின் ஏரி
உணர்ச்சிகளை பெருங்கயிற்றால் இறுகக்கட்டியதைப் போல
இரத்த நாளங்களில் அதன் பேரிசைக்கோர்வை
அடங்கிப் போயிருக்கிறது
கூச்சல்கள் எனக்குமட்டுமாய்
மூலை முடுக்குகளில்
எலும்புகளின் கணுக்களில்
கடைக்கண்களில் வளைவு சுருண்ட இடுக்குகளில்
அலையடிக்காத கடலைப்போல முனகுகின்றன
சூன்யம் கவ்விய ஆகாயத்தை உடுத்திய
வேட்கையுற்ற மிருகமாய் அது
மூச்சடக்கிக் காத்திருக்கிறது
திறந்து விடுகிறேன் உடலை
செங்குதியின் பேராற்றை
சிறிய சிட்டுக்குருவிகள் பேராயிரம்
உடலைக் கிழித்துக்கொண்டு
பறந்து செல்கின்றன.
முழக்கத்தின் பேரதிர்வை கேட்டிலையோ எவரும்?
4. கருப்பையின்
சிறகுகள்
இரு புறமும் நீள விரிந்த இறக்கைகளுடன்
பூக்களை அலகில் ஏந்திப்பறந்த நிலையில்
என் தாழிக்குள் வளர்ந்து வரும் அப்பறவை
உடலின் வீதியில்
சிறகடித்து உயரே எழுப்பும் பணி எனதானது
எழுந்து பறக்கையில்
கைகால்கள் விடைத்து நிற்க
வர்ணங்களின் புழுதியை எழுப்பும்
உடலெங்கும்
அதன் மண்டலம் எனைச் சூழ்ந்திருக்க
வானத்தைத் தன் நெடுஞ்சாலையாக்கி
விசையுற்ற அம்பைப் போல எனை இயக்கும்
மரங்களின் உச்சிகளில் அதன் சினைகளை
இறக்கும் போது நிலவு பிறந்து சிரிக்கும்
தேசங்களின் கனவுத் திரட்சிகளைக் கருக்கொண்ட
அதன் கூவல் நித்தம் நித்தம்
என் பருவகாலங்களை அலங்கரிக்கும்
நீலம் சூழ்ந்த அதன் கண்கள்
ஒரு மீனுக்குக் கடலைத் தந்தது.
3 கருத்துகள்:
மிக அருமையாக வந்துள்ளது..
வாழ்த்துகள்..
மதி
நன்றி, மதியழகன் சுப்பையா!
வார்த்தைகளின் வீச்சில்
உன் வேகம் தெரிகிறது !!
சொல்லாடல்களின் ஆழத்தில்
உன் உள்ளம் புரிகிறது !!
பெண்மையே ...
கலங்கரை விளக்காய் நில் !
மானுட அலைகளில் அடித்து
வரப் படும்
வறட்டு ஜீவன்ல்களுக்க்காகவாவது ...!
அன்புடன்
ஷக்தி,
ஈரோடு .
கருத்துரையிடுக