நம் குரல்

கூழாங்கல் கவிதைகள்

என் உயவுநோய்


முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
! ஒல்! எனக் கூவுவேன் கொல்!
அலமர அசைவு வளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே

(குறுந்தொகை 28:பாலை)

ஒளவையாரின் பாடல்.

சுழற்காற்று மரங்களை அலைக்கழிக்கும் இவ்விரவில் என் தனிமைத் துயரை அறியாமல் உறங்கும் இவ்வூரை முட்டுவேனா தாக்குவேனா என்ன செய்வதென்று அறியாமல் ‘ஆ’ ‘ஓ’ என்று கூச்சலிடுவேனா!’ என்று தொனிக்கும் இக்கவிதை, தன் சொற்களுக்குள்ளும் கூச்சலைக் கொண்டிருக்கும் கவிதை.


வெவ்வேறு தருணங்களில் அதன் அர்த்தச் சுவை கருதி ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுப் பேசியிருந்த போதும் அது தரும் உவகையின் மீதான போதம் தீராதது.


தன் காதலை இவ்வாறு உரக்கச் சொல்லும் பெண் மொழி எப்பொழுதுமே நிலவி வந்திருக்கிறது என்பதற்கான சாட்சி.


முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!’, ’! ஒல்! எனக் கூவுவேன் கொல்!’, ’உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே’ என்ற மூன்று வரிகளிலும் வழியும் ஆங்காரம் ஒரே வேகத்துடன் வெளிப்பட்டிருப்பதுடன் ஒரு நேர்க்கோட்டின் இரு துருவங்களும் ஒன்றிணைந்து வட்டமாகும் தன்மையும் அடைந்தது. இத்தன்மையின்றி கவிதை இல்லை.


பாலை நிலப்பரப்பை மொத்தமாய் தன் கண் முன்னால் விரித்து பழியை அதன் மீது வீசியெறியும் பெண்ணின் குரலும் அந்நிலத்துக்கே உரிய அன்றாட நிகழ்வுமான பிரிவும் ஒன்றொடொன்று தோய்ந்த கவிதை.


சொல்ல வந்த காதலின் உச்சம் கொப்புளிக்க வெளிப்படுத்தும் வல்லமை ஒளவையாருக்கே ஆனது. ‘என்றும் கிழியாதென் பாட்டு’ என்பது போல.

குட்டி ரேவதி

1 கருத்து:

அன்பென்று கொட்டு முரசே சொன்னது…

நல்ல கவிதையை எத்தனை முறை பேசினாலும் ஒவ்வொரு முறையும் புது அனுபவமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அப்படியான ஒரு கவிதையை எடுத்து விரித்திருக்கிறீர்கள் ரேவதி. மேலும் கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.