(குட்டி ரேவதியின் “உடலின் கதவு” கவிதைத் தொகுப்பு. வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம், 137(54), இரண்டாம் தளம், ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014, விலை ரூ.80.)
விட்டு விடுதலையாதல் என்பது மானுட உரிமை சார்ந்தது மட்டுமல்ல, ஒரு கவித்துவ அம்சமாக அனைத்து வித எழுத்துகளிலும் எடுத்தாளப்பட்டு வருகிறது. குட்டி ரேவதியின் “உடலின் கதவு’ கவிதைத்தொகுப்பில் ஆதிக்கத்திலிருந்து பிதுங்கி வெளியேறத்தவிக்கும் தவிப்பின் குரல்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் கனன்று கொண்டிருப்பதைக் காண முடியும். அதே சமயத்தில் பெண்மையின் கம்பீரம் கூச்சங்களை முறியடித்து விட்டு வீறுநடை போடுவது ஊடுபாவெனப் பின்னி ஒரு சரித்திரத்தை நெய்வதாகத்தான் தோன்றுகிறது.
இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகளில் கடல், உடல், விதை, கனி போன்ற சொற்கள் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருக்கின்றன. கடலும் உடலும் விதையும் கனியும் மானுட வாழ்வின் மகோன்னதமிக்கப் பொக்கிஷங்கள். மனிதனுக்கு அவை வழங்கிய அழகுகள் எண்ணிலடங்காதவை. சிதைப்பது இதன் செயல்நோக்கம் என்ற வகையில் அழகுகளை அனுபவிக்கத் தெரியாமல் சிதிலங்களில் திளைக்கிறது. சிதைவுகளை எண்ணித் தளர்ந்து விடாமல் அழகுகளைச் சிருஷ்டிக்கும் கலையில் கவனமுடனும் கலகத்தன்மையுடனும் முகிழ்க்கிறது உடல்.
இவற்றை போர், உடல், திணை, யுத்தத்தின் கொதிப்பு, மற்றும் கடலை வரைந்தவள் கவிதைகளில் காணலாம். உடல் குறித்த பிரயோகங்கள் மானுட ரகசியங்களிலிருந்து பகிரங்கமாக வெளியேறி அமைப்பாக்கம் பெற்றாலும் பெண்மையின் வாசனையை சொற்களினுள் ஒளித்து வைத்துள்ளன.
மெத்தென தமது உடலைப் பஞ்சணைக்கு எப்பொழுதோ விரித்தவை – என்னும்போது ஓர் ஒடுக்குதலின் துயரம் பீறிடுவதை வார்த்தை வெளி நமக்குள் காட்சிப்படுத்தி விடுகிறது. வெளவாலின் பிடிவாதமாய் ஒவ்வொரு உடலாய்த் தாவியமர்ந்து தாகமாற்றும் – என்று சொல்லும் போது, முழுநிலவின் இரவுகளில் உடலைப் பிணமெரியும் வாசனையோடு மலர்த்தினாள் என்று சொல்கிற பொழுதும் ஒரு திடுக்கிடலும் அச்சம் கலந்த துயரமும் அவலத்தின் பின்னணியை நமக்குக் காட்சிரூபமாக விளக்கிவிடுகிறது. சமூகக்கட்டமைப்பு மீதான ஒரு பெண்ணிய அடையாளம் தாக்கம் பெறுவதைக் காணமுடிகிறது.
கடந்த வரலாற்றில் தொலைந்த உடலை இன்றைய போரில் மீட்டெடுப்போம் – இது ஒரு நம்பிக்கையின் குரலாக ஒலிக்கிறது. விதைக்கவோ வளர்க்கவோ யாருமேயிலாது பாழ்நிலமாய் உலர்ந்து வெடிக்கிறது உடல் – என்ற இடத்தில் ஒரு துயரத்தின் குரலாக மாறுகிறது. நீ என் உடல் திறந்த கணம் வீறிட்டு அழுதது பனி – இந்த இடத்தில் ஒரு பிரவாகம், ஒரு முகிழ்த்தல் என கவிதையின் குரல் அழுகிறது.
இது ஒரு விரிவாக்கப்பட்ட விரிவாகப் பரந்த மொழியின் ஒரு தொலை தூரத்தோற்றம். அது அர்த்தங்களை உற்பத்தி செய்வதற்காக வேர்நிலைச் சாத்தியப்பாடுகளை வழங்குகிறது. இவற்றில் ஒரு கவித்துவத்தை, ஓர் உடைந்த கவித்துவச் சொல்லாடலைக்காண நேரும்பொழுது ஒரு விமர்சன ரீதியான பெண்ணிய வரலாற்றையும் படைத்து விடுகிறது. இங்கு எழுத்தின் எல்லைகள் மீறப்படுவதோடு திறந்த வடிவங்கள் உடைக்கப்படுகின்றன. அனுபவமும் தொலைதூரப்பார்வையும் மாறும் பொழுது வடிவங்களும் மாறுதல் அடைகின்றன. கவிதையின் சுய தர்க்கம் அமைப்பாக்கம் பெறும் இடம் இது. பெண்ணிய மனதும் உடலும் பன்முகப் பரிமாணம் கொள்ளும்பொழுது இக்கவித்துவ மொழி மலர்கிறது.
இங்கு உடல் திணை கவிதை,
கடலின் கொந்தளிப்புக்குள் தவறி வீழ்ந்த பின்னர்
ஒரு தோணியாக அலைகளையெல்லாம் வரிக்க முடியும்
உடலெங்கும் விளையும் கதைகளைப்
பருவம் மாற மாறப் பொலபொலவென்று உதிர்த்து
முதுமையின் நீர்மையை நுனிவிரல்களால் தொட்டுணர்ந்தவாறே
ஒரு நீர்த்தாவரமாய் உள்ளிறங்கி
அதன் பரப்பெங்கும் பல்கிப் பெருகவும் முடியும்
என நிறைவு பெறுகிறது. உடல் ரீதியான எல்லைகள் தாண்டி மொழியியலாக, உளவியலாக, கலாச்சாரமாக பிரவகிக்கும் பெண்மையின் நர்த்தனம் ஒவ்வொரு வரியிலும் ஊக்கம் பெறுவதைக் காண முடிகிறது. பெண்மையின் அழகியல் ஒரு கலைப்படைப்பாக உருவெடுக்கிறது.
ஓர் அதிகாரத்துவ மனப்பாங்கு, சமூக பெளதீக அரசியலாக மாறும் வித்தையை ஸில்வியா பிளாத்தின் கவிதைகளில் பார்த்திருக்கிறோம். குட்டி ரேவதி வேறு பல எல்லைகள் தாண்டி பெண்மையின் உண்மையை நமக்கு விவரிக்கிறார். எனது உடல் அவர்களுக்கு ஒரு கூழாங்கல் என பிளாத் கூறுவார். ஆனால் இங்கு உடலின் கதவைத்திறந்து பொக்கிஷங்கள் காண்பிக்கப்படுகின்றன. எப்படியிருந்தாலும் உள்ளீடு ஒரு விடுதலை தான் என கவிஞர் அறிவித்து விடுகிறார்.
உடல் குறித்த கவிதைகள் ஓர் ஒழுக்கவியலாக, ஒரு நேர்மையாக ஒரு திறந்த நிலையின் பொருத்தமான பாணியாகக் கட்டுடைக்கப்படுகின்றன. உணர்வதும் அரூபமானதுமான இரட்டை நிலைகள் பின்பற்றப் படுகின்றன. இவை ஒரு முரண்பாடு மிக்க தேவையாக உள்ளன. இருத்தலிலிருந்து விடுதலை பெறும் விருப்பத்தைக் காட்டிலும் இருத்தலை மென்மையானதாக மாற்ற விரும்புவதே சிறந்ததாக உடல் பற்றிய கவிதைகள் பேசுகின்றன.
இங்கே ஒரு கவிதை,
கடலை வரைந்தவள்
அவளுக்குள்
உயிருள்ள கடலொன்றை வரைந்திருக்கிறாள்.
எதிர்நோக்காப் பொழுதொன்றில் கொந்தளித்து
உறங்கும் நகரத்தின் கரைகளை விழுங்கிவிடுகிறது
கூந்தலின் அலைக்குள்
மீன்கள் குதூகலமாய்க் கொந்தளிக்கின்றன
பவளப்பாறைகளின் மடிப்புகளில்
புனைவுகளில் விளையும் காலம் உறங்குகின்றது
அவளது இதழ் நீலஒளி கீறிய புன்னகையுடன்
இரவினை முத்தமிடுகின்றது
உடலெங்கும் படர்ந்திருக்கிறது
பெளர்ணமியின் ஈரஒளி
அவளின் வனாந்தரத்தில்
சங்குப்பூச்சிகள் மேய்கின்றன
காலத்தின் சிந்தனையேயிலாது
கடல் ஆமைகள் ஊமைப்பெண்களாய்
அழகு சிந்த நோக்குகின்றன
பார்வைக்குள் அடக்கியிருக்கும் பாடல்களை
விடுவிக்க முடியாத ஏக்கம் ததும்ப
அவளது கடலுக்குள் ஏகி
எண்ணிக்கை மீறுகின்றன காலையும் மாலையும்
ஒரு பார்வையில்
கடலையே அவளால் சுருட்டிக்கொள்ள முடியும்
கம்பளத்தைப் போல
ஆனால் நெருப்பின் கங்குவளையத்தினூடாக ஒரு பயணம்
தகிக்கும் சூரியனைத் தலையில் சுமத்தைப் போல
ஓய்தலின்றித் தவிக்கிறாள்
அவளுக்குள் ஒரு கடலையல்லவா எழுப்பியிருக்கிறாள்.
இந்தக் கவிதைத் தொகுப்பின் உஷ்ணத்தை இந்த ஒரு கவிதை மட்டுமே தன் மடியில் கட்டிக் கொண்டிருக்கிறது. இதை ஒரு வகைமைப்பாடாகச் சிறுமைப்படுத்திவிட முடியாது. ஒரு நிரந்தரமற்ற மொழியின் செழிப்பான சுவையை உணர்வது ஒரு புறம் இருக்கட்டும். இந்தக் கவிதையின் ஒரு சமன்செய்யும் செயலைக் கவனிக்கலாம்.
ஒரு மாபெரும் பிரக்ஞையின் வெளிப்பாடு ஒரு மெய்மையின் ஒளி அலையை மிக மிக மென்மையாகத் தூவுகின்றது. ஒரு நீல ஒளி கீறிய புன்னகையும், நெருப்புக் கங்குவளையத்தினூடாக ஒரு பயணமும் என வாழ்வையும் மரணத்தையும் அவலத்தையும் குதூகலத்தையும் நல்லதையும் தீயதையும் உடல் மற்றும் கடல் போன்ற பிம்பங்களின் நிதர்சனத்தையும் நிச்சயமின்மையையும் ஒரு சமன் செய்யும் போக்காக கவிதையின் மொழி வீறிடுவதையும் மெளனம் வகிப்பதையும் ஒரு புதிய பிரத்யேகத்தை நோக்கிச் செல்வதையும் காண முடிகிறது.
மோகன ரவிச்சந்திரன்
நன்றி : உள்ளுறை
2 கருத்துகள்:
நல்லதொரு மதிப்புரை.
வாழ்த்துக்கள்.
நன்றி, ஜெகதீசன்.
அன்புமிக்க சந்தனமுல்லை,
தங்கள் கருத்துரையைப் பதிவேற்ற முயன்றேன். என் பதிவில் எழுத்துரு பிரச்சனையாக இருந்ததால் பதிவேறவில்லை. மன்னிக்கவும்.
தயவு செய்து மீண்டும் அனுப்பும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துரையிடுக