நம் குரல்

நிகழ மறுத்த இயக்கம்


இன்று ஒரு பெண் கவிஞர் தொலைபேசியில் என்னை அழைத்து தமிழகத்தில் சக எழுத்தாளர்கள் ஏன், பெண் எழுத்தாளர்களே கூட நடந்து கொள்ளும் விதம் பற்றி அங்கலாய்த்துக் கொண்டார். (அவர் பெயரை இங்குக் குறிப்பிடாமல் இருப்பது எனக்கும் அவருக்கும் நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.) அவர் தனித்து விடப்பட்டதும் அவரின் சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகவும் எவ்வளவு தான் எதிர்த்துக் கொண்டே இருப்பது என்றும் அவரின் சீற்றம் வளர்ந்து கொண்டே இருந்தது.


அவர் கூறியது பெண் எழுத்தாளருக்கான பிரச்சனையாக மட்டுமே எனக்குத் தோன்றவில்லை. எல்லா கவிஞர்களின் பொதுவான பிரச்சனை இது! பல முறை இதை யோசித்து நானே சில முடிவுகளுக்கு வந்திருப்பதால் எனக்கு இது புதிதாகத் தோன்றவில்லை.


என்றாலும் அவர் முன்வைத்த ஆதங்கம் மிகவும் நேர்மையானதாகவும் அறியாமைகள் நிறைந்ததாகவும் இருந்தது என்பது எனக்குக் கவலையைக் கொடுத்தது. அவர் தரப்பு நியாயங்களைப் பேசுவதற்கு இன்னும் வாய்ப்புகளைத் தேடி அவர் போகக் கூடும் என்றும் தோன்றியது.


நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ மறுத்த இயக்கம் என்று கவிதை இயலையும் விமர்சனத்தையும் சொல்லலாம்.


பெண்களோ சிறுபான்மையினரோ ஏன் ஒடுக்கப்பட்ட எவர் எழுத வந்த போதும் அது ஓர் இயக்கமாக மாறாமல் பார்த்துக் கொண்ட தீவிரமான எழுத்தாளர்கள் கைகளில் தான் இன்றும் நவீன இலக்கியம் என்று சொல்லப்படுவது உருவழிந்து கொண்டிருக்கிறது.


தனக்குப் பிடித்த கவிஞர்களை முன்மொழிவதும் அவர்களை விதந்தோதுவதும் நன்று தான். பிடிக்காத கவிஞர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் (இங்கே கவனிக்கவும், பிடிக்காத கவிதைகளை அல்ல) வாரித்தூற்றுவதற்குப் போதுமான தமது மொழி வளங்களை விரயப்படுத்தியுள்ளனர். இங்கு விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியின் அந்தரங்கத்தைத் தூற்றுவது தான் நவீன நாகரிகம். ஏற்கெனவே அந்தப் படைப்பாளியுடன் நட்புறவில் இருப்பது இன்னும் ஆதாயம் தேடித்தரும்.


மேலும் கவிதை விமர்சகர்கள் என்பவர்கள் பெரும்பாலும் சகக்கவிஞர்களே என்றபடியால் அவர்களின் விமர்சனங்கள் மீதான நம்பகத்தன்மை மிகவும் குறைவு. எந்தக் கவிதைக் கோட்பாடும் இயலும் அவர் அறிந்திருக்க நியாயமில்லை, சகக்கவிஞர்களைப் போலவே. எவ்வளவுக்கெவ்வளவு அதிகாரமோ அவ்வளவுக்கவ்வளவு விமர்சனம் காரசாரமாகும்!


அதிரடிக்கவிதைகளில் கவித்துவம் என்பதே மருந்துக்கும் இல்லாமல் போய் கவிதை இயக்கம் சிதைவுற்றதையும் காண முடிகிறது.


சமூக வெளியில் புதிதாய் ஒரு கவிதை முளைக்கும் போதெல்லாம் இங்கு பீடங்களில் இருந்த எல்லா முதன்மையான எழுத்தாளர்களும் ‘அது கவிதையே இல்லை’ என்று தன் இருப்பு குறித்த பாதுகாப்பின்மை உணர்வால் சொல்லவும், அந்த எழுத்துக்கான உந்துதல் தொடராமல் இருப்பதற்கான தேர்ந்த சொற்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பரப்பி, ‘அது தொடரவில்லையே!’ என்றும் உறுதிசெய்து கொண்டனர்.


இதனால் நிகழ்ந்தது ஒரு சரியான கவிதை இயக்கத்தை நவீன இலக்கியம் முன்னெடுக்காமல் போனது. இழப்பு கவிஞர்களுக்குப் போலவே வாசகர்களுக்கும்.


மேலும் உரைநடையில் தீவிரமாக இயங்கியவர்கள் தாம் கவிஞர்களின் பட்டியலையும் கவிதைகளின் தரங்களையும் நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கவிதை விமர்சனம் குறித்த எந்தத் தனிப்பட்ட பயிற்சிக்கும் தங்களை உட்படுத்திக் கொள்வது கிடையாது.


வெறுமனே தனது சுய, மேலோட்டமான இலக்கிய அரசியலை ஊதிஊதிப் பெருக்கச் செய்து மேலே பறக்கவிட்டு அதன் கீழ் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள்.


இன்றைய நவீன இலக்கியத்தின் குத்துச்சண்டைகளில் வென்றவர்களால் நிறைய விருதுகளையும் வெளிநாட்டுப்பயணங்களையும் வெகுநிச்சயமாய் பெற்று விட முடியும் என்றாலும் தன்னைத் தானே விலைபேசிய தருணங்களை அவர்களால் ஒரு போதும் மறக்கமுடியாத நினைவாற்றலையும் கூட தன்னிடம் கொண்டிருப்பார்கள் என்று நிச்சயமாய் நம்புகிறேன்.


இந்நிலையில் கவிதை இயலையும் கவிதை விமர்சனத்தையும் விரிவாகவும் மையமாகவும் வைத்துப் பேசும் ’உள்ளுறை’ போன்ற இதழ்கள் நிறைய வெளிவரவேண்டும்.


இயன்ற வரை உரைநடையாளர்களை கவிஞர்களிடமிருந்து தொலைவில் நிறுத்த வேண்டும். வசனம் என்பதை உரைநடை என்று தப்பார்த்தம் செய்து கொண்டார்கள் போலும்.


இந்த உரைநடையாளர்கள் கவிஞர்களை தம் கைப்பாவைகளாகப் பயன்படுத்த இயலாத படிக்கு கவிஞர்கள் தம் எழுத்துப் பணியில் தீவிரமாகவும் ஆளுமை நிறைந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.


கவிதையின் முதல் வாசகராயும் கடைசி வாசகராயும் எழுதுபவரே இருந்து விட்டுப் போவதில் குறையொன்றுமில்லை. தற்போதைய நிலையும் அது தானே!


சமரசமற்ற எழுத்தை எவருமே பேச முன்வராத நிலையில் அதுவே அதற்குக் கிடைத்த பெருத்த அங்கீகாரமாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் ஏற்கெனவே இது போல பலமுறை இலக்கிய வரலாற்றில் பலமுறை நிகழ்ந்துள்ளதை நினைவுபடுத்திக் கொள்வதும் நன்று. இப்போதைக்கு இவ்வளவு தான் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியும்.



குட்டி ரேவதி

1 கருத்து:

அகநாழிகை சொன்னது…

முன்முடிவுகளோடும், காழ்ப்புணர்ச்சியோடும் நிகழ்த்தப்படுகின்ற இத்தகைய விமர்சனங்களை அராஜகம் என்றே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

- பொன்.வாசுதேவன்